புரிதல்.. புரிதலின்றால்...!பலமுறை இடித்து பார்த்தேன் அந்த மரத்தால் செய்யப்பட்ட கதவை, பதில் எதுவும் வந்ததாக தெரியவில்லை. அவனின் கைப்பேசிக்கு பல முறை அழைத்து பார்த்தேன்.. அவனிடம் இருந்து பதிலில்லை. வீடு உள்ளிருந்து பூட்டப்பட்டிருந்தது.. 10 நிமிடத்திற்கு மேலாகவும் யாரும் திறப்பதாக தெரியவில்லை. எனது அலைப்பேசி அழைப்பையும் ஏற்கவில்லை. என் நெஞ்சம் பதறிப்போனது... என்ன செய்வது? கதவை உடைத்துவிடலாமா..? அக்கம் பக்கத்தில் கூச்சல் போடலாமா...? என்ன ஆகியிருக்கும் இவனுக்கு...? எனக்குள்ளே பல கேள்விகள்.

யோசனைகளுக்கு முற்றிப்புள்ளி வைக்கும் விதமாக கதவு சட்டென திறக்கப்பட்டது. அவனின் சோர்ந்த முகம் என்னை அவன் வீட்டினுள் வரவேற்றது.

'என்னடா.. எவ்வளவு நேரம்...?'

'அதான் தொறந்துட்டேன்ல.. உட்காருடா...' என சொல்லி கதவை தாழபோட்டுவிட்டு அருகில் அமர்ந்தான்.

பல நாட்கள் ஆகின நாங்கள் இருவரும் பார்த்து..! உயிர் நண்பர்களாக இருந்தோம், கால போக்கில் இடைவெளி அதிகமாகிவிட்டது. வீட்டிற்கு வந்த என்னிடம் அவன் முகம் கொடுத்த பேசவில்லை. டி.வி.யில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை மாற்றி மாற்றி பார்த்துக்கொண்டிருந்தான். அழையா விருந்தாளியாய் என் உயிர் நண்பன் வீட்டில் எனக்கு கூசல் ஏற்பட்டது.

'மச்சி.. ஏன் டா இப்படி பண்ற.. நான் வந்தது புடிக்கலையா?' என்றேன்.

'சீ....' என்று சொல்லி என் முகத்தை கேவலமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு மீண்டும் தொலைகாட்சியில் மூழ்கினான்.

'இதுக்கு அர்த்தம்...?'

'அப்படி ஒண்ணுமில்லனு அர்த்தம்...'

'அத வாய தொறந்து முழுசா சொல்ல கூட கசக்குதா சாருக்கு?'

'என்ன தான்டா உன் பிரச்சனை... ஏன் நீயும் என் உயிர எடுக்குற...?'

'இப்ப என்னடா தப்பா கேட்டுட்டேன்..? சும்மா வெளையாட்டுக்கு தானே...!'

'யாரும் என் கூட விளையாட வேணா.. நான் எதுவும் கேக்கல..' சட்டென முகத்தில் அடித்தது போல் சொல்லிவிட்டு முகத்தை திருப்பிக்கொண்டான். 

'மச்சி.. எதனா ப்ராப்ளமா? என்னடா ஆச்சு...? உன் மனைவி எங்க?' என்று கேட்டேன். அவனிடம் இருந்து பதிலில்லை. அமைதியாக மாற்று திசையிலே பார்த்துக்கொண்டிருந்தேன்.

'என்னடா.. என்ன ஆச்சு..? மச்சி...' என்று பதற்றமானேன். மீண்டும் பதிலேதும் இல்லை. அவனது முகத்தை வலுக்கட்டாயமாக திருப்பினேன். அதிகமாக அவன் கண் கலங்கி நான் பார்த்ததில்லை. ஆனால், இன்று அவனது கண்கள் குளமாக காட்சி அளித்தது.

'டே.. என்னடா ஆச்சு... என்னடா பண்ணி தொலச்ச..? எதனா சண்டையா? உன் மனைவிய ஏதாச்சும் பண்ணிட்டியா?' பதறிப்போய் என் கேள்விகளை தொடர்ந்தேன்.

'சீ.. என்ன விடுடா...' என்று சட்டென கையை உதறிவிட்டு எழுந்து சென்று ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான். சிறிது நேரம் எந்த பேச்சும் இல்லை. நான் அவன் மீது வைத்த கண்களை மாற்றவில்லை. சிறிது இடைவெளி பின்னர் அவனாய் தொடங்கினான்...

'கடுப்பா இருக்கு மாப்ள... எனக்கு புடிக்கலடா இந்த லைஃப்.. எனக்கு நாம முன்ன மாதிரி இருக்கிறதே போதும்னு தோணுதுடா.. எனக்கு இந்த திருமண வாழ்க்கையே நரகம் போலிருக்குடா..' என்றான்.

'டே.. என்னடா சொல்லுற..? உன் மனைவி எங்க மொதல்ல அத சொல்லு...'

'இவன் வேற... அவளோட அப்பன் வீட்டுல இருக்குறா... போதுமா...'

'யப்பா.. இப்ப தான் மூச்சே வருது...' என்று சொல்லிவிட்டு அவனை பார்த்து இளித்தேன்.

என்ன நினைத்தான் என்று தெரியவில்லை, சில நொடிகள் என்னை பார்த்துக்கொண்டே இருந்தவன் 'து' என்று துப்பிவிட்டு மீண்டும் ஜன்னல் வழியே பார்த்தான்.

'அவளுக்கும் எனக்கும் சுத்தமா ஒத்து போகலடா.. எனக்கு ஒரு மாதிரி இருக்கு.. அவளுக்கு புரியலையா.. இல்ல புரிஞ்சும் புரியாத மாதிரி இருக்காளா.. இல்ல வேணும்னே பண்ணுறாளா.. ஒண்ணும் புரியலடா..'

'மச்சி... Are you sure you want to share this with me? உனக்கு உன்னோட பர்சனல மத்தவங்கள்ட்ட சேர் பண்ண புடிக்காது.. அப்பரம் Share பண்ணிட்டு.. அத மறந்துருன்னு என் உசுர எடுக்க கூடாது..' என்று அவனின் உண்மை குணம் புரிந்து அவனிடம் சொன்னேன்.

'சும்மா இருடா.. அதுதான் இங்க பெரிய பிரச்சனையா இருக்கு... நீ வேற.. எதுக்கெடுத்தாலும் அப்பா அம்மானு ஓடுறா டா... ஒண்ணு சொல்லுறேன் பாரேன்.. மாடர்ன் ட்ரஸ்.. டி சர்ட் கேக்குறா.. அவளுக்கு அது செட் ஆகல மச்சி... அசிங்கமா இருக்கு... அது வேணாம்டினு சொல்றேன்.. காரணம் சொல்லியும் கேக்காம அவ அம்மாவுக்கு ஃபோன் பண்ணி.. உன் மாப்ள எனக்கு புடிச்ச எல்லாம் செய்வார்னு சொன்னியே ஒரு ட்ரஸ்க்கு போர் நடத்த வேண்டியதா இருக்குனு சொல்லி ஒப்பாரி வைக்கிறா.. அவங்க அம்மா எனக்கு ஃபோன் பண்ணி கேக்குறாங்க.. கொழந்தைக்கு எது புடிக்குமோ அத வாங்கிகொடுங்கலாம்.. இப்ப இதெல்லாம் சகஜமாகிபோச்சுனு ஒரு வெளக்கம் வேற... மொதல்ல நம்ம விசயத்த நமக்குள்ள பேசி தணிக்கனும்னு அவளுக்கு தோணவே மாட்டேங்குதுடா...' தன்னுள் இருக்கும் கோபங்களையெல்லாம் கொப்பளிக்கும் வகையில் கைகளை அசைத்து பேச்சுகளில் கோவைகளை கொட்டி கத்திக்கொண்டிருந்தான் அவன்.

தனது அலமாறியில் இருந்த சிகரெட்டை ஒன்று பற்றவைத்துவிட்டு ஒரு நீண்ட இழுப்புக்கு பின்னர் தொடர்ந்தான்...

'நம்ம மீரா இல்ல மச்சி.. அன்னைக்கு ஃபோன் பண்ணிருந்தா... காலேஜ் லைஃப் எல்லாம் சொல்லி பத்து நிமிசம் சிரிச்சு சிரிச்சு பேசிட்டேன்... உடனே ஒப்பாரி வைக்கிறாடா.. நான் பொறுமையா சொல்லிட்டேன் டா.. கத்திட்டு போன்னு விட்டுட்டேன்.. மீரா, நீ , நான்லாம் ஒரே கேங்க் டா.. எப்படிடா ஒரு சந்தோசத்த கூட சேர் பண்ணாம இருக்கிறது? இவளால தான் மாப்ள உன் கிட்ட கூட அதிகமா பேசாம இருந்து பழகிட்டு இருக்கேன்...'

'ம்ம்... கல்யாணம் ஆகிட்டா இதெல்லாம் சகஜம் டா.. நாம தான் விட்டுகொடுத்து போகணும்டா..' அவனை தேர்த்த முற்பட்டேன்.

'எத்தனை முறைடா...? மாப்ள.. எனக்கு வர்ற மனைவிய அப்படி பாத்துக்கணும்னு நினச்சேன் டா.. இவள கொழந்தை போல பாத்துக்கணும்னு நினச்சேன்டா.. அதுல என்னடா தப்பிருக்கு? நண்பர்களுக்கு முக்கியத்துவம் தரக்கூடாது.. எதுவா இருந்தாலும் அப்பா அம்மாகிட்ட எடுத்துட்டு போயிடுவேன்.. பெரியவங்க எதனா புடிக்காதது சொன்னா அங்கேயே எதிர்த்து பேசுறது.. அநாதை குழந்தை எடுத்து வளர்க்கறது எனக்கு புடிக்கும்டா.. ஜஸ்ட் பண்ணலாமானு கேள்வி தான்டா கேட்டேன்.. சட்டென.. ஏன் எத்தன வேணுமோ நான் பெத்து தர்றேன்னு சொல்லுறாடா.. அதுக்கென்ன வக்கத்துபோயா கெடக்குனு கேக்கேறா டா.. பேசுறதெல்லாம் குத்துற போலவே பேசுறாடா....'

'மச்சி... இதெல்லாம் அவங்க குணம்டா.. அத குத்தம்னு நினைக்காத.. உனக்கு கொழந்த அவ்வளவு பெத்து தரணும்னு அவளுக்கு இருக்குற ஆசைடா.. உன் மேல பாசத்த அப்படி காட்டுறா டா..'

'ம்க்கும்..., ஏன்டா நீ வேற.. இந்த கல்யாண வாழ்க்கைய அவங்க ரெண்டு வருசமாச்சும் என்ஜாய் பண்ணுவாங்களாம்.. அப்பரம் தான் குழந்தையாம்... எனக்கு குழந்தைகன்னா உயிர்டா.. ஆனா... இதுல ஒரு பொண்ண வற்புறுத்துறதும் தப்புனு நினைக்கிறவன் நான்.. சூ... பைக்குல லாங் ட்ரைவ் போறதுனா எனக்கு புடிக்கும்.. அவள ஒரு நாள் தெரியாம கூட்டிட்டு போயிட்டேன்.. அஞ்சு கிலோமீட்டர் தாண்டுறதுக்குள்ள பொலம்பி தள்ளிட்டா... ஏழாவது கிலோமீட்டர் தாண்டுறதுக்குள்ள அவ அப்பன் அம்மாளுக்கு ஃபோன் கால் போயிடுச்சு...'

'டே.. உனக்கு எப்படி வேணுமோ அப்படி பொண்ண செலக்ட் பண்ண சொல்ல வேண்டியது தானே உங்க அப்பா அம்மாகிட்ட.. இல்ல இந்த பொண்ண செலக்ட் பண்ணினப்பவே அவகிட்ட இதான் புடிக்கும்.. இதான் என் எதிர்பார்ப்புனு சொல்லிருக்கலாம்ல..?'

'எதடா.. கட்டுணதும் குழந்தை வேணும்னு பேச சொல்லுறியா..? இது எனக்கு தெரிஞ்சு எல்லாம் பண்ணுறது தானே டா.. இல்ல நம்ம விசயம் நமக்குள்ள இருக்கணும்னு சொல்லுறதையா.. நான் சொல்லுறதெல்லாம் எனக்கு அப்போ சின்னதா தெரிஞ்சுது.. ஆனா அதோட விளைவுகள் இப்போ ரொம்ப பெருசா இருக்குடா.. எனக்கு அவ முன்னாடி நிக்கவே அசிங்கமா இருக்கு.. ஏதோ நான்.. எனக்கு புரியலடா.. சூ.. Love marriage makes some understanding unlike arranged marriage, These are done on parent's wish..' என சொல்லிவிட்டு மீண்டும் சிகரெட்டை இழுத்து ஜன்னல் வெளியே புகையை விட்டான்.

'புரியுது மச்சி... ரெண்டு பேர் மேலையும் தப்பில்ல.. ரெண்டு பேரும் அவங்க ஆசைபடி.. அவங்க எண்ணப்படி இருக்கீங்க.. மொதல்ல விட்டுக்கொடுக்க பழகிக்கோங்க.. அவளுக்கு ஏத்த மாதிரி நீ மாறிக்கோ... அப்பரம் கொஞ்சம் கொஞ்சமா உன் பக்கம் கொண்டு வரலாம்..'

'எதுவும் முடியாது டா.. என் வாழ்க்கை நாசமா தான் போச்சு.. அப்பா அம்மாக்காக பாத்து லவ் பண்ணாம இருந்து இப்போ வாழ்க்கை முழுக்க நரகம் தான்.. லவ் பண்ணினா அந்த பொண்ணுகூட பழகிருப்போம்.. அந்தந்த சூழலுக்கு நமக்கு ஏத்த போல பழகிருக்கும் அந்த பொண்ணு.. முக்கியமா குடும்பத்துல பிரச்சனைனா என்கிட்ட தான் பேசிருக்கும்.. அவளோட அப்பா அம்மாக்கு ஃபோன் போட்டிருக்காது...' பேச்சுகளில் கேளிக்கையை காட்டி மீண்டும் சிகரெட்டை இழுத்தான்.

அவனது வாயிலிருந்த சிகரெட்டை பிடுங்கி தூக்கி எறிந்துவிட்டு பேசினேன்.

'டே.. அதெல்லாம் ஒண்ணுமில்ல.. நடந்தத விடு.. இனி நான் சொல்லுற போல கேளு.. அவ என்ன விரும்புறாளோ அவ இஷ்டத்துக்கு விடு.. அவளா புரிஞ்சுப்பாடா... Cheer up my boy...' என்றேன்.

ஜன்னல் வெளியிலே பார்த்துக்கொண்டிருந்தவன் ஏதோ வாயினுள் முனகிகொண்டான். பின்னர், தானாக தலையை இல்லை என்பது போல மெதுவாக அசைக்க தொடங்கினான். பிறகு, வேகமாக அசைத்துக்கொண்டே என் பக்கம் திரும்பினான்... கண்கள் கண்ணீரை தாரையாக கொட்டிக்கொண்டிருந்தது. டே என்னடா இது என்று இழுத்து அவனை அணைத்துக்கொண்டேன். சத்தம் போட்டு பலமாக அழத்தொடங்கினான்... அவனை இத்தனை வருடங்களில் இப்படி தான் பார்த்ததே இல்லை. சில நிமிடங்கள் தொடர்ந்தன அந்த அழுகை. பிறகு என்னைவிட்டு விலகிக்கொண்டான்.. அவன் முகத்தில் ஒரு தெளிவை என்னால் உணரமுடிந்தது. உட்காரு டா என்று என்னை உட்கார செய்தான். வீட்டிற்கு வந்த எனக்கு எதுவும் தராததை நினைத்து வருத்தப்பட்டு சொல்லிவிட்டு டீ போடுவதாய் சொல்லிவிட்டு உள்ளே சென்றான்.

தன் விசயங்களை வெளியில் சொல்லகூடாது என்று நினைக்கும் அவன் எதற்காக இத்தனை விசயங்களை என்னுடன் பகிர்ந்தான் என்று யோசித்தேன். அவன் மனம் எந்த அளவிற்கு பாதிப்படைந்திருக்கிறது என்பதை என்னால் உணர முடிந்தது. அவன் இல்லற வாழ்வில் ஆசையை தாண்டி, ஏக்கத்தை தாண்டி, ஆறுதல் தேடல் என்னும் கட்டத்தை என் தோழன் அடைந்திருப்பதை உணர்ந்தேன். என் அலைப்பேசி ஒலித்தது.. அழைப்பு என் காதலியிடமிருந்து..!

'சொல்லுமா...'

'எங்கடா இருக்க..?'

'ராஜீவ் வீட்டுல ... பேசலாம்னு வந்தேன்..'

சிறிது நொடிகள் பேச்சில்லை மறுபுறம் இருந்து..

'ஓகே ஓகே டா.. பேசிட்டு வெளிய வந்ததும் கூப்பிடு.. நைட் ஆகிருச்சுனா.. அப்ப மட்டும் ஒரு கால் பண்ணி சொல்லிடு சரியா..' என்று சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்தாள் அவள். 

என் நண்பன் கூறிய... 'Love marriage makes some understanding unlike arranged marriage' வாசகம் என் நினைப்பில் வந்து போக உதட்டோரம் ஒரு நமட்டு சிரிப்பு தோன்றி மறைந்தது.

Comments

Popular posts from this blog

சிட்லபாக்கத்தில் தொடரும் வாழ்வியல் போராட்டம்!

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..

GST – நான் அறிந்தவை!