அவள்... அவளானாள்..!அந்த பேருந்து நிறுத்தத்தின் ஓரமாக எனது பைக்கை நிறுத்திருந்தேன். இரவு பதினொன்று மணியை கடந்து இருந்தது. எங்கும் சென்றிடாமல் இங்கேயே காத்திருக்கும்படி என் நண்பன் சொல்லியிருந்தான். இரவு பனி என்னை வெகுவாக நடுங்க செய்தது. கழட்டி கையில் வைத்திருந்து ஹெல்மெட்டை தலையில் மாட்டிக்கொண்டேன். அவன் வருவதற்கு இன்னும் தாமதம் ஆகும் போலிருந்தது.
பின்னால் இருந்து என் கையை யாரோ சுரண்டியது போல் இருந்தது. அது ஒரு பெண். அந்த இரவு வெளிச்சத்தில் அவள் முகம் மங்கலாக தான் தெரிந்தது. எதற்காக சுரண்டுகிறாள் என்பது புரியாமல் எனது ஹெல்மெட்டை கழட்டாமலே பேசத்தொடங்கினேன்.
‘என்ன…?’
‘எதுக்காக நிக்கிற…?’
‘நான் எதுக்காக நின்னா உங்களுக்கு என்ன? போ மா..’
‘இல்ல இதுக்காகவோன்னு கேட்டேன்…’ என்று சொல்லி அந்த பெண் தன்னை சுட்டிக்காட்டினால். பொதுவாக பேப்பரிலும் வாய்ச்சொல்லிலும் கேள்விப்பட்டிருந்த இது போன்ற நிகழ்வு இப்பொழுது என் நிஜத்திலுமா? இருப்பினும் உறுதிசெய்துக்கொள்ள பேசினேன்..
‘புரியல…’
‘தம்பி.. புட்டிபால் பையனா?’ என்று நக்கலாக அந்த பெண் என்னை பார்த்து கேள்வி எழுப்பினாள். அப்பொழுது எங்களை கடந்து போன பேருந்தின் முன்விளக்கு வெளிச்சத்தில் அவள் முகம் எனக்கு நன்றாக தெரிந்திருந்தது. இது அவள் தான்.. அவளே தான்… என் மனம் பதற்றமடைந்தது. அப்பொழுது என் அலைப்பேசி அழைப்பு ஒலித்தது… என் நண்பன் தான். எனது ஹெல்மட்டை கழட்டிவிட்டு பேசினேன். அவன் வருவதற்கு அதிக நேரம் ஆகுமென்றும் என்னை கிளம்ப சொல்லி சொன்னான். நான் பேசிமுடித்து மீண்டும் ஹெல்மட்டை மாட்டுவதற்குள் அவள் முகத்தில் ஏதோ மாறுதல்களை நான் கவனித்தேன். ஹெல்மெட்டை மாட்டிவிட்டு வண்டியை ஸ்டார்ட் செய்துவிட்டு அவளை பார்த்தேன்… அவள் நழுவினாள்.
‘எங்கே போற… உட்காரு...’ என்றேன். கொஞ்சம் நகர்ந்து நின்று சங்கூஜமாக நெளிந்தாள்.
‘என்னென்னமோ பேசின… உட்காருங்க மேடம்..’ என்றேன். அவள் கண்கள் ஓரம் கண்ணீர் வருவது எனக்கு தெரிந்தது. வண்டியை நிறுத்திவிட்டு இறங்கினேன்…
‘பேசுங்க மேடம்… நவநாகரீக மேடம்…. பேசுங்க’ என்று சொல்லி அவள் கையை பிடித்து திருப்பினேன். சிறிது நேரம் கண்ணீரை விட்டுவிட்டு தேம்பினாள். பிறகு ஏதோ முனுமுனுத்தாள்…
‘என்ன… கேக்கல… சத்தமா மேடம்… சத்தமா…’
‘ப.. ப.. பசி.. பசிக்கிது..’
‘கேக்கலயே… சத்தம் வராதா…?’
‘பசிக்கிதுடா…’ என்று சொல்லிவிட்டு தாரை தாரையாக கண்ணீர் விட ஆரம்பித்தாள். நெஞ்சம் உடைந்து சுக்குநூராகி போனது. வா என்று சொல்லி அழைத்துக்கொண்டு போனேன். அருகில் இருந்த தள்ளுவண்டி கடையில் இரவு நேர இட்லி சுட சுட எடுத்து வைக்கப்பட்டிருந்தது. அவள் உண்ட வேகத்தில் எவ்வளவு பசியில் இருந்திருப்பாள் என்பது நன்றாக புரிந்தது. சாப்பிட்டுவிட்டு மீண்டும் அந்த பேருந்து நிலையத்திற்கு வந்தோம்.. இன்னும் ஏதோ ஒரு ஓரத்தில் அவளின் தேம்பல் சப்தம் காதில் கேட்டுக்கொண்டிருந்தது.
‘சரி போதும்… நிறுத்து…’ என்று மெல்லிய குரலில் சொன்னேன். அவளது தேம்பல் சப்தம் நிற்கவில்லை.
‘நிறுத்துனு சொல்லுறேன்ல…’ என்று கத்தினேன். தூரத்தில் நின்ற சிலர் திரும்பி பார்த்தனர். தனது இரண்டு கைகளையும் வாயில் பொத்திக்கொண்டு உள்ளுக்குள்ளே தேம்பலை இழுத்துக்கொண்டாள். இன்னும் இழுத்துக்கொண்டே இருந்தாள்…
‘ஹா.. இப்ப தோணுது.. நல்ல வேலை நீ என் லவ்’ஆ அக்சப்ட் பண்ணல.. சீ.. வெட்கமா இருக்குடி…’ என்று சொல்லி அவளது முகத்தை திரும்பி பார்த்தேன். இன்னும் அவள் தன் வாயை இரண்டு கைகள் வைத்து மூடிக்கொண்டிருந்தாள்.
‘என்னலாம் பேசுனீங்க மேடம்… இப்ப நினச்சா கூட செவுல்ல அறையணும் போல இருக்கு..’ என்று என் பல்லை கடித்துக்கொண்டே பேசுனேன்.
‘சினிமால சொல்லுற போல ரெண்டு மணி நேரத்துல முடியிற வேலைக்கு நான் ரெண்டு வருசமா சுத்தியிருக்கேன் பாரு… து…’ என்று சொன்னேன். தன் வாயிலிருந்து கையை மெதுவாக நகர்த்தி,
‘அப்போ அந்த ரெண்டு வருசமும்.. இந்த ரெண்டு மணிநேர சுகத்துக்காக தானா சுத்துனயா..?’ என்று கேட்டாள். அவள் கேட்ட கேள்வி என்னை செருப்பால் அடித்த போல் இருந்தது. அதை மறைத்துக்கொண்டு மீண்டும் கோவமாக பேசத்தொடங்கினேன்..
‘என்ன கேள்வி கேட்ட..உயிருக்கு உயிராடி.. நீ இல்லனா வாழ்க்கையே இல்லனு இருந்தேன்…’
‘அப்ப இப்ப நான் இல்லாம வாழலையா?’
‘வாழ்ந்தேன்… இப்படி உன்ன பாத்த பிறகு தான் வாழணுமானு தோணுது… இப்ப நடந்தத மறந்துட்டு யோசிச்சா இன்னும் என் மனசுல நீ அழியாம கெடக்கடி…’ என்று நான் சொன்னேன். உதட்டோரம் நமட்டு சிரிப்பு ஒன்று அவள் முகத்தில் கண்டேன்.
‘எதுக்கு சிரிக்கிற…?’
‘உனக்கு பாசத்த காட்ட தெரியாது டா… இல்ல இல்ல… பாசாங்கு பண்ண தெரியாதுடா…’
‘புரியல…’
‘இப்ப கூட உன் கண்ணுல எனக்கான பாசத்த பாக்குறேன்டா.. ஆனா அது எவ்வளவு முரட்டு தனமா காட்டுற பாறேன்…’
‘என்ன சொல்ல வர்ற?’
‘ஹா.. ம்ம்.. தெரியலடா… உலகத்துல பாசத்த காட்டிலும் பாசாங்கு தான்டா ஜெயிக்குது… நீ பாசத்த காமிச்ச.. அவன் பாசாங்க காமிச்சான்…’
‘யாரு…?’
‘இல்ல விடு..’ என்று சொல்லிவிட்டு என்னை பார்க்காமல் அவன் மாற்று திசையில் பார்த்துக்கொண்டிருந்தாள். அவ்வபோது தன் கைகளால் அவள் கண்களில் வழியும் கண்ணீரை துடைத்துக்கொண்டிருந்தாள்.
‘பாக்குறவன்லாம் கூப்பிட்டான்டா…’
‘புரியல…’
‘எனக்காக இது கூட பண்ணமாட்டியானு கேட்டான் டா…’
‘என்ன சொல்லுற…’
‘எப்படி இருந்தாலும் உனக்கு நான் எனக்கு நீ தானேனு சொன்னான் டா…’
‘புரியிற போற சொல்லுறியா…’ என்று சொல்லி அவளது கையை பிடித்து திருப்பினேன்.
‘எத சொல்லணும்.. எதடா சொல்லணும்.. நீ என்ன விட்டு போன அடுத்த வருசம் அப்பா அம்மா விபத்துல இறந்துட்டாங்க.. சொந்த காரங்க எவனும் வரல… இருந்த சொத்த வச்ச படிக்கிறப்போ… ஒருத்தனோட பழகினேன்.. ஆசை வார்த்தையெல்லாம் சொன்னான்… மயங்கிட்டேன்… விழுந்துட்டேன்… புடிச்சுது.. வான்னு கூப்பிட்டான்.. மறுத்தன்.. உருகுனான்.. உருகுற போல நடிச்சான்… தவிச்சான்… மனசு கேக்கல… போயிட்டன்… எல்லாம் போயிடுச்சு… எல்லாமே போயிடுச்சுடா…’ என்று அவளது அடித்தொண்டையில் இருந்து அழுதுக்கொண்டே ஆங்காரமாய் அழுத்தமான குரலில் சொல்லி முடித்தாள். என் கைகளில் நடுக்கம் ஏற்ப்பட்டது… அவள் பேசிய வார்த்தைகள் என் காதில் மீண்டும் மீண்டும் ஒலித்துக்கொண்டே இருந்தது.
‘அதுக்காக இப்படியா?’
‘அதுக்காக மட்டும் தான்னு நினைக்கிறியா?’
‘பின்ன ..’
‘அவன் மட்டுமில்ல.. நான் அரை மயக்கத்துல இருக்குறப்போ… அவன் நண்பர்கள் எல்லாருமேடா… கரு கலைக்க போன இடத்துலயும் இன்னொரு கரு சேர்ந்தது தான்டா மிச்சம்… சாக போனேன்… ஆனா.. ஆனா.. பயமா இருக்குடா….’ என்று சொல்லிக்கொண்டே மீண்டும் அழுதாள்.
‘அதுக்காக… சீ… இதுவே பொழப்பா மாத்திக்குவியா? சமுதாயம் என்னடி பேசும்…’
‘பேசுற சமுதாயம் தான் நான் இப்படி ஆகுறதுக்கே காரணம் டா…’
‘தெருவுல போகிறவங்க உன்ன கேவலமா பாக்கமாட்டாங்க?’
‘அவங்க உள்ளுக்குள்ளயும் நீ சொன்ன ரெண்டு மணி நேரத்துக்கான ஏக்கம் இருக்கும்டா…’
‘சீ… உன்னைப்போலவே ஊருல இருக்குறவன் எல்லாம் கேவலமா நினைக்காத…’
‘நான் கேவலமா ஆனதுக்கே அந்த ஊருல இருக்குறவன் தானேடா காரணம்.. ஹா… உன் கூட இருக்குற எத்தன பேர் என்னை போல இருக்குற பலர்க்கு சோறு போடுறாங்க தெரியுமா?’
‘சப்பைகட்டு கட்டாத… வயித்த பத்திக்கிட்டு வருதுடி எனக்கு…’
‘தெரியுதுடா.. அது கூட உனக்கு என் மேல இருக்குற பாசம் தான் டா…’
‘இது தப்பு இல்லயா? உன் வாழ்க்கை கெட்டுப்போச்சுனு நீ மத்த பொண்ணுங்க வாழ்க்கைய கெடுக்கலாமா…? ஏன் டி… உன்ன தொட்டுட்டு ஒருத்தன் அவன் பொண்டாட்டிய தொட்டா அவளுக்கு அவன் பண்ணுறது துரோகம் தானே…’
‘ஹா.. எந்த உலகத்துல டா இருக்கே… நான் இப்படி இருக்குறன்னு தானே சொல்லுற… நீ தெருவுல பாக்குற லவ்வர்ஸ் எல்லாருமே எதுவுமே பண்ணாம தான் இருக்காங்கனு சொல்லுறியா? இல்ல அப்படி பண்ணுனவங்க எல்லாருமே அந்த பையனையும் பொண்ணையும் தான் கட்டிப்பாங்கனு சொல்லுறியா?’
‘நீ செய்யுற தப்புக்கு … இன்னும் தப்பு பண்ணுறவங்கள துணைக்கு கூப்புடுறியா?’
‘தப்ப சரின்னு சொல்ல வரல… ஆனா தப்பு சகஜமாகிடுச்சுனு சொல்ல வர்றேன்… லஞ்சம் கொடுக்குறது தப்புனு தெரிஞ்சும் எல்லாம் பண்ணுறான் நான் பண்ணுனா தப்பானு நினச்சுட்டு லஞ்சம் தர்றோம்ல… அதுப்போல…’
‘எல்லா விசயத்தையும் எல்லாத்தோடவும் ஒப்பிட முடியாது டி…’
‘ஆமா.. முடியாது தான்… ஆனா எல்லாமே தப்பு தானே டா…’
‘காலம் உன் வாழ்க்கைய மட்டும் மாத்தல… உன் பேச்சையும் எண்ணத்தையுமே மாத்திடுச்சு…’ என்று சொன்னேன். இருவரும் சில நிமடங்கள் அமைதியாக இருந்தோம். ஒருவருக்கும் பேச்சுவரவில்லை. அவள் அவளையே கடிந்து குறுகி உட்கார்ந்திருந்தாள்.
‘எப்படி இருக்கு?’ என்றேன்.
‘ரொம்ப அசிங்கமா இருக்குடா.. நடந்த்த எல்லாம் யோச்சா…’
‘என்ன பண்ணப்போற…?’
‘தெரியலடா… ரொம்ப அசிங்கமா இருக்கு… வெட்கமா இருக்கு..’ என்று சொல்லிக்கொண்டே மீண்டும் அழுதாள். இம்முறை ரொம்ப சத்தமாக.
‘ ஒண்ணு கேக்கவா…?’
‘கேளுடா.. இந்த உலகம் கேக்காத எத நீ புதுசா கேட்டுட போற…’
‘புதுசா தான்… என்ன.. என்னை.. என்ன கல்யாணம் பண்ணிக்கிறியா?’ என்று கேட்டேன். நான் கேட்ட கேள்வியில் அதிர்ந்து போனாள் என்பது நன்றாக தெரிந்தது. மாற்றுப்பக்கம் திரும்பிக்கொண்டாள்.
‘என்ன பதிலே காணும்…?’
‘நிறைய படம் பாப்பியா…?’
‘ஹா.. ஏன்…?’
‘இல்ல ஹீரோவாக பாக்குறியே..!’
‘கிண்டலா..?’
‘இல்லடா.. துக்கத்துலயோ இல்ல ஆத்திரத்திலயோ இல்ல அனுதாபத்திலயோ முடிவு எடுக்க கூடாது டா… நான் எப்படிபட்டவனு உனக்கு தெரியும்… எதிர்காலத்துல உன்னையே அறியாம வந்திடும் டா…’
‘இல்ல மா.. அப்படிலாம்…’
‘இல்ல இல்ல இல்ல… உனக்கு இப்ப தெரியாது… அப்போ தான் புரியும்.. ஒரு வேல ஒரு நல்ல வாழ்க்கை எனக்கு அமஞ்ச பிறகு இப்படி எதுனா நீ கேட்டுட்டா… அப்ப கண்டிப்பா எனக்கு சாக தைரியம் வந்திடும் டா….’
‘சீ… என்ன மா பேசுற…?’
‘இல்ல இல்ல.. நீ கேட்டதே எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்குடா… எனக்கும் இந்த தொழில விடணும்னு தான் ஆசையா இருக்கு… ஆனா அடுத்தது என்ன பண்ணனு தெரியல… பதினொன்னு வரைக்கும் படிச்சிருக்கேன்… எனக்கு எதனா வேலை வாங்கி தர்றியா?’ என்று என்னை பார்த்து கொஞ்சும் பாஷையில் கேட்டாள். இன்னும் அவள் அவளாகவே தான் இருக்கிறாள். அதே நான் மயங்கிய பேச்சு… சிரித்துக்கொண்டேன்.
‘இனி இந்த கருமாந்திர வேலை வச்சுக்க மாட்டேன்னு என் மேல சத்தியம் பண்ணி சொன்னா… கண்டிப்பா வாங்கி தர்றேன்….’ என்று தலையில் அழுத்திக்கொட்டு கொட்டியது போல கையை வைத்து அமுக்கி சொன்னேன்.
‘ராம் ப்ராமிஸ்…’ என்று அவள் சொல்லிவிட்டு என்னை பார்த்து ஒரு குழந்தை சிரிப்பது போல சிரித்தாள். பிறகு கொஞ்சம் நடக்கலமா என்று கேட்டாள்.. கொஞ்சம் நடந்தோம்… வாழ்க்கை லேசாக ஆகிவிட்டது போல இருக்கிறது என்றாள். என் கையை பிடித்துக்கொண்டு தோளில் ஒரு தோழியாக சாய்ந்து கொள்ளலாமா என்று கேட்டாள். என் கையை கொடுத்து அவளை தோளில் சாய்த்துக்கொண்டேன்.
ஒரு தனியார் ப்ளே ஸ்கூலில் மாதம் எட்டாயிரம் சம்பளத்தில் அவளை சேர்த்துவிட்டேன். வசை பாடிய ஊர் இப்பொழுது அவளை பார்த்து ‘மிஸ்…’, ‘மிஸ்..’ என்று அழைக்கிறது. தூரத்தில் நின்று அவள் குழந்தைகளோடு விளையாடுவதை பார்க்கிறேன்- பள்ளிக்கு குழந்தையை அனுப்பிய அப்பன் போல.

Comments

Popular posts from this blog

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..

பைக் ஓட்டுபவர்கள் கண்டிப்பா பாக்கவும்..!!

அதிகாரி சாமி