இறுதி நிமிடங்கள்...!
சுற்றெங்கும் ஒரே இருட்டு...!
கத்தி கதிர்மயக்க துடிக்கும் மனது
உறவுகளின் ஓல கூச்சலிடையே
மனதின் உன்னத போராட்டம்..!!

நடையறியா படுக்கையில்
கையும் காலும் இடைவிடா நடுக்கல்..

கால ஓட்டங்கள் மனதில்
ஓரமாக ஓடிக்கொண்டிருக்கிறது...

தவழ்ந்து வந்த தாழ்வாரம்
தொட்டு உரசிய மரக்கிளைகள்
எல்லாம் கண்முன்னே கையசைக்கிறது...!!

மனதிலே ஒரு வினா...
இனி எங்கே..!!?
எங்கே செல்லப்போகிறேன் நான்...?

தொற்றிக்கொள்கிறது பயம்...

உறவுகள் என்ன செய்யும்?
மனதில் புதைந்த உண்மைகள் என்ன செய்யும்...?
பிடியற்று உயர் வானத்தில்
அந்தர பிடிக்கொண்டு தொங்கிடுமோ?

இல்லை...
நான் போகவில்லை...
எழப்போகிறேன்.. எழுந்து வந்துவிடபோகிறேன்...!


என் குழந்தையை கொஞ்சிக்கொண்டே
தாய் மீதும் சேய் மீதும்
தலையமர்த்தி நிம்மதி தேடும் சுகம் வேண்டும்...!

பிதற்றலும் உரசலும் பீறிடுகிறது....
நான் இருந்த இரும்பு கட்டில்
'க்றீக்' சத்தம் தருகிறது...!
எல்லாம் ததும்புகிறது....

எழுந்துவிட முயற்சித்துக்கொண்டிருக்கிறேன்...

அய்யோ...
யார் அவர்கள்...!?
வெள்ளை சட்டை அணித்த சூத்தரதாரிகளோ...!?
இல்லை... நான் இல்லை...
நான் எழப்போகிறேன்...!!
வெட்டி எழுகிறேன்...
எழுந்து எழுந்து விழுகிறேன் கட்டிலில்...

என்னை அமுக்கிறார்கள்..
என் நெஞ்சில் கை வைத்து குத்துகிறார்கள்...

அய்யோ..!!
எழ விடுங்கள்.. என்னை எழ விடுங்கள்..
குத்தாதீர்கள்...
வெள்ளை சட்டையன் எனை வீழ்த்திடுவான் போலிருக்கே..!

பயம்...
தெளிவில்லை..
அலறல்...
கூச்சல்...
முயற்சிக்கு ஒரு முற்று...
எனை வீழ்த்திவிட்டார்கள்...!!
நான் வீழ்ந்துவிட்டேன்...
கடைசி நேர கண் இமையில்
என் மனைவி என் நெஞ்சகத்தில் விழுந்து கதறுகிறாள்..!!

பைத்தியக்காரி....
அன்று காதலை சொன்ன போது- என்
நெஞ்சில் சாய்ந்தாள்....!
அன்று முதல்..
இது அவள் இடமானது...!!!!!

இனி எங்குபோவாள்...!!?

எண்ணிக்கொண்டே
கண்ணின் ஓரம் கண்ணீர் கசிகையில்
எனக்கு எல்லாம் இருட்டு...!!

சப்தமற்ற இருட்டில் சரணம் புகுந்துவிட்டேன்...!!

Comments

Popular posts from this blog

சிட்லபாக்கத்தில் தொடரும் வாழ்வியல் போராட்டம்!

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..

GST – நான் அறிந்தவை!