நாற்காலி


நாலு கால்களை கொண்டு தாங்கி நிற்கின்றாய் என்று நான் உனை விட்டிட முடியும். ஆனால் உன்னில் தான் எத்தனை நுணுக்கங்களை நீ அடக்கி இருக்கிறாய்..?


வீட்டிலும், விசேசங்களிலும்… ஆண்டி முதல் அரசன் வரை… அண்டம் அவதானித்த ஒவ்வொரு இடங்களிலும் நீ ஒவ்வொரு இடமாய் அடைந்து கொண்டிருந்தாய். அடைந்துவிட்டாய்..!

உன் மீது மனிதர்கள் அமரும் போதே அதில் தான் எத்துனை மாற்றங்கள்.? காலை உயர்த்தி கால் மேல் காலிட்டு உட்கார்ந்து பார்க்கையில் ராஜ தோரணை தருகிறாய். கைகள் இருக கட்டி கால்களை உன் மீது வைத்து அதன் மேல் உட்கார்ந்தால் குளிர் காற்றுக்கு இதமான இடமளிக்கிறாய். இன்னும் எத்தனையோ வகையில் எத்தனையோ பிரமிப்புகள் உன்னில்.
என் சிறு வயது நண்பன் திருமணத்திற்கு சென்றிருந்தேன். கோவில் நடத்தப்படும் திருமணம். வாசலில் பந்தலும், நான்கு இளவட்ட குழந்தைகள் கையில் வரவேற்பு தட்டில் சந்தனமும், சக்கரையும் என்னை வரவேற்றது. ஆடம்பர வாழ்க்கை பழகிவிட்ட எனக்கு உள்ளே சென்றதும் ஒரு அதிர்ச்சி. பரப்பபட்ட மணலில் விரிக்கப்பட்ட துணியில் நூற்றுக்கணக்கான சொந்தங்கள். அங்கே என் கண்கள் எங்காவது ஒரு மூலையில் நீ இருக்கமாட்டாயா என்று ஏங்கி தவித்தது..! பதமாக்கப்பட்ட முட்டாந்தரையில் மதிய உணவு பரிமாரலும் தரையிலே என்று இருந்தபோது.. நீ இல்லாமல் மிகவும் சங்கடத்து போனேன்.

ஆனால், சற்று யோசித்து பார்க்கிறேன். ஊர் வீட்டில் நானும் அவனும் ஒன்றாய் ஊர் பெரிய பிள்ளை வீட்டில் தரையில் உட்கார்ந்து தானே ‘ஒளியும் ஒலியும்’ கேட்டு ரசித்துக்கொண்டிருந்தோம். இன்னும் என்னோடு பல சமயங்களில் உன்னை விட அதிகமாக ஒட்டி உறவாண்டது என் தரையும் மணலும் தானே..! அதையே பிரியும் எண்ணம் தோன்றவைத்த நீ எவ்வளவு பெரிய நயவஞ்சகனாய் இருப்பாய்…!

இன்னும் சில இடங்களில் கண்டிருக்கிறேன் உன்னை. நடுத்தர குடும்ப திருமணத்தில் இரும்பு வடிவத்தில், பணக்கார வீட்டு விசேசங்களில் தேக்கு மர வடிவத்தில் என்று உன்னில் தான் எத்தனையோ ஓரவஞ்சனைகள்…

உனை நான் கடிவது போல் இருந்தாலும் நீ அங்கே நகைப்பது எனக்கு தெரிகிறது. ‘’எங்கே சென்றாலும் என் மீது தானேடா நீ அமர வேண்டும். அப்போது என் ஒரு காலை ஊனமாக்கியாவது உனை தண்டிக்கிறேன்’’ என்று நீ சொல்வது போல தெரிகிறது. உண்மைதானா..? பேசிக்கொண்டே இருக்கிறேனே ஏதேனும் பேச வேண்டியது தானே.. இன்னும் என்ன நகைப்பு உனக்கு.. அசைந்தாடிக்கொண்டே பேசதொடங்குகிறாயே.. கேட்கிறேன்.. சொல்..

நாற்காலி பேச்சு..

‘’ஹா ஹா ஹா.. சிரிக்கிறேன் தான்.. நீ என்னை புகழ்கிறாயா இல்லை வசை பாடுகிறாயா என்பதை உன்னாலே புரிந்துகொள்ளாபடி ஒரு மயக்க சூழலில் இருக்கிறாய். குழப்பமாக பேசுவதால் நான் உன்னை மனிதன் என்று அறிகிறேன். என் மனதின் எண்ணமாக எனை வசைப்பாடுவதற்கு எல்லாம் நான் பழிவாங்குவேன் என்று நினைத்தாய் அல்லவா..? நான் மனிதன் அல்ல. நான் நகைத்ததன் காரணம் அறிகிறாயா..? நான் ஓரவஞ்சகன், நயவஞ்சகன் போன்ற பல அருமையான வாசகம் என் காதில் பாய்ந்தது. உன் நண்பன் வீட்டில் நான் இல்லை என்றால் நானாக வந்து உட்கார்ந்து கொள்ளவா முடியும்..? நீங்கள் தானே என்னை தூக்கி செல்ல வேண்டும்..? நடுத்தர குடும்பத்தினர் இரும்பாலான என்னை அழைத்தனர், பணக்கார குடும்பத்தினர் தேக்கிலான என்னை அழைத்தனர். இங்கு நீங்கள் இட்ட கட்டளைக்கு மட்டுமே நான் அடிப்பணிந்து இருக்கிறேன். இருப்பினும் எனக்கு நயவஞ்சகன் என்னும் பெயர். இங்கும் நீ மனிதன் என்பதை நன்றாக நிரூபித்து இருக்கிறாய். செய்வது எல்லாம் செய்து விட்டு என் மீது பழி போட்டுக்கொள்ள பார்கிறாய் பார்த்தாயா..? என்ன அங்கே தலை குனிந்து நிற்கிறாய். என்னை வசை பாடி கலைத்திருப்பாய் சாய்ந்தாடும் என்னில் வந்து சிறிது நேரம் உட்கார். அசைந்தாடி உன் உறக்கத்திற்கு உரமாகிறேன்.. வா…’’

நான்...

நீ புத்திசாலி தான். அதனால் தான் அசையாமலே பல விந்தைகளுக்கும், பல விசித்திரங்களுக்கும், பல சண்டைகளுக்கும் காரணமாகி நகைத்துகொண்டிருக்கிறாய். இன்று என்னையும் யோசிக்க வைத்துவிட்டாய். உடனே நான் மனிதன் அதனால் தான் குறை சொல்கிறேன் என்று வந்துவிடாதே..! நான் உன்னை குறை சொல்லவில்லை. உன்னை காரணமாக வைத்து சண்டையிட்டு திரியும் மனிதர்களை தான் சொல்கிறேன். உன்னை அடைந்து பதவி என்னும் பெயர் பெற திரிந்த மானிடர் கூட்டமிடையே பலத்த போட்டியை 2011 தந்தது. இதைவிட காரசாரமான பல போட்டிகளுக்கு 2012ல் நீ வழிவகுக்க போகிறாய். எல்லாவற்றுக்கும் மௌன சிரிப்பு சிரித்துவிட்டு நிற்கிறாய். வாழ்க உம் பணி... வாழ்வோம் 2012...! 

நாற்காலி.....

(ஏளனமான நகைப்புடன்)

'' அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...........! வாருங்கள் பார்த்திடுவோம்......!''


--------------
தம்பி கூர்மதியன்

Comments

  1. செம உள்குத்துமா...
    ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. எல்லாவற்றுக்கும் மௌன சிரிப்பு சிரித்துவிட்டு நிற்கிறாய். வாழ்க உம் பணி... வாழ்வோம் 2012...!


    இனிய புத்தாண்டு வாழ்த்துகள்..

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சிட்லபாக்கத்தில் தொடரும் வாழ்வியல் போராட்டம்!

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..

GST – நான் அறிந்தவை!