அவள் என் காதலி..!!சாலை ஓரமாக நடந்து சென்றுக்கொண்டிருந்தேன். எனது அலைப்பேசி மணி ஒலித்தது. என் நண்பன். அழைப்பை ஏற்று என்னடா என்றேன். என்னோடு தனியாக பேச வேண்டும் என்று சொன்னான். என்ன முக்கியமான விசயம் என்று கேட்டேன். நேரில் சொல்கிறேன் என்றான். சரி என்று என் பாதையில் இருந்த ஒரு ஜூஸ் கடைக்கு வர சொன்னேன். சிறிது நேரத்தில் வந்தவன் படபடப்பாக உள்ளே வந்தான்.

‘என்னடா.. நான் கேள்விபட்டதெல்லாம் உண்மையா?’ என்றான் இன்னும் படபடப்பு அடங்காமல்.

‘என்னடா கேள்விபட்ட..?’ என நமட்டு சிரிப்போடு கேட்டேன்.

‘நீயும்.. அந்த பொண்ணும்…’ என்று இழுத்தான்.

‘என்னடா.. ஆமாம் டா.. நானும் அவளும் காதலிக்கிறோம்..’

‘ஆனா.. எப்படி டா.?’

‘எப்படினா.. புடிச்சிருக்குனு சொன்னேன்… அவளும் புடிச்சிருக்குனு சொன்னா..’

‘ஏ… அது இல்லடா.. அது.. எப்படி…’ என்று தயங்கினான்.

‘நீ என்ன கேட்க வர்றனு எனக்கு புரியுதுடா…’ என்றேன். என்னை மேல் பேச விடாமல் தடுத்தவன் வண்டியில் போயிக்கொண்டே பேசலாம் என்றான். நானும் சிரித்துக்கொண்டே ஒத்துக்கொண்டேன். அவனின் வண்டியில் என்னையும் ஏற்றிக்கொண்டான். சிறிது நேரம் அமைதியாக இருந்தோம். மீண்டும் அவனே ஆரம்பித்தான்…

‘பெரிய இவன் மாதிரி சொல்லுவ? எனக்கு லவ்வு கருமாந்திரம்லாம் புடிக்காதுனு…’ என்று சொல்லிவிட்டு கண்ணாடி வழியாக முறைத்தான். நான் சிரித்தேன்.

‘சிரிக்காத டா.. நீ லவ் பண்றதுக்கு நான் எதுவும் சொல்லல… எல்லாருக்கும் வர்றது தான் அது… ஆனா ஏன் அவ? அவள.. அவள..’

‘ஆமாம் டா.. அவள தங்கைனு சொன்னேன்.. சொல்லி ஒரு மாசம் தான் ஆகுது..’

‘ஏதோ சொல்லிட்டல…’

‘ஆமாம்.. சொல்லிட்டேன்.. அதுக்காக?’

‘அதுக்காகவா..? தங்கைனு சொன்ன ஒரு பொண்ண.. எப்படி டா லவ் பண்றேன்னு சொல்ல முடியுது?’

‘ஹா…’

‘சிரிக்காத.. எல்லாரும் என்ன நினைப்பாங்க டா?’

‘என்ன நினைப்பாங்க?’

‘உன்னை பத்தி தப்பா பேசுவாங்க டா..’

‘ஏன் டா.. அவங்க கூடவா நான் வாழப்போறேன்.?’

‘எடக்கு மடக்கா பேசணும்னா பேசலாம் டா… ஆனா இது தப்பில்லையா?’
என்று அவன் கேட்டுவிட்டு முறைத்தபடியே இருந்தான். நான் வண்டியை நிறுத்த சொன்னேன். எங்களுக்கு பிடித்த பார்க் அது. அவனை நடந்துகொண்டே பேசலாம் என்று அழைத்தேன். அவனும் முரண் பிடித்தவனாய் இறங்கி வந்தான். சிறிது நேரம் இருவரும் பேசவே இல்லை.

‘உனக்கு எப்படி மனைவி வேணும்?’ என கேட்டேன்.

‘அது எதுக்கு இப்போ?’

‘சொல்லு டா.. எப்படி வேணும்..’

‘நல்ல அழகா இருக்கணும்.. என் குணத்துக்கு ஏத்தது போல இருக்கணும்’

‘அப்படி ஒரு பொண்ண பாத்தியா?’

‘பாக்கல..’

‘பாத்தா என்ன பண்ணுவ?’

‘லவ் பண்ணுவேன்..’

‘சரி… ஒரு பொண்ண பாத்ததும் எப்படி அவ குணம் உனக்கு தெரியும்?’

‘பாத்ததும் எப்படி தெரியும்..? பழகுனா தான்…’

‘எப்படி பழகுவ? மூணாவது மனுசனாவே பழகுவியா?’

‘அது எப்படி பழக முடியும்..? நண்பனா மாறி தான்..’

‘ஓ.. அப்போ.. நண்பர்கள காதிலிக்கிறது தப்பில்லையா?’

‘சார்.. அது தப்புனு எங்க சொல்லியிருக்கு?’

‘அப்படி தான் டா நானும் அவளும்… தோழனுக்கு அடுத்த படியும் காதலிக்கு முந்தைய படியும் தான் ஒரு சொந்தம்.. எத்தனை பேர் காதலிய தாய்னு சொல்லியிருப்பாங்க.. அதுக்காக அம்மாவ காதலிக்கிறேனு அர்த்தம் ஆகுமா?’

‘டே.. சப்பை கட்டு கட்டாத…’

‘எதுடா சப்பை கட்டு? சரி உனக்கு வீட்டுல எத்தன பேர் கூட பிறந்தவங்க..’

‘ரெண்டு பேர்.. உனக்கு தெரியாதா?’

‘தெரியும்.. கூட பிறக்காத அண்ணன் தம்பி எத்தனை பேர் இருக்காங்க.. அக்கா தங்கை எத்தனை பேர் இருக்காங்க?’

‘கூட பிறக்காத அண்ணன் தம்பினு எவனும் இல்ல.. தங்கைனு ஒரு மூணு பேர் இருக்காங்க…’

‘அவங்கலாம் உன்னோட படிச்சவங்க இல்லனா வேலை செய்யிறவங்க.. சரியா?’

‘ஆமாம்.. எதுக்கு அதெல்லாம்..?’

‘ஒண்ணு புரிஞ்சுக்கோ டா.. ஒரு பொண்ணோட ரெண்டு மூணு முறை பேசினா பழகினா நண்பர்கள் ஆகிடலாம்.. நமக்கு ஒரு சமயம் அவங்க கேரக்டர் புடிக்கும் ஒரு சமயம் புடிக்காம போகும்… அப்படிபட்டவங்கள ஒரு சமயம் நமக்கு காதலிக்க தோணும், ஒரு சமயம் காதலிக்க வேணாம்னு தோணும்… நீ சொன்னியே தங்கைனு மூணு பேரு.. நீ உன் மனைவிகிட்ட எதிர்பார்க்குற ஏதோ ஒரு குவாலிட்டி அவங்களுக்கு இல்லனு சொல்லுவியா?’ என்று நான் கேட்டேன். அவன் மௌனமாக யோசித்தான். பிறகு,

‘அப்படி இல்ல.. இருக்கு…’

‘ஆமாம்.. கண்டிப்பா இருக்கும்.. அவங்கள உனக்கு புடிக்கும்.. உன்னோட நண்பர்கள தான்டி அவங்க மேல ஒரு படி அதிகமா பாசம் இருக்கும்…’

‘ம்ம்.. ஆமா..’

‘நமக்கு சிலர புடிக்கும் டா.. ஆனா அவங்கள காதலிச்சிட கூடாதுனு தோணும்.. அப்படிபட்டவங்க கிட்ட இருந்து நம்ம மனச கட்டுபடுத்த நாம தேர்ந்தெடுக்குற சொல் தான் தங்கைலாம்.. ஒரு பயம்.. அந்த பயத்தோட வெளிப்பாடு தான் தங்கைனு சொல்லுறதெல்லாம்… அப்படி சொன்ன பிறகு தப்பு பண்ணிட்டோம் அவங்க தான் நமக்கு சரியான துணைனு தெரிஞ்சுட்டா இந்த அல்ப விசயத்துக்காக அவங்கள இழக்க சொல்லுறியா?’

‘ஹா.. அல்ப விசயமா? ஓ.. கேவலமா எதனா கேட்டுடுவேன் டா..’

‘கேளேன்…’ என்றேன். அவன் உள்ளுக்குள் ஏதோ முனுமுனுத்துக்கொண்டான். சத்தமாக சொல்லுடா என்றேன்.

‘இதே உன்னோட உண்மையான தங்கையோட குணம் பிடிச்சிருந்தா இப்படி தான் நடந்துப்பியா? அப்படி தானே அந்த பொண்ணும்..’ என்றான். எனக்கு தலையில் இடி விழுந்தது போல் இருந்தது. என்னடா இப்படி கேட்டுவிட்டாய் என்னும் விதத்தில் என் பார்வையை கொண்டு மேலும் பேசினேன்…

‘பாருடா.. என் தங்கை அவ பிறந்ததுல இருந்து எனக்கு தங்கை. அவள நான் ஒரு அப்பாவா பாத்தேன்.. அவ அழகா இருக்கானு எனக்கு தோணியிருக்கு, ஆனா அது ஒரு அம்மா தன் பொண்ண பாத்து அடையிற பூரிப்பு தான். ஆனா இவ.. இவ அப்படி இல்லடா.. மொதல்ல ஏதோ ஒரு பொண்ணா பாத்தேன். அவள புடிச்சுது. அவள எனக்கு அழகா தோணுச்சு. அவ கேரக்டர் புடிச்சுது. அதுக்கு மேல பாசத்தால இல்ல, என் மனசுக்கு ஒரு கட்டுப்பாடுக்காக அவள என் தங்கையினு சொன்னேன். சொல்லி ஒரு மாசம் கூட முழுசா ஆகல.. அதுக்குள்ள உள்ளுக்குள்ள ஒண்ணு அவ உனக்கானவ டா-ன்னு சொல்லுச்சு. நாளைக்கு அவ இன்னொருத்தவன் கூட நின்னா, அந்த ஒரு சொல்லால நல்ல வாழ்க்கைய இழந்துட்டேனு தோணுமே.. அது என் வாழ்க்கைக்கு நான் அமைச்சுக்கிற நரகம் டா.. நாளைக்கு எனக்கு வேற ஒருத்தி மனைவியா வந்தா அவளுக்கு பண்ணுற துரோகம் கூட’

‘மச்சி.. மன்னிச்சிடு டா.. ஆனா உலகம் என்னடா பேசும்?’

‘எதுடா உலகம்.. நான் தங்கைனு சொன்னது மிஞ்சி போனா 40 பேருக்கு தெரியுமா? எனக்கு கவலை இல்லடா.. நமக்கு வர்ற மனைவி தோழியா, சகோதரியா, அம்மாவா, காதலியா இருக்கணும்னு ஆசை படுறோம்ல.. எனக்கு அவ தோழியா இருந்தா.. சகோதரியா இருந்தா.. காதலியா இருக்குறா. பின்னால் மனைவியா அம்மாவா இருப்பாடா.. நீ சொல்லுற உலகத்துக்காக என் வாழ்க்கைய இழக்க சொல்லுறியா?

‘அப்படி இல்லடா…’ என அவன் இழுத்தான். என் வாழ்க்கைய என் விருப்பபடி வாழ விரும்புறேன். அது தப்பா என்னும் கேள்விக்கு அவன் பதில் சொல்வது அறியாது விழித்தான். சிறிது தூரம் நடந்தோம்… பிறகு வாழ்த்துக்களை சொன்னான். நான் சிரித்தேன்.

‘உன்னை மாதிரி எவனாச்சும் கிளம்பிடுறான் கலாச்சாரத்தை மாத்த..’ என்று சொல்லி நக்கலிட்டான். கலாச்சாரத்தை மாற்றவில்லை.. நான் தமிழியத்தையும் அதன் கலாசாரத்தையும் மதிக்கிறேன். என்னோட சுயம் என்று ஒன்று இருக்கிறது அதை யாருக்காகவும் இழக்ககூடாது என்று வாழ்கிறேன் என்றேன். என் தோளில் கை போட்டு நடந்துகொண்டே வந்தான். அவனின் கேள்விக்கு மட்டுமல்ல எனது உள்மனதின் கேள்விகளுக்கு கூட தெளிவு பிறந்த சந்தோசத்தில் நானும் நடை போட்டேன்.


-தம்பி கூர்மதியன்

Comments

Popular posts from this blog

சிட்லபாக்கத்தில் தொடரும் வாழ்வியல் போராட்டம்!

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..

GST – நான் அறிந்தவை!