Skip to main content

கற்றுக் கொடுப்பவர்களே....! கற்றுக் கொள்ளுங்கள்..!

தெளிவுகளை மணவர்களுக்கு போதிக்கிறேன் பேர்வழி என்று கல்வி நிறுவனங்களும் பெற்றோர்களும் தத்தம் விருப்பங்களை பிள்ளைகளின் தலைகளில் சுமத்துவது சரிதானா? கற்று கொடுக்கப்படும் மாணவர்களையே உற்று நோக்கும் சமுதாயத்தை கற்றுக் கொடுப்பவர்களையும் கவனியுங்கள் என்று உரக்க சப்தமிடும் இந்த கட்டுரையை வாசியுங்கள்...சப்தமில்லாமல் பல தெளிவுகள் உங்களுக்கு கிடைக்கும்...!கல்வி.! இப்போது இந்த விடயத்தை பற்றி ஆரம்பித்தாலே சமச்சீர் கல்வியோ என்று பயந்து ஓடும் நிலை வந்துவிட்டது. சமச்சீர் கல்வியை பற்றி நாம் அவ்வளவு பார்த்துவிட்டோம். சமச்சீர் கல்வி சரி.! அதற்கு முன்னர்.!? நம் கல்வி முறை எல்லாம் சரியாக இருந்ததா.!? இப்போதும் சொல்வர் நம் நாட்டில் ஏட்டு கல்வி தான் செயல்முறை கல்வி அற்றது என்று....

ஏட்டு கல்வி என்ன பயக்கும்.!? உண்மையான புத்திசாலிதனத்தை மூடி மறைக்கும். உயர் கல்வி தரத்தை தாழ்த்தி சிரிக்கும். கல்வி ஒரு வியாபாரமாக மாறிவிட்டது. கற்றுவிப்பவன் நல்ல ஆசானாக மாறுவது எப்போ? என்றெல்லாம் நாம் புலம்பிய காலங்கள் பல.

இவ்வாறு புலம்புவர்களை சிந்தனைக் குறைப்பாடு உள்ளவர்கள் என்று கொள்ளலாம். ஒரு சராசரி இந்திய தாய்,தந்தை என்ன செய்கிறார்கள்!? "என்ன வேணா பண்ணிகிட்டு போ என் புள்ள மார்க் எடுத்தா அதுவே போதும் " என்னும் மனப்போக்கு தான் இருக்கிறது. இது தான் ஒரு குழந்தையை நல்வழிபடுத்த பெற்றோர் எடுக்கும் முயற்சியா.!?

ஆனால் 

இதிலும் விதிவிலக்கு என்று சில பெற்றோர்கள் இருக்கின்றனர். அவர்களும் தங்கள் பிள்ளைகளை கண்டிப்பாக படித்து மனப்பாடம் பண்ணியே தீரவேண்டும் என்று வற்புறுத்துபவர்கள். ஆனால், அது முழு மனதோடு அல்ல. நம் நாட்டில் கல்வி முறையும் அதனை தொடரும் வாழ்க்கையும் மனப்பாடம் செய்து வாந்தி எடுப்பது என்னும் நுண்கலையில் தொடங்குகிறது என்றே சொல்லலாம். இதுதான் இம்மாதிரியான பெற்றோர்களை கண்டிப்பாக குழந்தைகளை மனப்பாடம் செய்ய தூண்டுகிறது.

இந்த கல்வியை போதிக்கும் இடம் எப்படி இருக்கிறது.!? சீர்கெட்ட ஒரு இடத்திற்கு எடுத்துக்காட்டை சொல் என்று ஏதாவது ஒரு மாணவனை கேட்டால் 100க்கு 90 சதவீத மாணவன் தன் பள்ளியை தான் காட்டுவான். எத்தனை மாணவன் தான் படிக்கும் பள்ளியை சிறந்த பள்ளி என்று அனைவரிடத்தும் சொல்கிறான்.!? மிகவும் கம்மி. காரணம்-அடிமாட்டுத்தனம் தான் இப்போது பள்ளிகளில் நடக்கிறது.

சின்னஞ்சிறு பிஞ்சு நெஞ்சில் நஞ்சை கலப்பது எப்படி.!? அதை அந்த ஏரியாவிலே சிறந்த பள்ளி என்று சொல்லும் இடத்தில் சேர்த்து விடுங்கள். தானாக நஞ்சு அதன் நெஞ்சை தாக்கும். ஆம்.! தாம் தான் முதல் இடம் என்று பிதற்றிக்கொண்டிருக்கும் எத்தனையோ பள்ளிகள் உள்ளே வெறும் சாக்கடை என்பது இங்கிருக்கும் பலருக்கும் தெரிந்திருக்கும். ஏனென்றால், நாம் அனைவரும் நல்ல பள்ளியை தேடி நாசமாய் போன கூட்டத்தை சார்ந்தவர்கள் தானே.!

இது போன்ற பள்ளிகளில் தேர்வில் சரியான மதிப்பெண் எடுக்காத மாணவர்களின் பெற்றோர் அழைக்கப்பட்டு மாணவனை பற்றிய குறைகளை சொல்லி அனுப்பவர். சில பள்ளிகளில் அம்மாதிரியான பெற்றோர் வருகையில் ஆசிரியர்கள் அவர்களை தரக்குறைவாக பேசுவதும் எதிர்த்து கேட்டால் ‘ஒழுங்கா படிக்காத புள்ளையோட அப்பனுக்கு இது தான் மரியாதை’ என்று திமிராக சொல்லும் வாத்தியார்களும் உள்ளனர்.

மதிப்பெண் வாங்காதது அந்த மாணவன் குற்றமா!? அல்லது அவன் பெற்றோர் குற்றமா.!? முதலில் மதிப்பெண் வாங்காதது ஒரு குற்றமே இல்லையே.!!

பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் அந்த பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் சராசரி ரொம்ப முக்கியமாக கருதும் ஒன்று. அதில் முழு தேர்ச்சி விகிதத்தை காட்டி நல்ல பெயர் எடுப்பது தான் அதற்கான நோக்கமாக இருக்கும். இந்த முழு தேர்ச்சி விகிதத்தை ஏற்படுத்த பல வேலைகளில் ஈடுபடும் இந்த நிறுவனங்கள்.

முதலில் பத்தாவது போகும் குறைந்த மதிப்பெண் வாங்கும் மாணவனை இன்னொரு வருடம் ஒன்பதாவதிலே போட்டுவிடுவது அல்லது அந்த பள்ளியில் இருந்து நிரந்தர விடுப்பு கொடுத்து அனுப்பிவிடுவது. கல்வியை போதிக்க கல்விகூடமா அற்று அது அம்மாணவனின் கல்வி திறனை சோதிக்கும் சோதனை கூடமா.!?

அடுத்து கோச்சிங் க்ளாஸ்.!! பொது தேர்வு எழுத போகும் மாணவர்களுக்கு கூடுதல் வகுப்பெடுத்து அவர்களை நல்ல மதிப்பெண் பெற செய்து நிறுவனத்திற்கு நல்ல பெயர் எடுப்பது. இதில் மதிப்பெண் ஒழுங்காய் பெறாத மாணவர்களுக்கு இன்னும் கூடுதல் நேரம் எடுப்பது. எந்நேரமும் படிப்பு படிப்பு என்று சொல்லிக்கொண்டிருந்தால் ஒரு மாணவன் மந்தமாய் போவதற்கு அதுவே காரணம் ஆகிவிடாதா.!?

பெரிய வயது மாணவர்களுக்கே அப்படியென்றால் சின்ன பிஞ்சுகள் என்ன ஆகும்.!? ஆம்.. இப்போது கோச்சிங் க்ளாஸ் எல்.கே.ஜி., படிக்கும் குழந்தைகளுக்கே வந்தாச்சு. இது சமீப காலமாக பரவி வரும் ஒரு கொடிய நோய் என்று சொல்லலாம்.  A B C D எழுத போகும் குழந்தைக்கு எக்ஸ்ட்ரா க்ளாஸ.! கல்வி தாய்க்கு உயிர் இருந்தால் கதறி அழுதிருப்பாள். பல குழந்தைகளை அனுப்பிவிட்டு சில குழந்தைகளை மட்டும் வைத்து ‘‘நீ ஒழுங்கா படிக்கல.. ஸோ உனக்கு இன்னும் எக்ஸ்ட்ரா க்ளாஸ் இருக்கு’’ என்று சொல்வது ஒரு குழந்தையை மனதளவில் எப்படி பாதிக்க கூடும்.!? சிறுவயதில் மனதில் பதிவதை அவ்வளவு சீக்கிரம் அழித்திட முடியாது. காலபோக்கில் ஒரு மனிதனில் கேரக்டரை முடிவு செய்ய போவதே அந்த குழந்தை பருவம் தான் என்கிற போது அந்த குழந்தை பருவம் இப்படியா அமைய வேண்டும்.!?

கல்வி-இன்னும் ஒரு சரியான விளக்கம் கண்டுபிடிக்க முடியாத வாழ்க்கையின் வார்த்தைகளில் ஒன்று.! கற்பிக்கும் இடத்தில் காலனாய் தெரியும் ஆசான்.! கற்பிக்கும் இடமே பேய் பங்களா போல் தெரியும் பிம்பம்.! கற்பித்தல் தொடங்கும் போதே கண்விழித்து தூங்கும் கலை.! இதெல்லாம் மாணவர் வாழ்வில் பார்ப்பது. நம் வாழ்வின் மீதி நாட்களை நிரப்ப போகும் உக்தியான கற்பது என்பது காப்போர் அற்று கதறுகிறதே இக்கால கற்பித்தல் முறையால்.!! இதை மாற்ற குமுறும் இந்திய பிரஜைகளில் ஒருவனாய் நானும் இன்று கதறுகிறேன்....

-தம்பி கூர்மதியன்
(நன்றி: கழுகு - ஜூலை 19, 2011)

Comments

Popular posts from this blog

மெரினாவில் ஓர் இரவு! போராட்டக்களம்..

மாலை 6.30 மணி.
இரண்டு கிலோமீட்டர் முன்னிருந்தே பேரணியாக பலர் சென்றுக்கொண்டிருநனர். அங்கங்கே தன்னார்வாலர்கள் நின்று அறிவிப்புகள் செய்துக்கொண்டிருந்தனர். சட்டையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான வாசக மற்றும் படம் பதிப்பை இலவசமாக நண்பர்கள் செய்துக்கொண்டிருந்தார்கள். வண்டியை நிறுத்திவிட்டு நாங்களும் இணைந்துக்கொண்டோம் நடைபயணத்தில்.
கோஷங்கள் எழுப்பபட்டன. ஆளும் வர்கத்தை எதிர்த்தும், சர்வதேச அரசியலை கேலியாக விமர்சித்தும் கோஷங்கள் போடபட்டன. அப்பொழுதே கிளப்பிவிட்டன நம் ரோமங்களை. அங்கங்கே சில தகாத வார்த்தைகள் இருந்தாலும், அவை தோழர்களின் கோபத்தை வெளிப்படுத்தும் ஒரு முறை என்று உணர்ந்து நடந்தோம். கோபத்தை நாகரீகமாக சொல்லும் தமிழ் இனம் என்பதை தோழர்கள் நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும்.
எங்கும் நுழைய முடியவில்லை. குடும்பமாக, நண்பர்களாக, தன்னார்வலராக என எங்கினும் கூட்டம் அலைமோதிக்கொண்டிருந்தது. மத்திம பகுதி விவேகானந்தர் இல்லம் தான் எனினும் கலங்கரை விளக்கத்திலிருந்தே அலைகடலென மக்கள் மட்டும் தான் தெரிந்தார்கள்.
நாங்கள் முன்னேறினோம். அங்கங்கே தோழர்கள் பதாதைகளை பகிர்ந்துக்கொண்டார்கள். கோஷ முழக்கமிடையே நாங்கள் முன்னேறி …

ஏழு நாட்கள்...

என் பெயர் ரகு. அடிக்கடி இரவு வரும்பொழுது ஒரு இனிப்பு என்று வாங்கிக்கொண்டு சந்தோசமாக வீடும் ஏறும் அளவுக்கு எனக்கு குடும்பமும் இல்லை. அந்த அளவுக்கு மகிழ்வும் வந்ததில்லை. அதே சமயம், வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே என வருந்தும் அளவுக்கும் ஒரு கவலை வந்ததில்லை. வாழ்க்கை என்னும் போக்கில் நாட்களை கடந்து செல்லும் நீங்கள் பார்க்கும் ஒரு சாதாரண மனிதன் தான் நான்.
அம்மா ஊரில். இங்கு தனியாக ரூம் எடுத்து தங்கியிருக்கிறேன். கம்ப்யூட்டர், செல்ஃபோன் போன்னற இக்கால வாழ்க்கை டெக்னாலஜி எதுவும் அண்டாத ஒரு பிரஜை. என்னிடம் இருக்கும் சொத்து என்று சொன்னால் ஒரு மூன்று செட் துணி, ஒரு ஜோடி ஷூ மற்றும் செருப்பு, ஒரு பர்ஸ் மற்றும் ஒரு கைகடிகாரம். இதில் எதில் பாதிப்பு வந்தாலும் உடனே மாற்று வாங்கிவிடுவேன். வேறு எதுவும் செலவு இல்லை. சமீபத்தில் தொலைந்த கடிகாரத்திற்கு பதிலாய் மற்றொன்று குடிக்கொண்டிருக்கிறது. அவ்வளவு தான்.
அன்று அலுவலகத்தில் இருந்தேன்.
‘ரகு… உன்ன சார் உள்ள கூப்பிடுறாரு..’ சக அலுவலர் வந்து சொன்னார்.
‘ரகு… நீங்க சேர்ந்து கொஞ்ச நாள் தான் ஆகுது. ஃபீல்ட் சமயம் இப்போ சரியில்ல. வேலைய விட்டு எல்லாரையும் தூக்கிட்டு இருக்காங…

ஒரு அப்பாவின் வாழ்க்கை

நான் கடைசியா இந்தியா வந்து ஒரு வருசம் கடந்துருச்சு. இப்போ நான் கிளம்பிட்டேன். என்னோட இந்தியாவுக்கு, என்னோட ஊருக்கு, என் சொந்த மண்ணுக்கு போறேன். அதைவிட சந்தோசம் நான் என் அப்பாவ பாக்க போறேன். நினைக்கிறப்பவே மனசு சில்லுனு இருக்கு. அப்பா…
என் அப்பா ஒரு கூத்து ரசிகர். ஊருல நடக்குற ஒரு நாடகம் கூத்து எதையும் விடமாட்டார். அன்னைக்கு ஊருக்குள்ள சங்கரன் குழுவோட நாடகம் நடந்துச்சு. மகாபாரத கதை. கிருஷ்ணன் அர்ஜூனனுக்கு உபதேசம் சொல்லிகிட்டு இருந்தாரு.
’கத்தும் நீதிகூட்டம் காட்டில் ஒரு குரங்காட்டம் ஒன்னு ஆடுது நாட்டில் மழியும் உலகம் ஆட்சி அதை அழிக்கத்தான் புறப்படும் தர்மத்தின் கோட்டை கத்தும் கதமறுக்கும் காட்டில்’
’ஆதாகபட்டது வில்லை ஏந்திக்கொண்டு யோசித்து நிற்கும் அர்ஜூனனிடம் கிருஷ்ணன் சொல்கிறான்.’
‘எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது’ என நாடகம் உச்சகட்டத்தில் அக்கால உடையோட நடந்துகிட்டிருந்தப்போ மேடையில ஒருத்தர் இக்கால உடையோட நடந்து வந்து கிருஷ்ணன் காதுல ரகசியம் பேசினாரு. இது என்னடா மகாபாரத்ததுல ஒரு திருப்பம்னு கூட்டமே உத்து பாத்துகிட்டு இருந்தப்போ, கிருஷ்ணர் மக்கள் கூட்டம் இரு…