எழுத்து


எனது எண்ண ஓட்டங்களில் இதுவரை எந்த மாற்றமும் இல்லை. நான் ஒரு ஒற்றை இலக்கை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கிறேன். என்னை தடுத்திட எவர் முனைந்தாலும் நான் எட்டி உதைத்திட மறவேன்.

ஆனால் என்னை தடுக்க எவரும் இல்லை. ஏனெனிலில் சுற்றத்தை கவனித்திடாது எந்தன் பாதையை தேர்ந்தெடுத்து இடையூறு இன்றி நான் பயணித்துக்கொண்டிருக்கிறேன். எனது இன்பத்தையும் துன்பத்தையும் மொத்தமாக மூளையோ மனமோ தாங்கியதோ நான் அறியேன். ஆனால், என் 'கை' நன்றாக தாங்கியது. ஒவ்வொரு எண்ண ஓட்டத்தையும், ஆத்திரத்தையும், கோபத்தையும் தன்னுள் பெற்று எழுத்தாக மாற்றி எனக்கு ஓர் நீங்கா சேவை செய்து வருகிறது.

நான் எதை பற்றி எழுத வருகிறேன். எதை எழுதுகிறேன் என்று தெரியாமல் மூளையும் மனதும் மௌனித்திருக்கும் போதும்-நீ இதை தான் எழுத போகிறாய் என்று என் கை என்னை வழிநடத்தி இருக்கிறது. கை போன போக்கில் எழுதுகிறவனா நீ..? என்று கேவலமாக பார்க்கலாம் நீங்கள். ஆனால், எனது ஏதேனும் ஒரு கட்டூரையிலோ கவிதையிலோ உட்கருத்து இல்லாமல் இருக்கும் என்று நீங்கள் சொல்லிவிட முடியாது.

சில நேரம் சிந்தையில் ஆழ்ந்திருக்கிறேன். என் கைக்கு என்று தனியாக மூளை ஏதேனும் இருக்கிறதா என்று..? கண்கள் எங்கோ நோக்கி, மூளை வேறு சிந்தையில் இருந்தாலும் என் கை ஒரு பக்கம் எழுதிகொண்டே தான் இருக்கிறது. என்னடா இது ஆச்சர்யம்..? இதை நான் தான் எழுதுகிறேனா..? அல்லது என் கையையும் சேர்த்து ஏதோ ஒன்று ஆட்டுவிக்கிறதா? என்று என்னுள்ளே கேள்விகள் பல எழும்ப திகைத்து போனேன்.

எவ்விடத்தில் இருந்து எனக்கு எண்ணங்கள் எல்லாம் எழும்புகிறது என்று யோசித்து பார்த்தால்.. அங்கிருந்து என் அம்மா ஓடி வந்து, ''நான் சின்ன வயசுல இருக்கும் போதே நல்லா எழுதுவேன் பா.. அது தான் உனக்கும் தானா வருது'' என்று சொன்னார்கள். தற்பெருமைகளுக்கு கொஞ்சம் ஓரம் கட்டி உட்கார வைப்போம். அவரின் ஆர்வமும் நான் எழுதுவதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால், அதுவே முழு காரணம் என்று சொல்லிவிட முடியாது.

அப்பா-இளமை காலங்களில் சமூக அநீதிகளை கண்டு பொங்கி எழுவேன் என்று கூறினாரே...! ஒருவேளை அதுவும் ஒரு காரணமாக இருக்குமோ என்று என்னுள்ளே நான் சிந்தித்து பார்த்தேன். அப்போது என் சிறுமூளைக்கு ஒரு காட்சி ஓடியது,

முதன் முதலில் நான் பள்ளிகூடத்தில் கவிதை போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்று திரும்புகிறேன். அதுவரை அதிகமாக கவிதை எழுத பழகாத நான் என்னுடைய முதல் சில முயற்சியிலே பரிசை வென்றது எனக்கு மிக்க மகிழ்ச்சியினை அளித்தது. வீட்டிற்கு எனது கவிதையை எடுத்துக்கொண்டு ஓடி வந்தேன். குழந்தை தொழிலாளி பற்றிய சிறு கவிதை தான்...!

அம்மாவிடம் ஓடி சென்று-கவிதை போட்டியில் பரிசு பெற்றுவிட்டேன் என மகிழ்ச்சியாக கூறி-எனது கவிதையை படித்து காண்பித்தேன். ஒவ்வொரு வரி படித்த பின்பும் அம்மா முகத்தை பார்த்து ஒருவித சாதித்த உணர்வோடு அடுத்த வரியை படிக்க ஆரம்பித்தேன். ஒவ்வொரு வரி முடியும் போதும் அம்மாவுக்கும் பெரிய மகிழ்ச்சி. அவ்வளவு ஆர்வமாக பார்த்துவிட்டு-இறுதியில் என்னை கட்டி அணைத்துகொண்டார். இருந்தும் என் ஆர்வம் அடங்கவில்லை. 

அப்பா வேலைவிட்டு வீடு திரும்பினார். முகம், கை கால் கழுவி தன்னை சுத்திகரித்து வரும் வரை காத்திருந்தேன். பின்பு பசியில் இருப்பாரே.! உணவு உண்ணும் வரை காத்திருந்தேன். உண்ட பிறகு மிகுந்த ஆர்வத்தோடு நான் பரிசு பெற்றேன் என்று சொல்லியதும்- 'சூப்பர்' என்று என்னை மிகுந்த மகிழ்ச்சியுடன் பாராட்டினார். பின்பு நான் எழுதிய கவிதையை படித்து காட்ட தொடங்கினேன்... இம்முறை வரிக்கு வரி பார்க்காமல், ஒரு பத்தி முழுக்க படித்துவிட்ட அடுத்த பத்தி படிக்கும் முன் அப்பாவை பார்த்தேன்...! எனக்கு மிகுந்த அதிர்ச்சி... அப்பா இந்த அளவுக்கு என் எழுத்தில் மூழ்கி போவார் என்று நான் கனவிலும் எண்ணியது இல்லை. முதல் பத்தி முடியும் போதே அப்பா தூங்கிவிட்டார்...!

இந்த சம்பவம் என் மனதில் தோன்றி மறைந்தது. கண்டிப்பாக என் கைகள் தானாக எழுதுவதற்கு அப்பா சம்பந்தமாகி இருக்க மாட்டார். ஆனால் என் கைகள் தானாக எழுதுவதன் காரணம் என்ன..?

எங்கோ ஒரு இடத்தில் நடந்த சம்பவம் உள்ளுக்குள்ளே நச்சரித்து-மனதால் பாதிக்கப்பட்டு-மூளையில் கோப கனலாக உருவெடுத்து கைகளில் தேக்கி வைத்திருக்கும். அது முட்டி தீர்க்கும் வேலையில் கைகளில் இருந்து தானாக வெளிப்பட்டு விடுகிறது. இதுதான் நான் எழுதுவதன் காரணமாக இருக்க வேண்டும் என்று தோன்றியது. ஆனால் சமூகத்தை பார்த்து எழுதுவது மட்டும் தானா, எதுவும் செய்யவில்லையா? செய்து மாற்றிவிட்டால் கோபம் போய்விடுமே..!

நான் செய்துகொண்டு தான் இருக்கிறேன். இருந்தும் கோபம் அடங்கவில்லை. எங்கோ என்னை நச்சரித்துக்கொண்டிருக்கிறது. காரணம் எதுவாக இருந்தாலும், எம் எழுத்து எங்கோ ஒரு மூலையில் ஏதோ ஒரு மனிதரை ஒரு நொடி சிந்திக்க செய்தால் அதுவே நான் அடையும் வெற்றியாகும்.

என் எழுத்துக்கென்று ஒரு போதையுண்டு. வெற்றி போதை..! அது குறையாது.. குறையவும் விடமாட்டேன்..! என் மனவெற்றி கிடைக்கும் வரை ஓயாமல் சீறி எழும்பிகொண்டே இருக்கும்...! 

எழும்பை எழுத்தாய்-கரும்பாய் அற்றல்
கடுந்தேளாய்..! 
மாற்றம் தரிப்போம்-மாசான் அற்றல்
மாண்புற்றோனாய்..!
வெற்றி கனிவாய்-வெற்றுச்சிறை அற்றல்
வெண்கதிரோனாய்..!

--
தம்பி கூர்மதியன்

Comments

Popular posts from this blog

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..

பைக் ஓட்டுபவர்கள் கண்டிப்பா பாக்கவும்..!!

அதிகாரி சாமி