Skip to main content

விதிகளும்… மீறல்களும்..!!அந்த இருசக்கர வாகனத்தில் ஏறிக்கொண்டு வண்டியின் கைபிடியை பிடித்து ஒன்று, இரண்டு, மூன்று என்று கியர்களை மாற்றி கொஞ்சம் கொஞ்சமாக வேகமெடுத்து மின்னல் வேகத்தில் சட்டென பறக்கையில் என்ன ஒரு ஆனந்தம். திடீரென ட்ராஃபிக்கில் மாட்டிக்கொண்டால் இடமும் வலமும் முட்டி மோதி சந்து பொந்துகளில் புகுந்து திரும்புகையில் என்ன ஒரு லாவகம். அவனின் பெருமையை அவனே மெச்சிக்கொள்வான்.

இவ்வாறு ஓட்டும் போது ஹீரோ போன்று தான் தெரிகிறோம், சற்று தவறவிட்டால் போட்டோவை மாட்டி அதற்கு மாலை போட்டுவிடுவார்கள் என்பதை ஏனோ மறந்து தான் போகிறோம்.

இந்த நாட்டு மக்களோடு மக்களாய் பிறக்கும் அருகதை அற்றவன் நான். காலத்தின் கொடுமை என்னை இந்த மக்களோடு வாழவிட்டு அவர்களை துன்பத்திற்கு ஆளாக்கிவிட்டது. அப்படி என்ன செய்துவிட்டேன் நான்? என்னால் அவர்களுக்கு என்ன துன்பங்கள்? கொஞ்ச நஞ்சமல்ல… தினமும் சாலையில் வண்டியில் செல்லும்போது பலரை துன்பத்திற்கு ஆளாக்குகின்றேன். பிறரின் வசைச்சொல்லிற்கு உணவாய் நான் மாறுகிறேன்.

என்னுடைய திமிர் பற்றி சொல்கிறேன். நான் மிதமான வேகத்தில் சென்றுக்கொண்டிருக்கும் போது இருபது அல்லது முப்பது அடியில் சிக்னலில் மஞ்சள் நிறம் எரிந்தால் நான் எனது வண்டியின் வேகத்தை குறைத்துவிடுவேன். அப்போது தான் நான் சிக்னலை நெருங்கும் போது சிகப்பு விளக்கு எரிந்தால் நிற்பதற்கு ஏதுவாக இருக்கும். ஆனால் விசித்திரமான கோட்பாடுடனும் கொள்கையுடனும் வாழும் மக்கள் என்னை சுற்றி இருப்பர். மஞ்சள் விளக்கு எரியும் பொழுது தான் வேகத்தை கூட்டி சல்……… என பறக்கவேண்டும். அவ்வாறு நான் செய்யாமல் எனக்கு பின்னால் வருபவரின் கொள்கைக்கு மாறாக நடப்பதால் அவரின் வசைக்கு ஆளாகுகிறேன்.

அதோடு மட்டும் என் திமிர் ஓய்வதில்லை. சிகப்பு விளக்கு எரிந்தால் நான் கோட்டை தாண்டி ஒரு அடி கூட வைப்பதில்லை. நடுவீதியில் வண்டியை நிறுத்திவிட்டு பச்சை எப்பொழுது வரும் என்று காத்திருப்பேன். ஆனால் உடனடியாக அந்த சிக்னலையும் மீறி ஃகேபி டே-யில் கடலை போட போகுபவர்களுக்கு நான் வழிவிடாத பாவியாகின்றேன்.

நான் ஒரு பிழைக்கத்தெரியாதவன் என்னும் பெயர் எடுத்தவன். அது ஒரு கூட்டமான சாலை, அன்று ஏனோ ட்ராஃபிக் மிகுதி. அப்பொழுது பார்த்து சைரன் அடித்துக்கொண்டு ஒரு ஆம்புலன்ஸ் வண்டி அந்த வழியாக வந்தது. ஏதோ இந்த பெருந்தன்மை கொண்ட என் சக ஓட்டுநர்கள் அன்று ஓரமாக ஒதுங்கி வழியை விட்டனர். இருப்பினும் அங்கங்கு சில குறுகிய இடங்கள் தான் கிடைக்க அந்த ஆம்புலன்ஸ் சகட்டு மேனிக்கு தனக்கே உறிய பாணியில் அந்த இடத்தை கடந்தது. அதன் போகும் பாதையையே பின்னால் பிடித்தவாறு ஒரு சரளான கூட்டம் அந்த ட்ராஃபிக்கை கடந்து போனது. மனிதாபிமானத்தோடு ஆம்புலன்ஸ்காக வழிவிட்டவர்களுக்கு மேலும் இன்னல் தரக்கூடாது என்னும் எண்ணத்தோடு நான் அந்த முயற்சியில் ஈடுபடவில்லை.

நான் இவ்வாறெல்லாம் நடந்துக்கொள்வதால் வசைச்சொற்கள் மட்டும் தான் கேட்கிறேனா? ஒரு நாள் சிகப்பு விளக்கு எரிவதால் சாலையில் நின்றுக்கொண்டிருந்தேன். பின்னால் இருந்த ஆட்டோக்காரன் தனது ஹாரனை அழுத்திபிடித்தவாறே இருந்தான். ஆனால் நான் நகரவே இல்லை. விளைவு அடுத்த நொடி நானும் என் வண்டியும் கீழே கிடந்தோம். பிழைப்பதற்கு வழியில்லை என்றாலும் எனக்கு ரோஷத்திற்கு ஒன்றும் குறையில்லை, எழுந்து அப்பொழுதே அவனோடு மல்லுக்கட்டிவிட்டேன்.

ஊராரை மட்டும் தான் நான் கொடுமை படுத்துகிறேனா? இல்லை. என் வீட்டிலும் என் தாயும் தந்தையுமே என்னுடன் வரமாட்டார்கள். ஏனென்றால் ஊரில் எவரும் செய்யாத கேவலமான செயல்களை நான் வண்டி ஓட்டும்பொழுது செய்வேன். என்னால் முடிந்த எனக்கு தெரிந்த சாலைவிதிகளை மதித்தே ஓட்டுவேன்.

போலீஸ் இல்லாத ரோட்டில் நண்பர்கள் அழைத்தாலும் நான் இருசக்கர வாகனத்தில் மூவராக செல்ல மாட்டேன். இரண்டு காருக்கு நடுவே அல்ல லாரிகளுக்கு இடையிலே எனது வண்டியை செலுத்து நானும் நடுங்கி மற்றவர்களையும் நடுங்க வைக்கமாட்டேன். நான் இப்படித்தான். என்னால் மற்றவர்களை போல இருக்க முடியவில்லை. நான் மோசமானவன் தான். கேவலமானவன் தான்.

இப்பொழுது உங்களிடம் சில…

உங்களுக்கு எப்படி உங்கள் விருப்பப்படி நான் நடக்காத பொழுது என்னை திட்ட முழு உரிமை இருக்கிறதோ, அதே உரிமை எனக்கும் இருக்கிறது. நான் கேட்கிறேன்.. மதிப்பதற்காக தானே விதிமுறைகள். அதை மீறும் நீ என்ன செய்கிறாய் தெரியுமா? உந்தன் பாடைக்கு நீயே கயிறு கட்டுகிறாய். நான் நிற்பேன் தான்… சிகப்பு விளக்கு எரிந்தால் நான் கோட்டை தாண்ட மாட்டேன் தான்.. ஏன் கோட்டை தாண்டி தாண்டி மாற்று திசையில் செல்பவனுக்கு வழியே இல்லாமல் மறிக்கும் நீ நல்லவன் நான் கெட்டவனா? மாற்று வழியில் ஒருவன் வேகமாக வந்து விட்டு ஏத்தினால் தெரியும். மறுநொடியே உனக்கு இல்லாமல் போய்விடும்.

அது என்னடா ஒரு வண்டியில ஒன்பது பேர் போறீங்க? அது என்ன பைக்கா இல்ல மாட்டு வண்டியா? லோடு அடிக்க. இதுல டிஸ்க் ப்ரேக்னு ஒண்ணு வச்சுக்கிறீங்க. அது என்னடா ஒரு கார் நிக்குதுனு தெரியுது நேரா போயி அந்த கார் நம்பர் ப்ளேட்டுக்கு முத்தம் கொடுத்துட்டு வண்டிய நிறுத்துறீங்க. நீங்க ஓட்டுறத பாத்தா எனக்கு நெஞ்சு வலி வருகுதுடா.

வண்டியல இருக்குற கண்ணாடிய எடுத்துடுறது பேஷனாம். பின்னாடி எவன் வர்றான் எந்த பக்கம் வர்றானுலாம் பாக்குறதே இல்ல. இடது கையில அரிப்பு எடுத்தா வண்டி இடது பக்கமா ஓடுது, வலது பக்கம் அரிப்பு எடுத்தா வண்டி வலதுபக்கமா ஓடுது. உன்னோட வாழ்க்கையும் பின்னாடி வர்றவன் வாழ்க்கையும் மேல நோக்கி ஓடுது பாருடா?

ரெண்டு காருக்கு நடுவுல சிக்னல்ல நிக்கிறப்போ அரை இஞ்ச் கேப் தான் இருக்கும். அதுக்குள்ள புகுந்து இந்த காருல ஒரு உரசலு அந்த காருல ஒரு உரசலு நேரா போய் சிக்னல்ல முதல் ஆளா நின்னுப்பாரு. ஏன் சார்.. அத அந்த ரெண்டு செகண்ட் பின்னாடி நின்னு வந்தா தான் என்ன? அந்த நேரத்துல தான் மல்டி மில்லினியர் ஆகிட போறீரோ?

இதெல்லாம் ஏதோ பொத்தாம் பொதுவில் எவரோ செய்கின்ற செயல்கள். ஆனால் அரசாங்க ஊழியராக இருக்கும் பேருந்து ஓட்டுநர்கள் தான் இங்கு அதிகம் விதிமுறைகளை மதிக்காதவர். மாநகர பேருந்து கழகம் சார்பில் இதற்கு ஏதேனும் முடிவு எடுப்பது நல்லது. நான்கு லேன்கள் இருக்கும் ரோட்டில் போய்க்கொண்டிருக்கும் போது அவர் போகும் லேனில் அதிக ட்ராபிக் இருந்தால் பின்னால் யார் வருகிறார் எப்படி வருகிறார் என்றெல்லாம் கவலை இல்லை சட்டென ஸ்டியரிங்கை ஒடித்து நான்காவது லேனில் இருந்து முதல் லேன் வந்திடுவர். பின்னால் வந்தவன் எல்லாம் ஓரமாக ஒதுங்கி ஒதுங்கி ரோட்டை விட்டு இறங்கி காட்டுக்குள் போயிவிடுவான்.

இதற்கு அடுத்த ஜீவிகள் இந்த ஆட்டோ ஓட்டுநர்கள். ட்ரூரூர்.. ட்ரூரூர்… என்று அவர்களின் மிரட்டும் வேகமும் சப்தமும், விதிமுறைகளை எள்ளி நகையாடும் நயமும் அவர்களுக்கு மட்டுமல்ல உள்ளே உட்கார்ந்து இருக்கிற எல்லோருக்கும் இலவசமாய் எமலோகத்திற்கு ஒரு ட்ரிப் அடித்து கொண்டு விடும் நேர்த்தி ஆட்டோ ஓட்டுநர்களுக்கே உரித்தானது.

இது போன்ற கேவலமான விதிமுறை மீறல்கள் உங்களுக்கு பாடம் கற்பிக்கிறதோ இல்லையோ நாட்டின் ஒவ்வொரு திசையிலும் பல இறப்புகளுக்கு காரணங்களாக அமைகிறது. விதிகளை எள்ளி நகையாடுபவர்களே அந்த இறந்தவர்களின் பட்டியலில் நாளை நீங்களும் சேரலாம். காலம் ரொம்ப தூரமில்லை. உங்கள் உயிர்களை நம்பி பல உயிர்கள் இந்த உலகத்தில் இருக்கும், அவர்கள் நம்பிக்கைகளை பொய்களாக்கிவிட்டு இந்த உலகத்தை பிரிந்துவிடாதீர்கள். உங்கள் வாழ்க்கை உங்கள் கையில். நமக்கான விதிமுறைகளை பின்பற்றி வாழ்வோம். நலமோடு..!


-தம்பி கூர்மதியன்

Comments

Popular posts from this blog

மெரினாவில் ஓர் இரவு! போராட்டக்களம்..

மாலை 6.30 மணி.
இரண்டு கிலோமீட்டர் முன்னிருந்தே பேரணியாக பலர் சென்றுக்கொண்டிருநனர். அங்கங்கே தன்னார்வாலர்கள் நின்று அறிவிப்புகள் செய்துக்கொண்டிருந்தனர். சட்டையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான வாசக மற்றும் படம் பதிப்பை இலவசமாக நண்பர்கள் செய்துக்கொண்டிருந்தார்கள். வண்டியை நிறுத்திவிட்டு நாங்களும் இணைந்துக்கொண்டோம் நடைபயணத்தில்.
கோஷங்கள் எழுப்பபட்டன. ஆளும் வர்கத்தை எதிர்த்தும், சர்வதேச அரசியலை கேலியாக விமர்சித்தும் கோஷங்கள் போடபட்டன. அப்பொழுதே கிளப்பிவிட்டன நம் ரோமங்களை. அங்கங்கே சில தகாத வார்த்தைகள் இருந்தாலும், அவை தோழர்களின் கோபத்தை வெளிப்படுத்தும் ஒரு முறை என்று உணர்ந்து நடந்தோம். கோபத்தை நாகரீகமாக சொல்லும் தமிழ் இனம் என்பதை தோழர்கள் நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும்.
எங்கும் நுழைய முடியவில்லை. குடும்பமாக, நண்பர்களாக, தன்னார்வலராக என எங்கினும் கூட்டம் அலைமோதிக்கொண்டிருந்தது. மத்திம பகுதி விவேகானந்தர் இல்லம் தான் எனினும் கலங்கரை விளக்கத்திலிருந்தே அலைகடலென மக்கள் மட்டும் தான் தெரிந்தார்கள்.
நாங்கள் முன்னேறினோம். அங்கங்கே தோழர்கள் பதாதைகளை பகிர்ந்துக்கொண்டார்கள். கோஷ முழக்கமிடையே நாங்கள் முன்னேறி …

ஏழு நாட்கள்...

என் பெயர் ரகு. அடிக்கடி இரவு வரும்பொழுது ஒரு இனிப்பு என்று வாங்கிக்கொண்டு சந்தோசமாக வீடும் ஏறும் அளவுக்கு எனக்கு குடும்பமும் இல்லை. அந்த அளவுக்கு மகிழ்வும் வந்ததில்லை. அதே சமயம், வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே என வருந்தும் அளவுக்கும் ஒரு கவலை வந்ததில்லை. வாழ்க்கை என்னும் போக்கில் நாட்களை கடந்து செல்லும் நீங்கள் பார்க்கும் ஒரு சாதாரண மனிதன் தான் நான்.
அம்மா ஊரில். இங்கு தனியாக ரூம் எடுத்து தங்கியிருக்கிறேன். கம்ப்யூட்டர், செல்ஃபோன் போன்னற இக்கால வாழ்க்கை டெக்னாலஜி எதுவும் அண்டாத ஒரு பிரஜை. என்னிடம் இருக்கும் சொத்து என்று சொன்னால் ஒரு மூன்று செட் துணி, ஒரு ஜோடி ஷூ மற்றும் செருப்பு, ஒரு பர்ஸ் மற்றும் ஒரு கைகடிகாரம். இதில் எதில் பாதிப்பு வந்தாலும் உடனே மாற்று வாங்கிவிடுவேன். வேறு எதுவும் செலவு இல்லை. சமீபத்தில் தொலைந்த கடிகாரத்திற்கு பதிலாய் மற்றொன்று குடிக்கொண்டிருக்கிறது. அவ்வளவு தான்.
அன்று அலுவலகத்தில் இருந்தேன்.
‘ரகு… உன்ன சார் உள்ள கூப்பிடுறாரு..’ சக அலுவலர் வந்து சொன்னார்.
‘ரகு… நீங்க சேர்ந்து கொஞ்ச நாள் தான் ஆகுது. ஃபீல்ட் சமயம் இப்போ சரியில்ல. வேலைய விட்டு எல்லாரையும் தூக்கிட்டு இருக்காங…

ஒரு அப்பாவின் வாழ்க்கை

நான் கடைசியா இந்தியா வந்து ஒரு வருசம் கடந்துருச்சு. இப்போ நான் கிளம்பிட்டேன். என்னோட இந்தியாவுக்கு, என்னோட ஊருக்கு, என் சொந்த மண்ணுக்கு போறேன். அதைவிட சந்தோசம் நான் என் அப்பாவ பாக்க போறேன். நினைக்கிறப்பவே மனசு சில்லுனு இருக்கு. அப்பா…
என் அப்பா ஒரு கூத்து ரசிகர். ஊருல நடக்குற ஒரு நாடகம் கூத்து எதையும் விடமாட்டார். அன்னைக்கு ஊருக்குள்ள சங்கரன் குழுவோட நாடகம் நடந்துச்சு. மகாபாரத கதை. கிருஷ்ணன் அர்ஜூனனுக்கு உபதேசம் சொல்லிகிட்டு இருந்தாரு.
’கத்தும் நீதிகூட்டம் காட்டில் ஒரு குரங்காட்டம் ஒன்னு ஆடுது நாட்டில் மழியும் உலகம் ஆட்சி அதை அழிக்கத்தான் புறப்படும் தர்மத்தின் கோட்டை கத்தும் கதமறுக்கும் காட்டில்’
’ஆதாகபட்டது வில்லை ஏந்திக்கொண்டு யோசித்து நிற்கும் அர்ஜூனனிடம் கிருஷ்ணன் சொல்கிறான்.’
‘எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது’ என நாடகம் உச்சகட்டத்தில் அக்கால உடையோட நடந்துகிட்டிருந்தப்போ மேடையில ஒருத்தர் இக்கால உடையோட நடந்து வந்து கிருஷ்ணன் காதுல ரகசியம் பேசினாரு. இது என்னடா மகாபாரத்ததுல ஒரு திருப்பம்னு கூட்டமே உத்து பாத்துகிட்டு இருந்தப்போ, கிருஷ்ணர் மக்கள் கூட்டம் இரு…