மாசற்ற தீப ஒளித்திருநாளை அமைப்போம்..!சில வருடங்களுக்கு முன்பு, தீபாவளி என்றால் பத்து நாளுக்கு முன்னிருந்தே மகிழ்ச்சி கொள்ளாது. ஒவ்வொரு நாட்களும் கடினமாக நகரும். பட்டாசுகள், பலகாரங்கள் என்று வீடே அமர்களப்படுத்தும். முதல் நாள் இரவு எங்கள் வீட்டில் தூக்கம் மறந்து போய் பெண்கள் அனைவரும் பலகாரம் செய்துக்கொண்டிருக்க, குழந்தைகளாக இருக்கும் நாங்கள் அவர்களுடன் உதவி செய்துக்கொண்டும், திட்டுகளை வாங்கிக்கொண்டும் மகிழ்வோம்.

நான் எழுத ஆரம்பித்தது எனது பள்ளி பருவத்தில். என்னுடைய முதல் பதிப்பு குழந்தை தொழிலாளி பற்றி. இன்றும் என்னை யாரேனும் கவிதை சொல்ல சொன்னால் எனது முதல் கவிதையை மட்டுமே சொல்வேன். அதன் முதல் வரி,

‘படிக்கும் அறையில் இல்லை – குழந்தை
பட்டாசு ஆலையில் இருக்கிறது…!’

இப்படியாக எழுதினேன். எழுதியதை தவிர்த்து அந்த ஆண்டே நானும் சிறப்பாக தீபாவளி கொண்டாடி முடித்தேன். ஆனால், நான் என்ன செய்கிறேன்? சிவகாசியில் பட்டாசு தொழிற்சாலையில் சீரழியும் குழந்தையின் வாழ்க்கையை நானும் ஒரு பொது ஜனமாய் காசு கொடுத்து வாங்கிக்கொண்டிருக்கிறேன் என்று எனக்கு தோண ஆரம்பித்தது. நான் இனி வெடி வெடிப்பதில்லை என்று அடுத்த ஆண்டே முடிவு செய்தேன். நீ வெடிக்காமல் இருந்தால் என்ன, மற்றவர்கள் எப்படி இருந்தாலும் வாங்க தானே போகிறார்கள்? என்று சொன்னர். நீ அவங்க வேலை செய்ய கூடாதுனு நினைக்கிற.. ஆனா அவங்க அடுத்த வேலைக்கு நான் சோறு போட நினைக்கிறேன் என்றும் சொல்ல செய்தனர். ஆனால், நான் வெடிக்கும் ஒவ்வொரு வெடியின் உள்ளேயும் ஏதோ ஒரு குழந்தையின் கண்ணீர் இருப்பதாய் எனக்கு தோன்றியது. அதனால் நான் அதிலிருந்து விலகி விடுகிறேன் என்று விலகிக்கொண்டேன். ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி சமயத்தில் மட்டும் ஏன் மழை பெய்து தொலைக்கிறது என்று நான் அப்பொழுதெல்லாம் கேட்டுக்கொண்டே இருப்பேன். ஆனால், ஏதோ ஒன்று வந்து என்னை தாக்கி அது மழையல்ல மழலைகளின் கண்ணீர் என்று சொல்லியது.

காலம் கடக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் ஒரு கம்பி மத்தாப்பாச்சும் கொலுத்தேன் என்று என் வீட்டில் கட்டாயமும் வலுக்கிறது. என் சக வயது குழந்தைகள் வெடிகளை கொலுத்தி விளையாடிய பொழுது என்னுள் எழும் ஆசைகள் அங்கு ஆலைகளில் தினக்கூலிக்காக வேலை செய்யும் குழந்தைகளை நினைத்து அடங்கிவிட்டது. அன்று முடிவெடுத்த நான் பத்து வருடங்கள் கடந்துவிட்டது, இன்றும் வெடி கொண்டாட்டங்களில் ஈடுபடவில்லை.

இது மட்டும் தானா காரணம்? சின்னப்பிள்ளை தனமாக இருக்கிறது என்று நீங்கள் நினைக்கலாம். அன்று முடிவெடுத்தபோது நான் சின்னப்பிள்ளை தான். காலம் கடக்க கடக்க என் செயல்களுக்கான வேறு சில காரணங்களும் என் கண்களில் தென்பட்டது.

மாசு. உன் வெடி அதிக நேரம் வெடிக்குதா, இல்லை என் வெடி அதிக நேரம் வெடிக்குதா என்னும் போட்டி நடக்கும். மேலே சென்று ஒவ்வொன்றாய் பட் பட்டென வெடிக்கும். எல்லாம் ஒன்று சேர்ந்து மேலே நின்றுக்கொண்டு ஒரு கரும்புகை அரக்கனாய் காட்சித்தரும்.  அந்த அரக்கன் உங்கள் பணத்தால் நீங்களே உருவாக்கிவிட்ட உலகை அழிக்கும் சாத்தான் என்பதை புரியுங்கள். வெடிகளே வேண்டாம் என்று நான் சொல்லவில்லை. அளவுகள் அவசியம் என்பதை சொல்கிறேன்.

பிறகு என்ன செய்கிறோம்? டிவியில் பிடித்தமான நிகழ்ச்சிகள் எதுவும் இல்லையா? கவலை வேண்டாம். உடனே கிளம்பி வெளியில் வந்து எந்த நேரமாகியும் எந்த இடமாகியும் வெடிகளை வைத்து கொலுத்திவிட வேண்டியது தான். அருகில் மருத்துவமனை இருந்தால் அங்கு இருப்பவர்களின் நிலைகளை யாரும் உணருவதில்லை. சகட்டு மேனிக்கு வைத்து தள்ளுவது.

அதுவும் ரோட்டில் இறங்கிவிட்டால் ஒன்றுமே கண்ணுக்கு தெரியாது. இன்னும் சில குழந்தைகள் செய்யும் வேலை பெரிதாக அச்சுருத்தக்கூடிய வெடியை கொலுத்திவிட்டு வீட்டினில் ஓடிவிடுவார்கள். ஒருவேலை அதை பார்க்காமல் நீங்கள் அந்த வழியாக சென்றால் வெடியின் பலத்த சத்தத்தில் உங்களுக்கு பதட்டம் ஏற்படலாம். அதுவும் உங்கள் நல்ல நேரம் பக்கத்தில் கழிவுகள் இருந்தால் உங்களுக்கு இலவசமாக கழிவு குளியல் கிடைக்கலாம். குழந்தைகளுக்கு தெரியாது… பெரியவர்களாகிய நீங்கள் தான் சொல்லிக்கொடுக்க வேண்டும். நாம் வைக்கும் வெடிகள் மற்றவர்களுக்கு தீங்கு விளைவிப்பதாக இருக்க கூடாது என்பதை சொல்லிக்கொடுங்கள்.

மண்ணில் புதைத்து வைத்து வெடிப்பது, பல வெடிகளை ஒன்றாய் திரிகளை திரித்து கொலுத்துவது, ராக்கெட்டை படுக்க வைத்து கொலுத்துவது, கூரைகள் நிறைந்த பகுதிகளில் ராக்கெட் விடுவது, நாய்களை அச்சுருத்தும்படி வெடித்து தள்ளுவது இதெல்லாம் தவறுகள் என்பதை உணர்ந்து பாதுகாப்பான தீப ஒளித்திருநாளாய் கொண்டாடுங்கள்.

என்னை போலவே பல காரணங்களுக்காக வெடிகளை தவிர்ப்பவராய் இருந்தால் மிகவும் நல்லது. இனிமையான நேரங்களையை இனிய குடும்பத்தோடு செலவழித்து மகிழ்வு கொள்வோம்.

இனிய தீப ஒளித்திருநாள் நல்வாழ்த்துக்கள்..!

-    தம்பி கூர்மதியன்

Comments

Popular posts from this blog

சிட்லபாக்கத்தில் தொடரும் வாழ்வியல் போராட்டம்!

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..

GST – நான் அறிந்தவை!