என் காதல் - நெருக்கமும் குழப்பமும்...!வேகமாக ஓடிவிடாத நாட்கள் என்று எண்ணிய காலம் உடனே மாறியது. ஒவ்வொரு நொடிகளும் நட்புகளோடு ஒன்றாய் இணைய ஆரம்பித்தேன். என்னுடைய உலகத்தில் இருந்து அந்த கார்ப்ரேட் உலகத்தில் காலை மெல்ல உள்ளே நகர்த்த ஆரம்பித்தேன். அவளை அப்போதெல்லாம் சக ஒருத்தியாய் மட்டுமே எண்ணியிருந்தேன். அவளுக்கு என்று எந்த ஒரு சூழலிலும் முக்கியத்துவம் தரவேண்டும் என்னும் எண்ணம் எனக்கு எழுந்ததில்லை.

அவள் சில தினங்களில் சென்னையின் ஒரு விடுதியிலே தங்க ஆரம்பித்துவிட்டாள் என்று மற்றவர்களின் உரையாடல் மூலம் அறிந்தேன். அன்றைய தினம் முடிந்து வீட்டிற்கு செல்ல புறப்பட்டேன்.

நான் எனது வண்டிக்கு அருகில் சென்று ஹெல்மட் மாட்டிக்கொண்டிருக்கையில் அவள் மற்றொரு சக தோழியான ‘அனு’வுடன் வந்தாள். அனு- சகஜமாக பழக கூடிய தோழி. நான் கடைசி வரிசைக்கு மாற்றப்பெற்ற பிறகு எங்களது மீத பயிற்சி காலத்தில் நானும் அனுவும் அருகருகில்  அமர்ந்திருந்தோம் மற்றும் அனு எனது கல்லூரியிலிருந்தே வந்ததால் அவளிடம் ஆரம்பம் முதல் நல்ல சகஜமாக என்னால் பேச முடிந்தது.

நான் இருவரையும் பார்த்து புன்னகைத்தேன். பின்னர் பேசத்தொடங்கினேன்,

‘ஏய்… என்ன அனுக்கூட?’

‘ஆமாம்.. இங்க ஹாஸ்டல்க்கு மாறிட்டேன்.. அதான் ட்ராப் பண்ண சொல்லிகேட்டேன்.’

‘ஓ.. எங்க ஹாஸ்டல்?’

‘அம்பாள் நகர்.. அந்த HDFC ATM இருக்குல அதுக்கு பக்கத்து ரோடு..’

‘ஓ.. இங்க இருக்குறதுக்கு உங்களால நடந்து போக முடியாது. 20 அடி இருக்குமா இங்க இருந்து… அனு அவள கூட்டிட்டு போகாத..’ என்று நான் சொல்ல அனு சிரித்துக்கொண்டே அவளது வண்டியில் ஏறினாள்.

‘சரி.. அவ கூட்டிட்டு போக வேண்டாம்.. அப்போ நீ கூட்டிட்டு போயி விடு..’  என்று அவள் சொல்லிவிட்டு நக்கலாக உதட்டோரம் ஒரு சிரிப்பு சிரித்தாள்.

‘என்னாது.. நானா.. வேணாம்டா சாமி..’ என்று சொல்லிவிட்டு நான் சட்டென என் வண்டியில் பறந்தேன். வழியில் அவள் சொன்னது என் காதில் ஒலித்துக்கொண்டே இருந்தது. எதற்காக என்னை கொண்டு போயி விட சொன்னாள்.? சாதாரணமாக தான் கேட்டிருப்பாளோ? பெண்களை வண்டியில் ஏற்றிச்செல்லும் பழக்கமற்றவன் நான். நெருங்கிய உறவோ அல்லது அத்தியாவசியோ தேவையோ இல்லாத பெண்களை நான் வண்டியில் எப்பொழுதும் ஏற்றியதில்லை. ஏதோ கிண்டலாக சொல்லிய வார்த்தை தானே என்று எனக்கு ஏன் அதை விடத்தெரியவில்லை.? ஏன் அந்த வார்த்தை என்னை ஏதோ செய்துக்கொண்டே இருக்கிறது? புரியாத புதிர்.

இறுதியில் அவள் விருப்பப்பட்டு தான் கேட்டிருக்கிறாள் என்றால் அடுத்த முறை கேட்கையில் முடியாது என்று முகத்துக்கு நேராய் சொல்லிவிடவேண்டும் என்று முடிவெடுத்தேன். அந்த முடிவுக்கு பின்னர் தானாய் தூக்கம் வந்தது.

அடுத்த நாள் அவள் அலுவலகம் வரவில்லை என்று முன்னரே சொல்லி வைத்திருந்தாள். ஓட்டுநர் உரிமம் பெறவேண்டும் என்று காஞ்சிபுரம் செல்வதாய் சொல்லியிருந்தாள்.

அன்று மதிய நேரத்தில் எனக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. அவளிடமிருந்து தான். ஓட்டுநர் உரிமம் பெற்றுவிட்டதாய் வந்தது. அப்பொழுது தான் என் சக தோழன் எல்லோரிடமும் சொல்லிக்கொண்டிருந்தான் அவள் ஓட்டுநர் உரிமம் பெற்றுவிட்டதாய். நான் அவளுக்கு பதில் அனுப்பினேன்.

எல்லோருக்கும் அனுப்புற நேரத்துல தான் எனக்கும் அனுப்புறல… என்கிட்ட முதல்ல சொல்லணும்னு இல்ல.. ல..???’ என்று அவளுக்கு அனுப்பினேன். ஆமாம், அவள் எதற்கு என்னிடம் முதலில் சொல்லவேண்டும்? எதற்காக அவசியமே இல்லாமல் அவளிடத்தில் நான் உரிமை எடுத்துக்கொள்கிறேன். பதில் ஏதும் கடினமாக வந்துவிடக்கூடாது என்று பயந்துக்கொண்டே இருந்தேன். ஆரம்ப காலத்தில் அவளது முறைத்த முகம் என் கண்முன் வந்து ஒரு நிமிடம் பயமுறுத்தி சென்றது.

அவளிடம் இருந்து பதில் வந்தது. ஏதோ ஒரு நெருடலுடனே திறந்து பார்த்தேன். அதில்,

ஏ.. இல்லடா.. உனக்கு ரெண்டு மணி நேரம் முன்னவே அனுப்பிட்டேன்.. அவங்களுக்குலாம் இப்போ தான் அனுப்பினேன்.. ஒழுங்கா பாரு’ என்றாள். நானும் அந்த செய்தி வந்த நேரத்தை பார்த்தேன். ஆமாம்.. இரண்டு மணி நேரம் முன்பே வந்திருந்தது. இப்பொழுது அடுத்த கேள்வி. அவள் ஏன் எனக்கு முக்கியத்துவம் தருகிறாள்.? நாங்கள் ஒன்றும் அவ்வளவு நெருங்கிய தோழர்கள் இல்லையே. இனி அவளிடம் கொஞ்சம் ஒதுங்கியே இருக்கவேண்டும் என்று யோசித்துமுடித்த அடுத்த நொடி ‘ குட்.. எனக்கு தான் முக்கியத்துவம் தரணும்..’ என்னும் குறுஞ்செய்தியை அனுப்பிவிட்டேன்.

என் கைகளுக்கும்… என் மூளைக்கும்.. ஏதோ வாய்க்கால் தகறாரு போல. மூளையின் பேச்சை கைகள் கேட்கவே இல்லை. மனம் ஏனோ அவளின் பக்கமே சாய்ந்து கிடந்தது. அடுத்து வாழ்க்கை எனக்காக என்ன வைத்திருக்கிறதோ என்று அவலுடனே காத்திருந்தேன்..!

(இன்னும் காதலிப்பேன்..)

-இராமநாதன்.

Comments

Popular posts from this blog

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..

பைக் ஓட்டுபவர்கள் கண்டிப்பா பாக்கவும்..!!

அதிகாரி சாமி