மனிதன்... மனிதம் கொள்ளும்போது...!அது வானடங்கா சப்தம் ஓங்கி அடங்கிபோன இடம் போல காட்சியளிக்கிறது. அழகாக வீட்டிலும் கடைகளிலும் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பொருட்கள் எல்லாம் வீதிகளில் கருகிய நிலையில் கலைந்து கிடக்கிறது. கால்கள் வைக்கும் இடங்கள் கூட பாதங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்திவிடுமோ என்று யோசிக்க வைக்கும் வகையில் இருக்கிறது.

அந்த ராணுவ உடை அணிந்த அதிகாரி உயிரிழந்த மக்கள் தவிர்த்து இருக்கும் சிலரை காப்பாற்ற ஓடி ஆடி அலைந்துவிட்டு அந்த மின்கம்பத்தின் அடியில் அமர்ந்தார். அருகில் ஒருவர் அழுதுகொண்டிருந்தார்.

'You need this...?' என்று தன் கையில் இருந்த தண்ணீர் பாட்டிலை அவனிடம் நீட்டினார். வேண்டாம் என்பது போல கையை அசைத்துவிட்டு தன் முகத்தை தன் இருகைகளிலாலும் துடைத்துகொண்டார். மீண்டும் தன் கைகளை கொண்டு முகத்தை மூடிகொண்டார். தேம்பல் சப்தம் மட்டும் வெளியில் கேட்டுக்கொண்டிருந்தது.

'உங்களுக்கு உதவி தேவையா...?' என்றார் ராணுவ அதிகாரி. பதில் ஏதும் வருவதாக இல்லை

'உங்களுக்கு எங்காவது செல்ல வேண்டுமா.. ராணுவ அவசர உதவி வண்டி இருக்கிறது.. நான் உங்களுக்கு உதவுகிறேன்.' என்று சொல்லிவிட்டு அழுதவரின் பதிலுக்காக காத்திருந்தார். மீண்டும் பதில் எதுவுமில்லை...

ராணுவ அதிகாரி எழுந்து சென்றுவிட்டார். அவர் கையில் இருந்த கருவி ஏதோ ஒலிக்க தொடங்கியது. சட்டென கூடிய ஒரு ராணுவ அமைப்பு அங்கிருக்கும் அனைவரையும் வெளியேற்ற தொடங்கியது. மீண்டும் அதே ராணுவ அதிகாரி அழுதுகொண்டிருந்த அவனிடம் வந்தார்...

' மிஸ்டர்... இங்க இருக்க கூடாது.. சீக்கிரம் அந்த வண்டியில போயி ஏறு...' என்றார். எதிர்பார்த்தது போல பதில் ஏதும் இல்லை... இவன் சொன்னால் கேட்கமாட்டான் என்று தரதரவென இழுக்க தொடங்கினார். அவரை உதறிவிட்டு...

'Please leave me alone...' என்று உரக்க கத்தினான்.

'We are not instructed to do such...' என்று சொல்லி இரு ராணுவ அதிகாரி இணைந்து அங்கிருக்கும் வண்டியில் அவனை ஏற்றினர். அந்த வண்டிக்கு துணையாக அவனிடம் பேசிக்கொண்டிருந்த ராணுவ அதிகாரியும் ஏறிக்கொண்டார். கையில் ஒரு நீள கருமை நிற துப்பாக்கியுடன் அவர் கண்கள் அந்த வண்டியினுள்ளே பலவாறு அலைபாய்ந்து கொண்டிருந்தது.

'ஏன்....?' என்றான் அவன்.

'என்னது..?' என்ற புரியாத கேள்வியுடன் அவனை பார்த்தார் அந்த ராணுவ அதிகாரி.

'உங்களுக்குள்ள பிரச்சனைனா ஏன் எங்க உயிர எடுக்குறீங்க...' என்று அவன் கேட்ட கேள்விக்கு அவர் சிரிப்பை பதிலாக தந்தார்.

'நீங்க சிரிக்கிறதுக்காக நான் எதையும் பேசல.. அந்த சிரிப்ப கேக்கவும் எனக்கு பொறுமை இல்ல...'

'எல்லாம் சரியா போகும்... உங்களுக்கு ஓய்வு தேவை...'

'எங்களுக்கு எதுவும் தேவையில்லை... உங்களுக்கு நான் நர மாமிசம் தேவை.. அப்ப.. அப்ப... அப்படியே எல்லாத்தையும் நீங்க கொன்னு கொன்னு திண்ணுங்க... உயிரெல்லாம் உங்களுக்கு என்ன ..... ச்சே...'

'இப்ப நீ பேசுறதால என்ன ஆகிடும்...'

'பேசாததால தான் இத்தனையும்  நடந்திருக்கு...' என்று அவன் சொன்ன பதிலில் அவர் வண்டிக்கு வெளியில் பார்க்க தொடங்கினார்.

'தண்ணி தரலனா சண்ட.. முட்ட தரலனா சண்ட.. பெட்ரோல் தரலனா சண்ட... அவன் நாட்ட நான் புடிக்கணும்னு சண்ட.. என் நாட்ட அவன் புடிச்சுட்டான்னு சண்ட.. மக்களுக்கு நல்லத சொல்லுறான்னு சண்ட.. மக்கள மக்களா இருக்க விடலனு சண்ட... கிரிக்கெட் விளையாட கூடாதுன்னு சண்ட... ஆராய்சி பண்ணுனா போரு.. அணுகுண்டு தயாரிச்சா சண்ட.. சண்ட.. சண்ட.. சண்ட... எதுக்கெடுத்தாலும் சண்ட சண்டனு வச்சு எத அடஞ்சீங்க... அப்பாவி மக்களோட உயிர தவிர...!?'

'உன்னோட எந்த கேள்விக்கும் எனக்கு பதில் சொல்லணும்னு அவசியம் இல்ல...'

'எப்படி இருக்கும்... படுக்கை குத்துதுன்னு கட்டிலுகிட்ட குறை சொன்னா இப்படி தான் ஆகும்...'

'What....?'

'Nothing you Mister Major.. Its my own f**king concern...'

'Concede within yourself young man.. Its your Private Property...' என்ற ராணுவ அதிகாரியின் பதிலை கேட்டதன் பின்னர் தன் வாயின் உள்ளே புலம்பி கொண்டிருந்தான் அவன். சிறிது நேரத்தில், அவன் புலம்பல் நின்றது. அதுவரை அந்த வண்டியில் வெளியிலே பார்த்து வந்து கொண்டிருந்தார் அந்த அதிகாரி.

 சிறிது நேரத்தில் பேச தொடங்கினான் அவன்....

'Sorry for that....' என்றான் அவன்.

'பரவாயில்லை..' என்றார் அந்த அதிகாரி.

அங்க எத்தனை குடும்பம்னு பாத்தீங்களா? எத்தனை பேர் அநாதை ஆகிட்டாங்க தெரியுமா..? ஏன் இப்படி ரத்த வெறி புடிச்சு அழியிறீங்க…?’

‘இதை எதுவும் செய்ய முடியாது…’

‘ஹூ.. ஆமாம்.. செத்தவன் உங்க குடும்பமா இருந்தா வலி தெரியும்.. ஊரான் குடும்பம் எக்கேடு போனா உங்களுக்கு என்ன…?’

‘என்னோட மனைவியும்.. இரண்டு வயது மகளும் இதுபோல ஒரு சண்டையின் உச்சத்துல தான் இறந்து போனாங்க…’ அவர் சொன்னதும் அவன் என்ன சொல்வதென்று தெரியாமல் விழித்தான். பின்னர் மெதுவாக..

‘மன்னிச்சிருங்க…’

‘மொத்தமா கடைசியில கேட்டுக்கோ.. என்ன பேசணுமோ இப்ப பேசிடு…’

‘எதுக்காக இதெல்லாம்…? உங்களுக்கே இதுல பாதிப்பு ஏற்பட்டிருக்கிறப்போ ஏன் நீங்களும்.. இந்த சண்டையில நீங்களாம் என்ன கண்டுட்டீங்க? இந்த உலகமே ஒண்ணு தானே.. இங்க இருக்குற நாம எல்லாம் ஏன் ஒண்ணா இருக்க கூடாது.. வீட்டுக்குள்ள சண்ட.. தெருக்குள்ள சண்ட.. ஊருக்குள்ள சண்ட.. மாவட்டம்.. மாநிலம்.. நாடுன்னு எங்கேயும் சண்ட தானா?’

‘இதனால உனக்கு என்ன ஆகிடுச்சு.. ஏன் இவ்வளவு கொந்தளிக்கிற?’

‘ஹூ.. ஏன்னா நான் ஒரு தமிழன்.. இந்தியன்.. மனிதன்..’

‘நீயே ஒரு மனிதன்னு சொல்ல தமிழன்.. இந்தியன்னு இரண்டு அடையாளங்கல கடந்து வர வேண்டி இருக்கு…’

‘புரியல…’

‘வேணும்.. நமக்கு நாம்னு அடையாளம் வேணும்.. தண்ணி வேணும்னு சண்ட போடுவோம்.. சண்ட ஏன் போடணும்னு ஒரு கேள்வி.. தண்ணி அவன் தந்திருக்கிறது தானேன்னு ஒரு கேள்வி.. ரெண்டு பக்கமும் குத்தம் தான்.. யாசகம், அன்புன்னு பரிமாற்றங்கள் பல ரூபத்த கடந்து வந்திருக்கு.. இப்போ இந்த நிலை வீரம் பொறுத்து இருக்கு.. வீரமானவன் அவனுக்கு வேணுங்கிறத எடுத்துப்பான்..’

‘நீங்க வீரத்த காட்டுங்க என்ன மண்ண வேணா காட்டுங்க.. ஆனா அதுக்கு ஏன் அப்பாவி மக்கள கொல்லுறீங்க…?’

‘எனக்கும் இப்ப நடந்த சண்டைக்கும் நான் ராணுவ காரன்னு தவிர வேற எந்த சம்பந்தமும் இல்ல.. நீ சொல்லுறத பாத்தா நானும் தானே அப்பாவி…?’

‘நான் உங்களுக்கும் சேர்த்து தான் பேசுறேன்…’

‘சந்தோசம்.. மனிதனா மனிதன்னு உணராத வரை மனிதம் இங்க இருக்காது… ஆறரிவு இல்லாத ஒரு பூச்சி உன்ன கடிச்சா திரும்ப ஏன் அதை அடிக்கிற..? மன்னிச்ச விட வேண்டியது தானே.. மனிதன் ரூபத்துல இங்க பல பூச்சிகள் இருக்கு…’

‘இது தப்பிக்கிற வழி…’

‘ஹா.. தண்ணீக்காக சண்ட போடலனா பல பேரு சாக வேண்டியது தான். இடத்துக்காக சண்ட போடலனா அதுல இருந்து வர வருவாய் பணமாவோ, இல்ல பொருளாவோ இங்க நமக்கு கிடைக்காம போயிடலாம்.. மனிதர்கள நாங்க கொல்லல பூச்சிகள அழிச்சுட்டு இருக்கோம்.. அதுல எங்கள போல ராணுவ வீரன் மட்டும் தான் சாகணும்னு எதுனா இருக்கா என்ன..?’

‘இது உங்க கடமை இல்லையா…?’

‘எது.. உன் முதுகுல ஊசி குத்தாம பாக்குறது என் கடமையா..? உனக்காக தான் நான் வாழுறேனா..? இல்ல உனக்கு உன் சாப்பாட வாங்கி தர தான் நான் இருக்கேனா..? நானும் உன்ன போல மனுசன் தானே…!’

‘நீங்க சாவ எதிர்பார்த்து வந்திருப்பீங்க.. ஆனா சாதாரண மக்கள்…?’

‘கண்டிப்பா வாழ்க்கையில நடக்க போற ஒண்ண நாங்க ஏத்துகிறோம்.. எதிர்பாக்குறோம்.. ஆனா நீங்க எதிர்பாக்கல.. எங்க தப்பா..? உங்க தப்பா..?’

‘சின்ன சின்ன குழந்தையெல்லாம் சாகுதே…?’

‘அதனால தானே நீ இப்ப மனிதம் வேணும்னு துடிக்கிற.. இப்படியே எல்லாரும் துடிச்சு.. மனிதம் வளர்ந்து உலகம் செழிச்சுட்டா சண்டை இருக்காது தான். ஆனா அது நடக்க பல்லாயிரம் வருடம் ஆகும்.. உன்னோட விதைக்கான வேறு தான் இவங்களோட சாவெல்லாம்.. வேறு செடியாக பின்ன மரமாக நாளாகலாம்.. காத்திரு.. SPREAD THE WORD MY SON’ என்று சொல்லி அவனின் தலையை தடவிகொடுத்தார். சுற்றிலும் அமைதி. அந்த ராணுவ வீரர் வெளியில் பார்த்துக்கொண்டிருக்க.. அவன் அவரையே பார்த்துகொண்டிருந்தான். பின்னர் பேச தொடங்கினான்..

‘புரியுது.. எனக்….’ என்று அவன் பேசிக்கொண்டிருக்கும்போதே ஒரு பலத்த சப்தம் எழுந்தது. வண்டி நிறுத்தப்பட்டது. இவர்கள் சென்றுகொண்டிருந்த வண்டியின் முன்னால் இருந்த வண்டி தீவிரவாதிகளால் சுக்கு நூறாக்கப்பட்டது.

பாதுகாப்பிற்காக வந்த ராணுவ வீரர்கள் அனைவரும் இறங்கி தீவிரவாதிகள் பக்கம் சுட்டுக்கொண்டே முன்னேறினர். அவனிடம் பேசிக்கொண்டிருந்த ராணுவ வீரரும் சிறுதும் சிந்திக்காமல் இறங்கினார்.. சுட்டுக்கொண்டே முன்னேறி ஓடினார். ராணுவ வீரர்கள் சூழ்ந்து பாதுகாப்பு தர வண்டி முன்னேறி சென்றது. வண்டி செல்ல செல்ல.. அங்கே பலர் கத்தி உயிர் மாயும் சப்தம் கேட்டது. ராணுவ வீரர்களுக்கு எதுவும் ஆகிவிட கூடாது என்று அவன் உள்ளுக்குள்ளே வேண்டிக்கொண்டான். மனிதம் பேசியவன்…


-தம்பி கூர்மதியன்

Comments

Popular posts from this blog

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..

பைக் ஓட்டுபவர்கள் கண்டிப்பா பாக்கவும்..!!

அதிகாரி சாமி