தொலைக்காட்சிஉன்னை கண்டு பிரமிக்கிறேன்…! என்ன ஒரு விந்தையான அழகு. உன்னில் தான் எத்தனை பரிணாம வளர்ச்சிகள். மெய்சிலிர்க்கிறேன் உன்னை பார்க்கும் போது. கொஞ்சம் பின்நோக்கி என் எண்ணங்கள் பயணிக்கின்றன.

வர்ணமற்று-ஒளி மங்கிய நிலையில் நீ முதல் முதலில் பிறந்த போது எம்மவர் உன்னை தூரத்தில் இருந்து பார்த்தனர். நீ பிறப்பதை தடுக்க பலர் முற்பட்டனர் என்று சொன்னால் அது மிகையாகாது. நீ கருவாய் இருக்கிறாய் என்று சொல்லும்போதே உன்னை ஏளனிக்க தொடங்கிவிட்டனர். இத்தனையும் தாங்கிய உன் தந்தை உன்னை பெற்றெடுக்க எத்துனை சங்கடத்திருப்பார் என்பதை என்னால் யூகிக்க முடிகிறது.

நீ பிறந்து இந்த மாந்தர்களுக்கு அறிமுகமாகும் போது உன்னை எல்லாரும் வியந்து தான் பார்த்தனர். அத்தனை பூரிப்புகளுக்கு இடையில் எல்லாரும் உனை கண்டு சென்றனர். ஆனால், ஆரம்பகாலத்தில் உன்னை எவரும் தன் வீட்டினுள் சேர்க்க தயாராக இல்லை.

என்ன காரணமாக இருக்கும்..? ஒரு வேளை வர்ணமற்ற நிலையில் நீ இருப்பதால் ‘கருப்பர்’ என்று சொல்லி ஒதுக்கி வைத்திட நினைத்தார்களா..? ஒதுக்கி வைப்பதற்கு காரணிகளை நான் என்ன எங்கள் ஆட்களுக்கு சொல்லியா தரவேண்டும்?

போட்டி பொறாமைகள் என்று வந்துவிட்டால்-நீ எங்கே முந்திகொண்டு எங்களை அடிமைபடுத்தி விடுவாயோ என்று பயந்து உனை ஒதுக்கி வைக்கவே நினைத்தார் போலும்.

அவர்கள் நினைப்பிலும் தவறில்லை. முன்னோர்கள் கணிப்பு என்றும் சரியாக தான் இருக்கும் என்பதை நான் உன்னில் உணர்கிறேன். ஒதுக்கி வைக்கின்றனர் என்று உனக்காக பல விழிப்புணர்வு செய்கைகளை செய்து வந்தால் இப்போது நீ எங்களை அடிமைபடுத்திதான் வைத்திருக்கிறாய்.

ஒவ்வொரு வீட்டிலும் நீ நுழைவதற்கு எத்தகைய கடின உழைப்பு தேவைபடும் என்பதை நான் அறிவேன். ஒவ்வொரு வீட்டிற்காகவும் உன்னையே நீ எவ்வகையில் மாற்றியிருக்கிறாய் என்பதையும் நான் அறிவேன். ஆனால், நீ கடினித்து உழைத்தாய் அதனால் உனக்கு கீழ் நாங்கள் எல்லாம் கண்டிப்பாக இருந்து தான் ஆகவேண்டும் என்று நீ சொல்வது எவ்வகையில் சிறப்பு என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அன்று, கோடிகளில் மக்கள் தொகை இருப்பின் கோடிகளில் சிந்தனை சிதறிக்கிடக்கும். ஆனால், இன்று கோடிகளின் மக்கள் தொகை லட்சத்தின் சிந்தனையில் மட்டுமே முடங்கிபோய்விட என்ன காரணம்? எனக்கு தேவையான ஒன்றை வேறொருவன் சிந்தனை கொண்டு நீ எனக்கு தந்துவிடுகிறாய். அதனால் நான் சிந்திக்க வேண்டிய வேலையில்லை. என்னைப்போல் எத்தனை பேர்..? அத்தனை பேரின் சிந்தனையையும் நீ முடக்கி இதுதான் வளர்ச்சி என்ற தவறான போதனையை செய்து கொண்டிருக்கிறாய்.

நாடெங்கும்.. ஊரெங்கும்… வீடெங்கும்.. நீ நீ நீ! நீ மட்டுமே எங்கும் நிறைந்திருக்கிறாய். மனிதனை தன் வேலையை பார்க்க விடாமல் உன்னிலே மூழ்கி லயித்திருக்கும்படி நீ ஒரு மங்குனி போதையை எம்மவர் மனதில் திளைக்க வைத்துவிட்டாய்.

சரித்திரக்காரன் என்று உனை எண்ணினேன். ஆனால் கண்டிப்பாக இல்லை. நீ ஒரு சதிகாரன்..! என்ன செய்ய வேண்டும்..? எப்படி செய்ய வேண்டும் என்று நீ முன்னரே கணிக்காமல் இருக்கலாம். ஆனால் உந்தன் நொடிப்பொழுது தந்திரம் எந்தன் ஆயிர நொடிகளை அழிக்கிறது. என்னிடமே ஆயிரம் நொடி என்றால் என்னை போல கோடி நபர்கள். கோடியான ஒவ்வொரு நபரின் ஒவ்வொரு ஆயிரம் நொடி என்று பார்த்தால்- கொஞ்சம் மலைத்து போய் தான் உனை பார்க்கிறேன்.

இன்னும் நான் சாதிக்க பல விடயங்கள் இருக்கின்றன. என்னைப்போல குமுறிக்கொண்டிருக்கும் பலர் என்னுடன் இருக்கின்றனர். அனைவரின் வாழ்வையும் அள்ளி நீ ருசித்துக்கொண்டிருக்கிறாய். நீ ருசிக்கும் ஒவ்வொன்றும் எங்களது கோபம், ஆத்திரம் என்பதை உணர்ந்துகொள். சாதிக்க துடிக்கும் எங்களை போன்றவர்களுக்கு நீ ஒரு முட்டுக்கட்டை தான். வளரதுடிக்கும் இளைய சமுதாயத்தை அநாகரீக காட்சிகள் மூலம் சீரழிவு பாதையை போதிக்கும் சிறப்பற்ற ஆசானும் நீயே..! வளரும் குழந்தைகளின் உடல் சிறப்பை குறைத்து உன்னுக்குள்ளே அவர்களது உலகத்தை அடைத்து சிரித்து மகிழ்கிறாயே..! உனை எங்ஙனம் ஏசுவது என்பதே எனக்கு தெரியவில்லை.

பிறகு…. ஒரு நிமிடம்…! என் நண்பனிடம் இருந்து அலைப்பேசி அழைப்பு..!

‘’சொல்லு மச்சி.. அப்படியா..? என்னடா சொல்லுற..? எப்போடா..? எத்தனை பேர்…? வெளையாடாத டா.. எதுல… எந்த சேனல்..? இருடா பாக்குறன்…’’

--
ஜப்பானில் எங்கள் சொந்தகாரர் வேலைசெய்யும் கம்பேனி ஒன்றில் தீ பற்றி எரிகிறதாம். NDTVல் அதன் காட்சிகள் ஒளிபரப்பாகிறதாம்…! கொஞ்சம் NDTVக்கு உனை மாற்றிக்கொள்கிறேன்…!
--

தம்பி கூர்மதியன்

Comments

Popular posts from this blog

சிட்லபாக்கத்தில் தொடரும் வாழ்வியல் போராட்டம்!

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..

GST – நான் அறிந்தவை!