ஏனய்யா இந்த களேபரம்?
சாலையில் சென்றுகொண்டிருந்து பேருந்தின் வழியாக எட்டிப்பார்த்தேன். ஒவ்வொரு தெருவிலும் ஒவ்வொரு பந்தல், கூச்சலின் இடையிலே ஒரு போராட்டம். தமிழகத்தில் இருக்கும் அனைத்து துறையும் ஒருவாரியாக ஒன்றுகூடி போராட துவங்கிவிட்டனர்.

ஒரு தீர்ப்பை விமர்சிப்பது சட்டப்படி குற்றம் என்பதை கூட அறியாத வண்ணம் தீர்ப்பை மட்டுமல்லாது தீர்ப்பை வழங்கிய நீதிபதியை கூட கொச்சையான விதத்தில் போஸ்டர் அடித்து ஒட்டுவதெல்லாம் எங்கு கொண்டுபோய் விடும் என்பது அவர் அவர்களுக்கே வெளிச்சம்.

தீர்ப்பு வந்த அதே நாளில் தீர்ப்பின் அதிர்ச்சியின் காரணமாய் மாரடைப்பில் ஒருவர் பலி, தூக்கு மாட்டி இருவர் பலி என்னும் செய்திகள் வெளியில் வந்தன. பல இடங்களில் பேருந்துகள் எரிக்கப்பட்டன, பேருந்துகளின் கண்ணாடிகளும் கல் வீச்சிற்கு பலி ஆகின. இதெல்லாம் செய்து துடிதுடித்துக்கொண்டிருக்கும் ஆதரவாள பெருமக்கள் ஏனோ அதெல்லாம் நம் வரிப்பணம் தான் என்பதை உணரவில்லை.

நடக்கும்போதே கை கால்கள் எல்லாம் உதறல் எடுத்துக்கொண்டிருக்கும் ஒரு பெரியவர் சாலையை பிரிக்க வைக்கப்பட்டிருக்கும் பெரிய பலகையை எட்டி ஒரு உதைத்துவிட்டு வீர நடைப்போட்டு வந்தார். அன்று அலுவல் முடித்து வீட்டிற்கு சென்றுக்கொண்டிருந்தவரின் போதாத காலம் போராளி பெண்களின் கையில் மாட்டிக்கொண்டு சிக்கி சின்னாபின்னாமானார். அவரின் பளபளக்கும் கார் அந்த ஐந்து நிமிட போராட்டத்தின் இறுதியில் பல்லை இளித்துக்கொண்டது.

நான் கண்ட காட்சிகள் சில… ஆனால் அதற்குமுன்னே பல காட்சிகள் அரங்கேறிவிட்டன. உறவுகள் மத்தியில் அலைப்பேசி மணி ஒலித்தது. நண்பர்கள், அலுவலர்கள் என அனைவருக்கும் செய்தி பரிமாறப்பட்டது. ‘சீக்கிரம் வந்துருங்க… பாத்து வாங்க.. இல்ல ஆபிஸ்லயே தங்கிடுங்க…’ என்று கதறிய மனைவிமார்கள் இங்கு சிலரை பார்த்தேன்.

தீர்ப்பு வெளிவரும் முன்பே பலரும் இது எதிர்பதமாக தான் இருக்கும் என்பதை கணித்திருந்தனர். ஆனால் ஏனோ, தமிழகத்தின் மூத்த இரண்டு கட்சிகளின் இடத்திலுமே அன்று காலை பட்டாசு வெடிக்கப்பட்டது ஒரு வேடிக்கை காட்சியானது. தீர்ப்பு வந்ததா இல்லையா என்னும் மனக்குழப்பத்தோடு நான் அன்று மதிய நேர வேலையில் அலுவலில் இருந்து வீட்டுக்கு திரும்புகையில் என் நண்பரும் என்னோடு இணைந்துக்கொண்டார். இருவரும் துணையாய் வீடு போய் சேருவோம் என்றார். தீர்ப்புக்கு முன்னரே அரசியல் ஆர்வம் அதிகமில்லா அவரே கணித்திருந்தார் போலும்.

கூட்டம் கூட்டமாக அங்கங்கே கரை வேட்டி கட்டிய பலர் நின்றுக்கொண்டிருந்தனர். எப்பொழுது எவன் ஆரம்பிப்பான் அவனோடு சேர்ந்து நாமும் செய்யலாம் என்னும் பார்வை அவர்களுக்கு. தட்டி கேட்க வேண்டிய காவல் துறை ஒரு ஓரமாக பயந்து போய் நின்றுக்கொண்டிருந்தது என்று தான் சொல்ல வேண்டும். அது என்ன பயம் என்று அவர்களுக்கே வெளிச்சம்.

பொய் வழக்கு பொய் வழக்கு என்று புலம்புகின்றனர். ஆனால் வழக்கு ரொம்ப எளிமையானது. மாதம் ஒரு ரூபாய் சம்பளமாக பெற்ற ஒருவரால் ஐந்து ஆண்டில் எப்படி 65 கோடி சொத்து சம்பாத்தியம் பெற முடிந்தது என்பதே. இவ்வளவு எளிதான ஒரு வழக்கை 18 ஆண்டுகாலம் இழுத்து அடித்ததே ஒரு சாதனை தான் என்று சொல்ல வேண்டும்.

சரி இதெல்லாம் முடிந்து போன கதை. இப்பொழுது என்ன நடந்துக்கொண்டிருக்கிறது. தினம் ஒருவர்… ஒவ்வொரு துறை.. இன்னும் கருக்குழந்தையும் கார்ப்பரேட் நிறுவனும் தான் எதிர்ப்பை பதிவு செய்யவில்லை. இதில் வேடிக்கையான விடயம் என்னவென்றால் ‘என் பாட்டுக்கு போகுது வசனம்.. போடுடா எதுகையும் மோனையும்னு.. சகட்டு மேனிக்கு எழுதி தள்ளுகிறார்கள்’. நீதிபதி குன்ஹாவை பன்றியின் உருவோடு ஒரு போஸ்டர் வேறு பார்த்தேன். ஹா.. வேடிக்கையாக இல்லையா இது? தொண்டர்களே பாசமானவர்களே.. யோசியுங்கள். நீங்கள் கேட்பது நியாயமானதாகவே இருப்பினும் இதுபோன்ற செய்கைகள் சரியில்லை என்று உங்களுக்கு தோணவில்லையா? எதற்கு நீங்கள் கலங்கம் விலைவிக்கின்றீர் என்பதையும் புரிந்துக்கொள்ளுங்கள். நீங்கள் போற்ற துடிக்கும் உங்கள் கழகத்திற்கே உங்கள் தலைவருக்கே நீங்கள் அவப்பெயரை உண்டாக்குகின்றனர்.

தனியார் பேருந்துகள் நிறுத்தம், ஆம்னி பேருந்துகள் நிறுத்தம், பள்ளி நிறுத்தம், சினிமாகாரர்கள் உண்ணாவிரதம். வேடிக்கையாக இருக்கிறது அன்று அந்நியன் வந்து உண்ணாவிரதத்தில் கலந்துக்கொண்ட போது. சமுதாய சீர்கேடை படமாக எடுப்பவர்கள் அதை உணர்ந்து தான் படமாக்குகிறார்கள் என்னும் மாய கோட்பாட்டில் நான் இருந்தேன். ஒரு சினிமா படம் என்பது எப்பொழுதுமே ஒரு பொழுதுபோக்கிற்காக மட்டுமே என்பதை தெளிவிபடுத்திவிட்டது அந்த நிகழ்வு. பதினெட்டு ஆண்டுகளாக நன்கு அலசி ஆராய்ந்து எடுக்கப்பட்ட ஒரு முடிவு, அதை எதிர்த்து உண்ணாவிரதம். வேடிக்கையிலும் வேடிக்கை.

காரைக்குடி பக்கமெல்லாம் இன்று பேருந்து ஓடவே இல்லை என்று கேள்வியுற்றேன். நான்கு நாள் விடுமுறை என்று ஊருக்கு சென்றவர் எல்லாம் விழிபிதுங்கி நின்கின்றனர். இதெல்லாத்திற்கும் மூத்த ஒன்றுதான் பள்ளிகள் ஒரு நாள் வேலை நிறுத்தம். சீருடை அணிந்து செல்லும் குழந்தைகள் ஓடிவந்து ‘அம்மாவை விட்டுறுங்க’ என்று கேட்க போகிறது பாருங்கள். குழந்தை படிப்புக்கும் இந்த தீர்ப்புக்கும் என்னயா சம்பந்தம்? ஏனய்யா அதில் வந்து மூக்கை நுழைக்கிறீர்கள்.?

இப்போது இருக்கும் குழந்தைகளுக்கு நீங்கள் சொல்லிக்கொடுக்கும் பாடம் இதுதானா? இன்று நீங்கள் நீதித்துறைக்கு எதிராக அவனை நிறுத்த எத்தனித்தால் நாளை என்ன ஆகும்? அவனுக்கு நீங்களே ஏனய்யா மோசமான முன்உதாரணமாக இருக்கிறீர்கள்?

குழந்தைங்கயா.. உங்க அரசியல் லாபத்துக்கு பள்ளி பலியாடு இல்லயா..! அநீதியை எதிர்த்து போராட சொல்லலை, தர்மத்தை நிலை நாட்ட பாடு பட சொல்லலை, நீங்க என்ன செய்ய சொல்லுறீங்கனு உங்களுக்கே தெரியும்.. நீங்க ஒரு குழந்தைக்கு போடுற விதை தரமானதா இருக்கணும்… தப்பானதா இருக்க கூடாது.

அய்யய்யோ போச்சு… அம்மம்மா போச்சு.. என்று குதிக்கும் முன்பு நீங்கள் செய்யும் சேஷ்டைகளால் பாதிப்புக்கு உள்ளாவது யார் என்பதை கவனியுங்கள். நீங்கள் தான். நீங்கள் மட்டுமே தான். யானை தன் தலையில் தானே மண்ணை வாரிப்போட்டுக்கொள்ளும் என்று கேள்விப்பட்டிருகிறேன். யானை விதத்தில் உண்மையா பொய்யா என்பது எனக்கு தெரியாது. ஆனால் எந்த விதத்தில் உண்மை என்பதை நான் கண்டுகொண்டேன்.


உங்களால் ஏற்படும் விளைவுகளை சிந்தித்து செயல்படுங்கள் பாசமிகு தொண்டர்களே..!! உடன் பிறப்புகளே..!! உன்னத மனிதர்களே…!

Comments

Popular posts from this blog

சிட்லபாக்கத்தில் தொடரும் வாழ்வியல் போராட்டம்!

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..

GST – நான் அறிந்தவை!