இழந்தேன் அல்லேன்.......!

இழப்பு... எல்லாவற்றறையும் இழந்த ஒரு தவிப்பு. இன்னும் இழக்க ஒன்றுமில்லை. என் தேகத்தோடு ஒட்டி இருக்கும் அழுக்கும், அதனூடு கலந்திருக்கும் என் தையல் சட்டைக்கும் பின்னால் என்னோடு பிறந்ததிலிருந்து ஒட்டிக்கொண்டிருக்கும் என் உறுப்புகள் மட்டுமே இப்போது என்னுடன் மிஞ்சியிருக்கிறது.


வாழ்க்கை பாதையில் என்ன கொண்டு பயணிக்க தொடங்கினோம் இங்கு இழந்துவிட்டோம் என்று கூக்குரலிட என்று ஒரு நிமிடம் யோசிக்க தோன்றும். ஆனால் இழந்துதான் போனேன். நான் தொடங்கும் போது எதையும் கொண்டுவரவில்லை தான். ஆனால் எனது பயணத்தின் போது எனது அயராத உழைப்பையும், எனது வேகத்தையும் அதீதமாக செலவு செய்து உருவாக்கிய ஒவ்வொரு செதில்களையும் இழந்திருக்கிறேன். 

போகும் போது நான் எதையும் கொண்டு செல்ல போவதில்லை தான். ஆனால், நான் போகும் போது விட்டுசெல்ல வேண்டியன ஒன்று கூட என்னிடத்தில் இல்லையே.!!  உறவுகளும் என்னை சுற்றி இல்லை-சுயநல உலகமாகி போனதில் யாருக்காக எதற்காக எதை விட்டு செல்ல போகிறாய் என்று என்னை தூரத்தில் ஒரு குரல் கேள்வி கேட்கிறது.

சுற்றி சிரிக்கிறேன். என்னை கேட்கும் கேள்வி கூட தொலைவில் இருந்து தான் வருகிறது. இங்கு கூட கேள்விக்கான உடைமையை நான் இழந்து தான் இருக்கிறேன். ஆனால் அனைத்தையும் இழந்த நான் இந்த கேள்விக்குரிய பதிலுக்கு சொந்தகாரனாய் மாற போகிறேன் என்னும் கர்வத்தோடு சொல்ல தொடங்குகிறேன். சுயநலமாக மாறிவிட்ட உலகில் யாருக்காகவும் நான் எதையும் விட்டுசெல்ல விரும்பவில்லை.

நான் இன்று விட்டு செல்வதால் பிறர் என்னை போற்றி பூஜை செய்ய போவதில்லை. ஆனால் நான் விட்டு செல்வனவற்றில் எங்கோ ஒரு மூலையில் என் உழைப்பு ஒட்டிக்கொண்டுதான் இருக்கும். நான் சென்ற பிறகு யாரையும் வாழ வைக்க நான் விரும்பவில்லை. அப்படி எண்ண நான் ஒன்றும் ஞானியும் இல்லை. இறந்தபிறகும் நான் வாழவிரும்புகிறேன். உழைப்பாக, பொருளாக, உன்னத உயிராக மட்டுமே இந்த உலகில் ஜீவித்திருக்க விரும்புகிறேன். இந்நிலையில் நானும் ஒரு சுயநலவாதியே...! தூரத்து கேட்கும் குரலே... மனதர்களோடு மனித எண்ணங்களோடு பழகிவிட்ட நான் அனைத்தையும் இழந்த சுயநலவாதி தான்.

உயிரினில் இன்னும் என்ன படர்ந்திருக்க போகிறது. மிச்ச சொச்சமான சில வேகமும், இழப்போடு ஒட்டிக்கொண்ட இழிவும், விட்டு நீங்காமல் அடம் பிடிக்கும் விரக்தி மட்டும் தான்.

5 வயதில் பொம்மை கிடைக்கவில்லை என்று விரக்தி அடைந்தேன். பத்து வயதில் விரும்பிய பேனா.. என்று இன்றுவரை எனது விரக்தி பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. இப்போது என்னால் இவற்றை பெற முடிந்தாலும் அன்று ரசித்தது போல ரசிக்க முடியவில்லை. இங்கேயும் நான் எதையோ இழந்து தான் இருக்கிறேன். நான் இழந்தது பருவமா-இல்லை மனதின் தைரியத்தையா?

தூரத்திலிருந்து கேட்கும் கேள்வியின் பதிலுக்கு சொந்தமாக போவதை எண்ணியே மகிழ்ந்தவன் நான்-என்னால் சாதிக்க முடியாதா...? இழந்தேன் என்று நான் சொல்லிக்கொண்டிருக்கும் நேரத்தை கூட நான் இழந்து கொண்டு தானே இருக்கிறேன். இழப்பை நினைக்கும் போது கூட நான் எதையோ இழந்துகொண்டு தான் இருக்கிறேன். வாழ்க்கை பயணித்தில் நான் எடுத்ததை கொடுத்திருக்கிறேன். எங்கோ இருந்தாலும் நான் இழந்ததாக கருதுவதில் இன்னும் என் பெயர் இருக்க தானே செய்யும்.

அப்படி இருக்கும் போது அது நான் இழந்ததாக ஆகுமா என்ன? நான் எதையும் இழப்பதற்காக பயணத்தை தொடங்கவில்லையே...! போகும் போது எவ்வகையிலும் அதை நான் விட்டு தான் செல்ல போகிறேன். இப்போதும் விட்டு தான் வந்திருக்கிறேன். எங்கோ ஒரு முலையில் நான் இழந்ததாக சொல்லப்படுவன என் பெயரை உச்சரித்து கொண்டு தான் இருக்கும்.

இன்னும் நான் ஈட்டபோகும் அனைத்தும் எனது பெயரை உச்சரிக்க இடத்தை காலியாக வைத்து காத்துகிடக்கும் போது நான் இழந்தேன் இழந்தேன் என்று கூவிக்கிடப்பதில் என்ன பயன்...?

இப்போது என்ன என்னிடம் இருக்கிறது...? என் உழைப்பை என்றும் பறைசாற்ற துடிக்கும் என்னுடன் கலந்த அழுக்கு. உடுக்க ஒற்றை துணியே இல்லாத போது என்னை அலங்கரிக்க அந்த அழுக்கோடு கூடிய எனது சட்டை மற்றும் பேண்டுகள், மற்றும் என்னை எனக்கே அடையாளம் காட்டும் ஒப்பற்ற என் உறுப்பு....! அடடா.! இதை தவிர்த்து எனக்கு வேறு என்ன வேண்டும்...? ஒப்பற்ற செல்வங்களை கொண்டிருக்கிறேனே...! நான் எதையும் இழந்ததில்லை, இழக்க போவதும இல்லை. என்னை விட்டு செல்வன எல்லாம் எங்கோ ஒரு மூலையில் என் பெயரை உச்சரித்து வருகின்றன. என்னிடத்தில் இருப்பன எல்லாம் என் காதுக்குள்ளே என் பெயரை முத்தமிட்டு வருகின்றன. நான் ஈட்டப்போவன எல்லாம் என் பெயரை உச்சி நோக்கி உரக்க சொல்ல காத்துகிடக்கின்றன.

இன்னும் பொருமையாக இருப்பது எதற்காக...!? 

இழந்தேனல்லேன்-ஈட்டிய இருமாப்பு.......! கம்பீரமாக, ஒய்யாரமாக சொல்கிறேன்....... ஒருவித திமிருடனே சொல்கிறேன்.......... இழக்கவில்லை.... இழப்பையும் சேர்த்து ஈட்டிக்கொண்டிருக்கிறேன்.........!

அன்புடன்,
தம்பி கூர்மதியன்

Comments

Popular posts from this blog

சிட்லபாக்கத்தில் தொடரும் வாழ்வியல் போராட்டம்!

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..

GST – நான் அறிந்தவை!