போட்டோக்களும்.. இணைய கூத்தாட்டமும்..!!எங்கு பார்த்தாலும் ஒரே ஸ்மார்ட் ஃபோன் மயம். என் அக்காவின் இரண்டு வயது மகள் சரளமாக ஃபோனின் உள்ளே வெளியே என புகுந்து விளையாடுகிறாள். கிராமத்தில் இருக்கும் எனது பாட்டிக்கு அழைப்பு விடுத்தால் ‘திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்’ பாடல் ஒலிக்கிறது.. ஒலி அடங்கும் முன்னே ஃபோனை கையில் எடுத்து இடதிலிருந்து வலது பக்கம் ஒரு தள்ளு தள்ளி ‘அல்லோ…’ என்கிறார்.

சிறுவர்களுக்கு முதல் முதியவர்களுக்கு வரை அழையா விருந்தாளியாக இந்த ஸ்மார்ட் ஃபோன்கள் போய் மடியில் உட்கார்ந்துக்கொண்டது. சரி.. இவை வைத்து நமக்கு என்ன யூஸ்.? சிறியவர்களுக்கு விளையாட்டு. பெரியவர்களுக்கு ஒன்லி பெருமை. இளையோருக்கு..? அங்கு தான் எல்லாமே..!! அவர்களுக்கு தேவையான அனைத்துமே கையடகத்தில். கேம்ஸ் விளையாடுவேன். அது போர் அடித்தால் பேஸ்புக், வாட்ஸ் ஆப்.. அது போர் அடித்தால் என்ன செய்வேன்? செல்ஃபி எடுப்பேன்.

செல்ஃபியா? அது என்னடா கருமம் என்று என் பாட்டி கேட்க சட்டென என் கையில் பாட்டியை சாய்த்துக்கொண்டு மறு கையை மேலே நீட்டி அதிர்ச்சியில் வாயை பிளந்த என் பாட்டியின் முகத்தை அப்படியே க்ளிக்கிட்டேன். அந்த போட்டோவை பார்க்கும் போதெல்லாம் என் பாட்டிக்கு அளவில்லாத மகிழ்ச்சி. அடடா.. என்ன அருமையான விசயம் செய்துவிட்டேன்.

வேறு என்ன செய்கிறோம் இந்த ஸ்மார்ட் ஃபோன் காமிராவை வைத்துக்கொண்டு. வீட்டில் ஏதாவது நிகழ்ச்சி நடக்கட்டும், இல்லையென்றால் நண்பர்கள் சந்திப்பாக இருக்கட்டும் இயல்பாக போட்டோஸ் வேண்டும் என்பதற்காக க்ளிக்கிட்டே கிடக்கிறோம். அதில் ஏதாவது தப்பி தவறுதலாய் அழகாய் வந்துவிட்டால் உடனே சமூக வலைத்தலக்களில் ஏற்றம்-பிறகு நூற்றுக்கணக்கில் லைக்குகள். இதில் ஃபோட்டோ எடுக்கும் போது குரங்கு ஷேஷ்டைகள் வேறு. கஷ்டகாலம்.

ஆனா சந்தோசங்கள் மட்டும் தான் இந்த மாதிரி புகைப்படங்கள் தருகிறதா. நான் சொல்லிய தருணங்கள் மட்டும் தான் அந்த காமிராக்களில் பதிவாக்கப்படுகிறதா. ஊடலும் கூடலும் தமக்கான தனிப்பட்டவை அல்லவா? இன்று லட்சாதி லட்சங்களாய் இணையங்களில் உலாவுகின்றனவே இளையோரின் காம காட்சிகள் அவையெல்லாம் எங்கோ ஒரு ஸ்மார்ட் ஃபோனில் படமாக்கப்பட்டவையே.

இணையம் என்பதை உங்கள் தோளில் தொங்கிகொண்டிருக்கும் ஒரு சாத்தான் என்பதை மறவாதீர்கள். உங்கள் ஃபோனில் நீங்கள் எடுக்கும் புகைப்படங்களை யார் வேண்டுமானாலும் எப்பொழுது வேண்டுமானாலும் உங்களின் அனுமதி இல்லாமலே திருட முடியும் என்பது உங்களில் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

இந்த காமிரா மோகம் ஆண்களை காட்டிலும் பெண்களுக்கே அதிகம் இருப்பது நமக்கு கண்கூடாக தெரிகிறது. இதை நான் சொல்வதால் நான் ஏதோ ஆணாதிக்கவாதி என்று தவறாக எண்ண வேண்டாம். இணையத்தில் உலாவும் காம கொடூரர்கள் அதிகமாக ஆண்களாக இருக்கிறதால் எதிர்பாலரை எச்சரிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன்.

நம் பெண்கள் வழமையாக அதிக நேரம் ஷாப்பிங் செய்யும் பழக்கம் உடையவர்கள். அதில் என்ன வேடிக்கை என்றால் நூறு துணிகளை பார்ப்பார்கள், அதில் கண்டிப்பாக பத்தையாவது உடுத்தி பார்த்துவிட்டு தான் வாங்குகிறார்கள். உடுத்தி பார்க்கையில் அவர்கள் செய்யும் சேஷ்டாங்கம் என்ன? நான்கு பக்கமும் கண்ணாடி இருக்கும் அந்த உடை மாற்றும் அறையில் அரை குறையாக அந்த புது ஆடையை உடுத்திவிட்டு அந்த கண்ணாடி முன்னால் காமிராவை நீட்டி நாலா புறமும் நாப்பது க்ளிக்குகள். பத்து விதமான ஆடைகளும் பல விதமான ஆங்கில்களில் போட்டோக்களை எடுத்துவிடுகின்றனர். அவரின் போதாத காலம் அவரின் செல்ஃபோனில் அப்போது இணையம் இணைப்பில் இருக்கும் பட்சத்தில் ஏதோ ஒரு இணைய திருடன் கையில் அந்த போட்டோக்கள் சிக்கிக்கொண்டால் என்ன ஆகும் நிலை? அதிலும் அதில் ஏதேனும் போட்டோக்கள் அசிங்கமாக வந்துவிட்டால் போனது தான் கதை. உடை மாற்றும் அறையில் போட்டோகளை சகட்டு மேனிக்கு எடுத்து தள்ளும் பெண்களே நாளை அதில் பாதிப்புக்கு உள்ளாகுபவர் நீங்களாக இருக்கலாம். எச்சரிக்கை…!

சில பெண்களுக்கு போட்டோ எடுப்பது ஒரு வித வியாதியாக இருக்கலாம். சினிமாவை பார்த்துவிட்டு அதில் வரும் நடிகைகள் போல் அரை நிர்வாணமாக ஆடைகளை உடுத்தி தங்களை தானே போட்டோ எடுத்துக்கொள்கின்றனர். நாம தானே வச்சிருக்கோம் என்னும் எண்ணம் அவர்களுக்கு. மேலும் சிலர் அதை தங்களின் மெயில் ஐ.டி.,களுக்கு தாங்களே அனுப்பிக்கொள்கின்றனர். என்னிடம் தானே இருக்கிறது எனது மெயிலை யாரால் துறக்க முடியும் என்னும் எண்ணம் அவர்களுக்கு. ஆனால் எல்லா பூட்டிற்கும் ஒரு மாற்று சாவியும், ஒரிஜினல் செய்வதனிடம் ஒரு கள்ள சாவியும் எப்பொழுதும் இருக்கிறது என்பதை அவர்கள் அறியவில்லை போலும்.  இணையம் எனபது கடல். அதில் ஒரு டம்ளர் தண்ணியை ஊற்றிவிட்டு இன்னொரு டம்ளர் தண்ணியை அதிலிருந்து மீண்டும் எடுத்துவிட்டால் நீங்கள் கொட்டிய தண்ணீர் உங்களிடமே வந்துவிடாது. அது கடலோடு கலந்திருக்கிறது.

இவையெல்லாம் அறியாமையில் செய்கின்ற தவறுகள் என்று வைத்துக்கொண்டாலும் இன்னும் சில கொடுமைகள் நடக்கின்றன. இப்பொழுதெல்லாம் முளைக்கும் போதே குழந்தைகள் காதலோடு தான் முளைக்கிறது. இக்கால இளையோர் காதலுக்கு என்று புதிய வரையரையை அமைத்துவிட்டனர். காதல் என்னும் பெயரில் சிலர் செய்யும் அட்டூழியங்கள் சினிமாக்களை மிஞ்சிவிடும். பார்க், பீச் என்று எனது குடும்பத்தோடு என்னால் எங்குமே செல்ல முடியவில்லை. அனைத்து இடங்களும் சில்மிஷ கூடாரங்களாகி கிடக்கின்றன. இதன் விளைவு இப்பொழுதெல்லாம் என் தாயோடு நான் வெளியில் செல்வதையே நிறுத்திவிட்டேன். ஒரு சகோதரனும் சகோதரியும் வெளியில் செல்லும்போது கூட காதலர்களோ என்று எண்ணும் மனப்பாங்கு இங்கு பலருக்கு வந்துவிட்டது தான் கொடுமை. பொது இடங்களில் இந்த சில்மிஷ வேலைகளில் ஈடுபடுபவர்களை நாய்களை விட்டு கடிக்க அரசாங்கம் ஏதேனும் நடவடிக்கை எடுத்தால் உகந்ததாக இருக்கும். நாகரீக காதலர்களை கூட மற்றவர் பார்வைக்கு கேவலமாக காட்டும் விதத்தில் இருக்கிறது சிலர் செய்யும் சேஷ்டாங்கங்கள்.

சரி.. இது பொது இட கருமாந்திரங்கள். இதை சில்மிஷங்கள் செய்கையில் என்ன செய்கிறார்கள் அதையே படம் பிடித்து வைத்துக்கொள்கின்றார்கள். பெண்களை போதை பொருளாக பார்க்கும் காம கொடூரர்கள் கையில் சிக்கும் பெண்களின் ஆபாச அந்தரங்கள் இதனால் இணையம் முழுதும் பரப்பி கிடக்கின்றது. அடக்கம் வேண்டும் காதலர்களே…! காமம் மட்டும் வாழ்க்கையல்ல.. அதை படம்பிடித்து கொள்வது உங்கள் அந்தரங்கத்தை விலை விற்பதாகிறது. எச்சரிக்கை…

பொது இட சேட்டைகள் மட்டும் தானா.? காதலர்கள் மட்டும் தானா? திருமணம் முடித்தவர்களுக்கும் இது பொருந்தும். வீட்டில் அவர்கள் தனியே இருக்கும் காட்சிகளை படமாக எடுத்து ரசிப்பது, அது இணையத்தில் கசியும் என்னும் அறிவு மங்கி இருப்பது எல்லாம் மிகவும் கேவலமாக இருக்கிறது. தனது அந்தரங்கங்களை படமாக எடுத்து ரசிப்பவனை காட்டிலும் காம கொடூரன் உலகில் இல்லை. உங்களை நீங்களே மற்றவர்களுக்கு விற்றுக்கொண்டிருக்கிறீர்கள். விலையற்ற பிறரின் கண்களுக்கு வேசியாய் ஆகிக்கொண்டிருக்கிறீர்கள் என்பதை உணருங்கள்.

நீங்கள் அழகென்றும் இன்பமென்றும் நினைப்பது எல்லாம் உங்களுக்கானவை. ஊராருக்கானவை அல்ல. உங்களை நீங்களே தவறான முறையில் போட்டோ எடுத்துக்கொள்வது, உடை மாற்றுகையில் அழகை பார்க்கிறேன் என சகட்டு மேனிக்கு எடுத்து தள்ளுவது, பொது இடங்களில் கேவலமோ கேவலமாக நடந்துகொள்வது, உங்கள் அந்தரங்களை காட்சி படுத்தி வைத்துக்கொள்வது எல்லாமே உங்களை எங்கோ விற்றுக்கொண்டிருக்கிறது. உங்களை அறியாமலே…! இதை உணருங்கள்…


ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு ஆங்கில கட்டூரை ஒன்றை படித்திருந்தேன். ஒரு ஆங்கில பெண் எழுதியது. ‘இந்திய கலாச்சாரம் மிகவும் எனக்கு பிடித்திருக்கிறது. ஒரு வேளை நான் இந்திய பெண்ணாக பிறந்திருந்தால் எனது கணவரை பிறிந்து இருக்க எண்ணியிருக்க மாட்டேன். அதற்காக வருத்தப்படுகிறேன்’ என்று எழுதியிருந்தார். எல்லோரும் போற்றும் ஒரு கலாச்சாரத்தை, நாகரீகத்தை அழிவை நோக்கி பயணிக்க வைக்கும் இளையோரே… விழித்துக்கொள்ளுங்கள்…!!!

-தம்பி கூர்மதியன்

Comments

Popular posts from this blog

சிட்லபாக்கத்தில் தொடரும் வாழ்வியல் போராட்டம்!

ஏழு நாட்கள்...

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..