அன்னா ஹசாரே....என்னும் சக்திஇந்தியாவில் புரட்சி வெடிக்கும் வெடிக்கும் என்னும் எதிர்பார்ப்பு சமீப காலமாக கூடிப்போய் உள்ளது. ஈழ பிரச்சனை தொடங்கி இப்போதைய சமச்சீர் கல்வி வரை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் போராட்டத்துக்கு ஆயுத்தம் ஆகி விட்டனர்.!!! 

இந்த போராட்ட குணம் எங்கு கொண்டு போய் விடும்.? மக்களை எவ்வகையில் தூண்டிவிடும்.?சில காலங்களுக்கு முன்னர் பெருவாரியான  மக்களிடம் கிளர்ச்சியை ஏற்படுத்தியவர் அன்னா ஹசாரே! அவர் கிளர்ச்சியை ஏற்படுத்துகிறாரா இல்லை மக்களை இருளில் மூழ்க செய்கிறாரா? என்று நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?

ஊழலை எதிர்க்க லோக்பால் மசோதா கொண்டு வர வேண்டும் என்றும் அதற்கு அரசுக்கு ஒரு தனிமனிதனாக இருந்து நெருக்கடி தரவேண்டும் என்று யோசித்த அன்னா ஹசாரே திடீரென முளைத்த செடியாய் உண்ணாவிரதம் என்னும் விதை கொண்டு எழுந்தார். ஊழலை எதிர்த்து ஒருவர் உண்ணாவிரதம் இருக்கிறார், ஊழலை அழிக்க ஒருவர் உண்ணாவிரதம் இருக்கிறார் என்று ஒரு தெளிவான பின்புல காரணமற்றே மொட்டையாக

செய்திகள் பரவிற்று, மக்கள் என்னவென்று சரியாக புரிந்துகொள்ளாமல் நான்ஆதரிக்கிறேன் நான் ஆதரிக்கிறேன் என்று ஒன்றன் பின் ஒன்றாக கையை தூக்கிக்கொண்டு வரிசை கட்டினர்..!

அன்னா ஹசாரேவை ஆதரித்து அப்போது கூட்டம் கூட்டமாக திரளாக கூடியிருந்த மக்களுக்கு அவரின் உண்ணாவிரதத்தின் உள்நோக்கம் லோக்பால் மசோதா என்பதே தெரியாமல் இருந்தது தான் உண்மை.! ஒருவழியாக சாகும் வரை உண்ணாவிரதம் என்னும் போர்வையிலும் மக்களின் அதீத சக்தி என்னும் ஆயுதம் கொண்டும் மத்திய அரசை வீழ்த்திவிட்டார் ஹசாரே!!

ஊழலை எதிர்க்கும் அன்ன ஹசாரேயின் மீதும் ஒரு வழக்கு இருப்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? அன்னா ஹசாரே ஹிந்த் ஸ்வராஜ் என்னும் அறக்கட்டளையை தொடங்கி நடத்துகிறார். 2005ம் ஆண்டு புனேவை சார்ந்த ஹேமந்த் கோலேகர் என்பவர் ஹசாரே 1998 ஜூன் 15ம் தேதி தம் பிறந்தநாளை அறக்கட்டளை நிதியில் இருந்து 2லட்சம் ரூபாய் எடுத்து வெகு விமர்சியாக கொண்டாடியதாக வழக்கு தொடர்ந்தார். 

பொதுவான ஒரு அறக்கட்டளையின் நிதி பணத்தில் இருந்து எடுத்து சொந்த செலவு செய்வதும் ஊழல் தானே! இப்படி பட்ட ஒருவர் தான் உண்மையில் ஊழலை எதிர்க்க பாடுபட போகிறாரா.? இந்த வழக்கு சம்பந்தமாக அன்னா ஹசாரே பொது மக்களுக்கு கூறும் பதில்தான் என்ன?

தற்போது லோக்பால் மசோதா கொண்டு வரப்பட்டது. அடுத்து அரசாங்கம் சார்பில்லாத மக்கள் பிரதிநிதியாக சிலரும் அந்த கூட்டுகுழுவில் இடம்பெறல் வேண்டும் என்னும் கோரிக்கை வைக்கப்பட்டது. அன்னா ஹசாரே தலைமையில் பத்து பேர் கொண்ட கூட்டுக்குழு தொடங்கப்பட்டது. இதில் ஐந்து பேர் அரசாங்க உறுப்பினர்கள்.!!

இவர்கள் அரசாங்கபூர்வ கூட்டங்களை நடத்தினர். இப்படி ஒரு குழு அமைக்கலாம் என்று எந்த அரசியல் சட்டம் சொல்கிறது என்று புரியவில்லை,மேலும் உண்ணாவிரதம் என்னும் போர்வையிலும் மக்கள் சக்தியை கொண்டு மிரட்டி எது வேண்டுமானால் சாதித்துவிடலாம் என்றால் அது என்ன மத்திய அரசாங்கம் அதற்கு என்ன சக்தி இருக்கிறது.? அப்படியென்றால் நாளை எனக்கொரு காரியம் ஆகவேண்டும் என்றால் உடனே நான்கு பேரை கூட்டிக்கொண்டு உண்ணாவிரதம் இருக்க போனால் சரியாகிவிடுமா.?

இது கொண்டுவரப்பட்டது நல்ல நோக்கில் என்று ஒத்துக் கொள்ளும் அதே நேரத்தில் அதை சரியானதாக செய்யமுடியும் என்று இங்கு எத்தனை பேரால் கூற முடியும்.? ஈழத்தமிழர்களை ஆதரித்தும் தமிழகத்தில் நடக்கும் பல அநீதிகளை கண்டித்தும் ஆங்காங்கே மக்கள் கூட்டம் பெருந்திரளாக தான் கூடுகிறார்கள் போராட்டம் நடத்துகிறார்கள். ஏன் அதில் எல்லாம் மத்திய அரசாங்கம் தலையிட மறுக்கிறது.?

தமிழகத்தின் சார்பில் ஈழத்தமிழருக்கு என்று எத்தனை  கூக்குரல் எழும்பி இருக்கும்.? அத்தனைக்கும் மௌனம் காத்த மத்திய அரசாங்கம் இதற்கு பயந்தார் போலும் அதற்கென சட்டம் கொண்டுவந்ததாகவும் பாசாங்கு செய்வதும் ஏன்.?

மத்திய அரசு அன்னா ஹசரேவின் புரட்சி முழக்கத்துக்கு பயந்து நடுங்குவது ஏன் என்ற ஒரு கோணத்திலும் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்? ஒரு தென்னிந்தியரின் போராட்டம் இந்த அளவிற்கு தேசிய அளவில் பார்க்கப்பட்டிருக்குமா என்பதும் கேள்விக் குறியே?

உண்ணாவிரதத்தை தொடர்ந்து அன்னா ஹசாரேவை ஒரு நாயகனாகவே ஒவ்வொரு இந்தியனும் பார்க்கத் தொடங்கினான் அல்லது பார்க்கச் சொல்லி பொது புத்தியை மீடியாக்கள் தூண்டி விட்டது என்று கொள்வோம். இந்நிலையில் அன்னா ஹசாரே தலைமையிலான குழு லோக்பால் மசோதா அமைக்க பரிந்துரைகள் வழங்கப்பட்டது.

இதில் பிரதமரையும் விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசு ஏற்கவில்லை. மத்திய மந்திரிகள் குழு தயாரித்த லோக்பால் சட்டத்தை மத்திய அரசு தாக்கல் செய்தது.

இவர்கள் தாக்கல் செய்த சட்டம் என்ன சொல்கிறது.? அன்னா ஹசாரேவின் பரிந்துரைகள் பலவும் எடுத்துக்கொண்ட இச்சட்டம் பிரதமர், உயர் பதவி நீதிபதிகளை விசாரிக்க மட்டும் தடை விதித்தது. இதற்கு காரணமாக மத்திய அரசு சொல்லியது அவர்களின் பதவிக்கு மரியாதை என்பதையே!! இதை அன்னா ஹசாரே மற்றும் அவரது தொடர்பாளர்கள் எதிர்த்தனர்.

இதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 16 முதல் மீண்டும் தனது உண்ணாவிரதத்தை அன்னா ஹசாரே தொடங்க போவதாகக் குறிப்பிட்டுள்ளார். மத்திய அரசு லோக்பால் சட்டத்தை தாக்கல் செய்த அடுத்த நாளே அதை எதிர்த்து அன்னா ஹசாரே சட்ட நகலை எரித்து சாம்பலாக்கி தன் எதிர்ப்பை தெரிவித்தார். மேலும் அவரது குழுவினரும் இத்தகைய செயலில் ஈடுபட்டனர். அவர் மேலும் மக்கள் அனைவரையும் இச்செய்கையை செய்ய வேண்டினார். 

இது அரசுக்கு எதிராக மக்களை தூண்டி விடுவது போல் இல்லையா.? மக்கள் அனைவரும் ஹசாரேவின் பேச்சுக்கு பெருமதிப்பு தருகிறார்கள் எனும் போது அவரின் பேச்சு இவ்வாறாக அமைவது சிறப்பானதா.? சரியான முறைப்படி அரசோடு பேச்சு வார்த்தை நடத்தவும் மக்கள் சக்தியை கொண்டு புது போராட்ட வழி முறைகளை செயற்படுத்த முடியாதா திருவாளர் ஹசாரேயால்?

இந்த ஆகஸ்ட் 16 தொடங்கபோகும் உண்ணாவிரதம் எந்தவொரு உறுதிமொழிகளிலும் அடங்கிவிடாது என்றும் அரசு உண்ணாவிரதத்துக்கு பயப்படவில்லை மக்களின் எழுச்சிக்கே பயப்படகிறது என்றும் அன்னா ஹசாரே நகல் எரிப்புக்கு பின்னர் பேசினார். 

சரி ஹசாரே அவர்களே! அப்படி இருக்கும் பட்சத்தில் உங்களுக்கு இந்தியாவில் இருக்கும் செல்வாக்குக்கு நீங்கள் குரல் கொடுத்திருந்தால் ஒவ்வொரு இந்தியனும் உங்களுக்காக குரல் கொடுக்க வந்திருப்பானே பிறகு ஏன் உண்ணாவிரதம் என்னும் போலி முகமூடி? 

ஒவ்வொரு முறையும் உண்ணாவிரதம் இருக்கிறேன் என்று தேசிய பிரச்சினைக்கு நீங்கள் மட்டுமே தலையைக் கொடுத்தால் சுற்றியுள்ள சக தேசத்தவர்கள் முன் நீங்கள் ஒரு ஹீரோ ஆவீர்கள் ஆனால் நம் மக்கள் அப்படியேதானே இருப்பார்கள்?

போராட்ட வடிவத்தில் இந்த தேசத்தில் இருக்கும் ஒவ்வொரு குடிமகனையும் பங்கெடுத்துக் கொள்ள வைப்பேன் என்று நீங்கள் சூளுரைத்திருந்தால் அது புரட்சி? தாங்கள் எதற்கெடுத்தாலும் உண்ணாவிரதம் என்ற அஸ்திரம் எடுத்தால் அந்த வலிமையான அஸ்திரத்துக்கு ஒரு வலிமை இல்லாமல் போய்விடும் என்று அறிந்து கொள்ள இயலவில்லையா தங்களால்?

தேசத்து பிரச்சினை இது... .நீங்கள் தலைமை கொண்டு தேசத்து மக்களை போராடச் செய்யுங்கள் ஐயா?

ஒன்றுமில்லாமல் இருந்த உங்களிடம் சிறு உரிமையை வாங்கி கொடுத்தனர் மக்கள். அதை வைத்துக்கொண்டு மக்களுக்கு எவ்வாறு நல்லது செய்யவேண்டும் என்று யோசிப்பதை விட்டுவிட்டு நான் பரிந்துரைத்தேன் அவர்கள் ஏற்கவில்லை என்று பள்ளிக்கு அனுப்பி வைத்த சின்ன குழந்தை அழுதுகொண்டே அம்மாவிடம் சொல்வது போல எங்களிடம் திரும்ப ஓடி வந்து சொல்கிறீர்களே நாங்கள் என்ன செய்ய.?

வலுவான ஆயுதங்கள் தேவையின் அடிப்படையில் எடுக்கப்பட வேண்டும் அடிக்கடி எடுத்தால் அதன் வலு தேய்ந்து போய் விடும் என்பதோடு தவறான செயல் செய்பவர்களுகும் இது ஒரு கெட்ட முன்னுதாரணமாய் போய் விடும் என்னும் கருத்தை இங்கே வலுவாக பதிகிறோம்.

இந்நிலையில் 16ம் தேதி நடக்கபோகும் உண்ணாவிரதத்துக்கு அரசாங்கம் மறுப்பு தெரிவித்து மீறி நடத்தினால் ஹசாரேவை கைது செய்யும் செயலும் நடக்கும் என எச்சரித்தது. இதற்கு பாரதீய ஜனதா எம்.பி., வருண் காந்தி உண்ணாவிரதத்துக்கு என் வீட்டை தருகிறேன் என்று மு வந்துள்ளார்.  அரசியல் விளையாட்டுக்கள் எப்படி எல்லாம் நகர்கிறது என்பதை நாம் இங்கே உணர முடியும்.

நாளைய சமுதாயத்தில் தவறான ஒரு கண்ணோட்டத்தை போதிக்கவே இது போன்ற உண்ணாவிரதங்கள் வழிவகுக்கும். ஊழலை எதிர்த்து நாளடைவில் ஒரு கிளர்ச்சி  எழுந்திடகூடாது என்பதற்காக அன்னா ஹசாரே என்னும் மனிதனின் கீழ் அனைத்து மக்களும் அடங்கி போய் கிடக்கவேண்டும் என்று காங்கிரஸ் அரசு செய்யும் சதிதிட்டமாக ஏன் இது இருக்க கூடாது.? என்ற நம் சந்தேகத்தையும் இங்கே பொதுவில் வைக்கிறோம்.

நாளை இந்தியாவை தீர்மானிக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை..!! யோசனைகள் வலுக்கட்டும்.!!! பாசாங்கு இல்லாத பஞ்சோந்தி தனம் இல்லாத நலமொரு இந்தியாவை உருவாக்கிடுவோம்.!!!

அன்னா ஹாசரேவை ஆதரிக்கும் பலருக்கும் இந்தக் கட்டுரைக் கோபத்தைக் வர வைக்கலாம், ஆனால் ஒவ்வொரு விடயத்தையும் ஆழ உணர்ந்து முழுமையான விழிப்புணர்வோடு நாம் நகர வேண்டிய் அவசியத்தை  தெளிந்து சிந்திக்கும் பொறுப்பினை வாசகர்களிடம் விட்டு விட்டு ...கட்டுரையை நிறைவு செய்கிறோம்!

-தம்பி கூர்மதியன்

(நன்றி: கழுகு- ஆகஸ்ட் 8,2011)

Comments

Popular posts from this blog

சிட்லபாக்கத்தில் தொடரும் வாழ்வியல் போராட்டம்!

ஏழு நாட்கள்...

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..