தவறுகள் உணரும் தருணம்...!
குளியளறையில் தண்ணீர் ஒழுகிகொண்டிருக்கும் சத்தம் மட்டும் ரொம்ப நேரமாக கேட்டுக்கொண்டிருக்கிறது. அவன் வெளியில் வருவதாய் தெரியவில்லை. உள்ளே சென்றவனுக்கு ஏதேனும் ஆகியிருக்குமோ என்று அப்பா பயந்துபோய் கதவை தட்டினார். வழக்கமாக காக்கா குளியல் போடுபவன், காலை பத்து மணிக்கு உள்ளே சென்றான் பதினொன்று ஆகியும் வெளிவரவில்லை. கதவை தட்டியதற்கும் பதிலில்லை.

'குளிச்சாச்சா பா...?' அப்பா குரலை உயர்த்தி கேட்டார். பதில் எதுவும் வரவில்லை. கதவு திறக்கப்பட்டது. சொட்ட ஒழுகிகொண்டிருக்கும் துண்டினை இடுப்பில் கட்டிக்கொண்டு வெளியில் வந்தான் அவன். அப்பாவை ஏற இறங்க பார்த்தான், அவன் கண்கள் சிறிது முன்பு வரை கண்ணீரை தாங்கி கொண்டிருந்தது நன்றாக தெரிந்தது. எதுவும் பேசாமல் தன் அறைக்கு சென்றான். அப்பாவும் பின் தொடர்ந்தார்.

'ஏதாவது பிரச்சனையா?...' என்று கேட்டார். பதில் எதுவும் இல்லை.

'உன்ன தான் கண்ணா.. ஏதாவது பிரச்சனையானு கேட்டேன்...' என்று தன் வார்த்தைகளுக்கு அழுத்தம் கொடுத்தார்.

பனியனை புரட்டிக்கொண்டிருந்தவன் அப்பாவை ஒரு நிமிடம் நிமிர்ந்து பார்த்தான். 

'என்ன பண்ண போறீங்க..? பிரச்சனை தான்.. அதுக்கு என்ன பண்ணலாம்.? நீங்க என்ன பண்ணிடுவீங்க?'

'பண்ண முடிஞ்சத பண்ணுவேன்ல..'

'உங்களால எதுவும் பண்ண முடியாது...' என்று சட்டென சொல்லிவிட்டு பனியனை மாட்டிக்கொண்டான். அப்பாவின் சிரித்த முகம் சட்டென சுருங்கியது. கைகளில் சிறிது நடுக்கத்துடனே அறையை விட்டு மெதுவாக வெளியில் வந்தார்.

சிறிது நேரத்தில்.. முழு ஆடையையும் உடுத்திக்கொண்டு வெளியில் வந்தான் அவன். கையில் கைகடிகாரம் கட்டிக்கொண்டே,

'நான் இன்னைக்கு ஆபிஸ்ல இருந்து வர லேட் ஆகும்.. சாப்பிட்டு படுத்திடுங்க சரியா..' என்று அப்பாவின் முகம் பாராமலே சொன்னான். பதில் எதுவும் இல்லை.

'கேட்குதா... உங்க கிட்ட தான் சொல்லுறேன்...' என்று உரக்க சொன்னான். மீண்டும் பதில் எதுவும் இல்லை. அவரின் அருகில் சென்றான்..

'இப்ப எதுக்கு இப்படி உட்கார்ந்திருக்கீங்க...? சொல்லுறேன்ல..' மீண்டும் பதில் எதுவும் வந்ததாக தெரியவில்லை.

'எதுக்கு என் உயிர எடுக்குறீங்க..? ஆபிஸ்ல ஒரு பிரச்சனை.. அது போதாதுனு நீங்க வேறயா?'

சொல்லிவிட்டு தலையில் கைவைத்து மாற்று பக்கம் திரும்பினான். அதுவரை அமைதியாக இருந்த அப்பா அவனை பார்த்தார்.

'என்ன பா பிரச்சனை...?' என்று அமைதியாக கேட்டார்.

'சொன்னா உங்களுக்கு புரிஞ்சுருமா...?' என்று கேட்டு வெறுப்பாக அப்பாவை பார்த்தான். அப்பா முகம் ஏக்கமாய் வைத்திருந்தார்.

'என் ஆபிஸ் பிரச்சனைலாம் முடிஞ்சு உயிரோட இருந்தேனா நான் வந்து சொல்லுறேன்... சரியா... எதுக்கெடுத்தாலும் கேள்வி கேட்டு உயிர எடுங்க...'

அவன் சொன்ன வார்த்தையின் உருக்குலைந்து போனார் அப்பா. சரி என்று தலையை ஆட்டினார். தன் உயிரை எடுப்பதாக புலம்பிவிட்டு சட்டென கதவை சாற்றிக்கொண்டு வெளியேறினான். 

ஆபிஸில் நுழையும்போதே எல்லாம் பதற்றமாக காணப்பட்டனர். அவன் அவனது இருக்கையில் உட்காரும் முன்னர் அவனது மானேஜர் அவனை அழைத்தார். உள்ளே சென்றவன் இருக்கையில் அமர்ந்தான்.

'உன்னை உட்கார சொன்னேனா...?' என்று வெறுப்பாக கேட்டார் மானேஜர். கேட்ட கேள்வியில் ஆடிப்போன அவன் மெதுவாய் எழுந்து நின்றான்.

'நாளைக்கு AUDIT இருக்கு... Documents லாம் ரெடியா வச்சிருக்கல..' பாட்டிலிருந்த தண்ணீரை அவரது டம்ளரில் ஊத்தியபடி கேட்டார். 

'Basic documentsலாம் ரெடியா இருக்கு சார்...' என்று மெதுவாய் சொன்னான்.

'அப்போ descriptive documents?' 

'சார்.. இது குறுகிய கால ப்ராஜெக்ட் அது பண்ண நேரமிருக்காது.. பண்ண இயலாதுனு சொல்லி இருந்தேனே... நீங்க கூட அன்னைக்கு ஒத்துக்கிட்டீங்களே..!'

'அப்படியா? ஆனா அது இருக்கணும் இல்ல.. நான் எப்படி ஒத்துட்டு இருப்பேன்..' அவர் கேட்ட கேள்வியில் பதறிப்போனான்.

'சார் மறந்து இருப்பீங்க.. அன்னைக்கு ஆரம்பத்துலயே...' என்று அவன் பேசிக்கொண்டிருக்கும் போதே மானேஜர் இடை மறித்தார்.

'நானா? நான் மறந்துட்டேன்னு எனக்கு நீ சொல்லுறியா?'

'இல்ல சார் அப்படி இல்ல... ஆனா..'

'எனக்கு எந்த விளக்கமும் தேவை இல்ல.. Descriptive documents எப்போ ரெடி ஆகும்..?'

'ஒரு ரெண்டு மூணு நாளாச்சும் தேவை சார்...'

'இன்னொரு ஆள் உனக்கு தந்தா..?'

'அப்போ நாலு அஞ்சு நாள் ஆகும் சார...'

'என்ன சொல்லுற..'

'இத பத்தி ஒண்ணும் தெரியாத ஒருத்தன கூட்டிட்டு வந்து சொல்லிகொடுத்து அவன செய்ய வைக்க நேரம் இன்னும் அதிகமா தானே சார் ஆகும்..?'

'ஓ... சரி நீ இங்க என் இடத்துல உட்காந்துக்கோ நான் போயி செய்யிறேன்.. என பேச்சையே கிண்டல் பண்ணுறியா? உன்னோட பொறுப்பில்லாத தனத்துக்கு இன்னொருத்தவன ஹெல்ப்க்கு அனுப்புறேன்னு சொன்னா அது உனக்கு நக்கலா இருக்கா?'

'அப்படி இல்ல சார்..  நம்மால அத எல்லாம் செய்யறத்துக்கு நேரமே இல்லயே சார்...'

'சார்.. அப்படி இல்லீங்க சார்... உங்களுக்கு பொறுப்பு இல்லீங்க சார்...'

'சார்.....' என்று இழுத்தான் தன் பேச்சை.

'சே.. இன்னைக்கு என்ன செய்வியோ எனக்கு தெரியாது. நாளைக்கு மார்னிங் குள்ள எல்லாம் முடிஞ்சு இருக்கணும்... புரியுதா..?'

'சார்....'

'எனக்கு ஓகே மட்டும் தான் வேணும்...'

'சார்....'

'ஓகே மட்டும் தான்....'

'ம்ம்...'

'புரியல...'

'ஓகே சார்...'

'இப்ப நீ தான் ஒத்துகிட்டு இருக்க.. நாளைக்குள்ள முடிக்க முடியலனா வேற கம்பேனி பாத்துக்கோ... இப்ப நீ போலாம்..' என்று சொல்லிவிட்டு தன் மடிகணிணியை தட்ட ஆரம்பித்தார். அவன் போகாமல் நின்று அவரையே பார்த்துக்கொண்டிருந்தான்.

'என்ன... பாத்துகிட்டே இருந்தா.. என்ன பாத்துட்டே இருந்தன் அதான் முடிக்க முடியலனு சொல்லலாம்னு பாக்குறியா.. சீக்கிரம் போயா..' என்று முகத்தை தன்னால் முடிந்த அளவு கேவலமாக வைத்துக்கொண்டு பேசினார். அவன் முகத்தை தொங்கலில் இட்டு அவனது இடத்திற்கு வந்தான்.

அவன் கைப்பேசி குறுஞ்செய்தி மணி ஒலித்தது. எடுத்து பார்த்தான்.. அவன் அப்பாவிடமிருந்து...! 

'Sorry if I had hurt you Son. Don't take tension or others words into your mind or heart. Do your work as you do. I will be always there for your support. With Love, Dad'

என்றிருந்தது. அவன் அந்த குறுஞ்செய்தியை மூடும் போது கண்களையும் மூடினான். குறுஞ்செய்தி மறைந்தது, கண்ணின் ஓரம் கண்ணீர் கசிந்தது.

-தம்பி கூர்மதியன்

Comments

Popular posts from this blog

சிட்லபாக்கத்தில் தொடரும் வாழ்வியல் போராட்டம்!

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..

GST – நான் அறிந்தவை!