வலி என்று தெரியவில்லை.!! ஆனா வலிக்குது...

அன்புள்ள அப்பாவுக்கு.!


உங்க இரத்தித்தில இருந்து உருவான ஒரு கரு தான் நான். என்னை அம்மா வயித்துல இருந்து எடுத்ததும் நேரா உங்க கையில தான் கொண்டு வந்து கொடுத்தாங்க. என்னால கண்ணை கூட திறக்க முடியல. நான் கத்தி கத்தி அழுதுகிட்டே இருந்தன். என்னை அப்படியே உங்க நெஞ்சோட அணைச்சு புடிச்சீங்க. அழுகை கொஞ்சமா குறைச்சுகிட்டு கண்ணை கொஞ்சமா திறந்து பார்த்தேன். ''அடேடடே.!! அம்மொம்மா..'' என்று கொஞ்சுனீங்க. அது என்னனு எனக்கு அப்போ புரியல. எல்லாம் விசித்திரமா தெரிஞ்சுது.


புரியாத போது நான் சிந்திச்சுட்டிருந்தேன். அப்போது உங்க முகத்தை என் அருகில் கொண்டு வந்து என் கன்னத்தில முத்தமிட்டீங்க. வழிக்கப்படாத உங்கள் முள் தாடியும் மீசையும் என்னை சீண்டிச்சு. அது வலி என்று எனக்கு தெரியல.! ஆனா வலிச்சது. யார் சொல்லி கொடுத்ததுனு தெரியல சட்டென அழுகை வந்துடுச்சு. உங்கள் தாடி தான் குத்தியிருக்கும்னு தெரிஞ்சும் நீங்க என்கிட்ட ''தாடி குத்துச்சாடி செல்லம்.!'' என்று கொஞ்சுனீங்க. எனக்கு அப்போ பயங்கர கோபம்.!! தெரிஞ்சுகிட்டே நம்மை கொடுமை செய்கிறாரே என்று.

அடுத்த நாள் வீட்டுக்கு போய் நீங்க குளிச்சுட்டு மறுநாள் என்னையும் அம்மாவையும் பாக்க ஹாஸ்பிடல் வந்தீங்க. அப்போ உங்க முரட்டு தாடியையும் காணும், அழகு மீசையையும் காணும். என் மேல இவ்வளவு பாசமா என்று ஒரு நிமிசம் பிரமிச்சே போய்ட்டேன்.

வீட்டுல அம்மா என்னய ரொம்ப பொத்தி பொத்தி பாத்துப்பாங்க. நீங்களும் என்னை அடிக்கடி தூக்கி கொஞ்சுவீங்க. அப்பலாம் எனக்கு ரொம்ப பிடிக்கும்.! ஒரு நாள் என்னை உள்ளங்கால் தரையில் பட நிக்க வச்சீங்க. அட புதுசா ஏதோ அனுபவம் என்று எனக்குள்ளே ரொம்ப சந்தோசம். கொஞ்ச நாள்ல கைய பிடிச்சு நடக்க சொன்னீங்க. ஒவ்வொரு அடியும் ஒவ்வொரு பாடமா கால் ஊன்றுவதை உங்களால தான் கத்துகிட்டேன். பின்பு நானாக நடக்க தொடங்கிய போது ஆஹா என்ன ஒரு ஆனந்தம்.! மலையை குடைந்து மனதுக்குள் இறுக பிடிச்சது போல என்ன ஒரு மகிழ்ச்சி அது.

பள்ளியில் சேர்த்த பின்னர் எனக்கு நீங்க ஒரு ஹீரோ மாதிரி தான் தெரிவீங்க. மத்த பயலுக அப்பா அவிங்கள ஸ்கூட்டர்ல கொண்டாந்து விடுவாங்க. நீங்க என்னை சைக்கிள் முன் கம்பியில உக்கார வச்சு கூட்டிட்டு போவீங்க. மேடுல இருந்து பள்ளத்துல இறங்கும் போது சர்ர்னு சைக்கிள் ஓடும் அப்ப ஒரு கைய என் நெஞ்சோட இறுக பிடிச்சுபீங்க, யாராவது ஏதாச்சும் பிரச்சனைனு வம்பிழுத்தா நச்சுனு போய் நீங்க பேசுற ஸ்டைலே கெத்தா இருக்கும், நீங்க அரசியல பத்தி பேசும் போது எதித்தாப்புல எவனும் பேசாத மாதிரி ஒவ்வொரு பேச்சும் ஆணித்தனமா இருக்கும். இப்படி ஒவ்வொரு இடத்திலும் நீங்க எனக்கு ஒரு ஹீரோவா தான் தெரிஞ்சீங்க.

இப்படி பாசமா இருக்குற உங்க கூட இப்ப நான் இல்ல.!! அதுக்கு நீங்க தான் காரணம்னு சொல்லி இப்போ நீங்க அழுதுகிட்டு இருக்கீங்க. இத கொஞ்சம் முன்னாடியே செஞ்சிருந்தா நீங்க என்னைய விட்டு பிரிஞ்சிருக்க வேணாம்ல பா.!? உங்களுக்கு தான் குடி பழக்கமே இல்லையே பா அப்பரம் யார் பா உங்களை அந்த பழக்கத்துக்கு ஆள் ஆக்கினது.!?

தினமும் குடிச்சுட்டு வர ஆரம்பிச்சீங்க. கொஞ்சமா பணம் இருந்தாலும் சந்தோசமா இருந்தோம். அப்பரம் அது எதுவுமே இல்லாம தினமும் பிரச்சனை அப்படி இப்படி ஆகிடுச்சு. அம்மா கூட நீங்க சண்டை போடும் போதெல்லாம் அப்படியே ரொம்ப பயமா இருக்கும் பா. அந்த நேரத்துல நீங்க சுயநினைவிலே இருக்க மாட்டீங்களாமே.! அதனால எனக்கு வர்ற அழுகையை கூட அப்படியே நிறுத்திப்பேன். என் அப்பா என்னை என்னைக்கும் அடிக்கமாட்டாங்க, ஆனா குடிமகனா உங்க உடம்புக்குள்ள இருக்குறவர் என்னை அடிச்சிட்டார்னா என்ன பண்றது.!?

நிறைய நாள் பசிக்கும் பா.! சத்தமே போடாம தேம்பி தேம்பி அழுதுகிட்டே ஒரு ஓரமா படுத்துப்பேன். மூணாவது படிக்கும் போது அம்மா சோத்துக்கே வழியில்லாம கிடக்கு நீ அந்த இலவச சோறு போட்டு படிக்க வைக்கிற இடத்துக்கு போடான்னு சென்னைக்கு அனுப்பி வச்சிட்டாங்க. உங்களுக்கு தெரியாது பா. அப்போ அங்க லீவு விட்டாங்க.

எல்லாரும் அவுக வீட்டுக்கு போனாங்க. எனக்கும் உங்கள பாக்கணும் போல இருந்துச்சு. கிளம்பினேன். பஸ்க்கு காசே இல்ல. பஸ்ல கண்டக்டர் அங்கிள் கிட்ட சொல்லி போகலாம்னு பாத்தா அரை டிக்கெட் எனக்கு கண்டிப்பா வாங்கணும்னு சொல்லிட்டார். அதுக்கு பிறகு யாருக்குமே தெரியாம பஸ் மேல படுத்துகிட்டு வந்தேன். வரும் போது எத்தனையோ மரம்லாம் போச்சு, கரண்ட் கம்பிலாம் பயந்துட்டே இருந்தேன். அத்தனை கஷடத்தையும் தாண்டி ஊருக்கு வந்தேன். ஆசை ஆசையா பஸ் ஸ்டாண்ட்ல இருந்து நம்ம வீட்டுக்கான 5கி.மீட்டர உங்கள பாக்க போற ஆசையில ஓடியே வந்தேன்.வீட்டுக்கு வெளிய உங்க செப்பல் இல்ல. நீங்க வீட்டுல இல்ல போல அம்மாவையாச்சும் பாக்கலாம்னு கதவை தட்டினேன். கதவை திறந்த அம்மா என்னை கட்டி புடுச்சு முத்தம் கொடுப்பாங்கன்னு பாத்தேன். ஆனா அவுங்க என்னை பார்த்ததும் ''ஏன்டா இங்க வந்த''ன்னு கேட்டாங்க. அப்படியே உடைஞ்சு போயிட்டேன் பா. ''இங்க நானே ஒருவேளை கஞ்சிக்கு வக்கத்து போயி இருக்கேன் நீயாச்சும் நல்ல தீணி திம்பேன்னு தானே அங்க உட்டுட்டு வந்தேன் இப்படி வந்து தெரம் கெட்டு நிக்கிறியே''னு திட்டினாங்க. அப்போ எனக்கு பசி தெரில பா.!!!! பாசத்துக்கான ஏக்கம் மட்டும் தான் என் மனசுல இருந்துச்சு. அன்னைக்கு நைட் நம்ம வீட்டுல இருந்துட்டு காலையிலே கிளம்பி போயிட்டேன். கைக்கு காசு ஏதுமே கேக்கல போகும் போதும் திருட்டு தனமா தான் போனேன்.

அஞ்சாவதுக்கு பிறகு அந்த ஸ்கூல்ல வச்சிக்கமாட்டோம்னு என்னைய நம்ம ஊருக்கே அனுப்பி வச்சாங்க. நீங்க அப்பவாச்சும் திருந்தி இருப்பீங்கன்னு நினச்சேன். ஆனா இல்ல..!!! நாளுக்கு நாள் உங்க கொடுமை தான் அதிகமாச்சு.

திடீர்னு ஒரு நாள் அம்மா சாம்பார் போட்டு சாதம் வடிச்சிருந்தாங்க. எனக்கு ரொம்ப சந்தோசமா போச்சு. நல்லா மூச்சு முட்ட நானும் அம்மாவும் சாப்பிட்டோம். அதுக்கு பிறகு தொண்டை ஒரு மாதிரி பண்ண ஆரம்பிச்சுடுச்சு, நரம்பெல்லாம் இழுக்க ஆரம்பிச்சுது, ரத்தம் உறையிற போல இருந்துச்சு. அழுதுகிட்டே அம்மாவ பாத்தேன். அம்மா ஒரு மாதிரி சிரிச்சாங்க.!! எனக்கு புரிஞ்சுடுச்சு. உங்கள நினச்சு நினச்சு அப்போ தான் நானும் அம்மாவும் உங்கள பிரிஞ்சோம். அம்மாவோட உயிர எடுக்கவே அம்மாவுக்கு உரிமை இல்லாத போது என் உயிர எடுக்க அம்மா யாருன்னு கோபம் வந்துச்சு. ஆனா உங்கள நினச்சு பாத்ததும் அந்த கோபம் போயி அம்மாவோட ஏலனமான சிரிப்பு தான் எனக்கும் வந்துச்சு.

இப்படி நாங்க ரெண்டு பேரும் உங்கள விட்டு போனதுக்கு பிறகு அந்த குடியை நீங்க தூக்கி போட்டுட்டீங்க. எந்நேரம் எங்க நினைப்பாவே இருக்கீங்க. வேண்டாம் பா.!! உங்கள எனக்கு பழைய ஹீரோவா பாக்கணும்னு ஆசையா இருக்கு. அந்த ஸ்டைல் அந்த மிடுக்கை உங்ககிட்ட நான் பாக்கணும். நாங்க ரெண்டு பேர் போனதால நீங்களும் போய்டணும்னு கணக்கில்ல நீங்க இன்னும் ஏதாச்சும் சாதிச்சு என் பெயர எங்கையாச்சும் சொல்லேன் பா. செத்த பின்னும் வாழுற பாக்கியம் உங்களால எனக்கு கிடைக்கும்ல!! நீங்க அப்படி நடந்துகிட்டதால உங்க மேல எனக்கு இருக்குற பாசம் குறையும்னு மட்டும் நினச்சிடாதீங்க பா. நீங்க என்னைக்குமே எனக்கு ஹீரோ தான்.!!!

-ஆசையுடன் உணர்வோடு ஜீவித்திருக்க தவறிய உங்கள் அன்பு மகன்.

Comments

 1. மரணம்தான் மனிதனைத் திருத்தும் என்றால் பிழையிலா வாழ்வைப் பிணங்களுக்குத்தான்!

  ReplyDelete
 2. அருமையான பதிவு.
  வாழ்த்துக்கள் கூர்மதியான்.

  ReplyDelete
 3. அழுக வச்சிட கூர் ., அப்பா நினைவா இருக்கு இதை படிச்சதும் ., .,.

  ReplyDelete
 4. வலி என்று தெரியவில்லை.!! ஆனா வலிக்குது...பதிவை படிக்கையில், நானும் அதையே உணர்ந்தேன்...கண் கலங்க வைத்து விட்டாய் சகோ...குடி குடியை கெடுக்கும்னு குடிக்கிற பாட்டில எழுதியே திருந்தாதவங்க ...உன் பதிவ பார்த்தால் ?????????????:-(
  நல்ல பதிவு
  வாழ்த்துக்கள் சகோ

  ReplyDelete
 5. வணக்கம் மச்சி, என்ன சொல்வதென்றே தெரியலை, ஒரு விழிப்புணர்வுப் பதிவென்று இதனைச் சொல்ல மனம் இடங் கொடுத்தாலும், கூடவே மனதைக் கனக்கச் செய்யும் ஒரு சம்பவத்தையும் பகிர்ந்திருக்கிறீங்க.

  ReplyDelete
 6. குடி...ஒரு குடும்பத்தையும், ஓர் குழந்தையின் எதிர்காலத்தையும் எப்படிச் சீரழிக்கிறது....என்பதனை எழுதியிருக்கிறீங்க.

  ReplyDelete
 7. குடியால் சீரழிநத உயிரிழநத அவல வாழ்வு மனம் கனத்தது.

  ReplyDelete
 8. தம்பீ
  பதிவு

  மரண ஓலமா,மன ஓலமா...?
  வெகு நாளாக காணத உங்கள் பதிவு வாளாக நெஞ்சை அறுத்தது
  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 9. பகிர்வு அருமை என்று சொல்ல மனம் வரவில்லை. பகிர்வின் கருத்து மனம் பதைபதைக்கச் செய்தது மட்டும் உண்மை.

  ReplyDelete
 10. சார் ரொம்ப டச்சிங்கான ஸ்டோரி ! வாழ்த்துக்கள்!!!!

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..

பைக் ஓட்டுபவர்கள் கண்டிப்பா பாக்கவும்..!!

அதிகாரி சாமி