தினத்துளி அலுவல்...! (1)


அலுவலக பணி. பரபரவென ஒரு பக்கம் அலைபேசி ஒலித்துக்கொண்டிருக்க, என் கைகள் தட்டச்சின் மேலே பரதம் ஆடிக்கொண்டிருந்தது. அருகில் மது எந்தன் ப்ராஜெக்ட் சீனியர் பரபரவென வேலைபார்த்துக்கொண்டிருந்தார்.

ஒவ்வொரு முறை நான் மெயில்களுக்கு பதில் அனுப்பும்போதும் ஒரு முறை அவரிடம் சரிபார்த்துவிட்டு அனுப்புவதை ஒரு பழக்கமாக வைத்திருந்தேன். மெயில்களுக்கு பதிலெல்லாம் போட்டுவிட்டு இறுதியில் கண்டறிந்து BUGS-ஐ லோட் பண்ண ஆரம்பித்தேன். அருகில் மது,

''முடிச்சாச்சா....??''

''தோ.. மது.. கோயிங் டு பீ ஓவர்..''

''சரி... எடுத்துட்டு ரிப்போர்ட் அனுப்பிடுங்க.. நான் ஸ்டேடஸ் ரிப்போர்ட் ரெடி பண்றேன்...''

''ஓகே மது.. 2 மினிட்ஸ்...''

பரபரவென அடித்த என் கைகள் ஒருவழியாக லோட் பண்ணி முடித்துவிட்டு ரிப்போர்ட் எடுத்து அனுப்பிவிட்டேன். இனி மது ஸ்டேடஸ் ரிப்போர்ட்டை முடித்துவிட்டால் வீட்டுக்கு கிளம்பிவிடலாம். என் வீடு தாம்பரம் அருகில் இருக்கிறது. ஆபிஸ் மணப்பாக்கத்தில் இருக்கிறது. அரை மணி நேரத்தில் சென்றுவிட கூடிய தூரம் தான். ஆனால் சென்னைக்கு உரித்தான அந்த ட்ராஃபிக்கில் கண்டிப்பாக ஒரு மணிநேரம் மேலாகும்.

அவர் ஸ்டேடஸ் ரெடி செய்வதை கவனித்துக்கொண்டே எங்கள் கண்ணாடி கட்டிடத்தின் வெளியில் பார்த்தேன். வெளியில் நடந்துகொண்டிருந்த ஒருவரின் நன்கு வளர்க்கப்பட்ட முடி நான்கு புறமும் பறந்துகொண்டிருந்தது. மேலாடை மேலோங்கும் நிலையருகில் பெண்கள் நாணம் கருதி கண்ணாடி பெட்டி கட்டிடத்தின் உள்ளே தஞ்சம் புகுந்திட ஓடி வந்தனர். பாவம் பார்த்து வளர்க்கப்பட்டிருந்த செடிகளும், மரங்களும் அசைந்தாடின. இயற்கையையும், இயல்பையும் மறந்து இயந்திரமாக இருக்கும் எனக்கு வெளியில் காற்று பலமாக வீசிக்கொண்டிருக்கிறது என்பதை புரிந்துகொள்ள சற்று நேரம் ஆனது தான்.

அப்போது என் அலைப்பேசி மணி ஒலித்தது. கையில் எடுத்து பார்த்தேன்.

'Shobie calling...'

ஷோபனா. என்னுடன் ஒன்றாக இந்த கம்பேனியில் வேலைக்கு சேர்ந்த பெண். IT-யின் உண்மையான முகம் தெரிந்ததும் விட்டா போதும் சாமி என்று IT-க்கு முழு முழுக்கு போட்டவர்.

''சொல்லு மா..''

''எங்க டா இருக்க..?''

''ஆபிஸ்ல தான்... ஏன்?''

''மழை பயங்கரமா இருக்குடா இங்க.. அங்க எப்படி?''

''இங்க பயங்கர காத்து போல மா.. எனக்கு தெரில.. வெளியில போயி பாத்துட்டு சொல்லுறேன்..''

''டே... பாத்துடா... காத்து பயங்கரம்னு சொல்ற.. பறந்துடபோற..'' என்று சொல்லிவிட்டு ஒரு நமட்டு சிரிப்பு சிரித்தார்.

அவர் சிரிப்பது நியாயம் தான். எப்படி சிரிக்காமல்  இருப்பார். அது அவர் அடித்த கேலி தானே. என் உருவம் ஆடி காத்துக்கே அசையாத உருவம், இந்த காத்திற்கு அசைந்திடுமா????

''அடிங்க... பிச்சுபுடுவன்.. கிண்டலா...''

''சீ சீ... நான் ஏன் கிண்டல் பண்ண போறேன்.. பாத்து போ.. ரெயின் கோட் வச்சுருக்கல.. எடுத்து மாட்டிகிட்டு பொறுமையா ஓட்டிட்டு போ.. ஸ்கிட் ஆகும்...''

''9 வருசமா வண்டி ஓட்டுறன் மேடம்...''

''அதானே போன வாரம் காருல மோதி சார் காத்துல பறந்தீங்க...''

சொல்வது உண்மைதான். சென்ற வாரம் தான் நாய் ஒன்று நடுவில் வர.. என் நச் என்ற டிஸ்க் ப்ரேக் சரியாக வேலை செய்ய நடுரோட்டில் ராஜா போல நின்றேன். பின்னால் வந்த காருக்கு டிஸ்க் இருந்ததா தெரியவில்லை.. இல்லை ப்ரேக் இருந்ததா என்றே தெரியவில்லை.. பின்னாடி மோதியதில் விட்டம் பார்த்து வியாபித்துகிடந்தேன்..

''ரைட்டு விடு.. எப்படி போனாலும் மடக்குறாயா...''

''Chupp.. வாய மூடு.. பேசாம சீக்கிரம் கிளம்பு.. ஆபிஸே கதின்னு கிடக்காத...''

என்று சொல்லிவிட்டு அலைபேசியை அணைத்தார். சரிதான்...!! வேலையை விட்டு சென்றதில் இருந்து அவ்வபோது அழைத்து ஒழுங்காக சாப்பிடுகிறேனா... வீட்டுக்கு செல்கிறேனா.. என்று அக்கரையில் இருப்பினும் அக்கரையோடு விசாரித்துவருவார்.

நான் இங்கு பேசிக்கொண்டிருந்த நேரம் மது ஸ்டேடஸ் ரிப்போர்ட்டை முடித்திருந்தார். அதை எல்லோருக்கும் மெயில் போட்டுவிட நான் கிளம்புகிறேன் என்று சொல்லிவிட்டு கிளம்பினேன்.

கீழே சென்று எனது வண்டியை எடுத்துக்கொண்டு வெளியில் வந்தேன். அதற்குள் காற்று மழையாக உருவம் பெற தொடங்கி இருந்தது. சில மாதங்கள் முன்பு கை தவறி கீழே போட்ட மாத்திரத்தில் உடைந்து போன என் ஹெல்மெட்டின் முன் பக்க கண்ணாடியை முழுதுமாய் உடைத்து தூர எரிந்திருந்தேன் அதனால் மழை சிறிது சிறிதாய் என் முகத்தை முத்தமிட்டு கொண்டிருந்தது. சிறிது நேரம் மிகவும் சிரமபட்டுபோனேன்.

திடீரென உள்ளுக்குள் ஏதோ உள்ளுணர்வு எழும்ப ஏதோ ஒன்றை தொலைத்த உணர்வு ஏதோ வருடியது. வண்டி 'பட் ரோடை' கடந்தது. இன்னும் சென்று கொண்டிருக்க என் மனம் வண்டியை செலுத்துவதில் இல்லை. தினம் வந்த பழகிபோன என் கண்கள் தானாக மூளையோ மனதின் உறுதுணை இல்லாமல் கைகளையும் கால்களையும் வழிநடத்திக்கொண்டிருந்தது.

மீனம்பாக்கம் அருகில் நான் சென்றுகொண்டிருக்க வண்டியை நிறுத்து நிறுத்து என்று  என் மனம் ஏதோ உள்ளுக்குள் சொல்லிக்கொண்டே இருந்தது. எனது பைக்கை ஓரமாக நிறுத்திவிட்டு எனது பாதி உடைந்து போன ஹெல்மட்டை கழற்றினேன்.

சில்லென்ற மழை என் தலையை சாரலாக நனைத்தாள். மனம் லேசானது. இழந்த போன ஒன்று நம்மை தேடி வரும் நேரமிது.. காலம் கடந்து போனாலும் மழை என்றும் என் காதலியே..!

தலையில் கொட்டுவைத்து முகம் வழியாய் மூக்கின் நுனி நின்று பரிதவித்து கன்னங்களிலும், காதுகளிலும் விளையாடி கொண்டிருந்தாள். என் கன்னத்தின் குழியில் சறுக்கி விளையாடுவது அவளுக்கு பிடித்திருக்கிறதா என்பது தெரியவில்லை... சறுக்கி என்னுள் சில்லிட்டு கொண்டிருந்தாள்.

கழுத்தோரம் இறங்கி உடம்புக்குள் ஊடுருவி நடுரோட்டில் கூச்சம் செய்ய கொள்ள செய்தாள். என்ன தோணியது என்று தெரியவில்லை. ஹெல்மட்டை அவிழ்த்து வைத்துவிட்டு, ரெயின் கோட்டை கழற்றிவிட்டு வண்டியை செலுத்த தொடங்கினேன்.

திரிசூலம் தாண்டுகையில் காலியாக இருந்த அந்த சாலை என் இரு கைகளையும் தானாக விரிக்க சொல்லியது.. இரண்டு கைகளையும் விரித்துகொண்டு உச்சி பார்த்து மழைக்கு பதில் முத்தம் கொடுத்துக்கொண்டிருந்தேன்.

காலை ஒன்பது மணிக்கு தொடங்கிய என் வேலை.. இப்போது மணி 9.30. இவ்வளவு நேரம் உழைத்த களைப்பு என்பதை ஒரு துளி கூட மனதில் இல்லாதது போல தூசி தட்டி தூரம் போட வைத்தாள் மழை.

எவ்வளவு இழந்துகொண்டிருக்கிறேன்.. இரண்டு நாட்களாக சென்னையை மழை நாடி வருகிறாள். இருந்தும் நான் இன்று தான் அவளை என் கைகளில் ஏந்தி இருக்கிறேன். இன்னும் எவ்வளவு இழக்க போகிறேன் என்பது தெரியவில்லை, இன்னும் எனக்குள் இதுபோன்ற எவ்வளவு மாற்றம் வரும் என்பது தெரியவில்லை. இருந்தும்.........

I'm IT Professional.

-தம்பி கூர்மதியன்

Comments

  1. சுவாரஷ்யம் குன்றாமல் மழையின் மகிமை.....

    ReplyDelete
  2. துளித்துளியாய் மழையின் ரச்னைகள்.. அருமை..

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சிட்லபாக்கத்தில் தொடரும் வாழ்வியல் போராட்டம்!

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..

GST – நான் அறிந்தவை!