இழந்து தவிக்கிறேன்...அன்று இரவில் கொஞ்சம் அதிகமான வேலை தான். மறு நாள் என்று வேலையை தள்ளிப்போடுவது உசிதமில்லை என்று அன்றே முடித்துவிடலாம் என்று உட்கார்ந்துவிட்டேன். இரவு 10 மணி கடந்து கடிகாரம் ஓடிக்கொண்டிருந்தது. ஒருவழியாக முடித்துவிட்டு அலுவலகம் கொடுக்கும் வண்டியை புக் செய்து அந்த காரில் ஏறி வீட்டிற்கு புறப்பட்டேன்.

இரவு நேரத்தில் எப்பொழுதும் அலுவலக கார்கள் விமானத்தை பின்பற்றும். சரமாரியாக இடுக்கிலும் சந்துகளிலும் புகுந்து சென்றுக்கொண்டிருந்தார். என்ன தான் அது தவறாக இருந்தாலும் அந்த லாவகத்தை பாராட்டி தான் தீர வேண்டும். குரோம்பேட்டை மேம்பாலத்தை அடைந்து இறக்கத்தில் ஒரு திருப்பத்தில் ஒரு சப்தம்… ‘சடார்’ என. முன்னால் இழுத்து தள்ளப்பட்டேன். எனது இருக்கப்படியால் ஒன்றும் ஆகவில்லை. வண்டி ஆடிக்கொண்டே ஒரு ஓரமாக சென்று நின்றது. வண்டியின் வலப்புறம் ஒரு பல்சர் பைக் நொறுங்கி போய் இருவர் கீழே கிடந்தனர்.

அய்யோ என்று பதறியவனாய் வண்டியில் இருந்து கீழே இறங்கி அவர்களை நோக்கி ஓடினேன். அதில் ஒருவன் மட்டும் அய்யோ தண்ணீர் கொடுங்களேன் என்று கதறியவனாய் இருக்க, இன்னொருவன் எழுந்து சரியாக நின்றுக்கொண்டிருந்தான். அவர்கள் விழுந்த வேகத்தை பார்த்த நான் அவர்கள் பிழைப்பதே கடினம் என்றிருந்தேன். ஆனால், அவன் அப்படி ஒன்றும் ஆகாதவனாய் நின்றது எனக்கு மகிழ்வை தந்தது. இன்னொருவனுக்கும் தண்ணீர் கொடுத்ததும் அவனும் சரியானவனாக தோன்றினான். இருவருக்கும் எந்த பாதிப்பும் இல்லையே என்பதை ஊர்ஜிதபடுத்த அவர்கள் மேல் கையை வைத்து பேச்சுக்கொடுத்தேன். இருவரும் மிகுந்த போதையில் இருந்தனர் என்று தெரிந்துக்கொண்டேன். அதற்கு மேல் அவர்களின் பால் எனக்கு தயவு தாட்சியம் தோன்றவில்லை. ஓரமாக வந்து நின்றுக்கொண்டேன். இந்த களேபரத்தில் ட்ராஃபிக் அதிகமாக இருந்த காரணத்தால் வண்டிகளை நிறுத்தி வழி ஏற்படுத்திக்கொண்டிருந்தேன். இது நடந்த சமயம் இரவு 10.35.

இந்த களேபரங்களெல்லாம் ஒரு வழியாக முடிகையில் எங்களது கார் மேலும் செல்லும் நிலையில் இல்லை என்பதை தெரிந்தோம். அப்பொழுது சரியாக 10.50 போல் அம்மா என்னை அழைப்பேசியில் அழைத்தார். வண்டி விபத்துக்குள்ளானதை சொன்னால் பயந்துவிடுவார் என்று வண்டி பழுதாகி நிற்கிறது அப்பாவை பைக் எடுத்துக்கொண்டு வரசொல் என்றேன். அடுத்த பத்தாவது நிமிடம் அப்பா அங்கு வண்டியோடு வந்துவிட்டார். அப்பாவோடு வண்டியில் செல்லும்போது நடந்த விபத்தை பற்றி சொன்னேன். வீட்டிற்கு வரும் வரை அப்பா ஏதோ யோசனையிலே ஆழ்ந்து கிடந்தார். வீட்டிற்கு வந்ததும் என்னை பார்த்து,
‘நீ வண்டி எடுத்துட்டு போகல இல்லயா?’ என்றார். இல்லை என்று பதில் சொல்லிவிட்டு என் வண்டி இருந்த இடத்தை நோக்கினேன். அங்கே எனது வண்டி இல்லை. வழக்கமாக எங்கள் வீட்டிலிருக்கும் அனைவரும் மாற்றி மாற்றி வண்டியை எடுத்துச்செல்லும் பழக்கம் இருப்பதால் ‘மாமா எடுத்துட்டு போயிருப்பார்’ என்று சொல்லிவிட்டு நான் வீட்டிற்கு சென்றேன். அப்பா ஏதோ சிந்தையிலே இல்லை என்று சொல்லிககொண்டே நின்றார். நான் வீட்டினுள் செல்கையில் அம்மாவிடம் வண்டியை மாமா எடுத்துச்சென்றாரா என்று கேட்டேன். அம்மா இல்லை என்றார். உள்ளே சென்று வண்டி சாவியை தேடினேன். அது இருந்த இடத்தில் அப்படியே இருந்தது. எனக்கு பதட்டம் அதிகமானது. அக்காவை அலைப்பேசியில் அழைத்தோம். அவள் எங்கள் வீட்டில் இருந்து கிளம்புகையில் மணி 10.30 இருக்கும். அவள் கிளம்புகையில் வண்டி இருந்ததாக சொன்னாள். மற்ற அக்கம் பக்கத்தாரிடமும், உற்றத்தாரிடமும் கேட்டோம். யாரும் வண்டியை எடுக்கவில்லை. நிலைகுலைந்து போனேன். என்னுடைய வண்டி-தொலைந்துபோனது. என் வண்டியை யாரோ திருடிவிட்டார்கள். என் உள்ளம் பதற்றமடைந்தது. அதுவரை என்னுள் இருந்த சிரிப்பு விலகிவிட்டது. எனது இரண்டு அக்காவை மணந்த மாமாவும், என் தாய் மாமாவும் ஒன்று கூடினர். கண்டிப்பாக போலீஸில் புகார் தெரிவிப்பது என்று முடிவெடுத்து அனைவரும் கிளம்பினர். நானும் அவர்களோடு கிளம்பினேன். என் மனம் ஏதோ சிந்தையிலே மூழ்கி கிடந்தது.

காவல் நிலையத்தில் புகார் கொடுக்கும் நேரத்தில் என் தாய் மாமா எங்கள் பகுதியை சுற்றி தேடி வருமாறு சொன்னார். நானும் எனது அப்பாவின் வண்டியை எடுத்துக்கொண்டு பகுதி முழுக்க சுற்றி வந்தேன். எங்கு தேடியும் எனது வண்டியை காணவில்லை. புகார் கொடுத்துவிட்டு அனைவரும் இன்னும் சிறிது நேரம் தேடிவிட்டு வீடு வந்து சேர்ந்தோம்.

என் மனது அந்த பைக்கோடு என்னுடைய உறவை எண்ணிக்கொண்டது…

அது நான் விகடனில் வேலை பார்த்துக்கொண்டிருந்த சமயம். எனக்கு ஒரு வண்டி வேண்டும் என்று மைலேஜ் நன்றாக தரக்கூடிய, அதே சமயம் பார்ப்பதற்கும் அழகாக இருக்க கூடிய ஒரு வண்டி வேண்டும் என்று தேடி கண்டுபிடித்து HONDA CB TWISTER வண்டியை வாங்கினேன். அளவிற்க்கொள்ளா அவ்வளவு மகிழ்வை எனக்கு அளித்தது. எனக்கென்று ஒரு நிலையான நண்பனில்லை. நான் நண்பனாக கருதியது எனது எழுத்தையும், எனது வண்டியையும்.

நான் இந்த வண்டி வந்த பிறகு பலதரப்பட்ட கட்டூரைகளை எழுதினேன். மோட்டார் விகடனில் எனது பங்களிப்பு அதிகமான காரணம் இந்த வண்டி. இந்த வண்டியை ஓட்ட ஓட்ட எனக்கு அதன் மேல் அளவு கடந்த பிரியம் ஏற்பட்டது. நான் அதிகமாக யோசிப்பது வண்டியை ஓட்டும்பொழுது தான். எனக்கு கோபம் வந்தால் ஒன்று எழுதுவேன், அல்லுது எனது வண்டியை எடுத்து ஓட்டுவேன். என்னுடைய பல கோபத்தை பார்த்தவன் அவன். என்னுடைய உற்ற நண்பன் அவன். அவன் மேல் ஏறி நான் பயணிக்கும் போது என்னை ஒரு நல்ல நண்பன் போல பார்த்துக்கொள்வான். மனம் சஞ்சலம் அடைந்து நான் உடைந்து போயிருக்கும் போதும், எனது எண்ணங்கள் வேறு எங்கோ பயணிக்கும்போதும் எனை தடம் மாறாது அழைத்து செல்வான்.

நான் வாழ்க்கையில் எடுத்து மிக முக்கியமான முடிவுகள் இரண்டு. ஒன்று என் வேலை. இன்னொன்று என் காதல். நான் விகடனில்-எனது எழுத்தை சுற்றியே எனது பணியும் இருக்கவேண்டும் என்று எண்ணினேன். ஆனால் என்னை IT துறைக்கு தான் செல்லவேண்டும் என்று என் வீட்டிலிருப்பவர்கள் வற்புறுத்தினர். வாழ்க்கை எனக்காக என்ன வைத்திருக்கிறது என்பதை நான் அசைபோட வேண்டிய சூழ்நிலையில் இருந்தேன். எனது வண்டியை எடுத்துக்கொண்டு நெடிய தூரம் ஓட்டிக்கொண்டு போனேன். எங்கே போகிறேன் என்று அறியாது நான் சென்னையையே அன்று சுற்றி வந்துக்கொண்டிருந்தேன். அவன் தன்மேல் என்னை சுமந்துக்கொண்டு எந்த ஆட்சேபனையும் சொல்லாமல் எனது மனதிற்கு அமைதி அளித்தான். அதன் வழியாக நான் எனது முடிவை எடுத்துவிட்டேன். சரியோ தவறோ என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் முடிவே எடுக்கமுடியாமல் திணறிய எனக்கு அன்று உற்ற துணையாய் இருந்தான்.

அடுத்து என் காதல். முதன்முதலில் என்னவள் என்னிடம் உரிமையாக கேட்டது-‘என்னை உன் வண்டியில கூட்டிட்டு போறியா?’ என்று. அவளோடு நான் நெருங்கி அமர்ந்த முதல் தருணம் அந்த வண்டியில் தான். அவளை காதலிக்க வேண்டும் என்று நான் முடிவெடுத்தது அந்த வண்டியில் தான். அவள் காதலை என்னிடம் சொல்லிய பிறகு எனது சந்தோசத்தை நான் வெளிபடுத்தியது அந்த வண்டியின் மூலம் தான். என்னுடைய எழுத்தை என்னால் இடையில் தொடரமுடியாமல் போய் இருந்தது. அப்பொழுதெல்லாம் நான் இருக்கிறேன் நண்பா என்று என்னை இறுக பிடித்துக்கொண்டிருந்தவன் அவன் தான். அவன் எனது உயிருக்குயிரான நண்பன்.

அன்றொரு நாள் அஜாக்கிரதையின் காரணமாக ஒரு கம்பியில் அவனை ஏற்றி அவனது டயரை கிழித்துவிட்டேன். டயரை மாற்றியாக வேண்டிய கட்டாயம். மெக்கானிக் கடையில் விட்டேன். ஒரு நீலமான கம்பியை விட்டு அவனுடைய டயரை கழட்டியபோது எனது நெஞ்சை கிழிப்பதாக இருந்தது. அவன் எனது நண்பனை தாண்டி எனது உடன்பிறவா தம்பியை போன்றிருந்தான் என்பதை நான் உணர்ந்தேன். கண்களை இறுக மூடிக்கொண்டேன். புதிய டயரை மாட்டிவிட்ட பிறகு அதை சுற்றி அடித்தார் அந்த மெக்கானிக். ஒவ்வொரு அடியும் என் மனதில் இடியாக விழுந்தது. வண்டி சரியான பிறகு அவன் மேல் கையை வைத்து ஒரு முத்தம் கொடுத்தேன். கண்களின் ஓரம் கண்ணீர் வழிந்தது. அன்று முடிவெடுத்தேன். இனி சாலை விதிகளை மதித்து, நன்கு கவனித்து, மெதுவாக தான் செல்லவேண்டும் என்று முடிவெடுத்தேன். என்னை சாலை விதிகளை மதிக்க வைத்தவன் அவன். அன்று முதல் நான் சாலை விதிகளை மதிக்க ஆரம்பித்தேன். மற்றவர்களுக்கும் அதையே போதித்தேன். என்னை நானாக முன்னிறுத்த உதவியவன் அவன்.

என்னவளோடு எனது இனிமையான பல நேரங்கள் அவனோடே அமைந்தது. எங்கள் இருவரையும் சுமந்து சென்றவன் அவன். அவனுடைய கண்ணாடியில் என்னவளை காட்டுவான். அவள் இல்லாத போது வானத்தை காட்டுவான். அவனது கண்ணாடியும் என் மனதும் ஒன்று தான். அவள் இல்லாத போது இரண்டும் வெறுமையாகவே இருந்தது. எங்களின் முதல் குழந்தையாகவே அவன் இருந்தான். எனக்கு மட்டுமல்ல என்னவளுக்கும் அவன் என்றால் உயிர். நான் வாழ்க்கையில் பல உயரத்திற்கு சென்றாலும் இவன் தான் என் செல்வம்-இவனை என்றும் பிரியமாட்டேன் என்று பல முறை அவளிடம் சொல்லியிருக்கிறேன். ஆனால் அத்தகையவன் இன்று என்னோடு இல்லை.

எவனோ ஒருவன் வந்து என் தோழனை, என் தம்பியை, என் குழந்தையை தூக்கி செல்லும்போது அவன் எவ்வாறு துடித்திருப்பான். நான் இல்லாது இன்னொருவனை சுமக்கும்போது எப்படி வருந்திருப்பான்.? அவனை இந்த நிலைக்கு தள்ளிவிட்டேனே என்று என் கண்களின் ஓரம் கண்ணீர் தாரையாகிறது. என் அம்மாவின் மடியில் படுத்துக்கொண்டு அன்று இரவு முழுதும் அழுது தீர்த்தேன். ஆனால் அவனது ஞாபகம் எங்கு சுற்றியும் எனக்குள்ளே திரிந்துக்கொண்டிருக்கிறது. என்னவளின் கைகளை இறுக பிடித்துக்கொண்டு அழுதேன். சாலையில் கத்திக்கொண்டே ஓடவேண்டும் என்று தோன்றியது. அவனை எடுத்தவன் கிடைத்தால் அவனை வெட்டிப்போடுகிற கோபம் கனலாக பறக்கிறது. சுற்றி திரிந்துவிட்டேன்.

இன்றுடன் அவன் என்னை பிறிந்து இரண்டு நாளாகிறது. அவன் நின்றுக்கொண்டிருந்த இடத்தை சென்று பார்த்தேன். ஆயில் சிறிது சிந்தி கிடந்தது. எவனோ அவனை எடுக்கும்போது பக்கத்தில் இருக்கும் சுவரை பிடித்துக்கொண்டு அழுதிருக்கிறான். அவனை அடித்து இழுக்க முற்பட்டிருக்கிறான் அந்த திருடன். ரத்தம் விட்டு கதறியிருக்கிறான். என் குழந்தை என்னை விட்டு பிரிக்கப்பட்டிருக்கிறான். அவனை உயிரில்லா ஒரு வண்டி என்று என்னால் ஒதுக்கி பார்க்க முடியவில்லை. என்னுடைய தோழனாய், தம்பியாய், குழந்தையாய்-அவனை இழந்து தவிக்கிறேன். யாருடைய வண்டியையும் ஓட்ட பிடிக்கவில்லை. எங்கு தனியாய் செல்வதாய் இருந்தாலும் நடந்தே செல்கிறேன். அவனில்லா நான் என்றும் வெறுமையாகவே உணர்கிறேன். வாழ்க்கை ஓட்டத்திலே நான் வேறு ஒரு வண்டியை வாங்கலாம். ஆனால் அது என் தோழனாகவோ, தம்பியாகவோ, குழந்தையாகவோ சத்தியமாய் ஆக முடியாது. எனக்கு அவன் கொடுத்த மகிழ்வையோ, அனுபவங்களையோ யாரும் தரமுடியாது. நண்பா இழந்து தவிக்கிறேன் உன்னை. எடுத்தவன் உன்னை என்ன கொடுமை செய்கிறானோ தெரியவில்லை. மன்னித்துவிடுடா…. கண்ணீருடன்-நீ கிடைப்பாய் என்னும் ஏக்கத்தோடு காத்திருக்கிறேன்.


-தம்பி கூர்மதியன்

Comments

Popular posts from this blog

சிட்லபாக்கத்தில் தொடரும் வாழ்வியல் போராட்டம்!

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..

GST – நான் அறிந்தவை!