பொது தேர்வு மதிப்பெண் - எதற்கு இந்த களேபரம்?


நேற்று காலையில் எழுந்து கிளம்பி தயாரான பிறகு தான் ஞாபகம் வந்தது, அன்று பத்தாம் வகுப்பு பொது தேர்வின் முடிவுகள் வெளியீடு என்று. தொலைகாட்சி பெட்டியை இயக்கிவிட்டு உட்கார்ந்தேன். வழக்கம் போல ஒவ்வொரு செய்தி தொலைகாட்சியிலும் கல்வி துறை சம்பந்தபட்ட ஒரு சிலர் வந்து கூட்டம் போட்டு பேசிக்கொண்டிருந்தனர்.

‘அய்யயோ.. பத்தாம் வகுப்பு மதிப்பெண் தான் வாழ்க்கைக்கான கடவு சீட்டு போன்றது… அதை பொருத்து தான் எல்லாம் இருக்கிறது..’

‘மாணவர், மாணவியரில் இந்த முறையும் மாணவிகளே அதிகம் சோபிக்க கூடும்…’

இது போல பல அறிக்கைகளை ஆளுக்கு ஒன்றாக அடுக்கி கொண்டிருந்தனர். எனக்கு சட்டென்று சில நாட்களுக்கு முன்பு செய்திதாளில் படித்த ஒரு விசயம் ஞாபகத்துக்கு வந்தது.

‘பரீட்சையில் மதிப்பெண் குறையும் என்ற பயத்தில் தற்கொலை செய்துக்கொண்ட மாணவி…’

என் மனதில் ஒரு ஐயம் உண்டானது. எங்கிருந்து இந்த பயம் வந்தது? ஒன்பதாவது வரையில் பயமற்று இருக்கும் ஒருவன் அந்த பத்தாம் வகுப்பிற்கும் பன்னிரெண்டாம் வகுப்பிற்கு மட்டும் ஏன் அவ்வாறு பயப்படுகிறான்? யோசித்துக்கொண்டிருக்கையில் மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டது.

இந்த முறை 500க்கு 499 முதல் மதிப்பெண். அதை பெற்றவர்கள் மொத்தம் 19 பேர். ஆஹா.. என்ன ஒரு ஆச்சர்யம். மீண்டும் இரண்டாம் மூன்றாம் இடங்களின் எண்ணிக்கை 100 கணக்கை எல்லாம் தாண்டி சென்றது. அட..! உடனே அந்த செய்தி தொலைக்காட்சியில் முதல் முன்று மதிப்பெண்களில் வந்த ஒரு நபரை அலைப்பேசி வழியால் பிடித்துவிட்டார்கள்.

‘சொல்லுங்கள்.. இந்த சாதனையை எப்படி உணருகிறீர்கள்?
நீங்கள் எவ்வாறு முயற்சி மேற்கொண்டீர்கள்..?
உங்கள் வெற்றிக்கான ரகசியம் என்ன?’

என்பது போன்ற கேள்விகளை அடுக்கினார். கரா முறா கூச்சலிடையே அவரும் அவரின் செயல்களையும் எண்ணங்களையும் பட்டியலிட்டார். இறுதியில் வாழ்த்தோடு முடிந்தது.

தமிழை முதல் மொழியாக எடுக்காத மூவர் 500க்கு 500 எடுத்தனர் என்னும் செய்தியும் சிறிது நேரத்தில் வந்தது. பிறகு ஒரு குடும்பம், முதல் மதிப்பெண் எடுத்த மாணவிக்கு போட்டோக்காக செயற்கையாக முத்தம் கொடுத்துக்கொண்டிருந்ததை காண்பித்தார்கள். அப்பெண்ணின் தங்கை மாட்டேன் மாட்டேன் என்று சொல்ல வற்புறுத்தி அந்த பெண்ணையும் முத்தம் கொடுக்க செய்தார்கள்.

எனக்கு புரியவில்லை. எதற்கு இந்த ஆர்பாட்டம்? அங்கு முதல் மூன்று இடங்களை பெற்ற எத்தனை குழந்தைகளுக்கு வாழ்க்கை பற்றி தெரியும். ஏட்டுக்கல்வி மட்டும் தான் வாழ்க்கையா? எதற்கு இப்படி மூடத்தனமாய் அதற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து குழந்தைகள் மனதில் பயத்தை உண்டாக்குகின்றீர்கள்?

500 பேர்க்கிடையில் முதல் மூன்று மதிப்பெண் எடுத்திருக்கிறார்கள் என்று அனைவரும் சந்தோசமடைகிறார்கள். மதிப்பீடு மிகவும் தாராளமாக இருக்கிறது என்று குற்றம் சுமத்துகிறார்கள். ஏன்? அதுமட்டும் தான் காரணமா? இது தான் உன் வாழ்க்கை. இது இல்லை என்றால் அடுத்த வீட்டார் என்ன பேசுவார்? என் கௌரவம் இதில் தான் இருக்கிறது என்று எத்தனை பெற்றோர் எத்தனை குழந்தைகள் மனதில் பயமாகிய நஞ்சை விதைத்திருக்கிறீர்கள்.

அம்மா தூக்கம் என்று கேட்கும் எத்தனை பிள்ளைகள் அந்த தேர்வுக்கு முன்னர் தூக்கம் தொலைத்திருக்கின்றர்? பிள்ளைகளை பிரிந்து அவர்கள் மனதிலும் மூளையிலும் பயத்தை தெளித்து அவர்களை வறுத்தெடுக்கும் இந்த பகடை எதற்கு நமக்கு?

மதிப்பெண் பெற்றவன் எல்லாம் வாழ்க்கையில் சாதித்துவிட போவதும் இல்லை, மதிப்பெண் பெறாதவன் எல்லாம் தாழ்வாரத்தில் தளர்ந்திட போவதும் இல்லை. புரிந்துக்கொள்ள வேண்டியது பிள்ளைகள் இல்லை. பெற்றோர்களாகிய நீங்கள்.

உங்கள் எண்ணங்களையும் கௌரவங்களையும் காப்பாற்ற இது சமயம் இல்லை. இதில் உங்கள் கௌரவமும் இல்லை. உங்கள் பிள்ளையிடம் மதிப்பெண் வாங்கும் திறமை இல்லாமல் போகலாம் ஆனால் அதை தாண்டி ஒரு சிறந்த திறமை இருக்கும். கண்டறியுங்கள்..! அவர்கள் திறமைக்கு வாயிலாய் இருங்கள், அவர்கள் திறமையை வடிக்கும் கால்வாயாய் மாறிவிடாதீர்கள்.

ஏட்டில் இருப்பதற்கு தான் இங்கு மதிப்பெண் தருகிறார்கள். ஏட்டை தாண்டி மனதில் என்ன இருக்கிறது என்ன புரிந்துக்கொண்டார்கள் என்பதை அறிய எவரும் முற்படுவதில்லை.

நான் ஒன்று மட்டும் இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன். நான் ஏட்டில் படித்த எதுவும் என் வாழ்க்கைக்கு என்னோடு வரவில்லை. என் அனுபவமும் எனது சுய சிந்தையுமே என்னை வழிநடத்துகிறது. இது என்னிடம் மட்டுமில்லை. எல்லாரிடமும் தான். அவர்களை அவர்கள் வழி விடுங்கள். சாதித்து திரும்புவார்கள்.

இந்த மதிப்பெண்ணை பூகம்பமாக விஸ்வகரிக்கும் ஊடகங்கள் இதை நிறுத்திக்கொண்டால் பெறும் நல்லது விளையும். அடுத்த வீட்டு பையனை பார்த்து ‘நீ என்னடா டென்த் மார்க்’ என்ற கேட்காதீர்கள். கேட்டாலும் மதிப்பெண் அதிகம் பெறாத பையனாய் இருந்தால் அவனை ஒதுக்கி பார்க்காதீர்கள். அந்த குழந்தைக்கு இருக்கும் திறமை உங்களுக்கு இல்லாமலும் இருக்கலாம். கவனம்…! உங்கள் குழந்தைகள் மேல் உங்கள எண்ணங்களை திணிக்காதீர்கள், அவன் என்றும் படிப்பது போல படிக்கட்டும். அவர்களுக்கு தெரியும் அவர்கள் வாழ்க்கையை நிர்ணயிக்க.

உங்கள் கௌரவம் உங்கள் செய்கையிலே இருக்கிறது..! கட்டி காத்துக்கொள்ள நீங்கள் மட்டும் போதும். அது அறுந்து பறக்கவில்லை உதவிக்கு உங்கள் சிறார்களை இழுக்க. அவர்களுக்கு அவர்கள் எண்ணங்களும் கனவுகளும் கௌரவங்களும் இருக்கிறது.

உதிரும் உதிரமனைத்தும்
உயரும் ஒரு நாள் தோழா..!
வீழ்ந்தேன் என்றாலும் விதையாகு
கிளறினாலும் மண்ணாகு
அடித்தாலும் அலையாகு…
வீழ்ச்சியில்லை எதுவும்
உனை சுற்றி வரும் சூழ்ச்சியே..!
நோக்கி வரும் தோல்வியை
படிகளாய் கொண்டு வெற்றியை தேடிடு தோழா.
பாரதம் தாங்கிடு தோழா…!

-தம்பி கூர்மதியன்

Comments

Popular posts from this blog

சிட்லபாக்கத்தில் தொடரும் வாழ்வியல் போராட்டம்!

ஏழு நாட்கள்...

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..