ஒரு முடிவின் அழுகை...!


அந்த பேருந்தில் மிகுந்த நெரிசல் இல்லை. இருந்த அனைவருக்கு உட்கார இடம் கிடைத்திருந்தது. அவன் அந்த பேருந்தின் பின் வழியில் ஏறினான். பேருந்து முழுதும் ஒரு நோட்டமிட்டான். முன்னால் இருந்த ஒரு பெண்ணின் அருகில் மட்டும் ஒரு இடம் காலியாக இருந்தது. மற்ற அனைத்தும் நிரம்பிவிட்டன. அவன் அந்த இடத்திலே அமர்ந்திடலாம் என்று முன்னால் சென்றான். நவநாகரீகம் புகுந்துவிட்ட சென்னை மாநகரில் முன்பின் அறியா ஆண் பெண் அருகருகில் அமர்வதெல்லாம் சர்வ சாதாரணமாகிட்ட விடயமாதலால் அவனுக்கு அது ஒன்றும் சங்கூச்சத்தை ஏற்படுத்தவில்லை. முன்னால் சென்றவன் அமர்வதற்கு முன்னர் அந்த பெண்ணின் முகத்தை பார்த்தான். சட்டென அவன் முகம் பதற்றமடைந்து ஏதோ நடுக்கத்தை வெளிபடுத்தியது. அங்கு அமராமல் நகர அவன் எத்தனிக்கையில் அந்த பெண் அவனை பார்த்தாள். அவள் முகமும் சட்டென உணர்வுச்சொல்லா வகையில் மாற்றம் கொண்டது. அவள் பார்த்துவிட்டதை உணர்ந்தவன் அந்த பேருந்தின் இடமும் புறமும் என எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் முன்னும் பின்னும் கால்களை நகர்த்திட்டான். அவனது தயக்கத்தை உணர்ந்த அவள்,

‘பரவாயில்ல.. உட்காருங்க..’ என்றாள்.

‘பரவால..’ என்று ஒற்றை கட்டை சொல்லாய் அவன் பதிந்தான்.

அவளும் அவனை அதற்கு மேலே ஒன்றும் சொல்லவில்லை. அவள் கண்ணாடி துவாரம் வழியாக வெளியில் பார்த்துக்கொண்டு வந்தாலும் அவளது கடைகண்கள் அவ்வபோது இவனை பார்த்தது. அந்த பார்வையில் ஏதோ கூச்சமும், தயக்கமும் இருந்தது நன்றாக புலப்பட்டது.

பேருந்து அடுத்த நிறுத்தத்திற்கு வந்தது. ஒரு நான்கு ஆண்கள் அடித்துக்கொண்டு அதில் ஏறி உள்ளே வந்தனர். வந்தவர்களில் கட்டுமஸ்தான உடம்பில் இருந்த ஒருவன் அவளுக்கு அருகில் இருந்த இடத்தை பார்த்துவிட்டு ஆவலாக ஓடி வந்தான். அவன் வந்த வேகத்தை பார்த்த இவன், சட்டென அவள் அருகில் அமர்ந்துக்கொண்டான். வேகமாக அமர்ந்தாலும் அவனது உடல் உரோமம் கூட அவள் மேல் படாத கவனம் அவனிடத்தில் இருந்தது. அந்த திடமான மனிதன் இவனை முறைத்த விழிகளில் பலமுறை பார்த்துவிட்டு இவனிடம் பதில் பார்வை இல்லாத காரணத்தால் வேறு பக்கம் பார்க்கலானார்.

அவன் அருகில் இருந்த கம்பியையும் முன் சீட்டின் கம்பியையும் அவன் கெட்டியதாக பிடித்துக்கொண்டிர்ந்தான். எந்த வித திருப்பத்திலும் அந்த பெண்ணின் மீது சாய்ந்துவிட கூடாது என்னும் அவனது எண்ணம் தெளிவாக தெரிந்தது. அவர்கள் இருவரும் அடுத்த இரண்டு நிறுத்ததிற்கு பேசவில்லை. அதன் பின் அவன் சற்று சௌகரியமாக அந்த இருக்கையில் அமர்ந்தான். ஜன்னல் வழியாக வெளியில் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவளை இவன் பார்த்தான். இவனை அறியாமல் இவனின் வலக்கண்ணின் ஓரத்தில் கண்ணீர் துளிகள் பெருகியது. சட்டென மாற்று பக்கம் திரும்பிக்கொண்டு அந்த துளிகளை துடைத்துவிட்டு மீண்டும் அவள் பக்கம் திரும்பினான். அப்பொழுது அவளும் அவனை பார்த்துக்கொண்டிருந்தாள். அந்த இடை நேரத்தில் இருவரின் கண்களும் பார்த்துக்கொண்டது. சட்டென அவன் கண்ணை திருப்பி முன்னால் பார்த்துக்கொண்டான். அங்கு மீண்டும் அமைதி குடிக்கொண்டது.

சிறிது நேரம் அமைதிக்கு பிறகு அவன் பேச்சை ஆரம்பித்தான்.

‘எப்படி இருக்க?’ என்று கேட்டான்.

அவனது குரலை கேட்டு திரும்பியவள்.

‘இருக்கேன்…’ என்றாள்.

‘ம்ம்…’ என்று சொல்லிவிட்டு மீண்டும் நிசப்தத்தில் மூழ்கியது அந்த இடம். பேருந்தின் இரைச்சல் மட்டுமே கேட்டுக்கொண்டிருந்தது. காற்றில் முன் முகத்தில் விழும் அவளது முடியை அவள் அவ்வபோது தூக்கி பின்னால் போட்டுக்கொண்டிருந்தாள். அவள் அப்படி செய்யும் பொழுதெல்லாம் இவனது கண்கள் இவனை அறியாமல் அவளை ஒரு முறை பார்த்துவிட்டு வந்தது. அவன் அவ்வாறு பார்ப்பதை அவள் கவனித்தாள்.சற்றே தயக்கத்துடன்,

‘உங்களுக்கு மேரேஜ் ஆகிடுச்சா?’ என்றாள்.

உதட்டில் நமட்டு சிரிப்போடு இல்லை என்பது போல் தலையை ஆட்டினான்.

‘எத்தனை வருசம் இருக்கும்… ஒரு நாலு?’ என கேட்டாள்.

‘ஞாபகமில்லை’ என்று அவன் சொல்கையில் உள்ளுக்குள் நான்கு ஆண்டு ஆறு மாதம் இன்று மூன்றாவது நாள் என எண்ணிக்கொண்டான்.

‘மறக்கமாட்டீங்களா?’

‘மறக்குற மாதிரியான விசயங்களை நான் அப்பவே மறந்திடுவேன்னு உனக்கு தெரியாதா?’ என்று சொல்லிவிட்டு, பட்டென அறிந்தவனாய் –‘சாரி.. உங்களுக்கு தெரியாதா?’

‘வாங்க போங்கனு கூப்பிட வேண்டிய அவசியம் இல்ல’ என்றாள் அவள்.

அவளை பார்த்து ஒரு சிரிப்பு சிரித்துவிட்டு-‘இல்ல… பரவால…’ என்றான் அவன். சிறிது நேரம் அங்கு அமைதி இருந்தது. மீண்டும் அவன்,

‘நான் வேலை பார்த்த கம்பேனியில என்னை அசிஸ்டண்ட் மேனேஜரா ப்ரொமோட் பண்ணியிருக்காங்க’ என்றான்.

‘ம்ம்…’

‘இப்போதைய நிலையில உங்க வீட்டுக்கு வந்து கேட்டிருந்தா, வேற மாதிரி ஆகியிருக்கும்ல’ என்றான்.

‘என் குழந்தைக்கு போன வாரம் முதல் பிறந்தநாள் கொண்டாடினோம்’ என்றாள் அவள். குறிப்பால் அவள் உணர்த்த எண்ணிய விசயம் உணர்ந்தவனாய் அவளை பார்த்து ஒரு சிரிப்பு சிரித்தான். பேருந்து அவளின் நிறுத்தத்திற்கு வந்தது. அவனிடம் கொஞ்சம் பேசவேண்டும் அருகில் இருக்கும் பூங்காவிற்கு போகலாம் என்று அவள் அவனை அழைக்க அவனும் சற்று சங்கடத்தோடு ஒத்துக்கொண்டான். இருவரும் இறங்கி அருகில் இருந்த ஒரு பூங்காவிற்கு சென்றனர்.

‘இந்த இடம் ஞாபகத்தில் இருக்கா?’ என்றாள் அவள்.

‘மறக்கவேண்டிய விசயத்தில இது இல்ல’ என்றான்.

‘ம்ம்… நான் மறந்துட்டேன்’

‘ஞாபகத்தில் இருக்கானு முதல்ல கேட்டது நீங்க தான்’ என்றான் அவன். அவளை பார்க்காமல் எங்கோ வேடிக்கை பார்த்துக்கொண்டு.

‘இன்னும் உங்க பேச்சு திறமை கொஞ்சம் கூட குறையவே இல்ல’ என்று சொல்லிவிட்டு அவள் அவனை வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள்.

‘நான் நீங்க ரசிக்கவேண்டிய ஆள் இல்ல…’ என்று அவன் சொல்லியதும் அவளுக்கு சுய உணர்வு வந்தது.

‘சரி… நீங்க இன்னும் மேரேஜ் பண்ணிக்காம இருக்கிறது எனக்கு ஏதோ குற்ற உணர்வா இருக்கு… எனக்காக மேரேஜ் பண்ணிக்கலாமே.. எப்போ கல்யாணம் பண்ணிகிறதா உத்தேசம்?’

‘நீ செத்த பிறகு…’ என்று அவனின் கடிந்த சொல்லில் அவள் சற்றும் நடுக்கம் கொள்ளதான் செய்தாள். பிறகு இயல்புக்கு திரும்பி,

‘நான் செத்துட்டா என்னைய மறந்துருவீங்கனா.. நான் இப்ப கூட சாகுறேன்…’

‘உன்னை மறப்பேன்னு நான் என்னைக்கும் சொல்லல… கல்யாணம் பண்ணிகிறேன்னு சொன்னேன். பண்ணிப்பேன். இறப்பை, சாவை மணமுடிப்பேன். நானும் பின்னாலயே செத்துபோவேன்…’

‘ஏன்…?’

‘அதான் நான் உனக்கு சொன்ன வாக்கு…’

‘இங்க பாருங்க… நாம பேசின நாட்கள் எல்லாம் கடந்து போச்சு… உலகம் மாறிடுச்சே உங்களுக்கு புரிலயா? ஏன் இப்படி என்னை சங்கட படுத்துறீங்க…’ என்று அவள் கேட்க அவன் நமட்டு சிரிப்பு சிரித்துவிட்டு சற்று நகர்ந்து நடந்தான்.

‘நீங்க அப்போ எனக்கு இன்னொரு வாக்கு கொடுத்தீங்க… ஞாபகம் இருக்கா?’

‘என்ன?’

‘நான் என்ன சொன்னாலும் கேட்பேனு சொன்னீங்களே? ஞாபகம் இருக்கா..’

‘ம்ம்…’

‘அப்போ… இப்போ நான் சொல்றேன் கல்யாணம் பண்ணிக்கோங்க…’

‘என் காதலி என்ன சொன்னாலும் கேட்பேனு சொன்னேன்… நீங்க சொன்னதை நான் ஏன் கேட்க வேணும்?’

‘ம்ம்… உங்கள பேச்சால யாராலயும் ஜெயிக்க முடியாது. ஆனா என்னோட உணர்வுகள கொஞ்சம் நினைச்சு பாருக்களேன்…’ என்றாள் அவள். அவள் கூறியதை கேட்டவன் சற்று அங்கும் இங்கும் உலாத்தினான். பதில் எதுவும் அவன் சொல்லவில்லை.அவன் முகத்தில் எள்ளும் கொல்லும் வெடித்தது. அவன் கோபத்தின்  உச்சியில் இருந்தான். இந்த மாதிரி சமயத்தில் அவனிடம் வாயை கொடுப்பது வழியில் போகும் ஓணானை வேட்டியில் உட்டுக்கொள்ளும் கதை என்பது அவளுக்கு தெரியும். எனவே அவள் முடிந்த வரை அமைதியாக இருந்தாள். ஆனால் அவன் பேசுவதாக தெரியவில்லை. எனவே அவளே மீண்டும் பேசலானாள்,

‘நான் கேட்டதுக்கு பதில் இல்லையே… என்ன மேரேஜ் பண்ணிகிறீங்களா? அம்மாட்ட பேசுறீங்களா?’

‘எதுக்காக நான் மேரேஜ் பண்ணிக்கணும்? நான் மேரேஜ் பண்ணி ஒரு பொண்ணோட வாழ்க்கைய நாசமாக்கவா?’

‘ஏன் நான் பண்ணிக்கலயா?வேறு ஒருத்தர நான் கட்டிக்கலயா?’

‘அதான்…அதான் எனக்கும் புடிபடமாட்டேங்குது… எப்படி? எப்படி உன்னால முடிஞ்சுது…’

‘வாழ்க்கைய அதோட ஓட்டத்துல ஓட பழகிக்கணும்ங்க… அப்போதில இருந்து நீங்க நிஜத்தை தாண்டி அதிகம் கனவுலயே வாழ்ந்துட்டீங்க…’

‘ஹா… ம்ம்…’

‘எனக்கு உங்க கூட வாழமுடியாத வாழ்க்கைய நினைச்சு வருத்தம் தான். அதுக்காக எனக்காக இருக்கிறவர உங்கள நினைச்சுட்டு ஏமாத்த முடியாது இல்லையா? அதனால நான் உங்கள அடிமனசுல போட்டு புதைச்சுகிட்டேன்…’

‘அப்படி ஒண்ணு என்னால முடியல மா… என்னால சத்தியமா முடியல’ என்று சொல்லிவிட்டு முதல் முறையாக அவள் பக்கம் திரும்பியவன் கண்களிலிருந்து மாலையாக வழிந்தது கண்ணீர். அதை கண்ட அவள் பதட்டமடைந்து,

‘அய்யோ.. என்னது இது… நீங்க அழுகுறீங்க… நீங்க கலங்கி நான் பாத்ததே இல்லயே… அய்யோ.. நான் என்ன பண்ணுவேன்…. பாவம் பண்ணிட்டேன்…. பாவம் பண்ணிட்டேன்… அய்யோ…’ என்று அவளும் கதற. அவன் முகத்தில் கையை வைத்துக்கொண்டு இன்னும் தேம்பினான். அவளது கைகள் அவனது கைகளை பற்ற நினைத்தது, கன்னங்களில் வழியும் நீரை துடைக்க நினைத்தது, அவனை தன் மார்பில் அணைத்து தலையை கோத துடித்தது. ஆனால், அவளின் கணவரின் முகம் முன்னால் தோன்ற அவள் அமைதியானாள்.

‘என்னங்க… ப்ளீஸ்… எல்லாரும் பாக்குறாங்க….’ என்று அவள் கூற, அவன் சற்றே தேறியவனாய் கண்களை துடைத்துக்கொண்டு நடந்தான். தூரத்தில் தெரிந்த ஒரு குழாயை துறந்து தண்ணீரை கொண்டு முகத்தை கழுவினான். கழுவியன் முகத்தில் ஒரு தெளிவு. எழுந்ததும் அவளை பார்த்து,

‘குட்டிக்கு என்ன பெயர்?’ என்றான்.

‘உங்க பெயர் தான்…’ என்றாள் அவள்.

‘உன்னை விட்டு அப்படி கூட போகமாட்டேங்குறன் போல நான்…. ஹா… வீட்டுக்கு போனதும் பெயரை மாத்திடு… நான் இல்ல என் பெயர் கூட உனக்கு சொந்தமில்ல…’ என்றான் அவன் இன்னும் முகத்தில் இருக்கும் சிரிப்பு மறையாமல். அவளும் நகைத்தாள்.

‘நல்லா பாத்துகிறாரா?’

‘ம்ம்… என்னையே உலகமா பாக்குறாரு…’

‘சில சமயம் தோணும்… அவ்வளவு தானா உலகம்னு… அப்படி இல்ல ல…’

‘ம்ம்…’ என்று சொல்லிவிட்டு அவனையே வைத்த கண் வாங்காமல் அவள் பார்த்துக்கொண்டிருந்தாள்.

‘நான் உன்னுடைய கல்யாண மண்டபத்தில முதல் வரிசையில உட்கார்ந்திருந்தேனே… எப்படி இருந்துச்சு உனக்கு?’

‘அதெல்லாம் எதுக்கு இப்போ?’

‘ம்ம்… எனக்கு எப்படி இருந்துச்சுனு எனக்கு சொல்லணும்…’ என்று சொல்லிவிட்டு அவளை பார்த்தான். அவள் அவனை பார்த்துக்கொண்டிருந்தாள். ஒரு பதிலும் பேசவில்லை. அவன் தொடர்ந்தான்,

‘ஓடி வந்து உன்ன இழுத்துட்டு போயிடணும்னு இருந்துச்சு. என்னைய விட்டுட்டு இன்னொருத்தன் கூட உட்கார எப்படி டி உன்னால முடிஞ்சுதுனு ஓடி வந்து உன்ன அறையணும்னு தோணுச்சு. அங்க இருக்குற சேர் எல்லாத்தையும் தூக்கி போட்டுட்டு ஒடணும் போல இருந்துச்சு. உங்க அப்பா, அந்த மாப்பிள்ளை எல்லாரையும் கொன்னுடலாம்னு தோணுச்சு. உன்ன எல்லார் முன்னவும் கிஸ் பண்ணிடலாம்னு தோணுச்சு. கத்திட்டு ரோட்டுல ஓடணும்னு தோணுச்சு…’ என்று அவன் சொல்லும்போதே அவன் குரல் நடுக்கம்கொண்டு தயக்கத்தில்-‘உன் மடியில படுத்து அழுகணும்னு தோணுச்சுடி…’ என்றான். அவள் கண்களில் கண்ணீர் பீரிட்டது. அவள் வேறு பக்கம் திரும்பிக்கொண்டாள்.

‘ப்ளீஸ்… இந்த பக்கமே அழுகேன்… எனக்கு உன் கண்ணீர பாக்கணும்டி… எனக்காக வர்ற கண்ணீர கடைசியா ஒரு முறை பாத்துக்குறேன்டி..’ என்று அவன் சொல்ல அவள் திரும்பாது வேறு பக்கமே இருந்து அழுதுக்கொண்டிருந்தாள்.

‘அவன் உன்ன தொடுறப்போலாம் … என் ஞாபகம் வரலயா…’ என்று பல்லை கடித்துக்கொண்டு கேட்டான் அவன். அழுதுக்கொண்டிருந்தவள், அதிர்ச்சியுற்றவளாய் அவனை பார்த்து ‘நான் அவரின் மனைவி’ என்றாள். பட்டென கோபத்தில் இருந்து வந்தவன் எத்தகைய தகாத வார்த்தையை கேட்டுவிட்டதை நினைத்து வெட்கிக்கொண்டான். ‘மன்னிச்சிடு… சாரி’ என்றான். அவனை நன்கு உணர்ந்த அவள் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

‘ஸோ… சீக்கிரம் மேரேஜ் இன்விடேஷன் எதிர்பார்க்கலாமா?’ என்றாள்.

‘தெரில… நடக்கலாம்… ஆனா உனக்கு அழைப்பு இருக்காது. உன்னை பார்த்தா நான் தாலி கட்ட மாட்டேன்…’ என்றான் அவன் இப்பொழுது சிரித்துக்கொண்டே. அவளும் ஒரு எதார்த்த சிரிப்பு சிரித்தாள்.

இருவரும் அங்கிருந்து அடுத்த சில நொடிகளில் கிளம்பி பூங்காவின் வெளியில் வந்து சொல்லிவிட்டு மாற்று பாதையில் நடந்தனர். தூரம் சென்ற பிறகு இருவரும் ஒரு முறை திரும்பி பார்த்துக்கொண்டனர். ஒரு புன்முறுவலோடு…!!!

-தம்பி கூர்மதியன்

Comments

Popular posts from this blog

சிட்லபாக்கத்தில் தொடரும் வாழ்வியல் போராட்டம்!

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..

GST – நான் அறிந்தவை!