நான் முற்றுப்புள்ளி இல்லை..வாழ்க்கை ஓட்டத்திலே நான் என் பாதையில் செல்வதாலோ என்னவோ என்னை யாருக்கும் அவ்வளவு எளிதில் பிடிக்காது. அப்படியே எவருக்கேனும் பிடித்துபோயிவிட்டால் அவர்கள் வெறுக்கும் சூழல் சீக்கிரமே வந்துவிடும். நான் எனக்காக ஒரு கோட்பாடு வைத்திருக்கிறேன் அது மற்றவரின் நிலைபாட்டிலிருந்து மாறுப்பட்டிருந்தால் அதற்கு நான் எதுவும் செய்துவிட முடியாது.

நான் கடந்து வந்த பாதைகள் முக்கால்வாசி நானாக கடந்துவந்தது. மாற்றிவிடப்பட்ட பாதைகளை எண்ணி நான் வருந்தியது தான் அதிகம். வாழ்க்கையின் அத்தியாவசியம் என்று என் கண்ணுக்குப்பட்ட அனைத்தும் மற்றவர்களுக்கு அநாவசியமாகப்பட்டது. மாறாய், நானே அவர்களது வழி சென்றால் அவர்கள் சொல்லிய பாதை அவர்களுக்கே அநாவசியமாக தெரிகிறது. வாழ்க்கை ஒரு விந்தை பாடம் கற்பிக்கும் என்பதற்கு எல்லோருக்கும் இது ஒரு சான்றாகவே திகழும்.

என்னுடைய வாழ்க்கையின் ஓட்டம் எனக்கு தெரியும். நான் கடந்து செல்லும் பாதையில் கண்ணை மூடிக்கொண்டும் எனக்கு நடக்க தெரியும். அதற்காக நான் கண்ணை மூடிக்கொண்டிருக்கையில் என் கையை பிடித்து அலைக்கழித்துவிடலாம் என்று கனவிலும் எண்ணிவிடாதீர்கள்.

எனக்கு எது முக்கியம் என்பது எனக்கு தெரியும். யாரும் எனக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்று நான் கேட்கவில்லை. சந்துகளிலும் பொந்துகளிலும் எனக்கு புகுந்து ஓடத்தெரியும். எனக்கு வழிபலகைகள் தேவையில்லை. ஆடத்தெரியாதவன் மேடையை குறை சொல்லுவான், உங்களது தோல்விகளுக்கு நான் சுமை சுமக்க முடியாது.

உங்களுக்கு என்ன தேவையோ என்னால் தர முடியும். என்னுடைய முழுமையான நேரங்களை கேட்காதீர்கள். அது என்னால் முடியாது. என்னுடைய நேரங்கள் பலதரப்பட்ட இடங்களுக்கும், மக்களுக்கும் பகிரப்பட்டுள்ளது. அதை என்னால் உங்களுக்கு முழுமையாக தந்துவிட முடியாது. நான் நேரங்களை கடந்து எனக்கான பாதைகளில் சென்றுக்கொண்டிருக்கிறன்.

மகிழ்வு தேடும் வாழ்க்கையில் வாழ்ந்துக்கொண்டிருக்கிறேன். எனக்கு மகிழ்வு மட்டுமே தேவையானதாக இருக்கிறது. எவ்வளவு கொடுத்தாலும் போதும் என்னும் மனம் மகிழ்வுக்கும் பணத்திற்கு மட்டுமே வராது. எனக்கு முதலாவதை தரப்போவது இரண்டாவதாய் இருக்கலாம். இரண்டாவதை தரப்போவது முதலாவதாக இருக்கலாம். ஆனால் இரண்டும் அடைய எனக்கு அமைதி என்னும் ஒற்றை இலக்கு தேவைப்படுகிறது. அமைதி வேண்டும். என்னுள் எனக்குள் அமைதி வேண்டும்.

பூக்கள் பூத்த குளமாய் இருக்கும் என் மனதில் கல்லை விட்டெரிந்து கலங்கம் ஏற்படுத்த நினைக்காதீர்கள். உங்கள் முயற்சிகள் தோல்விகளையே தரும். எனக்கும் கோபங்கள் கனலாய் இருக்கும். அந்த கனல் சுட்டெரிக்கும் சூரிய கதிர்களை தாண்டி தாக்கங்கள் கொண்டிருக்கும். நான் எளியவன் என்று எண்ணாதீர்கள், என்னுள் எனை மிஞ்சியவன் இருக்கிறான்.

என்னுள் இருக்கும் வேகம் மங்கி, மழிந்து போய்விடுவேன் என்று எண்ணாதீர்கள். நான் அப்படியில்லை. நான் என்றுமே அழிந்துபோய்விடுபவன் இல்லை. கூண்டுக்குள் அடைத்துவிட்டதால் நான் அழிந்துவிட்டேன் என்றும் எண்ணிவிட வேண்டாம். நான் அழிபவன் அல்ல, வெகுண்டு எழுபவன் என்று என்னை சுற்றி இருப்பவர் அறிவர்.

தேடும் திசையெல்லாம் தேய்மரங்கள் கண்டேன்..
பார்க்கும் வழியெல்லாம் பசுமை மறந்தனவாம்..!

வீறும் வேகமும் முளைத்தெழுமுன்னே
முரண்டுபிடிக்குதடா சமூகம்…

எட்டி உதைத்துவிட்டு வெளிவர துடிக்கும்
கருவின் சிசுவாய் நானும்..
வெளிவரமும் முடியாமல் உள்ளிரவும் தாங்காமல்
புரண்டு தவிக்கிறேன்…..!!

அய்யோ.. அய்யோ என்று கதறுதல் முடியவில்லை..
வாயின் உள்ளே ஏதோ தண்ணீர் போல..
காப்பாற்ற ஒருவரும் வேண்டாம் என்று
பள்ளத்திலிருந்து மேலெழுகையில்
காப்பாறுகிறேன் என்று காலை பிடித்து இழுக்கும் சமூகம்..!!

விந்தை வாழ்க்கைக்கு வருடுகிறேன் ஒரு முற்றுப்புள்ளி
கோடாரி ஒன்றுக்கொண்டு வைத்துவிட்டேன்…
வைத்துவிட்டு திரும்புகையில் ஆயிரம் தடைகள்
இன்னும் ஆயிரம் கோடாரிகளை அடுக்கிக்கொண்டு
இதோ கிளம்பிவிட்டேன்…!!

போராட்ட கூட்டமாய் உங்கள் தெருக்களில்
நான் இருக்கிறேன்… பூமழை வேண்டாம்..
எச்சில் துப்பாதிருங்கள்..!!!!

-தம்பி கூர்மதியன்

Comments

Popular posts from this blog

முதல் நாள் பள்ளி - தகப்பனாகிய நான் எழுதும் *2

இவருக்கு நான் இதை சொல்லியே ஆகணும்!!

கானல் தேடல்