அப்பா... என் ஆசை...!'என்னடா அப்படி உட்கார்ந்திருக்கே..?'

'தெரில ..'

'பேசணும்னு தோணுதா?'

'இல்ல..'

'ஏதாவது செஞ்சு தர்றேன்.. சாப்பிடுறியா...?'

'வேணா...'

'புத்தகம் படிக்கிறியா...? உனக்கு புடிச்ச புத்தகத்த எடுத்திட்டு வரவா?'

'இல்ல.. வேணா..'

'நல்ல நிகழ்ச்சி எதனா டி.வி.ல., ஓடுதானு பாக்குறியா? 

'ப்ளீஸ்.. கொஞ்சம் தனியா.....' என்று சொல்லிவிட்டு தன் தந்தையிடம் முகம் சுளித்துகொண்டு தன் அறையினுள் சென்று கதவை படாரென சாத்திக்கொண்டான்.

'பொறுமை பா.. ரொம்ப வேகம் வேண்டா.. அடுத்த முறை என் மேல கோபம் வருகிறப்போ சட்டென சாத்த கதவு இல்லாம போகிடபோகுது...' சொல்லிக்கொண்டே கதவின் அருகே வந்தார். தன் இரு கைகளையும் கதவு மேல் வைத்து, கதவை தடவிக்கொண்டே...

'உள்ளே வரலாமா...?' என்று கேட்டார். பதில் ஏதும் இல்லை. மெதுவாக கதவு திறந்து தன் கண்களை அறையின் உள்ளே அலைபாயவிட்டார். மெத்தையின் மேலே தன் மகன் குப்புற படுத்திருப்பதை பார்த்து உள்ளே சென்றார்.

கட்டிலின் கீழே உட்கார்ந்து தன் மகனின் கைகளை பற்றிக்கொண்டார். அவன் ஒற்றை கையை தன் இருகைகளின் அரவணைப்பில் வைத்துக்கொண்டு பேசினார்.

'டே...'

'ம்...'

'எனக்கு ஒரு மாதிரி மனசு வலிக்குது...'

'நான் இப்படி இருக்கேன்னு நீங்க ஒண்ணும.....'

'இல்ல இல்ல இல்ல.. என்னை பத்தி கவலை படவே எனக்கு நேரமில்ல உன்ன பத்தி நான் என்ன சொல்ல...'

'ம்...'

'கொஞ்சம் ட்ரைவ் போகணும்...'

'ம்...'

'உன் கூட போகணும்.. ஒரு சின்ன ட்ரைவ்... We made it a long time back.. This time we should give it a go...'

.
.
.

'சுக்கு காபி போட்டு தரவா...?'

'எதுக்கு...?'

'இல்ல.. உன் தொண்டையில ஏதோ பிரச்சனைனு நினைக்கிறேன்... பதில் வரமாட்டேன்னு துடிக்கிதே...'

'சு.. என்னப்பா உங்க பிரச்சனை...?' என்று முகம் சுளித்து சட்டென எழுந்து உட்கார்ந்தான்.

'ப்ளீஸ்.....'

'அப்...'

'ப்ளீஸ்.....'

---

சிறிது நேரத்தில் இருவரும் தார் சாலையில் வண்டியில் பயணித்துக்கொண்டிருந்தனர். மகன் அவனது இருசக்கர வண்டியை செலுத்த பின் இருக்கையில் அப்பா உட்கார்ந்திருந்தார்.

'கடற்கரை போபா...'

'ம்... மெரினாவா.. பெசன்ட் நகரா...?'

'ம்ம்ம்ம்... பெசன்ட் நகர்...?'

'ம்...'

அடுத்த அரை மணி நேரம் ஒரு பேச்சும் இல்லை. அவனது இருசக்கர வாகனம் அந்த பெசன்ட் நகர் கடற்கரை இருசக்கர நிறுத்தத்தில் நின்றது.

'வா.. மணல்ல கொஞ்சம் நடப்போம் டா...'

'ம்...'

இருவரும் மணலில் நடந்துகொண்டிருந்தனர்....

'ஜோசியம் பாக்கலாமா...?'

'என்னப்பா இது.. புதுசா...? இதெல்லாமா...?'

'பாக்கலாமே....!!!' என்று முகத்தை ஏக்கமாக வைத்துகொண்டார்.

'சரி வாங்க.....' என்று மகன் ஒரு வயதான பெண்ணை நோக்கி சென்றார். உடனே அப்பா,

'வேணாம்.. அந்த பையன்கிட்ட போகலாம்...' என்று அங்கிருக்கும் ஜோசியம் பார்க்கிறவர்களில் இளையவராய் தெரிந்தவரை கைகாட்டினார்.

'சரி வாங்க....'

அந்த இளையவரின் பலமுறை வாய் சொதப்பல்களில் சிக்கி பிழிந்து அப்பாவின் வாழ்க்கை கணிப்பு பிச்சைகாரரில் இருந்து பில்கேட்ஸ் வரை சுற்றி திரிந்து வந்துவிட்டது.

'அப்பவே சொன்னேன் வேணாம்னு... இப்ப.. இப்ப.. ஹா ஹா...' என்று சிரித்துக்கொண்டே முன்னால் ஓடினான் மகன். தன் மகனை பார்த்து சிரித்துகொண்டே அடிமேல் அடி எடுத்து வைத்து வந்தார் அப்பா. இருவரும் மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கி அங்கிருக்கும் சிமெண்ட் கட்டைகளில் அமர்ந்தனர்.

'சிரிப்பு எட்டி பார்த்திருச்சு போலிருக்கே....!!?' அப்பா கேட்ட கேள்வியில் சட்டென முகம் சுருங்கிகொண்டது மகனுக்கு.

'இல்ல இல்ல.. அந்த சிரிப்பு அங்கேயே இருக்கட்டும்...'

'ம் பா.. மனசு கஷ்டமா இருக்குபா... தினமும் புடிக்காத வேலையில உட்கார்ந்து உழைக்கிறது கஷ்டமா இருக்குபா.. வேலை செய்யவே புடிக்கல...'

'ம் ம்...'

'தினமும் எனக்கான வேலைய உட்கார்ந்த இடத்துல இருந்து பண்ணுறப்போ... உடம்பு பத்திகிட்டு எரியுதுபா... அடுத்த வேலைக்கு கஷ்டபட்டாலும் நமக்கு புடிச்ச வேலையை செஞ்சு கஷ்டபடணும்பா...நான் இங்க வந்து ரெண்டு வருசம் ஆச்சு இன்னும் என்னால முடியலப்பா...'

'ம் ம்...'

'என்ன ஏன் பா நீங்க இப்படி பண்ணிட்டீங்க...? எனக்கு புடிச்ச வேலைய பண்ண விட வேண்டியது தானப்பா...?'

'ம் ம்...'

'அப்பா... ஏதாவது தப்பா பேசியிருந்தா மன்னிச்சிருங்கப்பா.. உங்ககிட்ட பேசகூடாதுனு தான் இருந்தேன்... ஆனா.. I just want to dump it anywhere பா...'

'ச்சீ ச்சீ.. என்கிட்ட சொல்லாம வேற யாருகிட்ட டா சொல்லுவ.. I will be always there for you..! இப்ப ஒரு ஜோசிய காரர பாத்தோம்ல.. அவருக்கு எத்தனை வயசு இருக்கும்...?'

'ம்.... என்ன ஒரு 26...'

'ம்... ஒரு பத்து வருசம் முன்ன அவன் ஒரு ஜோசிய காரரா ஆகணும்னு கனவோட இருந்திருப்பான்னு நினைக்கிறியா...?'

என்ன சொல்வதென்று தெரியாமல் உதட்டை பிதுக்கினான் மகன்.

'ம்... எனக்கும் தெரியல.. ஆனா நான் பார்த்த எந்த ஒரு மனுசனும் குழந்தையா இருக்கிறப்போ இப்படி சொல்லுறது இல்ல... அவன் என்னை பத்தி சொன்னதெல்லாம் சரியா இருந்துச்சா...? தெளிவா பேசினானா...?'

'ஹா.. எங்க... சொதப்பலோ சொதப்பல்... அம்மாவுக்கு அடங்கி நீங்க நடப்பீங்கனு சொல்லுறான்.. எங்க அப்பாவ நான் அப்படி பாத்ததே இல்லயே....!'

'ஹா... Brave example... இது ஏன் அவனுக்கு... தாம்பரத்துல இருந்து ஒரு கிறுக்கன் அவன் பையன கூப்பிட்டிட்டு வருவான்.. அவன ஏமாத்தலாம்னு இருக்குமோ...?'

'அப்பா......' என்று பொய் கோபத்தோடு மகன் அப்பாவை நோக்கினான்.

'Just Joking... அப்பரம் ஏன் அவன் அப்படி இருக்கான்...? அவனுக்கு அந்த தொழில்ல விருப்பம் இல்ல.. அந்த தொழில அவன் சரியாவும் செய்யல.. அப்பரம் ஏன்...?'

மகனின் உதட்டு பிதுக்கலுக்கு பிறகு மீண்டும் தொடர்ந்தார்.

'குடும்பம்... சூழ்நிலை... அவன் பேசுறத வச்சு அவன் ஒரு வருசம் கூட இந்த தொழில பண்ணிருக்கமாட்டான்னு என்னால சொல்ல முடியும்... அவன் அவனுக்கு புடிச்ச வேலைய செய்யணும்னு காத்திருக்கலாம்... ஆனா அவன் குடும்பம் இருக்கமுடியாது.. அப்படியே அவன் அந்த வேலைய செஞ்சாலும் அவன் குடும்பத்தோட சூழல அவனால காப்பாத்த முடியாததா இருக்கும்...'

'ம்.. ம்...'

'உங்க தாத்தா.. ஒரு பெரிய பண்ணையகாரரு.. வெள்ளையன் வந்து சலாம் போட சொல்ல முடியாதுன்னு மொறச்சு நின்னாரு.. அவரு மீசைய முறுக்கிவிட்டாருன்னா வெள்ளையன் பத்தடி பாஞ்சு ஓடுவான்... அவர பாத்தாலே ஊரே மெச்சி நிக்கும்... நம்மூரு பொம்பளைங்கல சீண்டுன வெள்ளைய காரன வெட்டிபுட்டு வெள்ளைய தூக்குல போடுறதுக்கு முன்ன வெட்டிகிட்டு சாஞ்சவரு... வெள்ளையன் நாட்ட விட்ட போனான்.. உன் அத்தைகளுக்கு கல்யாணம் கட்ட நம்ம நெலம் எல்லாம் வித்து போச்சு.. ஒட்டு குடிசையில உங்க பாட்டியோட நான் இருந்தேன்.. படிச்சு.. இஞ்சினியரா ஆகணும்னு எனக்கு ஆசை... குடும்பம் சூழ்நிலை சரியில்ல.. அடுத்த வேலை கஞ்சிக்கு நம்ம சொந்த வயலா இருந்த இடத்துல ராணி போல இருந்த உங்க பாட்டி இறங்கி கொத்து வேல செய்ய ஆரம்பிச்சாங்க... ஒட்டு மொத்த ஆச போட்டு நிறைச்சு கெடந்த உன் அப்பன் மனசு கரண்ட் கம்பம் ஏறுர சர்க்காரு வேலைக்காக சைக்கிள் மிதிச்சு போக ஆரம்பிச்சுது....'

'ம்.... ம்...'

'நீ தேர்ந்தெடுத்த தொழில்ல பணம் வரும்.. ஆனா அது நம்ம தினசரிக்காக மட்டும் தான் பத்தும்.. நம்ம கடன், மத்த மக்கள போல ஒரு சாதாரண ஃப்ரிட்ஜ், வாஷிங் மிஷின்னு நம்ம ஆசைக்காக...? இன்னும் உனக்கு கீழ ரெண்டு தங்கை.. நானும் ரிட்டையர் ஆக போறேன்.. அதுக்காக தான் உன்ன IT துறையில போக சொன்னது... எங்க அப்பா எனக்கு அமைச்சுகொடுத்த வாழ்க்கை.. என் ஆசைய எட்டி பிடிக்க கூட வழியில்லாம பண்ணிடுச்சு... நான் உனக்கு அமைச்ச வாழ்க்கை உன் ஆசையை பிடிக்க விட்டுச்சு, ஆனா நிலைக்க விடல... நீ உன் புள்ளைக்கு அமைக்கிற வாழ்க்கை அவன அவன் நினச்சதெல்லாம் பண்ண விடணும்னு எனக்கு தோணுச்சு....!! நாம கீழ இருக்கிற கீரைய பறிக்க முயற்சிக்கல.. பனைமரத்துல இருக்குற பனைய பறிக்க பாக்குறோம்.. மூணு தலைமுறை தேவைபட்டிருக்கு... பறிச்சிருவோம்... நான் பண்ணினது உனக்கு தப்புனு தோணினா.. I am very much sorry டா...'

'அப்பா... அப்படி இல்ல...'

'நீ நினைக்கிறது தப்பில்ல டா.. எனக்கு எங்க அப்பா மேல வந்த கோபம் தான் இது... எனக்கு புரியுது மை பாய்.... நான் என் பையன, அவன் குறும்பு தனத்த ரொம்ப மிஸ் பண்றேன் டா...' அவர் சொல்லியதும் அவன் அவர் கைகளை பிடித்துகொண்டு

'அப்பா.. Can I hug you once...'

'ச்சீ... வாடா..' என இழுத்து கட்டிக்கொணாடார்.

'அழுகணும் போல இருக்குப்பா...'

'நல்ல கத்தி அழுதிடுடா.. இதுதான் உன் வாழ்க்கைனு நான் சொல்லல.. பட்.. இனிமே உனக்கே எல்லாம் தெரியும்டா...'

'ஐ லவ் யு டாட்...'

'லவ் யு ட மை டியர் பாய்...'

நீண்ட நேர கதறலுக்கு பிறகு...

'அப்பா... You want a drive...?'

'ஹா.. Why not...?'

'அப்ப இந்த முறை நீங்க.. இந்தாங்க வண்டி சாவி.. கம்மான்...'

'....... ஆஹா... Its not just a drive.. Come for Fast drive my son..." என்று இருவரும் வண்டியில் அமர... அந்த ட்விஸ்டர் வண்டியின் 110cc, இப்பொழுது 1100cc போன்று ஜிவ்வென்று பறக்கிறது அந்த கடற்கரை சாலையில்.

Comments

Popular posts from this blog

சிட்லபாக்கத்தில் தொடரும் வாழ்வியல் போராட்டம்!

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..

GST – நான் அறிந்தவை!