வாழ்க்கை அருமையா இருக்கும் சார்…!
நான் எப்பொழுதும் உறவுகளால் சூழப்பட்டவன். என்னோடு பிறந்தவர்கள் இருவர். எங்கள் வீடு எப்பொழுதும் உறவுகளால் சூழப்பட்டே இருக்கும். எனக்கு உறவுகள் ஒன்றாய் இருப்பதன் கொடுமைகள் தெரியும். அதைவிட அதில் இருக்கும் சந்தோசங்கள் பற்றி அதிகமாக தெரி்யும். இன்பங்கள் மட்டுமே வாழ்க்கை இல்லை என்பதை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.

உறவுகள் என்ன எதிர்பார்க்கிறது. உண்மையான உறவு உங்களை மட்டுமே எதிர்பார்க்கும். சொந்த ஊரின் மீது பற்றுக்கொண்ட உங்கள் வீட்டு முதியோரை மாதம் ஒரு முறை சென்று ஊரில் பார்த்திருக்கிறீர்களா? அவர்கள் உங்களிடம் என்ன எதிர்பார்க்கிறார் தெரியுமா? உங்களின் நேரத்தை. பள்ளி முடித்து வீட்டிற்கு வரும் உங்கள் குழந்தைகள் உங்களிடம் என்ன எதிர்பார்க்கிறது தெரியுமா? உங்கள் நேரத்தை. வீட்டில் வேலையெல்லாம் முடித்துவிட்டு எல்லோருக்கும் என்ன புடிக்கும் என்பதை பார்த்து செய்துவிட்டு உங்கள் வருகைக்காக காத்திருக்கும் உங்கள் மனைவி என்ன எதிர்பார்க்கிறார் தெரியுமா? உங்கள் நேரத்தை.

எல்லோருக்கும் ஏதோ பிரியமான ஒரு வட்டம் இருக்கிறது. அந்த வட்டத்தில் அம்மா, அப்பா, மனைவி, குழந்தைகள் என ஏதோ ஒன்று அல்ல பல சொந்தங்கள் இருக்கிறது. அந்த வட்டத்திலிருப்பவர்களுக்கு உங்கள் மீது என்ன இருக்கிறது தெரியுமா? கொள்ளை கொள்ளையாக பாசம் கொட்டி கிடக்கிறது.

இங்கு பலர் சுமத்தும் குற்றம் ஒன்று இருக்கிறது. என்னை நானாக இருக்க விடுவதில்லை சொந்தங்கள் என்பது. நீங்கள் நீங்களாக இருப்பது என்பது நீங்கள் மட்டுமே இருப்பதில்லை என்பதை நீங்கள் புரிந்துக்கொள்வதில்லை என்று நினைக்கிறேன். நாம் எப்பொழுதுமே நம் வாழ்க்கையை யாரோ ஒருவருக்காக தான் வாழ்கிறோம். சார்.. நமக்காக நாம மட்டுமே வாழ்ந்துட்டு இருந்தா போர் அடிச்சுடும் சார்.

எல்லா உறவுகளையும் சமாளிக்க தெரிந்தவர்களுக்கு ஏனோ இந்த காதலரையும் , துணையோரையும் சமாளிப்பது என்பது பெரும் செயலாக இருக்கிறது.
காதலில் முதலில் வருவது எது? பொசசிவ்னஸ். அதீத காதலில் வெளிபாடு தான் இது. ஆனால் பலருக்கு இது பிடிப்பதில்லை. நம் மீது அளவு கடந்த பாசம் வைக்கும் உறவு கிடைப்பது அவ்வளவு எளிதல்ல. ஒவ்வொரு பொசசிவ் வெளிபாடும் உங்கள் மீது இருக்கும் அதீத பாசத்தின் அளவு என்பதை நினைத்து நீங்கள் இந்த இடத்தில் பூரித்துக்கொள்ளலாம். பொசசிவ்க்கும் சந்தேகத்திற்கும் ஒரு துளி தான் எப்பொழுதுமே இடைவெளி இருக்கும். அந்த துளி அளவை தாண்டி விடாமல் இருக்க வேண்டியது உங்கள் சாதூர்யம்.

அம்மாவிற்கும் பிள்ளைக்கும் சண்டை வந்தால் வயதில் பெரியவர் என பிள்ளை அடங்கி போய்விடுவான். சகோதர சண்டை என்றால் சகட்டு மேனிக்கு அடித்துக்கொண்டு தானாக சேர்ந்துவிடுவார்கள். ஆனால், இந்த காதலர்கள் பிரச்சனை மட்டும் அதிகம். இருவரும் ஒரே வயது கோட்டை சேர்ந்தவர்கள், இவர்களுக்கு நடுவில் யாரும் இல்லை. அவர்களுக்கு என்றே தனி உலகம்… இப்படி இருக்கும் இவர்களுக்கு நடுவில் சண்டை என்று வந்தால் புளியங்கொம்பு தான். இருவர் பக்கமும் ஏதோ ஒரு நியாயம் இருப்பினும் இருவரும் விட்டுக்கொடுக்கமாட்டார்கள். ஈகோ என்னும் கருமாந்திரம் வந்து தொலைத்துவிடும். எத்தனையோ பிரிவுகளின் காரணங்களாக இந்த ஈகோ இருந்திருக்கிறது.

என்ன தான் செய்யலாம் இது போன்ற பிரச்சனைகளில்.? மானத்தை விட்டுறுங்கனு சொல்லுறேன். எதுக்குயா உறவுகளுக்கு நடுவுல மானம் மருவாதைலாம். என்ன இருந்தாலும் நம்ம சொந்தங்க யா… நமக்கு புடிச்சவங்க. அவங்கள நாம என்னைக்கும் இழந்திட கூடாது. ஏதோ ஒரு சண்டைனு வர்றப்போ உங்களுக்கு பிடிச்சவங்க நீங்க மன்னிப்பு கேக்கணும்னு விரும்பல. நீங்களும் கூட மல்லுக்கட்டாம அவங்ககிட்ட அமைதியா உட்கார்ந்து பேசுங்க.. ஆரம்பத்துல முரண்டு பிடிப்பாங்க தான். அவங்கள உங்களுக்கு எவ்வளவு பிடிக்கும்னு சொல்லுங்க… அவங்க உங்க வாழ்க்கைக்கு எவ்வளவு முக்கியம்னு சொல்லுங்க. சண்டை சச்சரவுலாம் அடுத்த நிமிசம் காணாம போகும் சார். வாழ்க்கை... இனிக்க இனிக்க வாழலாம்.

அவங்க மேலயே தப்பா கூட இருக்கட்டும். ‘அவ மேல தானே தப்பு.. நான் ஏன் போயி பேசணும்னு’ கேக்காதீங்க. அவங்க உங்களுக்கானவங்க பாஸ்.. உங்களுக்கே உங்களுக்கானவங்க மட்டும். நீங்க முதல்ல போயி பேசிட்டா என்ன உங்க தலை போயிடுமா? உங்க கௌரவம் போகுமா? சார்… மனசு சார்.. மனசு… ரெண்டு மனசுக்கும் அளவில்லாத வலி சார். போயி பேசிடுங்க சார். இது காதலர்களுக்கு மட்டும் இல்ல, தம்பதியர்களுக்கும் கூட.

அவங்கள காதலிக்கிறப்பவும் இல்ல கல்யாணம் செய்யிறப்பவும் எவ்வளவோ விசயங்கள் பிடிச்சிருக்கும். ஆனா கால போக்குல அதெல்லாம் மறந்து சண்டையினு இறங்கிடுறோம். ஆனா.. ஒரு நிமிஷம் நாம எதுக்கு அவங்கள விரும்ப ஆரம்பிச்சோம், அவங்ககிட்ட நமக்கு புடிச்ச விசயங்கள பத்தியெல்லாம் நினைச்சீங்கனா கண்டிப்பா அவங்க கூட மல்லுக்கட்டவே விருப்பம் இருக்காது.

காசு காசுனு வேலை வேலைனு சுத்துறோம். இதுமட்டும் போதும் இதுமட்டும் போதும்னு தேவைக்கு மீறி ஆசைக்காக நிறைய சொத்துக்கள் சேர்க்க உழைச்சுட்டே இருக்கோம். நம்மை சுற்றி இருக்கும் சொந்தங்களின் ஆசைகளை குழி தோண்டி புதைத்துவிட்டு யாருக்காக நாம் உழைக்க வேண்டும்? அவர்கள் உங்களை தேடுகிறார்கள். உங்களோடு கிடைக்கும் நொடிகளுக்காக ஏங்குகிறார்கள். உங்களோடு நேரம் செலவழிக்க விரும்புகிறார்கள். உங்கள் தோளோடு தலை சாய்த்து கவலையை மறந்து இருக்க விரும்புகிறார்கள். அதை தராமல் உழைத்து நாம் என்ன சேர்த்து வைத்துக்கொள்ள போகிறோம்.

சார்… உழைக்கிறதே அவங்களுக்காக தானே சார். அவங்க தான் சார் முதல்ல, அப்பரம் தான் எல்லா லொட்டு லொசுக்கு எல்லாம். சொந்தங்களை குறை சொல்வதை நிறுத்துங்கள்-அவர்களுக்கான நேரத்தை கொடுங்கள் குறை என்ன குறை வாழ்க்கை முழுதும் நிறைகள் மட்டுமே இருக்கும் என்பதை அடித்து கூறுகிறேன்.

காதலும் பாசமும் எதிர்பார்ப்பது ஒன்று மட்டும் தான். ஆணிடம் தோளை, பெண்ணிடம் மடியை. ஒரு பெண் ஆணின் தோளில் சாய்கையிலும், ஒரு ஆண் பெண்ணின் மடியில் சாய்கையிலுமே அவர்களின் துயர் மறக்கிறது. லபோ திபோ என ஒருவர் கத்திக்கொண்டிருந்தால் சிரித்துக்கொண்டு அவர் கையை பிடித்து அவரை எவ்வளவு பிடிக்கும் என்பதை சொல்லுங்கள் கத்திக்கொண்டிருந்தவர் கண்களில் கண்டிப்பாக கண்ணீர் சிந்தும். அது தான் சார்.. காதல். மனசு இருக்கமாக இருந்தால் உங்களுக்கு விருப்பமானவர் கையை பிடித்துக்கொண்டு தெருவில் நடைபோடுங்கள். உலகை நீங்கள் மறப்பீர்கள் என்று நான் உறுதியளிக்கிறேன். அவளை எனக்கு பிடிக்கும் அதை ஏன் அடிக்கடி சொல்லணும் என்று நினைக்காதீர்கள். ஒரு இயந்திரம் ஓடவே தொடர்ந்து அதற்கு எரிசக்தி கொடுத்துக்கொண்டே தான் இருக்கு வேண்டும்… அப்படி ஒழுங்கான சக்தியை நீங்கள் தரவில்லை என்றால் இயந்திரம் சரியாக ஓடாது தான். அது போல் தான் மனசு என்னும் இயந்திரமும். அது உங்களிடமிருந்து அன்பான வார்த்தைகளை தான் எதிர்பார்க்கிறது, எடுத்துக் கொட்டிவிடுங்கள் சார்.

காதலிங்க சார்.. சொந்தங்கள காதலிங்க சார்.. காதலுக்காக சொந்தங்களுக்காக நேரம் ஒதுக்குங்க சார்… வாழ்க்கை அருமையா இருக்கும். அது தான் சார் வாழ்க்கை.


-தம்பி கூர்மதியன்

Comments

Popular posts from this blog

சிட்லபாக்கத்தில் தொடரும் வாழ்வியல் போராட்டம்!

ஏழு நாட்கள்...

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..