என் காதல் - எனது கீழ்தரமான செயல்

எனக்கு படிக்க பிடிக்கவில்லை. நான் எனக்கு ஒத்துவராத இடத்தில் இருக்கிறேன் என்று என் மனம் அவ்வபோது சொல்லிக்கொண்டிருக்கும். அப்பொழுதெல்லாம் எனது நண்பர்களின் கேலி கிண்டல் பேச்சுக்களால் என் மனம் ஒழுங்காகும்.

என்னை நானே நாளடைவில் அதிகமாக மற்றவர்களிடம் இணைத்துக்கொண்டேன். அன்று எங்கள் குழுவில் இருக்கும் சகானா என்னும் பெண்ணிற்கு பிறந்தநாள். எங்கள் குழுவில் இருக்கும் இருவருக்கு நாங்கள் இணையும் பொழுதே திருமணம் நடந்திருந்தது. அதில் ஒருவர் சகானா. வழக்கமாக நண்பர்களை இணைக்கமாக வைத்திருக்கும் வழிகளில் நேர்த்தியான அனு, சகானாவின் பிறந்தநாளை கொண்டாடலாம் கேக் வெட்டி, பரிசு பொருள் கொடுத்து என்று சொல்ல-நாங்களும் சம்மதித்தோம்.

எங்கள் ஒட்டுமொத்த குழுவும் ஒன்றாக இருந்தாலும் முன் வரிசையில் இருப்பவர்க்கும் பின் வரிசையில் இருப்பவர்க்கும் ஒரு விலகல் இருந்து வந்தது. சகானா பிறந்த நாள் கொண்டாட்டத்தை பின்வரிசையில் இருப்பவர்கள் முடிவு செய்ததால் முன்னால் இருந்தவர்களிடம் பணம் பெறவில்லை. என் கண்கள் அப்பொழுதெல்லாம் என்னவளை தேடாது. அவள் இருக்கிறாளா என்று கூட அன்று நான் யோசிக்கவில்லை. கொண்டாட்டம் எல்லாம் முடிந்தது. எங்கள் அறையினுள் நான் நுழையும் பொழுதே ஒரே கூட்டமாக நின்று ஏதோ சண்டை போட்டுக்கொண்டிருந்தனர்.

முண்டி மோதிக்கொண்டு உள்ளே எட்டிப்பார்த்தேன். மாலினி. முதல் நாள் வகுப்பில் எல்லோரும் ஏதோ ஒரு பொதுவான விடயத்தை பற்றி முன்னால் நின்று பேசவேண்டும் என்று சொல்லப்பட்டிருந்தது. மாலினி முன்னால் வந்து பேசும் சமையத்தில் நான் அதிகமாக பேசிக்கொண்டிருக்கிறேன் என்று பயிற்சி பொருப்பாளர் என்னை முன்னால் வந்து அமர சொன்னர். முன்னால் இருப்பவர்கள் என்னைப்பற்றி முன்னமே இவன் அதிகமாக கேள்விகள் கேட்பான், உன்னை சிக்க வைத்துவிடுவான் என்று சொல்லியிருப்பர் போலும். நான் முன்னால் சென்று உட்கார்ந்தது தான் தாமதம் மாலினி மயங்கியாச்சு. எல்லோரும் என்னை பேயை பார்ப்பது போல பார்த்தனர். சிலர் சிரித்தனர். அப்படிப்பட்ட பெண் இப்பொழுது என்ன பிரச்சனையோ என்று எண்ணிக்கொண்டே எட்டி பார்த்தேன். சிறிது நேரத்தில்  எனக்கு விடயம் புரிந்தது.

எல்லோரும் ஒருவர் என்று நினைக்கவில்லையாம். பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு முன்னால் இருப்பவர்களிடம் காசு வாங்கவில்லை என்று கோபித்துக்கொண்டு ஆர்பரித்துக்கொண்டிருந்தாள் மாலினி. எனக்கு சிரிப்பு கொள்ளவில்லை. உமா சங்கரின் வேடிக்கை பேச்சால் அது விரைவிலே சரியாகிபோனது. இந்த சம்பவத்தால் முன்வரிசை பின்வரிசை என்று கொஞ்சம் இருந்த விரிசலும் விலகி போனது. நாங்கள் இன்னும் கல்லூரியில் இருப்பதாகவே உணர்ந்தோம்.

அன்று இரவு என்னவளுக்கு குறுஞ்செய்தி அனுப்பினேன். பிறந்தநாள் கொண்டாட்டத்தை பற்றியும் பிறகு நடந்த பிரச்சனைகள் பற்றியும் இருவரும் பேசிக்கொண்டிருந்தோம். பேச ஆரம்பித்து கொஞ்ச நேரம் தான் கடந்தது போல இருந்தது. ஆனால் 60 செய்திகளை தாண்டி போய்க்கொண்டிருந்தது. திடீரென அவள்,

‘எனக்கு மெசேஜ்க்கு பைசா போகுது நாளைக்கு பேசலாமா?’ என்றாள்.
‘என்ன ஆச்சு? 60 மெசேஜ் தானே போயிருக்கு’ என்றேன்.
‘இல்ல.. ரொம்ப நேரமா பைசா போயிகிட்டு தான் இருக்கு. இந்த பக்கம் ப்ரவீன் பேசிட்டு இருக்கான்ல’ என்றாள். அப்பொழுது ஏர்டெல்லில் 75 மெசேஜ் தினமும் ஃப்ரீ கார்டு தான் அவள் போட்டிருந்தாள். ப்ரவீன்-எல்லோரிடமும் நல்ல பழகும் வெளிப்படையான நண்பன். சீக்கிரமே அவனிடம் யாராக இருந்தாலும் நட்பாகிவிடுவர்.

அவள் ப்ரவீனிடம் பேசிக்கொண்டிருப்பதை பற்றி எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால் அவள் சொன்ன மாத்திரத்தில் எனக்கு சுர் என்றது. ப்ரவீனும் எங்களது நண்பன் தானே.. பேசினால் பேசிவிட்டு போகட்டும் என்று தோன்ற. அவனிடம் பேசுவதால் தானே இப்பொழுது உன்னிடம் அவளால் பேசமுடியவில்லை என்றும் ஒரு பக்கம் சொன்னது. அட காசு போனாலும் பரவாயில்லைனு இம்புட்டு நேரம் மெசேஜ் செய்திருக்காளே என்று உள் மனம் சொல்ல. அவனுக்கும் அப்படி தானே செய்திருப்பாள் என்று வெளி மனம் சொன்னது. அவளுக்கு நீ ஸ்பெஷல் தான்டா என்று மனம் சொல்ல. அவள் நண்பர்களுக்கு பொதுவாய் முக்கியத்துவம் தருவாள் என்று மூளை சொன்னது. காசுப்போனாலும் பரவாயில்லை என்று மெசேஜ் செய்துக்கொண்டிருக்கிறாளே-ரொம்ப பணக்கார வீட்டு பெண்ணாக இருப்பாளோ? காசின் அருமை தெரியாமல் இப்படி நடந்துக்கொள்கிறாளே என்று எனக்கு தோன்றியது. ‘ஏசி ரூமில் இருப்பதால் காசு காகிதமாக தெரிகிறது போல. குட் நைட். நாளைக்கு பேசுவோம்.’ என்று சொல்லிவிட்டு படுத்துவிட்டேன். அவளிடம் இருந்து பதில் வரவில்லை. இருப்பினும் ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை கையில் ஃபோனை எடுத்து பார்த்து ஊர்ஜிதபடுத்திக்கொண்டேன்.

அடுத்த நாள் அலுவலகத்தில் அனைவரும் அமர்ந்திருந்தோம். நாங்கள் எங்களது கைப்பேசிகளை பகிர்ந்துக்கொள்வோம். அப்பொழுது ஆன்ட்ராய்ட் மொபைல் வைத்திருந்த சிலரில் அவளும் ஒருத்தி. அதனால் அவளது மொபைலை ஏதோ பாட்டு கேட்பதற்காக வாங்குவது போல வாங்கினேன். வாங்கி அவளது புகைபடங்களை பார்த்துக்கொண்டிருந்தேன். அவளது மெசேஜ் பகுதிக்கு சென்று என்னிடம் பேசுவது போல சகஜமாக தான் எல்லோரிடமும் பேசுகிறாளா என்று பார்க்கசொல்லி என் மூளை சொன்னது. என் கைகள் மெசேஜ் பொத்தானை அமுக்கலாமா வேண்டாமா என்று தயக்கத்துடனே தவித்துக்கொண்டிருக்கையில் அவள் என்னருகே வந்து எனது பக்கத்தில் அமர்ந்தாள். நான் என்ன செய்துக்கொண்டிருக்கிறேன் என்று எட்டிப்பார்த்தாள். நான் தொடர்ந்து புகைபடங்களை பார்த்துவிட்டு அவளிடம் கொடுத்துவிட்டேன்.

நேராக எழுந்து கழிவறைக்கு சென்றேன். கண்ணாடியை பார்த்துக்கொண்டு ‘ஏன் டா உனக்கு இந்த புத்தி… சோறு தானே திங்கிற’ என்று கேட்டப்படியே கன்னத்தில் என்னை நானே அறைந்துக்கொண்டேன். அச்சமயம் பார்த்து யாரோ ஒருவர் கதவை திறக்க பட்டென கை வழியாக கன்னத்தை சொரிந்தபடி கண்ணாடியை பார்த்துக்கொண்டேன். அவர் என்னை ஒரு மாதிரியாக பார்த்துக்கொண்டிருந்தார். அவர் அந்த பக்கம் போனதும் முகத்தை கழுவிக்கொண்டு வெளியில் வந்தேன். சிரித்துக்கொண்டே நடக்கையில் ‘கடைசியில வில்லன் போல ஆகிட்டியே டா ராமநாதா’ என்று மனதுக்குள்ளே எண்ணிக்கொண்டேன். இதுவரை எந்த பெண்ணிடமும் தோன்றாத ஒன்று, இவளிடம் மட்டும் ஏன். ஒரு வேலை பொச்சிவநஸ்-ஆ? என்று உள்ளுக்குள்ளே கேட்டுக்கொண்டு – இனி இதுபோன்ற கீழ்தரமான செயல்களை நினைக்க கூட கூடாது என்று எனக்குள்ளே சொல்லிக்கொண்டேன்.

(இன்னும் காதலிப்பேன்)

-இராமநாதன்


Comments

Popular posts from this blog

சிட்லபாக்கத்தில் தொடரும் வாழ்வியல் போராட்டம்!

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..

GST – நான் அறிந்தவை!