எனதருகில்...


அன்று காலை எழுந்தது முதல் காதில் ஒரு இடையூறு. ஏதோ ஒன்று முட்டி முனகி காதில் சண்டைபோட்டு கொள்வதாய் ஒரு உணர்வு. என்னவாக இருக்கும் என்று எனக்கு யோசிக்க தோன்றவில்லை. என்னவாக இருந்தாலும் என்னை விட்டு போனால் சரிதான் என்றே நினைக்க தோன்றியது. குளித்து முடித்துவிட்டு இடுப்பில் துண்டை கட்டிக்கொண்டு காதில் கையை விட்டு குடைந்தபடியே வந்தேன். இப்போது அந்த இடையூறில் ஒரு தெளிவு.

சப்தம் இல்லாது அது ஏதோ மெல்லிய ஒலி என்பதை புரிந்துகொண்டேன். காதுகள் உற்று கேட்க தொடங்கியது. ஏதோ அழைப்பு ஒலி போல இருக்கிறது. காதில் புகுந்துகொண்டு விளையாட்டு காட்டிக்கொண்டிருந்த தண்ணீரை தட்டி வெளியே எடுத்தேன். மீண்டும் சப்தம்... மெல்லிய ஒலியல்ல சப்தம். குளித்ததும் காதில் தெளிவு பிறக்கவில்லை-அது காது அடைத்துக்கொண்டது என்பதை புரிந்துகொண்டேன்.

வீட்டை விட்டு வெளிய வந்தேன். ஒரு கும்பல் என்னை துரத்த தொடங்கியது. ஏன் ஓடுகிறோம் என்பது புரியாமல் ஓட தொடங்கினேன். பின்னால் திரும்பி பார்க்கவேண்டாம் என என்னை ஏதோ உரக்க சொல்லிக்கொண்டே இருந்தது. கண்டிப்பாக பார்க்க கூடாது என்று முடிவு எடுத்து பின்னால் பார்க்காமல் மேல் மூச்சு கீழ்மூச்சுமாய் இறப்பின் வழிநொடியின் கடைசி நொடி வரை ஓடி சென்று திரும்பினேன். துரத்தி வந்த கூட்டம் இல்லை. மனதை ஆக்கிரமித்து இருந்த அந்த பயமும் இல்லை. கண்கள் தெளிவின் பாதையை அடைந்தது.

ஆனால், எங்கே வந்து இருக்கிறேன் நான். ஒரு தனிமையான உலகிற்கு வந்துவிட்டேனா? என்னை துரத்தி வந்த கூட்டம் மட்டுமல்ல, என்னை சுற்றிலும் கூட ஒருவரையும் பார்க்க முடியவில்லை. நிதானித்து யோசித்தேன். மீண்டும் அந்த சப்தம்... ஆனால் இம்முறை சப்தமல்ல.. ஒலி.

அந்த மெல்லிய ஒலி ஒரு பெண்ணின் குரல் என்பது நன்றாக புரிந்தது. என்னை வா என்று அழைத்துக்கொண்டிருந்த அந்த குரலுக்கு என் கால்கள் அதன் வழி தேடி பதில் சொல்லிக்கொண்டிருந்தது. அது ஒரு மெல்லிய, நலினம் கொண்ட அழகான குரல். குரலின் அசைவுகளும், நேர்த்தியும் அந்த பெண் குரல் கொண்டிருக்கும் உடம்பு வெளிபுற காற்றை உள்வாங்க தொடங்கி 15லிருந்து 20வது வருடங்கள் ஆகியிருக்கும் என்று உள்ளுக்குள் தோன்றியது.

அது என்னிடம் ஏதோ எதிர்பார்த்து என்னை அழைக்கிறது என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. இந்த யாரும் இல்லா சூழலில் நான் என்ன உதவிட முடியும். அந்த நேரத்தில் தமிழ் சினிமாவின் கதாநாயகர்கள் கண்முன்னே ஒரு வட்டம் போட்டு சென்றனர். அந்த பெண் ஏதாவது ஆபத்தில் இருந்தால் கண்டிப்பாக காப்பாற்றிவிட வேண்டும் என்று முடிவெடுத்தேன். ஆனால் மெல்லியதாய் வரும் குரல் ஆபத்தில் வருவதாக தெரியவில்லையே. ஒருவேலை நான் அப்பாவிற்கு தெரியாமல் அவர் வாங்கிய ஆயிரம் ரூபாய் பேனாவை முச்சந்தி முனியனிடம் ஐம்பது ரூபாய்க்கு பரோட்டா சாப்பிட விற்றேனே அதை பார்த்துவிட்டு அந்த ஐம்பது ரூபாயை என்னிடம் இருந்து புடுங்க அந்த இளம்குரல் போடும் லாவகமான திட்டமாக இருக்குமோ. இவ்வாறு பல எண்ணங்கள் மனதில் எழ குரல் வரும் திசை நோக்கி மெல்ல நடந்துகொண்டிருந்தேன்.

அந்த இனிமையான குரல் அழைக்கும் பேச்சும் ஒரு பாடல் போல தான் இருந்தது. அந்த குரலில் லயித்து அந்த குரலுக்கு அடிமையாகிவிடுவேனோ என்று மனதினுள் ஒரு பயமும் இருந்துகொண்டே தான் இருந்தது. பயம் பயமாகவே மறைந்துவிட்டால் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் கண்ட பயம் உண்மையானது. நடக்கும் பாதையிலும் போகும் எண்ணத்திலும் நினைவு இல்லை. அந்த குரல் மட்டுமே கடிசமாக பாடலாக ஒலித்துக்கொண்டிருக்க இருள் காடுகளில் என் கால்கள் நடக்க தொடங்கின. கற்களும் முற்களும் என் கால்களை தைத்துக்கொண்டிருந்தன. ஆனால் என் எண்ணங்கள் அந்த குரலில் மட்டுமே இருந்தது. 

மெல்லிய குரல் கொஞ்சம் கொஞ்சமாக மாற தொடங்கியது. கிர்.. கிர்.. என்று உர்ரிட்ட சத்தம். பின்பு கொடூரமான சப்தமாக மாறியது. இது கண்டிப்பாக ஒரு அகோரமான நிலையிலே இருக்கும் குரல் என்றே என் மனதில் தோன்றியது. கண்டிப்பாக அந்த பெண் தன்னிலை மறந்து ஒரு கொடூரமான நிலையில் இருக்கிறாள் என்று புரிந்த்து. கண்டிப்பாக அவளை சேர்ந்து அவளை நிலைக்கு கொண்டுவர வேண்டும் என்று நினைத்திருந்தேன். 

அவளின் குரலால் மங்கிபோன என் அறிவும் மனமும் பழைய நிலை அடைந்தது. அவளை எப்படியாவது பழையதாய் மாற்றிவிட வேண்டும் என்று முடிவெடுத்து வேகமாக வேகமாக நெருங்கினேன். என் குரலை அவளின் சமாதானத்திற்காக எழுப்பினேன். ஆனால் அதை அவள் கேட்பதாக இல்லை. எத்தனை முயற்சிகள் எடுத்தும் அவள் அதையெல்லாம் மீறியவளாய் அகோர குரலிலே இருந்தாள். போகும் பாதையில் தடுக்கி விழுந்தேன். அகோர குரல் அடங்கி மெல்லிய குரலாய் என்னை 'பார்த்து போ' என்று சொல்லியது. மனம் சற்று அமைதி அடைந்தது. மெதுவாய் நடக்க துடங்கினேன். மீண்டும் அகோர குரல் ஆரம்பமானது. இம்முறை விழுவதாய் நடித்தேன். அமைதியானது. மீண்டும் அகோரமாய் ஆரம்பமானது, மீண்டும் விழுந்தேன். ஆனால் இம்முறை அமைதியாகவில்லை. இன்னும் அகோரமாக கற்ற துடங்கியது. இது சரிவராது என்று மனதினுள் தோன்றியது. இருந்தாலும் அந்த பாடல் போன்ற மெல்லிய குரலுக்கு மனம் ஏங்கி தவித்தது.

அந்த அகோரத்தை அடக்கிட மனம் தவித்தது. ஓடினேன் அந்த அகோரத்தை அடக்கிட. காடுகளும் கற்களும் முட்களுமாய் பாதை கடினமானது அந்த குரலுக்காக ஓடினேன். என்னால் அந்த பாதையை கடந்திடமுடியும். ஆனால் அவளுக்காக அதை விரைந்து கடந்திட தவித்தேன். கடந்தேன். அங்கே ஓரத்தில் ஒரு ஒலி மங்கிய நிலையில் ஒரு மங்கையின் உருவம் பார்த்தேன். மலையின் உச்சியில் நான் இருப்பதை உணர்ந்தேன். அவள் மற்றொரு மலையின் உச்சியில் இருந்தாள். இதை கடந்தால் தான் அவளின் முகத்தை பார்க்க முடியும். மிகவும் கடினமானது தான் இது. இருப்பினும் கண்டிப்பாக செய்வேன். கண்டிப்பாக. என்னவென்றே தெரியாமல் அதற்காக உழைக்க வேண்டும் என்று முடிவு எடுத்தேன். உச்சி நோக்கி பார்க்கையில் ஒளி சூரியன் முழுதும் என் தலையிலே தஞ்சம் புகுந்தது. கண்ணை மூடி மீண்டும் அவள் இருந்த இடத்தை பார்த்தேன். ஆனால் அவள் அங்கு இல்லை. சோகத்தில் தலை கீழே பார்க்கையில், பின்னாலிருந்து காதருகில் ஒரு குரல் என் பெயரை அழைத்தது-பாடலாக.

-தம்பி கூர்மதியன்

Comments

Popular posts from this blog

சிட்லபாக்கத்தில் தொடரும் வாழ்வியல் போராட்டம்!

ஏழு நாட்கள்...

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..