விதை


உறங்கிவிட்ட மனங்களின் கர்ஜனை அங்கே தூரத்தில் விண்ணை முட்டி பிளந்துகொண்டு சீறி பாய்ந்து செவி அடையும் முன்னே.. ஒற்றை ஒற்றை செதில்களாய்.. அணுக்களாய்.. ரத்த கிளரிகளாய்... வெடித்து சிதறி அங்கொன்றும் இங்கொன்றுமாய் மொட்டுக்களாக சிறு சிறு விதைகளாக மண்ணுக்குள் புதைந்து போய்க்கொண்டிருந்தன.
விதைகள் ஒவ்வொன்றும் மரங்களாய் முளைத்தெழுமோ தெரியவில்லை. ஆனால் கண்டிப்பாக இவ்விதைகள் பல நூறு விதைகளை தூவும்... விதை செடியாக.. பின் செடி மரமாக.. பின் மரம் தோட்டமாக... பின் தோட்டம் காடாக...! உருமாறி உருமாறி பிரபஞ்சத்தின் சக்தியை உள்ளே உறிஞ்சி கூக்குரலிடபோகும் கனவின் ஆரம்பம் இது.

விதைகள் மரமாகும் முன்னே அதை நசுக்கி நஞ்சுக்கு உரமாக்க நயவஞ்சக கூட்டம் அலவலாவி கொண்டிருக்கும் வேலையிலே.. தூக்கமும் மறந்து, உணவு மறந்து விதைக்கப்பட்ட விதையை காப்பாற்ற ஒரு கூட்டம் மடிந்து மடிந்து எழுகிறதே..! அந்த விதை மரமாகி என்ன சாதிக்க போகிறது.? இன்னும் எத்தனை விதைகளை ஊன்ற போகிறது.? வஞ்சிக்கப்பட்ட ஒரு இனத்தின் கோர வடிவாய் முளைத்தெழும் ஒவ்வொரு விதையும் விடுதலை மோகம் கொண்டு தான் எழும்பும்.


******

மேலே குறிப்பிடப்பட்டுள்ள மூன்று பத்திகளை படிக்கும் போதும் உங்கள் மனதில் ஒரு வினாக்குறி எழலாம். எதைப்பற்றி பேசுகிறான் இவன் என்று..! சிலருக்கு ஆஹா இது அதுவாக தான் இருக்க வேண்டும் என்னும் எண்ணம் எழும். இந்த பத்தியோடு எதை வேண்டுமானாலும் தொடர்புமை படுத்தி பார்க்கலாம். ஈழம் பற்றியாக இருக்குமோ...!? அல்லது ஜப்பானிய ஹீரோஷிமா அழிவின் நினைவு கூர்தலாய் இருக்குமோ..? அல்லது காஷ்மீர் பிரச்சனையோ..!? ஏன் அவ்வாறு ஒரு புரட்சிகரமான சம்பவமாக தான் இருக்க வேண்டுமா..?

இது ஆயிரம் அணுக்களோடு போட்டி போட்டு உருவாகும் மனித கருவை மையபடுத்தி எழுதபடுகிறதோ..!? ஆனால் வஞ்சிக்கப்பட்ட இனம் என்று வருகிறதே நிறம் பொருத்து ஒதுக்கப்படும் மக்கள் இனம் பற்றி வருகிறதோ..!? இல்லை வேறு கோணத்தில் இருந்து பார்த்தால் அழிக்கப்பட்டு வரும் ஏதோ ஒரு மிருகத்தின் கூக்குரலாக இருக்குமோ..!?

படிக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் எண்ண ஓட்டம் எவ்வகையில் அமைகிறதோ அந்த எண்ணத்தை, மேலே குறிப்பிடப்பட்டுள்ள பத்திகள் பூர்த்தி செய்யும். ஒரு மைய கருத்து இல்லாமல் பயணிக்கும் பத்தி ஒவ்வொன்றின் உள்ளும் ஆயிரம் மைய கருத்துகள் புதைந்து போய் இருக்கும். அந்த மைய கருத்தை நூல் போல பிடித்து மேலே பயணிப்பதில் தான் எல்லா கோணமும் இருக்கிறது..!

சரி.. நான் சொன்னதில் இருந்து இப்போது என் கட்டூரையை மேலும் தொடருகிறேன். இதில் நான் சொல்லிய எதையாவது மைய கருத்தாக எடுக்கலாமா? அல்லது புதிய மைய கருத்தை நோக்கி மனதை அலைபாய விடலாமா..?

(கொஞ்சம் அலைப்பாய விடுவோம்.......)

முடிவு செய்துவிட்டேன்..! இனி தொடர்வோம்...

******

விதைகள் முளைத்தெழும் வரை காப்போம். பின்பு வெகுண்டு எழுவோம் என்று மனதிற்குள்ளே ஒருவித கூடுதல் புத்துணர்ச்சியோடு இன்றைய பாதை மெருகேற்றி தொடர்கிறது. உரிமைக்காக போராடி கொண்டிருக்கும் தருவாயில் காப்பாற்ற யாருமே இல்லையோ என்று எல்லோரும் அலறி ஒதுங்கும் சமயத்தில் எல்லாவற்றையும் அழித்துக்கொண்டு-நான் மட்டும் முன்னேறுகிறேன் என்று முன்னேறுகிறது ஒரு அணு-மனிதனாக உருவெடுக்க.

முட்டி போட்டி போடும் அனைத்தையும் அழித்து, சிரித்துக்கொண்டே வளர்ச்சிக்கு வித்திடும் கருப்பையில் நுழைந்து உருவம் பெற துடித்து சிரிக்கிறது அந்த அணு. உருப்பெற்று சிறகடிக்கையில் அமெரிக்கா என்னும் பெயர் பெறுகிறது. அழித்து முட்டிமோதிக்கொண்டே பழக்கப்பட்ட அந்த விதையானது-நஞ்சான விதையாக உருப்பெற்று எழுந்திருக்கிறது. காக்கப்பட்ட விதை நஞ்சாக மனித வளம் அற்றுதலாய் அழித்திட அணுக்குண்டை வீசி பொழைப்பதற்கும், வாழ்வதற்கும் வழியை இழுத்து அடைத்து நகையாடுகிறது.

அங்கே மீண்டும் முளைக்கிறது ஒரு விதை. இந்த விதையும் காக்கப்படுகிறது.!! இது மனித மனதில் விதைக்கப்பட்ட ஒரு விதை. வளர்ச்சி, முன்னேற்றம், நாட்டுப்பற்று என்று உள்ளுக்குள் ஏற்றப்பட்ட விதை. வளர்ந்து காடானது. நயவஞ்சக நரியாக முன்பு உருவம்பெற்றிருந்தவர்கள் வளர்ச்சி கண்டு இம்சிக்க தொடங்குகையில் எதையும் பொருட்படுத்தாது எல்லாவற்றையும் எட்டி உதைத்துவிட்டு தோட்டமாகவும், பின்பு காடாகவும் உருப்பெற தொடங்கியது.

காடா...? அந்த காட்டில் என்ன இருந்தது. வெறும் மனித கூட்டம் தான்..! அப்படியானால் மிருகங்கள் எங்கே...!? மனித மனங்கள் பணம் மற்றும் அபரிவிதமான வளர்ச்சி மேல் கொண்ட மோக விதையால் மிருகங்கள் காணாமல் போய்விட்டன.

என் கிராமத்து வூட்டு கொட்டாயில இருந்த மாட்ட களவாண்டுட்டு போனாப்புல என் கண்ணாண்ட இப்ப மாட்டையே காணும். மாடாச்சும் காத்தால பாலு குடிக்கையில மனசுல தோணுது. இந்த பன்னி, ஆடு இதெல்லாம் எங்கிட்டு தான் போச்சுன்னு மனசு கிடந்து தவியா தவிச்சுகிது. எல்லோமே அழிஞ்சுட்டு இருக்குன்னு எங்க அண்ணனாரு மேட போட்டு கத்திகிட்டு அப்பரம் பந்தலுக்கு பின்னால மாட்டுக்கறி திங்குறாரு. என் வூட்டுல போட்ட விதை இன்னும் முளைக்கள அத பாத்துகிடணும்னு நான் பாத்தாலும் பாக்குறதுக்கு முன்னாலயே பொசுங்கி தான் போகுது. வீடு தான் இப்படினா காடும் அப்படி தான். என் நாட்டு தேசிய வெலங்கு 'புலி' எங்கிட்டு போச்சுன்னு தெரில. இப்ப எல்லாரும் 'புலி'ய காப்பாத்துங்கனு கத்திட்டு இருக்காங்க.

'புலி'யை ஆனால் யாரும் காப்பாற்ற வேண்டும் என்ற அவசியமில்லை. புலிகள் அமைதியாக இருக்கலாம்-ஆனால் அடங்கி போய் விடாது. தலைமை போன சோகத்தில் இருந்தும் மீண்டு எழாத 'புலிகள்' எழுந்தால்-அங்கு சிரித்து புன்னகைக்கும் சிங்க கூட்டங்கள் அலன்றெழும். உரிமைக்காக எழப்படும் குரலின் விதை இது. அடிவாங்கி உதைவாங்கி வீழ்ந்தாலும் விதைகள் காக்கப்படும். ஒவ்வொருவன் மனதிலும் விதைகள் மாறாது ஊன்றி முளைத்தெழும். 'புலி'கள் பதுங்கிடவில்லை பாய்ந்தெழும்-இமயம் போல உயர்ந்தெழும்.

இமயத்தில் விதை ஒன்று உண்டு கண்டீரோ..!? ஒரு விதையற்று பல விதை என்று சொல்லும் சப்தமும் கேட்கிறது. 'என்னுடையது தான்..' என்று போட்டித்துக்கொள்ளும் இரண்டுக்கு இடையில்-'நீயும் வேணாம் அவனும் வேணாம்... நாங்களே பாத்துகிறோம்' என்று கோபத்தின் கனலாய் மூன்றாவது. தோன்றிய விதைகள் அங்கொன்றும் இங்கொன்றும் அழியும் தோட்டமாக இருக்கிறது. பல ஆண்டுகளாக தோட்டமாக மட்டுமே...! உருப்பெறாத அரசியல் பச்சோந்தி தனம் இருக்கும் வரையில்.

என்னயா அது பஞ்சோந்தி தனம். இந்த தபா சொல்றேன் கேட்டுக்கோ..! காலையில நாஸ்தா கூட துண்ணாம ஓடி ஓடி ஒழச்சிக்கினு என்னாத்த சாதிச்சுக்கிணோம். மூணு வேளயில ஒருவேளயே நல்ல சோறு திண்ணமுல்ல. தெருவோரமா வூடு இல்லாம, தெரு தான் வூடுங்குற நெலம.. என்னாத்த சொல்ல..! அங்கிட்டு திட்டம் நடக்குது இங்கிட்டு திட்டம் நடக்குது இப்பால ஓட்ட குத்து, அப்பால வீட்டு வச்சிக்கனு சொல்லிட்டு தான் போறானுங்க. ஒரு தபா கூட வூடும் வரல-அவனுங்களும் வரல. புள்ளைக்கு ஸ்கூலுக்கு கூட போயி ஸ்டடீஸ் பண்ண முடியல. எங்க வூட்டு பசங்களுக்கு எல்லாம் நல்ல ஸ்கூலுல படிக்கமுடிவாதாம். ஒதுக்கிவச்சியே பாக்குறீங்களே...! நாங்களும் மனுசனுங்க தானுங்கயா.... இப்போ தான் ஏதோ சில பேருக்கு எங்களாண்ட பேசணும் பழகணும்னு வெதை ஒண்ணு மொளச்சிருக்கு. அது மரமாகி-தோட்டமாகி-காடாகும் போகையில நாங்களும் எல்லாப்போலவும் சந்தோசமா இருப்போம்....! அந்த வெதை அழிஞ்சுபோவாம நாங்க பாத்துப்போம்.

இன்னொரு விதையும் பல நாட்களாக முளைத்து முளைத்து எழுகின்றது. ஆனால் முற்றும் எழும் முன்னே அது நசுக்கப்படுகின்றது..!இப்போது உங்கள் மனதில் அது என்ன விதையாக இருக்கும் என்னும் எண்ணம் தோன்றலாம். அதை உங்கள் மனதிற்கே விட்டுவிடுகிறேன். உங்களுக்கு எந்த விதை தோன்றி அழிந்துகொண்டு இருக்கின்றது என்று தோன்றுகிறதோ அதை காப்பாற்றுங்கள். விதையை செடியாக்குவோம்-மரமாக்குவோம்-தோட்டமாக்குவோம்-காடாக்கி உச்சி நோக்கி உரக்க சொல்லுவோம்..! சாதித்தோம் என...........

தம்பி கூர்மதியன்

Comments

Popular posts from this blog

சிட்லபாக்கத்தில் தொடரும் வாழ்வியல் போராட்டம்!

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..

GST – நான் அறிந்தவை!