பட்டிகாட்டு ஆச்சி...!

ஒட்டுகுடிசையில
கூரை தாங்கி நிக்கிற
அந்த நட்ட நடு தூணு
இப்ப ஓரமா என்னையும் தாங்கி நிக்கிது..!

மண்ணுதரைய மொழுக
சட்டியில.. ஆச்சி விரலுக்கிடையில
கரையிது
அந்த கோனாறு வீட்டு மாட்டு சாணம்..!

மிச்சமாகிபோன சாணம்
வாசமுன்ன குவிஞ்சிருக்கு
அந்த ஒத்த சாமந்தி பூவுக்கு பிடிமரமா...!

தோட்டத்து பூவும்
சுத்தி வளர்ந்த மரமும்
கூட்டோட சேர்ந்த ஈர மணலும்
வீட்டுக்கு மொத்தமா கொடுக்குது
இயற்கை வீச்சு...!

சுத்தாத காத்தாடி மேல
கெழக்கும் மேற்கும் கூத்தாடுது
தொறந்து வச்ச சன்னலு வழியா
வந்த தெக்கு தெசை காத்து காரணமா...!

மழைவருமுன்ன
மோட்டாரு சைக்கிள தட்டணுமே..!
'ஆச்சி கிளம்புதேன்....'னு குரலு போச்சு..

'இளங்கத்திரியையும்
பொடிய வெங்கத்தையும்
நாலு உரஞ்சேத்து உருட்டுறேன் அய்யா..
நாழி புரளுமுன்ன நாக்கு ருசிகண்டுபோயா..!'

அம்மிக்கல்லு உருட்டலோடு
ஆச்சி மிரட்டலு பாசம் நகத்தல..!

'ஆண்டுபோன காலத்துல 
அம்மிக்கூட என்ன மல்லுக்கட்டு..?
அரசாங்கம் கொடுத்த ஒண்ணும்
வீட்டுல ஆள காணும்....!?'

செயிச்சு போன எம்.எல்.ஏ.,வும் கவுன்சிலரும்
வாக்குறுதி நெனவு வர கேட்டுபுட்டாச்சு..!

'போனமாசம் சீக்குனு வந்துபோக
பக்கத்து தெருவுல இருந்து வந்தாக பெரிய அப்பேன்..
அரச்ச மாவும், கொழையலும்
மின்னுபட்ட கல்லுல புதுசா கரஞ்சதாலதான்
சீக்குனு..! புது கண்டுபிடிப்ப போட்டாக..!
பொலந்தேன் வாய..
இப்ப அந்த மிஷினு ஆட்டுகல்லும், சின்னகல்லும்
அவுக வீட்டு சமையகட்டுல பொசுக்குனு போயி உக்காந்துகிடுச்சு...!'
சொல்லி முடிக்குமுன்ன - ஆச்சி
வாயோரமா ஒரு நமட்டு சிரிப்பு...!

'போன ரெண்டு மாசம் முன்ன பாத்த டி.வி., பொட்டி..?'

'ஆட்டுக்கல்லு போன அடுத்த நாளு
சின்ன அப்பேன் வீட்டுல சிங்காரிக்க போயிருச்சு...!'
சொல்லிக்கொண்டே சிரித்துக்கொண்டாள்.

சுடசுட இட்லியும் ஓரமா ஒதுங்கி நின்ன கொழையலும்
ஒண்ணுகூடி வாயில இறங்குறப்போ
'ஒண்டு கேப்பேன் கோவிக்கமாட்டியே...!?'

'அட.. கிறுக்குபயலே..
என் சீம பேரனுக்கு கொடுக்கனு என்ன கெடக்கு இந்த
கெழட்டு சிறுக்கிகிட்ட...?'

'எங்கூட ஊரு வானா வாரதில்ல
சீம பேரனுன்னு செல்லமாக்கும்...?'

'உங்க அய்யா வாழ்ந்த வீடும் மண்ணும்
அய்யார போலவே என புடிச்சு இழுக்குதய்யா..
என்ன செய்ய...? 
நீ கேக்குறத கேளுய்யா..!'

'ஆச்சி.. ஆச்சி..
ஆச்சி ரெண்டு இட்லி சேத்து வையி.. ருசி இறங்கமாட்டுது...!
அம்மாளுக்கும் கட்டி வையேன்
ருசி நாக்குல தாளல...!'

சொன்ன சொல்லு முடியுமுன்ன
ஆச்சி கண்ணோரம் தாரையாகுது
ஓடை கண்ணீரு...!
பொருளும் பொண்டுகளும் போகுறப்போ
சிரிச்ச வாயி.. இப்ப ஒழுகுறது இழுத்து
பாச பார்வ பாக்குது..!

'அய்யா.. ராசா.. தங்கமே.. 
ஒத்த நொடி தாங்குறா.. தோ கட்டிடுறேன்...!'
கனத்த குரல் இப்ப நடுங்குது
இறுகுன தட்டு இப்ப ஆடுது..!

கிட்ட போயி புடிச்ச நிமித்தையில
ஆச்சி கையி..
என் கையி முழுசா புடிச்சு
கண்ணீர மொத்தமா வுட்டு கழுவிகெடந்துச்சு..!!

கைய வெலக்கிபுட்டு
வருசங்கடத்து கட்டிகிட்டேன்..
பதிலேதும்பேசாம.. அந்த கெழட்டு கண்ணு
என் சட்டைய முழுசும் மழைக்குமுன்ன நெனச்சுபுட்டுது... ....!!

Comments

Popular posts from this blog

சிட்லபாக்கத்தில் தொடரும் வாழ்வியல் போராட்டம்!

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..

GST – நான் அறிந்தவை!