என் காதல் – முதல் அறிமுகம்நான் விரும்பாத.. நான் ஏற்க துணியாத இடத்தில் நான். இங்கு இருக்கும் ஒவ்வொரு நொடியும் நரகத்தின் பிடியில் இருப்பதாய் எனக்கு தோன்றும். நான் என்ன செய்துக்கொண்டிருக்கிறேன்.? இது என் கொள்கைக்கு மாற்றான ஒரு செயல் என்று என் மூளைகள் ஓடிமுடிக்கும் முன்னே என் குடும்பத்தின் விருப்பத்திற்காக அந்த நாலு வருட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டேன் நான்.

அந்த கண்ணாடி கட்டிடத்தில் நுழையும் பொழுது எனது கொள்கைகள் எல்லாவற்றையும் மூட்டை கட்டி வைத்துவிட்டு ஒரு சாதாரண பெற்றோரின் பிள்ளையாக உள்ளே நுழைந்தேன். பொதுவாக பெண்களிடம் அதிகமா பழகாத எனக்கு அங்கு ஒரு பேர் அதிர்ச்சி. எனது 30 பேர் கொண்ட ஒட்டுமொத்த குழுவில் 6 பேர் மட்டுமே ஆண்கள்.

பிடிப்பே இல்லாமல் ஒரிரூ நாட்கள் ஓடியது. அவ்வப்போது என்னுள் இருக்கும் ஒரு வேட்கை மனிதன் வெளியெழுந்து இது உன் இடமல்ல என்று சொல்லிக்கொண்டே இருந்தான். பெண்களாக இருந்தாலும் இவர்களோடு நான் சேர்ந்து பழக வேண்டும், எனது இயல்பான கிண்டல் கேலி பேச்சுக்களோடு இருந்தால் தான் என்னுள் இருக்கும் கொந்தளிப்பை தாண்டி வெளிவர முடியும் என்று முடிவு செய்தேன். எல்லோரிடமும் அறிமுகம் ஆனேன்.

எனது அலுவலகத்தின் மேலதிகாரி ஒவ்வொருவராய் அறிமுகம் செய்துக்கொள்ள சொன்னார். எல்லோரும் எழுந்து என்ன படித்தோம், எங்கு படித்தோம் என்பதை சொல்லி அமர்ந்தோம். அதிகமான தூரத்தில் இருந்து வருபவர்கள் யாரெல்லாம் என்று கேட்டார். ஒரு நான்கு பெண்கள் கையை தூக்கினர். எங்கிருந்தெல்லாம் நீங்கள் என்று அவர் கேட்டார். ஒவ்வொருவரும் ஒவ்வொரு பெயர் சொல்ல, அதில் ஒரு பெண் மட்டும் காஞ்சிபுரம் என்று சொன்னார்.

காஞ்சிபுரம் – இந்த வேலைக்கு வரும் முன்பு விகடனில் இருந்து அதிகமாக நான் காஞ்சிபுரம் பகுதிக்கே செய்தி சேகரிக்க செல்வேன். அதிகமான பழமை விரும்பியான எனக்கு பழமை செரிந்த அந்த ஊரின் கோவில்கள் மீது அளவு கடந்த பிரியம் ஏற்பட்டது. காரணமில்லாமலும் சில முறைகள் காஞ்சிபுரம் சென்று கோவில்களின் தூண்களில் சாய்ந்து மன அமைதிக்கொண்டிருக்கிறேன்.

சட்டென என் நினைவுகள் சென்று வர அதுவரை தலை குனிந்து அமர்ந்திருந்த நான் யார் அவள் என்று நிமிர்ந்து பார்த்தேன்.

வட்டமான முகம், திடமான உயரம், முழுதும் முற்றுதலாய் மறைக்கப்பட்ட ஆடை, ஆண்கள் அணிவது போல செருப்பு, பெண்களுக்கு உரித்தான பூ போட்ட கைகுட்டை இல்லாமல் ஆண்கள் பயன்படுத்தும் கைகுட்டை, முட்டை கண்களை முழுதாய் காட்டாத கண்ணாடி, அடர்ந்த-நீண்ட முடி என அவள் நின்றுக்கொண்டிருந்தாள். அவள் இரு கைகளும் ஏனோ கையில் இருக்கும் கைகுட்டையை கசக்கி பிழிந்துக்கொண்டிருந்தது.

ஓ… காஞ்சிபுரம்?’ என்றார் உயர் அதிகாரி.

‘ஆமாம்’ என்றாள் அவள்.

‘ஓ.. தினமும் போயிட்டு வந்துட்டு தான் இருக்கியா?’

‘ஆமாம்..’

‘அப்போ நாலு நாள்ல உடம்பு முடியாம போயிடுமே…!’ என்றார் அவர் நகைத்துக்கொண்டு. குழுவில் இருக்கும் அனைவரும் சிரிக்க, அவளும் சிரித்துக்கொண்டே சொன்னாள்

‘விடுதி தேடிட்டு இருக்கேன்.. இன்னும் ரெண்டு நாளுல இங்கேயே வந்திருவேன்..’ என்றாள். அவர் நன்று என்று சொல்லி அவளை அமர சொன்னார். அவள் உட்கார்ந்த பின்னும் அனைவரும் தன்னை தான் பார்க்கிறார்களா என்று சுற்றும் முற்றும் பார்த்தாள். என்னைத்தவிற யாரும் அவளை பார்க்கவில்லை. ஏதோ ஒன்று என்னை அவளிடம் ஈர்த்தது.

இரண்டு நாட்கள் கடந்தது. எனது அருகில் இருப்பவர்களிடம் நான் அதிக நெருக்கமாகினேன். எனது இடங்களை மாற்றி கடைசி வரிசைக்கு சென்றேன். எதிர்பாராத விதமாக எனது இடக்குறுக்கு பார்வைக்கு நேராக அவள் இருந்தாள். நான் கொஞ்சம் கொஞ்சமாக அனைவரிடமும் பேசி கேலிச்சிரிப்புகள் சிரித்துக்கொண்டிருந்தேன்.

ஒவ்வொருவரையும் ஒருபோல கேலி செய்துக்கொண்டிருக்கையில் அவளிடம் ஆரம்பிக்க மட்டும் என்னுள் ஒரு தயக்கம். வேடிக்கையாக.. சரளமாக தோன்றும் கேலி வார்த்தைகள் அவளிடம் மட்டும் மங்கி போயே இருந்தது.

அவள் அதிகமாக யாரிடமும் பேசவில்லை. அவள் இருபுறமும் இருக்கும் இரு தோழிகளிடம் மட்டுமே அதிகமாக உரையாடிக்கொண்டிருந்தாள். அதுவும் அவள் பேசும் சப்தம் அதிகமாக வெளியில் கேட்டதே இல்லை. அவள் பார்வை அங்கும் இங்குமாக அலையவில்லை. முன்னால் சொல்லிக்கொடுப்பவரை விட்டு அவள் கண்கள் அகலவில்லை. என்னுள் இருக்கும் ஆர்வம் அவளை சீண்டிப்பாக்க சொன்னது, ஆனால் என்னால் முடியவில்லை.

என் நண்பர்களோடு உரையாடிக்கொண்டிருந்தேன். ஏதோ பேசுகையில் ‘அந்த காஞ்சிபுரம் தான்’ என்று அவளை சொன்னேன். குபீரென அனைவரும் சிரித்துவிட்டனர். அந்த சமயத்தில் அவளது பெயர் எனது ஞாபகத்திற்கு வரவில்லை, ஒரு அடையாளத்திற்காக காஞ்சிபுரம் என்று சொன்னேன். அதுவே கேலிப்பேச்சாக ஆகிவிட்டது. எல்லோரும் குபீரென சிரிக்க அவளின் உதட்டின் ஓரம் ஒரு புன்னகை பூத்தப்படியே என்னை திரும்பி பார்த்தாள். அவளின் உதட்டின் சிரிப்பு கண்களில் இல்லை. கண்கள் என்னை முறைத்தப்படியே இருந்தது. எல்லோரும் சிரித்தப்படியே இருந்தாலும் அவளின் முறைப்பு என்னை ஏதோ செய்துக்கொண்டே இருந்தது

மதியம் அனைவரும் ஒன்றாய் சாப்பிட சென்றோம். நான் வீட்டிலிருந்து சாப்பாடு கொண்டு செல்லும் பழக்கமுடையவன். அவள் சாப்பாடு வாங்க சென்றாள். கையில் பணத்திற்கு பதிலாக ஏதோ எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட சீட்டை நீட்டினாள். கடைக்காரரும் வாங்கிக்கொண்டு இரண்டு தோசை தந்தார். அட அவள் மட்டும் ஏதோ சிறப்பாய் செய்கிறாளே அது என்னவென்று அறிந்துக்கொள்ள நினைத்தேன். அருகில் இருந்த தோழியிடம் அது என்ன என்று வினவினேன். அது ‘Sodexo’ கூப்பன், பணத்திற்கு பதில் அதை தரலாம் என்றாள் தோழி. அது என்ன என்பதை கையில் வாங்கி பார்த்துவிட வேண்டும் என்று ஆவல் தூண்டியது. ஆனால் அவள்  தான் முறைப்பாளே என்று மனம் வேறு உள்ளுக்குள்ளே முனகியது.

எடுத்துவந்த சாப்பாட்டில் யாரும் அவள் தட்டில் கை வைக்கவில்லை. நாங்கள் அனைவரும் மாறி மாறி உண்டோம். அப்போது ஒரு தோழி அவளது தட்டில் இருக்கும் தோசையை பிய்த்து ஒரு வாய் உண்டாள் அப்பொழுது அவளின் முகம் மாறியதை நான் கவனித்தேன். அதுபோல் யார் அவளது தட்டில் கை வைத்தாலும் அவள் முகம் மாறியது. நான் கவனித்துக்கொண்டிருந்தேன்.

ஒரு கேலி பேச்சை சாதாரணமாக எடுத்துக்கொள்ள தெரியாதவள். அடுத்தவரோடு பகிர்ந்து சாப்பிடுகையில் முகத்தை சுழிப்பவள் என்று அவளை பற்றிய எனது முதல் எண்ணங்கள் அனைத்தும் தவறானதாகவே இருந்தது. இனி அவளிடம் ஒரு பேச்சும் வைத்துக்கொள்ள கூடாது என்னும் முடிவுக்கு வந்தேன். நமக்கு வேணாம்டா வீண் பொல்லாப்பு என்று ஒதுங்கி தான் இருக்க வேண்டும் என்று எனக்குள்ளே சொல்லிக்கொண்டேன்.

(இன்னும் காதலிப்பேன்....)-இராமநாதன்

Comments

Popular posts from this blog

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..

பைக் ஓட்டுபவர்கள் கண்டிப்பா பாக்கவும்..!!

அதிகாரி சாமி