நான்- ஆகஸ்ட் 15


பசியும் பட்டினியுமாக நின்றுகொண்டிருந்த அந்த சிறுவனிடம் சென்று இன்று என்ன நாளடா என்று கேட்டேன். ‘’சுதந்திர தினம்’’ணா என்று சொல்லிவிட்டு பசி மறந்து சிரிக்கிறான். சுதந்திர தினம் என்று சொல்லும்போதே அவன் மனதிலும் முகத்திலும் தெரிந்த சந்தோசங்களின் அளவில்லை. ஆனால், உண்மையில் சுதந்திரம் என்னும் வார்த்தையின் அர்த்தத்தை தமிழ் அகராதியை புரட்டி முண்டி மோதி ஒருவேலை இந்த சமூகத்தின் எல்லா சிக்கல் பிக்கல்களிலிருந்தும் தப்பித்து அவன் கண்டுபிடித்துவிட்டால். கண்டிப்பாக எங்கு வேண்டுமானாலும் எவர் வேண்டுமானாலும் சொல்லமுடியும் அவன் ‘சுதந்திர தினம்’ என்று சொல்லும்போது சின்னவாயின் சிரிப்பு மறைந்து போயிருக்கும். இவ்வகையின் சமூக சிந்தனையாளன் போல நினைத்துக்கொண்டு, விட்டத்தை பார்த்து சிரித்துவிட்டு கொழுத்திருந்த என் தாடியை தடவிக்கொண்டு நகர எத்தனித்தேன்.


சுதந்திர தினம் என்றதும் திடீரென்று என் அடிவயிற்றில்… இல்லை இல்லை.. உச்சந்தலை மூலை(ளை)யில் எழுந்த சிந்தையின் அடிப்படையில் இன்று கதர் ஆடைகள் உடுத்திக்கொண்டு, நெஞ்சில் திடீரென்று முளைத்த தேசபக்தியால் தேசியக்கொடியை குத்தியிருந்தேன். சில நாட்களுக்கு முன்பு தினமும் நெஞ்சில் தேசிய கொடியை குத்திக்கொள்வேன். அப்படி குத்திக்கொண்டு வெளியில் செல்லும்போதெல்லாம் ஏதோ வேற்று கிரகத்திலிருந்து தப்பி வந்த ஜந்துவை பார்ப்பது போல பார்த்துக்கொண்டிருந்தார்கள். என் நாட்டைவிடவும், அதன் மேல் நான் கொண்ட பாசத்தை விடவும் எனது கௌரவமும், மதிப்பும் முக்கியம் என்பதால் அப்படி குத்திக்கொண்டிருந்த கொடியை எடுத்துவிட்டேன். ஆனால், இன்று நான் குத்திக்கொண்டிருப்பதை பார்த்து எல்லோரும் புன்னகைக்கின்றனர், சந்தோசம் கொள்கின்றனர்.

நான் ஒரு மிகப்பெரிய எழுத்தாளன் என்பதால் அதிகமாக நிஜத்தைவிட கனவில் தான் இருப்பேன்.இப்போது கூட.. அந்த சிறுவனிடமிருந்து நகர நினைத்த நொடியில் இப்படி சிந்தித்துக்கொண்டிருக்கிறேன். மீண்டும் என்னை நினைத்து சிரித்துக்கொண்டிருக்கையிலே அந்த சிறுவன் என் கதர் சட்டையை பிடித்து இழுத்தான். இது போல ஒரு விரக்தியான சூழலில் அனைத்து எழுத்தாளர்களும் அமைதியாக தான் இருப்பார்கள் என்பதால் நானும் மெதுவாக திரும்பி அமைதியான குரலில்.. ‘’என்னபா..’’ என்றேன்.

‘’நீ பாட்டுக்கு கேட்டுட்டு சாக்லேட் கொடுக்காம போறீய சார்.. கொடுத்துட்டு போவேன்…’’ என்று அவன் கேட்ட மாத்திரத்தில் அதிர்ந்து போனேன். கண்ணீர் லேசாக சொட்ட ஆரம்பிக்க, காலை மடக்கி அவன் உயர்த்திற்கு அமர நினைத்தேன். அப்போது அவன்,

‘’சார்… துட்டு இல்லனா உடேன்.. எதுக்கு எமோஷன் ஆகுற…’’ என்றான். நான் ஒரு எழுத்தாளன்.. இதுபோல அறியாமையெல்லாம் கண்டு என்னை போல மிகப்பெரிய எழுத்தாளன் கண்களின் ஓரமாக கண்ணீர் வழியவேண்டும் என்னும் நியதியை என்பதை அந்த சிறுவன் அறிந்திருக்கவில்லை. அவன் தோளில் தட்டிகொடுத்துவிட்டு, நகர்ந்துவிட்டேன்.

சமூகத்தை எட்டிப்பார்க்கும் என் சுதந்திர பிரவேசத்தில் அடுத்து நான் கண்டது உலகையே மறந்து ரோட்டோரத்தில் தன் மனைவி செய்த உணவை ருசித்து ருசித்து அவளை கொஞ்சிக்கொண்டிருந்த  ஒரு கணவனை கண்டேன். அருகில் சென்று அமர்ந்து வாயை பிளந்துகொண்டு அவர்களையே பார்த்துக்கொண்டிருக்கையில் திடீரென்று திரும்பிய அவன் என்னை தெரு நாயை அடித்து விரட்டுவது போல விரட்டினான். பயம் வந்து ஓடிவந்துவிட்டேன். ஆனால் அவனை நினைத்தால் எனக்கு பாவமாக தான் இருக்கிறது. நான் ஒரு மிகையில்லா எழுத்தாளன் என்பது அவனுக்கு தெரியவில்லை.. தத்ரூபமாக ஒரு கட்டூரை எழுதி வரலாற்றில் இடம்பிடிக்க தான் நான் அவனை உற்று பார்த்திருக்கிறேன் என்பதை அவன் அறியவில்லை. வரலாற்றின் உச்சியில் கால்பதிக்கும் அந்தஸ்தை அவன் வீணாக இழந்துவிட்டான் என்றே சொல்லவேண்டும்.

ஒரு நிமிஷம். என்ன ஒரு வேடிக்கை பார்த்தீர்களா’? பணம் வைத்திருப்பவன் ரோட்டரத்திலும், புதர்களிலும் செய்யும் சில்மிஷங்களை கண்டால் கலாச்சாரம் சீரழிவு என்கிறோம்.. ஆனால் இவனுக்கு ரோட்டோரத்தில் மட்டும் தான் எல்லாம் செய்யமுடியும். ஆனால் நாம் இதெல்லாம் கண்டுகொள்வதில்லை. நான் ஏன் இப்படியெல்லாம் என் சிந்தையில் எண்ணங்களை பாய்ச்சிவிடுகிறேன் என்பதை நீங்கள் யோசிக்கலாம்… ஒரு மிகையில்லா சமூக சிந்தனை கொண்ட பெரிய எழுத்தாளன் இப்படி தான் யோசிப்பான் என்பதை உங்களுக்கு பதிலாக சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.

அடுத்து நான் தொடங்கபோகும் இடத்தை நிற்ணயிக்கும் முன்பு நண்பர்களிடமிருந்து ஒரு அழைப்பு.
‘’மாமா.. சீக்கிரம் கிளம்பி வா…. ஃப்ரான்ஸிஸ் க்ளப்க்கு டிக்கெட் கெடச்சுடுச்சு.. செம கூத்தா இருக்கும்.. டிஸ்கோ பாட்டு.. டான்ஸ்.. சரக்கு… வா மச்சி…’’

‘’அப்படியா மச்சி.. தோ டா..’’

என்று படபடவென கதராடை ஜீன்ஸ் ஆடையாக மாற, கோதிய முடிகலைந்ததாக உரு பெற, தோல் செருப்பு கேன்வாஸ் ஷூவாக மாற, நடைப்பயணம் AUDI காரின் பயணமாக மாறி சிரிக்கிறது. எல்லா விதங்களிலும் பழக கற்றுக்கொள்ள வேண்டும். ஏனென்றால் நான் ஒரு எழுத்தாளன் அல்லவா?

எதார்த்தம்.

இன்று எம்முள் எத்தனையோ மாற்றங்கள் தரித்திருக்கலாம். காலபோக்கில் காலத்தோடு ஒன்றிபோய் என் சிந்தை கலங்கி ஒரு சராசரி வாழ்க்கையை நோக்கி நான் பயணித்துக்கொண்டிருக்கலாம். சமூகத்தோடு ஒன்றிவிட்டால் தூங்கிவிட்டேன் என்று எண்ணிதுல் வேண்டாம். உள்ளுக்குள்ளே ஒரு தீ.. கொழுந்துவிட்டு இன்றும் நடக்கும் அநியாயங்களை உரக்க சொல்லிக்கொண்டிருக்கிறது. அன்று தவறாக தெரிந்த அனைத்தும் இன்று சரியாக தோன்றலாம். ஆனால் என்றும் இதுவும் நிலையாகாது. நான் சமூகத்தோடு ஒன்றிபோகவில்லை. சமூகத்தை உணர்ந்துகொண்டிருக்கிறேன். இன்றும் என்றும் யாம் ஒரு சமூக போராளியே. தேசியம் பேச துடிக்கும் ஒரு தேசியவாதியாகவே நான் இருக்க விரும்புகிறேன். மனிதம் பேசும் நல்மனிதனாய் அடையாளம் கொள்ளவே ஆசைக்கொள்கிறேன். என் எழுத்தும் என் எண்ணங்களை பிரதிபலித்து நிற்கும் சில நேரம் ஆக்ரோஷமாக, சில நேரங்களில் நகைச்சுவையாக. எப்படி அமைந்தாலும் யம்மில் பயத்திருக்கும் ரௌத்திரம் என்றும் ரம்மியம் கொள்ளாது.

-தம்பி கூர்மதியன்

Comments

Popular posts from this blog

சிட்லபாக்கத்தில் தொடரும் வாழ்வியல் போராட்டம்!

ஏழு நாட்கள்...

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..