செல்வங்கள் இல்லா – செங்கற் வீடு..வீட்டில் கூடியிருந்த உறவுகள் எல்லாம் கிளம்பி சென்றுவிட்ட நேரம். கடைசியாக இருந்த உறவினரும் கிளம்பும்பொழுது அப்பா, கார் அந்த தெருவின் முற்றத்தில் திரும்பும் வரையில் நின்று பார்த்துக்கொண்டிருந்தார். ஏனோ கார் மறைந்து சென்ற பிறகும் சில நொடிகள் கார் போன திசையையே அவர் பார்த்துக்கொண்டிருந்தார். சட்டென சிரித்துக்கொண்டு வீட்டினுள் நுழைந்தார். வீட்டின் வாசலில் ஒரு குழந்தை வாசல் படியை பிடித்துக்கொண்டு தொங்க, இன்னொரு குழந்தை உள்ளிருந்து இழுத்துக்கொண்டிருந்தது. சட்டென அவர் பதறி அந்த குழந்தைக்கு அருகில் செல்கையில் அது வெறும் கானலென்று உணர்ந்து சிரித்துக்கொண்டார். திரும்பி வீதியில் பார்த்தார்.

ஒரு மிதி ரிக்சா வண்டி காரர் குழந்தைகளை வண்டியில் வைத்துக்கொண்டு நின்றுக்கொண்டிருந்தார். சற்றுமுன் வாசலை பிடித்து தொங்கிக்கொண்டிருந்த குழந்தை பள்ளி சீருடையில் ஓடி சென்று ஏறிக்கொண்டது. அந்த குழந்தை இவரை பார்த்து கைகளை ஆட்டி டாட்டா சொல்கிறது. இவரும் பதிலுக்கு டாட்டா காட்டுகையில் குழந்தையும் வண்டியும் இருந்த இடத்தில் இல்லாததை உணர்ந்தார். மீண்டும் சிரித்துக்கொண்டார்.

வீட்டினுள் நுழைகிறார். நேற்று தான் கட்டி முடித்த வீடாக வீட்டை சுற்றி பார்த்தார். வாசலை பிடித்து தொங்கிய குழந்தையை உள்ளே இழுத்துக்கொண்டிருந்த குழந்தை அங்கு ஒரு மூலையில் நின்றுக்கொண்டிருந்தது. அதன் கண்களில் ஏதோ பயங்கரம் உணரப்பட்டது. அது ஏதோ ஒரு திசையை பார்த்து நடுங்கிக்கொண்டிருந்தது. அப்பா அந்த திசையை நோக்கினார். அம்மா பூரி மாவு திரட்டும் கட்டையை தூக்கிக்கொண்டு அந்த குழந்தையை நோக்கி ஆக்ரோஷமாக விரைந்தார். அய்யோ என்று பதறியவராய் அப்பா அவரை தடுப்பதற்காக பாய்ந்து சுவற்றில் முட்டிக்கொண்டார். ஆக்ரோஷமான அம்மாவும் அங்கில்லை, பயந்துநடுங்கிய குழந்தையும் இல்லை.

நேராக நடந்து சென்று வீட்டின் நடுமத்தியில் இருந்த ஒரு சாய்வு நாற்காலியில் அமர்ந்தார் அப்பா. மேலும் கீழும் இரண்டு ஆட்டு ஆட்டிவிட்டு சட்டென நிறுத்தியவராய் அம்மாவின் பெயரை சொல்லி உரக்க அழைத்தார். சற்று நேரத்தில் அம்மா மெதுவாக உள் அறையில் இருந்து வெளியில் எழுந்து வந்தார். அவள் கண்களில் அழுததன் வீக்கம் தொற்றிக்கொண்டிருந்தது. அம்மாவை பார்த்ததும் அப்பா அதனை உணர்ந்துக்கொண்டு ஒரு சிரிப்பு சிரித்தார்.

‘பக்கத்துல வந்து அந்த சேர்-எ இழுத்து போட்டு உட்காரேன்..’ அப்பா அம்மாவிடம் சொன்னார்.
அருகில் வந்த அம்மா நாற்காலியை எடுக்காது அப்பாவின் காலருகில் கீழே அமர்ந்தார். சட்டென பதறிய அப்பா, மேலே ஏறி உட்கார சொல்ல அம்மா அதை மறுத்து அப்பாவின் கைகளை இறுக பிடித்துக்கொண்டார். அப்பா அதற்கு மேலாக எதுவும் பேசவில்லை. தனது மற்றொரு கையால் அம்மாவின் கைகளை தடவி கொடுத்தார். இது சரிவராது என்று மனதிற்குள் எண்ணியவராய் அவரும் கீழே இறங்கி உட்கார்ந்தார். வேண்டாம் என்பது போல தடுக்க வந்த அம்மா, அப்பா அமர்ந்துவிட்டதை அறிந்து அமைதியானார்.

‘உனக்கு நம்மல சுத்தி ஏதாச்சும் தெரியுதா?’ அப்பா அம்மாவை கேட்டார் இன்னும் கைகளை விடாமல். அம்மா குனிந்திருந்த தலையை உயர்த்தி அப்பாவை பார்த்தார். அப்பா முகத்தில் இருக்கும் சோகத்தை பார்த்துவிட்டு ‘இல்லை’ என்பது போல தலையை அசைத்துவிட்டு மீண்டும் குனிந்துக்கொண்டாள்.

‘கள்ளி… உன்னய பத்தி எனக்கு தெரியாதா…? எனக்கே தோணுது.. உனக்கு தோணாதா?’ என்று அப்பா கேட்டார். அம்மா குனிந்திருந்த தலை நிமிரவில்லை. அப்பா மெதுவாக அம்மாவின் தாடையில் கையை வைத்து மேலே உயர்த்தினார். அம்மாவின் கண்கள் தேங்கிய குட்டையாக நின்றது. அப்பா தனது நெஞ்சின் மீது அம்மாவின் முகத்தை சாய்த்துக்கொண்டார். எங்கிருந்து வந்தது என்று தெரியாது திறந்துவிட்ட ஓடையை போல சல சலவென்று அம்மாவின் கண்கள் கண்ணீரை வடித்தது. இதை முன்பே எதிர்பார்த்தது போல அம்மாவின் முகத்தை அப்பா இன்னும் அரவணைப்பாக அணைத்துக்கொண்டார். அம்மா பேசவில்லை. சிறிது நேரத்தில் அம்மாவின் விசும்பல் சப்தம் மட்டும் கேட்டுக்கொண்டிருந்தது. அடுத்த நில நொடிகளில் அதுவும் நின்றது. அப்பா தொடர்ந்தார்,

‘நேத்து தான்.. நேத்து போல தான் இருக்கு.. துக்கிலியோண்டு இருந்துகிட்டு ஜட்டி போடமாட்டேனு ஓடுவா அந்த சின்னவ… ஹா.. இப்ப பாரேன்…’ என்று சொல்லிவிட்டு அப்பா ஒரு நமட்டு சிரிப்பு சிரித்தார். அம்மா அப்பாவின் கைகளை பிடித்துக்கொண்டார். தான் அழலாம் அப்பா அழுதிட கூடாது என்று அம்மா கவனமாக இருந்தார். அதை உணர்ந்த அப்பா,

‘என்னய அடிக்கடி கேப்பியே.. சின்ன வயசுல இருந்து தூக்கி வளர்த்த அம்மா மேல வச்ச அளவுக்கு நடுவுல வந்து என் மேல எப்படி மாமா உங்களுக்கு அந்த அளவுக்கு பாசம் இருக்குனு…’ என்று அப்பா சொல்ல அம்மா ‘ஆம்’ என்னும் கண்களோடு பதிலுக்காக காத்திருந்தாள்.

‘அம்மா எனக்கு இந்த உலகத்த பார்க்க கத்துகொடுத்தாங்க.. நீ எனக்கு இந்த உலகத்துல வாழ கத்துகொடுத்திருக்கடி.. அன்னைக்கு எந்த சமயத்துல உன் கழுத்துல அந்த மூணு முடிச்ச போட்டேனு தெரியல… இறுக பிடிச்சுகிட்டு கெட்டியா கெடக்கு டி.. சாகுற வரை என்கூடவே இருப்ப பாரேன் நீ…’ என்று அப்பா உணர்ச்சியில் சொல்ல அந்த நிமிடத்தில் முதல் முறையாக அம்மா வாயை திறந்தார்.

‘என்ன மாமா இப்படி சொல்லுறீங்க.. நான் சுமங்கலியா போயிடணும்.. நீங்க இல்லாத உலகத்துல இந்த பாவி மவ இருந்து என்ன செய்வேன்..’ என்று அம்மா கலங்க அப்பா சிரித்தே விட்டார்.

‘அடி கள்ளி… நீ இல்லாத உலகத்துல நான் எவ்வளவு கஷ்டபடுவேன்னு என் அருமை பொண்டாட்டிக்கு மறந்து போச்சா…’ என்று சொல்லிவிட்டு சேஷ்டை பாவமாக முகத்தை வைத்துக்கொண்டார். ஆழ்ந்த சிந்தையில் இறங்கிய அம்மா சிறிது நேரத்தில் குழந்தை முகத்தோடு,

‘அப்போ நான் போகுறப்போ உங்களையும் கூட்டிட்டு போயிடுறேன் சரியா..’ என்று கண்களை விரித்துக்கொண்டு அப்பாவை பார்த்துக்கேட்டார். இத்தனை வருடத்தில் இன்னும் அம்மாவின் குழந்தை புத்தி போகாததை நினைத்து அப்பா சிரித்துக்கொண்டார். அப்பா மீண்டும் யோசனையில் இறங்கினார்.

‘பெரியவ போனப்போ .. சின்னவ இருக்கானு இருந்துச்சு… மனசுக்கு கொஞ்ச வலி தான்.. ஆனா இப்ப சின்னவளும் போயிட்டபோ.. ஏதோ வெரிச்சோனு இருக்குல…’ என்றார் அப்பா. அப்பாவை உணர்சிவசபட செய்யகூடாது என்று எண்ணிய அம்மா,

‘என்னைக்கா இருந்தாலும் போக வேண்டியவக தானேங்க.. நம்ம வீட்டுலயேவா வச்சுக்க முடியும்?’ என்றாள். அதுவும் சரிதான் என்பது போல தலையை ஆட்டினார் அப்பா.

‘நெனச்சு பாரேன்… இனிமே அங்க போகணும்.. இங்க போகணும்.. இத செஞ்சு தாங்கபா.. அது வேணும்பானு என் பொண்ணுங்க என் கிட்ட வந்து நிக்காதுல.. அவ அவளுக்கு செய்ய அவ அவ புருசன் இருக்கானுங்க ல…’ என்றார்.
‘ஆமா.. நான் இங்க வந்துட்ட பிறகு என் அப்பாருகிட்ட போயி தான் நின்னேனாக்கும்.. அப்போ நீங்க தான் எல்லாம்னு உங்க்கிட்டயே தானே கிடந்தேன்.. அது மட்டும் இனிச்சுதா..?’ என்றாள்.

‘அது புருங்குற பருவம்.. இது அப்பாங்குற பருவம்.. ரெண்டுக்கும் வித்தியாசம் இருக்குல கண்ணம்மா…’

‘ஆமா ஆமா.. கண்டுட்டாங்க வித்தியாசத்த.. ரெண்டும் ஒரே ஆளு தானே.. போறவளுக போயிட்டாளுக இருக்குறவளுக்கு என்னாத்த வேணும்னு கேட்டு செய்யிறத விட்டுபுட்டு…. பேச்ச பாரு’ அம்மா மனதுக்குள் வருந்தினாலும் அப்பாவின் பேச்சை மாற்ற மெனக்கெட்டாள்.

‘என் ரெண்டு பொண்ணையும் தான் கட்டி கொடுத்துட்டேனே.. இனி எவ இருக்குறவ’ என்றார் அப்பா.

‘அய்யா.. ராசா.. ஏன் கேட்கமாட்டீரு… 28 வருசத்துக்கு முன்னால என் அப்பனையும் ஆத்தாளையும் விட்டுபுட்டு நீரே கதின்னு ஓடி வந்தேனே எனக்கு என்னாத்த செஞ்சுபுட்டீரு…? வந்த மொத வருசமே ஒரு புள்ளய கொடுத்தீரு.. அத நான் பெத்துபோட்டதும் ஏதோ அதன் உலகம்னு கெடந்தீரு.. திரும்ப இன்னொன்னுக்கு தான் என்கிட்ட வந்தீரு… அதும் பெத்ததும் அதுதான் எல்லாமேனு போயாச்சு.. இந்த பொண்டாட்டினு சொல்லுவாங்களே அது ஞாபகம் கெடக்குதா…’ என்று அவள் கேட்க அப்பா சிரித்துக்கொண்டார். அம்மாவின் செல்லமான கோபத்தை தணிக்க அப்பா கொஞ்சலானார், கெஞ்சலானார் அம்மா முகம் கொடுக்கவில்லை. சட்டென நெருங்கியவர் அம்மாவின் கன்னத்தில் ‘ப்ச்..’ என்று முத்தமிட்டார்.

அம்மாவின் அடியிலிருந்து உச்சம் வரை சுரீரென்று ஏதோ மின்சாரம் பாய. பல வருடம் கழித்து கிடைத்த அந்த முத்தத்தின் எச்சில் ஈரத்தை கன்னங்கள் தாங்கிக்கொண்டிருக்க நாணத்தின் மிகுதியால் அப்பாவை பார்த்து,

‘இப்ப தான் சின்ன குழந்தையினு நெனப்பு.. அசிங்கம் பண்ணுறத பாரேன்…’ என்று அம்மா செல்லமாக உதட்டில் சிரிப்போடே கடிந்துக்கொண்டார்.

‘அடியே.. என் பொண்டாட்டிக்கு நான் எப்போ வேணா கொடுப்பேன் டி முத்தம். படுத்த படுக்கையா கெடந்தாலும் என் பொண்டாட்டி வாயில இருந்து வர்ற ஒரு முத்தம் போதும் அதுதான் எனக்கு மருந்து தெரியுமுல’ என்று சொல்லிவிட்டு அப்பா மீசையை முறுக்கிக்கொண்டார்.

‘ஆமா… இளம ஊஞ்சலாடுது.. நானும் சேர்ந்து ஆடுறேன் வாங்களேன்..’ என்று சொல்லிவிட்டு அம்மா எழுந்து முன்னால் நடந்தாள். திருமணத்தின் போது நீயே என் உலகம் என்று இருந்து பிறகு அவர்களின் உலகம் -மகள்கள், அவர்களது பள்ளி, கல்லூரி, வேலை, திருமணம் என்று விரிந்து இப்பொழுது கடைசியில் மீண்டும் அந்த இருவரில் வந்து நின்றுவிட்டதை அவர்கள் உணர்ந்தனர். அந்த வயதில் வீட்டினுள் ஓடி விளையாடிய அந்த பெரியவர்கள் இருவரும் அந்த மாடிபடிகளில் அமைதியாக உட்கார்ந்திருந்தனர்.

அப்பா மனதிற்குள் ஆயிரம் நினைவுகள் ஓடிக்கொண்டிருந்தது. அம்மா தனக்காக எல்லாவற்றையும் மனதில் புதைத்ததை அறிந்த அப்பா தானும் தனது எண்ணங்களை புதைத்துக்கொண்டார். மகிழ்வதாய் நடித்திருந்த அந்த இருவரும் ஓய்ந்து போய் அந்த படிக்கட்டுகளில் அமர்ந்திருந்தனர். இருவர் மனதும் அவர்களின் மகள்களின் நினைவலைகளை ஓட்டிக்கொண்டிருந்தது, இனி வாழ்க்கை எப்படி இருக்கும் என்னும் யோசனையும் இருவருக்குள்ளும் எழுந்துக்கொண்டிருந்தது. இனி அவர்களுக்கு பிறக்க போகும் பிள்ளைகளுக்கு நமக்கு முழு உரிமை இருக்குமா என்னும் சந்தேகமும், அப்படி இருக்கும் பட்சத்தில் தமது பிள்ளைகளை போலவே அவர்களையும் சிறப்புமிக்க வளர்க்கவேண்டும் என்று எண்ணிக்கொண்டனர். உலகமே பிடியறுந்து நிற்பதாய் உணர்ந்தனர் இருவரும். ஒரு சமயம் ஏதோ ஒரு மாப்பிள்ளை வீட்டில் போய் தங்கிவிடலாமா என்று அவர்கள் மனதில் உதித்தாலும், அது சரியான செயல் இல்லை என்று தங்களை தாமே சமாதானபடுத்திக்கொள்வார்கள். இதற்கு தான் ஒரு ஆண் பிள்ளை வேண்டும் என்று மனதில் நினைப்பார்கள். ஆனால் இந்த காலத்தில் ஆண் பிள்ளைகள்  கூட அப்பா அம்மாவோடு தங்குவதில்லையே என்று தங்களுக்கு தானே சமாதானம் செய்துகொள்வார்கள். அந்த இடம் நிசப்தம் கொண்டிருந்தது. இருவரும் பேசவில்லை. நொடிகள் கடந்தது, நிமிடங்கள் கடந்தது… அங்கு ஒரே அமைதி.

சட்டென வீட்டினுள் ஏதோ ஒரு ஒலி. அது அப்பாவின் அலைப்பேசியின் அழைப்பொலி. இருவரும் முண்டி அடித்துக்கொண்டு ஒரு குழந்தையை போல ஓடினர். அம்மா முன்னால் சென்று அலைப்பேசியை எடுத்தாள். அங்கு பேசுபவள் சின்னவள். ‘என்னமா.. எப்படி இருக்கு வீடு.. செட்டாகிடுச்சா..?’ என்று அம்மா கேட்டுக்கொண்டிருக்கையில் அம்மா கண்களின் ஓரம் கண்ணீர் கசிகிறது. அப்பா முண்டிக்கொண்டு எனக்கு எனக்கு என்று வரிசையில் நிற்கும் குழந்தை போல ஆர்பரித்துக்கொண்டிருந்தார். தூரத்து மகிழ்வில் அந்த இருவரும் கசியும் கண்களோடு சிரித்துக்கொண்டே பேசிக்கொண்டிருக்கிறார்கள். பாசத்தோடு…!!!


-தம்பி கூர்மதியன்

Comments

Popular posts from this blog

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..

பைக் ஓட்டுபவர்கள் கண்டிப்பா பாக்கவும்..!!

அதிகாரி சாமி