அழிகப்படவேண்டிய மிருகங்கள்..அந்த அறை மிகவும் அமைதியாக இருந்தது. குறைவான மின்சாரம் காரணமாக மின்விசிறி மெதுவாக சுற்றிக்கொண்டிருந்தது. பழைய காலத்து மின் விசிறியாக இருக்க வேண்டும் அது. மெதுவாய் சுழற்றும்போது சப்தம் அதிகமாக கேட்டுக்கொண்டிருந்தது. கீழே ஒரு பெண் மயக்கத்தில் படுத்திருந்தாள்.

அந்த அறையின் கதவில் இருக்கும் கண்ணாடி வழியே வெளியே பார்த்தால் வயதான இருவர் காரசாரமாக பேசிக்கொண்டிருந்தனர். அதில் ஒருவர் வெள்ளை கோட் அணிந்திருந்தார். அவர்களோடு காக்கி உடுப்பு உடுத்திய ஒருவர் வந்து பேசினார்.அந்த இருவரிடமும் மற்றொருவர் கோபமாக கத்திக்கொண்டிருந்தார். கத்திவிட்டு வேகமாக கதவை திறந்து உள்ளே வந்தார்.

கோபமாக இருந்த அவரது முகம் உள்ளே சென்று அந்த பெண்ணை பார்த்ததும் அமைதியானது. அவரின் முகத்தில் ஒரு பரிதாபம் வந்தது என்றே சொல்ல வேண்டும். அவள் மெதுவாக கண்ணை திறந்தாள். அவர் நிற்பதை அவள் கண்கள் அரைகுறையாய் பார்த்தது. அவளை அறியாது அவளது கண்கள் தாரை தாரையாக கண்ணீர் வடித்தது. அவரை பார்க்க முடியாமல் அவள் மாற்று பக்கம் திரும்பிக்கொண்டு தொடர்ந்து அழுதாள்.

அவளின் கண்களை பார்த்ததும் அவர் உருக்குலைந்து போனார். சட்டென நடுக்கத்துடன் வந்து அவளின் கையை பற்றிக்கொண்டார்.

‘அம்மா.. தங்கமே.. நான் இருக்கேன்டா.. அழுகாதடா.. அம்மா…’ என்று அவர் சொல்லிவிட்டு தானும் கண்ணீர் வைத்துக்கொண்டார். அவளின் அழுகை இன்னும் அதிகமானது.

‘அம்மா.. குழந்தை.. அப்பா பாருமா.. தங்கம்ல.. அழக்கூடாது மா.. அப்பா இருக்கேன்டா.. என் தங்கத்த நான் பாத்துகிறேன் மா.. அழாதே மா..’ அவர் சொல்லிவிட்டு இன்னும் அழுகை தாங்காமல் தேம்பினார். அப்பொழுது கதவு திறக்கப்பட்டது. ஒரு இளவயது ஆண் உள்ளே நுழைந்தான். அங்கே இருவரும் அழுதுக்கொண்டிருப்பதை பார்த்து.

‘ஹலோ.. என்ன நடக்குது இங்க.. அங்கிள்.. வெளிய போங்க.. வெளிய போயி உட்காருங்க.. என்ன நினைச்சுட்டு இருக்கீங்க.. கொஞ்சம் வெளிய போயி மாத்திரை வாங்கிட்டு வர்றதுக்குள்ள.. போங்க..’ என்று சொல்லி அவரை பிடித்து இழுத்தான். அவர் அவளை காட்டி பேச்சு வராமல் இன்னும் அழுதுக்கொண்டே இருந்தார். அவரை வலுக்கட்டாயமாக பிடித்து அவன் வெளியே விட்டான். திரும்பிய அவன் அவள் அழுதுக்கொண்டிருந்ததை பார்த்து அமைதியாக அவள் அருகே வந்தான்.

‘அடியே குள்ளச்சி.. என்னடி.. ஓவரா சிணுங்குற.. எப்ப முழிச்ச?’ அவன் கேட்டுக்கொண்டே அவளை தொட்டான். அவளை தொட்ட மாத்திரத்தில் அவள் நடுக்கம் கொண்டு ஒதுங்கிக்கொண்டாள்.

‘ஓ.. அப்படிபோகுதா கதை..’ என்று சொல்லிவிட்டு வலுக்கட்டாயமாக அவளது கைகளை பிடித்து இழுத்தான். அவள் முரண் பிடித்தாள். இவன் சற்று வலு அதிகமாக கூட்ட இவனது நெஞ்சில் சாய்ந்துக்கொண்டு அவள் தேம்பி தேம்பி அழுதாள். அவளது முகம் அவனை காணாததை அறிந்த அவன் கண்கள் அவனை மீறிக்கொண்டு கண்ணீர் வடித்தது. அவளின் முகத்தை நன்றாக அவன் நெஞ்சில் புதைத்துக்கொண்டான். அவளின் தலை மீது கைவைத்து அழுத்தம் கொடுத்தான். அவன் அழுத்தம் கொடுத்தவிதம் அவள் உள்ளூரும் மனதில் ஏதோ காட்சிகளை ஞாபகபடுத்தியது. அவள் முகம் அழுகையிலிருந்து பயத்திற்கு மாறியது. அந்த முகத்தில் சற்று அருவருப்பும் தொற்றிக்கொண்டது. ‘விடு விடு…’ என்று கத்திக்கொண்டு அவனை தள்ளிவிட்டாள்.

அவன் விலகிக்கொண்டான்.

‘அம்மு.. என்னமா..’ என்றான்.

‘போ.. கிட்ட வர்றாத… கிட்டயே வர்றாத… போங்க.. எல்லாம் போங்க.. வெளிய போங்க…’ என்று அவள் கத்தினாள். அவன் அவளது அருகில் வந்து எதுவும் பேசாமல் அவளுக்கு தனிமை அவசியமென்று எண்ணி தனியாக விட்டுவிட்டு வெளியில் வந்தான். வெளியில் அவளது அப்பா உட்கார்ந்திருந்தார். அவனை கண்டதும் அவர் அவனருகில் வந்தார். அவரது கண்களில் ஏதோ கேள்வி குறிகள். பதிலுக்கு அவன் இல்லை என்பது போல தலையை ஆட்டிவிட்டு விலகி நடந்தான். அவரும் அவனை நெருங்கி வந்து அவனின் தோளில் கையை வைத்து திருப்பினார். அவன் திரும்புகையில் அவன் கண்களில் தாரையாக கண்ணீர். அவரை கட்டிக்கொண்டு இன்னும் தேம்பிக்கொண்டே இருந்தான்.

‘கண்ணா.. அழுகாதடா.. நீயே அழுதா அவளுக்கு யாருடா ஆறுதல்?’ என்றார்,அவரும் தேம்பிக்கொண்டே.

‘அங்கிள்.. அவ கொ.. கொழந்தை அங்கிள்.. அவள போயி எப்படி.. அப்பா.. அய்யோ..’ என்று அவன் சொல்லிக்கொண்டே அங்கிருந்த சுவரின் மீது சாய்ந்தபடி கால்களை நீட்டியபடி உட்கார்ந்தான், இன்னும் அழுதுக்கொண்டே.

‘அய்யோ.. அழுகாதடா.. அவளுக்கு நீ வேணுமுடா.. நீ எதுவும் அவள விட்டு விலகிபோயிடாத டா..’ என்று அவர் சொல்ல அவன் அதிர்ந்தவனாய்.

‘அங்கிள் என்ன சொன்னீங்க.. என் கொழந்தைய நான் விட்டு போறதா.. அய்யோ.. எப்படி உங்களால சொல்ல முடியுது..’ என்று தன் இரு கைகளையும் வாயில் பொத்திக்கொண்டு இல்லை இல்லை என்று தலையை ஆட்டியபடி அழுதான்.

‘அவள இப்படி ஆக்குனவன அப்படி அம்மணமா விட்டு அந்த உறுப்பு சுக்கு சுக்கு சுக்கா நறுக்கணும்.. அவனை அப்படியே உச்சில இருந்து துண்டு துண்டா ஆக்கணும்..’ என்று அவன் பல்லை கடித்துக்கொண்டே சொன்னான்.

‘ஆமாம் டா.. ஆமாம்.. என் கையில மட்டும் அந்த படுபாவி கெடைக்கட்டும்.. செதில் செதிலா ஆக்கணும்டா அவன.. அவன.. அவன…’ என்று சொல்லிவிட்டு ஆங்காரமாய் கொதித்தார் அவர். அந்த இருவரையும் அங்கு சுற்றி இருந்தவர்கள் கவனித்துக்கொண்டிருந்தார்கள். இருவரும் சிறிது நேரம் தேம்பிக்கொண்டிருந்தார்கள்.

‘அவ அவ.. அப்படியே கொழந்தை மாதிரி பேசுவா அங்கிள்.. உண்மைய சொல்லவா.. செக்ஸ் உணர்வோட அவளுக்கு கையில கூட முத்தம் கொடுக்க எனக்கு தோணினது இல்ல அங்கிள்.. ஏனா அவ அப்படி ஒரு கொழந்தை .. அவள போயி..’ என்று சொல்லிவிட்டு அவன் தேம்பினான். பக்கத்தில் இருந்த சுவற்றில் ஓங்கி ஓங்கி தலையில் அடித்துக்கொண்டான்.

‘அங்கிள்.. அவ எப்படி அழுதுறுப்பால.. அவ விட்டுறுங்க விட்டுறுங்கனு சொல்லுறப்போல இன்னும் என் காதுல கேட்டுட்டே இருக்கு அங்கிள்.. அவ பாவம் அங்கிள். என் கொழந்தை பாவம் என் கொழந்தை பாவம்.. அய்யோ… என் உயிரே துடிச்சுருக்குமே.. அய்யோ.. அம்மா..’ அவன் சொல்லிவிட்டு இன்னும் ஓங்கி சுவற்றில் மோதிக்கொண்டான். அவனது முன் நெற்றியில் ரத்தம் கசிவதை அப்பா பார்த்தார்.
‘கண்ணா.. அமைதியா இருப்பா.. அமைதியா இரு.. நீ அவளுக்கு வேணும்ல.. நீ இருந்தா தானே அவ பழைய மாதிரி ஆகமுடியும்.. நீ இப்படி உடம்ப பண்ணலாமா..’ அவரும் தேம்பிக்கொண்டே கேட்டார்.

‘இல்ல.. நான் இருப்பேன்.. நான் இருப்பேனே.. அவளுக்காக நான் இருப்பேன்.. அவள மடியில மனசுல வச்சு தாங்குவேன்.. பாருங்களேன்..’ என்று கண்ணீரை துடைத்துக்கொண்டே அவன் பேசினான். கண்ணீர் முழுதாய் துடைத்த பிறகு-‘ஆனா நெனைக்க நெனைக்க முடியல மாமா..’ என்று சொல்லிவிட்டு மீண்டும் ‘ஓ’வென அழுதான். அவனை கட்டிக்கொண்டு அவரும் அழுதார். சிறிது நேரத்தில் அங்கு வெறும் தேம்பல் சப்தம் மட்டுமே கேட்டுக்கொண்டிருந்தது.

‘போலீஸ் என்ன சொல்றாங்க மாமா..?’ என்று அவன் அவரை பாராது விட்டத்தை பார்த்து கேட்டான்.

‘யாருன்னு தெரில.. நம்ம பொண்ண தான் கேக்கணும்னு சொன்னாங்க.. அப்படி எதுவும் அவள கேட்க்கூடாதுனு சொல்லிட்டேன் பா..’ என்றார் அவர். அவன் ‘ம்ம்’ என்பதாய் தலையை ஆட்டினான். மெதுவாக கையை கீழே ஊன்றி அவன் மேலே எழுந்தான். அவள் இருக்கும் அறையை மெதுவாக திறந்தான். அவள் அந்த கட்டிலில் படுத்திருந்தாள். அவள் கண்கள் இன்னும் அழுதுக்கொண்டே இருந்தது. இவன் அழுததற்கான அடையாளம் இல்லாமல் கண்களை துடைத்துக்கொண்டு அவள் அருகே சென்றான். அவள் மீது கையை வைத்தான். அவள் அவனை பார்க்காமலே..

‘சாரி…’ என்றாள்.

‘சீ… என்ன.. என்கிட்ட போயி.. ‘ என்று சொல்லிவிட்டு அவன் அவளது ஒற்றை கையை இவனது இரண்டு கைகளால் பிடித்து தேய்த்துவிட்டான். கொஞ்சம் சூடு பறக்க தேய்த்துவிட்டு அவளது கைகளை தன் கன்னங்களில் வைத்துக்கொண்டான். அவள் சட்டென கையை விலக்கிக்கொண்டாள். சிறிது நாட்கள் ஓடியது. அவள் இறங்கி நடக்கும் அளவிற்கு வந்தாள். அவளை அழைத்துக்கொண்டு அந்த மருத்துவமனையில் இருந்த ஒரு பூங்காவிற்கு அவன் சென்றான். ஒரு சின்ன குழந்தை போல அவளை உட்காரவைத்துவிட்டு இவன் சுற்றி சேட்டைகள் செய்துவந்தான். அத்தனை நாளாக மறந்திருந்த சிரிப்பு இப்பொழுது உதட்டின் ஓரமாக லேசாக எட்டி பார்த்தது. சிறிது நேரத்தில் இருவரும் அமைதியாக அமர்ந்தார்கள். அவன் அங்கு விளையாடும் குழந்தைகளுக்கு ஏற்றது போல சத்தம் கொடுத்துக்கொண்டு அவர்களையே பார்த்துக்கொண்டிருந்தான். அவள் அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள்.

‘டே.. டே…’ என்று அவள் அழைத்தாள். அவளை பார்க்காமலே ‘என்ன’ என்று தலையை ஆட்டினான்.

‘நான் இந்த ஹாஸ்பிடல விட்டு வருவேனா.. இல்ல இங்கேயே செட்டிலா?’ என்றாள் அவள். உடனே அவன் அவளை பார்த்து,

‘என்ன மேடம் இங்கேயே இருந்து என்கிட்ட இருந்து தப்பிச்சிடலாம்னு எண்ணமா? இந்த ஜென்மத்துல முடியாது.. நெக்ஸ்ட் வேணா ட்ரை பண்ணுங்க..’ என்றான்.

‘ஹா.. ம்ம்… ஆமா அன்னைக்கு என்ன நடந்துச்சுன்னு கேட்கமாட்டியா?’

‘என்னைக்கு? எத பத்தி பேசுற’ அவள் என்ன கேட்கவருகிறாள் என்று தெரிந்தும் அவன் தெரியாததாய் நடித்தான்.

‘உனக்கு தெரியும்டா.. சொல்லு.. கேட்கமாட்டியா?’ என்றாள்.

‘ஓய்.. என்ன வேணும் உனக்கு.. அங்க பாத்தியா அந்த கொழந்தைகள’ என்று அவன் சொல்லும்போதே அவனை தடுத்து

‘பேச்ச மாத்தாதே .. நான் கேட்டதுக்கு பதில்…’ என்றாள். அவன் தர்மசங்கடத்திற்கு உள்ளாகி பின்னர்,

‘நீ என் குழந்தை. உனக்கு நடந்தது ஒரு ஆக்ஸிடண்ட்.. அத பத்தி நான் ஏன் கவலை படணும்.. கொஞ்ச நாள் ட்ரீட்மண்ட்.. பழைய படி ஆகிட்ட.. இதுல என்ன கண்ணம்மா இருக்கு?’ என்றான் அவன் வெகு சாதாரணமாக. அவள் கண்களில் கண்ணீர் வந்துவிட்டது. அதை அவன் கண்டதும்..
‘அய்யய்யே.. என்னடா இது.. ஒரு அழுகாச்சியா.. ஹேப்பி டைம் இல்லயா கண்ணம்மா இது..?’ என்றான் அவன். அவளும் கண்களில் கண்ணீர் மாறாமல் உதட்டில் சிரிப்பை காட்டினாள். இருவரும் அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். அவள் பேச தொடங்கினாள்,

‘எது ஆக்ஸிடண்ட்...? வேலைய முடிச்சுட்டு வீட்டுக்கு வர்ற ஆட்டோல ஏறின பொண்ண.. கடத்திட்டு போயி.. மயக்கமருந்து கொடுத்து… அரை மயக்கத்துல.. அவள மிருகம் போல ருசிக்கிறாங்களே.. அதுவா ஆக்ஸிடண்ட்?’ அவள் பல்லை கடித்துக்கொண்டு கேட்டாள். மேலும் தொடர்ந்தாள்.. அவள் பேசிவிட்டாள் பாரம் குறைமென கருதி அவனும் அமைதியாக விட்டான்.

‘எங்க போறீங்க? இந்த பக்கம்னு சொன்னேன்… கேட்கல.. கத்தினேன். பட்டுனு ஒரு சந்துல திரும்பினான்.. ஆட்டோல இன்னொருத்தன் என் பக்கத்துல ஏறி உட்கார்ந்தான்.. அவன் இருக்கமா என் கைய புடிக்க முன்னாடி இருந்தவன் ஏதோ மூக்குல வச்சி பொத்தினான்… முழிச்சு அரை மயக்கத்துல பாக்குறப்போ முன்னாடி ஆறு பேர் நின்னாங்க.. எவன் முகமும் ஒழுங்கா தெரியல..’ அவள் தேம்பினாள். தொடர்ந்தாள்..

‘என்மேல ஒட்டுத்துணி இல்ல… அய்யோ அசிங்கமா இருந்துச்சு.. கண்ணா.. பாரேன்.. என் ஷால் ரோட்டுல போறப்போ விலகினாளே நீ திட்டுவ.. ஆனா ஒரு 6 மிருகம் முன்னால நான் ஒட்டு துணி இல்லாம கிடந்தேன்டா..’ என்று அவள் சொல்லிவிட்டு அவனை பார்த்தாள். அவனை அவளை.. ‘சும்மா கெடடி’ என்று சொல்லிவிட்டு தன் மார்பில் சாய்த்துக்கொண்டான்.

‘கையை தூக்கி உடம்ப மறைக்கலாம்னு பாத்தேன்.. கை மேல எவனோ நிக்கிறான் போல.. என்னால கைய தூக்க முடியலடா.. ஒருத்தன் என் மேல ஏறுனான்.. அட்டபூச்சி ஊறுற போல இருந்துச்சு.. சினிமால காட்டுற போல நீ எங்காச்சும் வந்துடமாட்டியானு தவிச்சேன்.. துடிச்சேன்.. ஏதோ துடிப்பா துடிச்சேன்.. என் அடியில ஏதோ செய்யுறானுங்கடா.. அய்யோ… வலிக்கிது டானு சொல்ல கூட என்னால முடியல தெரியுமா.. ஒவ்வொருத்தனா போராடினேன்.. என்னால முடியலடா.. நாலு பேர் மேஞ்சுட்டானுங்க.. செத்த பொணமா கிடந்தேன்டா.. ஏ.. இன்னும் ரெண்டு பேரு தான்.. தோ.. விட்டுருவானுங்கனு மனசுக்குள்ளவே சொல்லிகிட்டேன்டா.. நான் தடுக்கல.. நான் ஏத்துகல.. நான் பொணமா ஆகிட்டேன்டா..’ அவள் சொல்லிக்கொண்டிருக்கையிலே அவன் நடுங்கினான். அவன் கோபம் உள்ளூரியது. துடித்தான். பல்லை கடித்துக்கொண்டான். ஆனால் அவனின் அதீத கோபம் இன்னும் அவளுக்கு வருத்தம் வர வைக்குமென்று எண்ணி அடக்கிக்கொண்டான்.

‘வேணாங்கடா.. வேணாங்கடானு சொன்னேன்டா.. கேட்கலடா.. முழுசா எல்லாம் மேஞ்சுட்டானுங்க.. ரோட்டுல தூக்கி போட்டானுங்க.. அம்மணமா ரோட்டுல கெடந்தேன்டா.. ஊரே பாக்குற முன்ன யாரோ புண்ணியவான் காப்பாத்தி கொண்டுவந்துட்டான்ல..’ என்றாள். தொடர்ந்து,
‘பாத்ரூம் போகுறப்போலாம், அந்த இடம் ரொம்ப வலிக்குதுடா.. தாங்கவே முடியலடா… கண்ணா.. நான் அசிங்கம் தானே.. நான் வேணாம்டா உனக்கு.. உன் மனசுக்கு தூய்மையா நல்ல பொண்ணா கிடைப்பா டா..’ என்று அவள் சொல்ல அவன் அதிர்ந்தான். அடக்கப்பட்ட கோபம் அவன் கண்களில் கண்ணீராய் வழிந்தது

‘என்னடி சொன்ன.. தூய்மையாவா? உன்னைவிட ஒருத்தி தூய்மையாவா? நீ என் கொழந்த கொழந்த கொழந்த.. உன்ன எப்படி தாங்குறேன்னு பாரு.. உனக்கு வாக்கு கொடுத்தேன்ல உன்னய ராணி போல வச்சிப்பேனு..’

‘ஆனா.. என்னால உனக்கு எந்த சுகத்தையும் தர முடியும்னு தோணல கண்ணா…’ அவள் பாவமாக பேசினாள்.

‘செக்ஸ் மட்டும் வாழ்க்கை இல்ல கண்ணம்மா… அதை தாண்டி ஆயிரம் இருக்கு… உன்ன நான் செக்ஸ்காக காதலிக்கல’

‘என்னைக்காச்சும் உனக்கு தோணிடும்டா.. அத என்னால தாங்க முடியாது.. கோபத்துல என்னைக்காவது நீ சொல்லிடுவடா..’

‘ஹா.. சொல்வேன் சொல்வேன்.. எனை கட்டிக்கமாட்டேன்னு சொன்னா அசிங்க அசிங்கமா பேட் வேர்ட்ஸ்ல திட்டுவேன்.. மைண்ட் இட்..’ என செல்லமான கோபத்தோடு பேசினான். பிறகு தொடர்ந்து,

‘இங்க பாரு கண்ணம்மா.. நீ தான் என் உலகம்.. நீ இல்லனா எனக்கு எதுவுமே இல்ல.. உனக்கு நடந்த விபத்த பத்தி நான் எப்பவோ மறந்தே போயிட்டேன்.. இப்போ உன்னோட கோபத்தெல்லாம் சொல்லிட்ட.. வருத்தமெல்லாம் சொல்லியாச்சு.. ஸோ.. நீயும் மறக்கணும்.. சந்தோசமா இருக்கணும்..ஓகே வா.. அதுதான் உன் வருங்கால மாமாவோட ஆசை.. மாமாக்காக செய்வியா?’ என்று அவன் கேட்க அவள் முகத்தில் புன்னகை தோன்றியது.
ஓகே மாமா..’ என்றாள். அவளை பிடித்து நெற்றியில் முத்தமிட்டான் அவன். அவளது எண்ணங்கள் எதையோ ஞாபகபடுத்த அவள் அதை மறித்துக்கொண்டு அவனது முகத்தை பார்த்துக்கொண்டாள். அந்த துயரத்தை மறக்க இவனே மருந்தென்று அறிந்தவளாய்.

கண்டிப்பாக பாலியல் வன்கொடுமைகளை அகற்ற ஏதேனும் செய்ய வேண்டும். தனிமனித ஒழுங்கங்களும், பெண்களை மதிக்கும் எண்ணமும் மிருகமாக இருக்கும் சில ஆண்களுக்கு புகட்ட வேண்டும். சிறு பிஞ்சுகளாக இருக்கும் குழந்தையாக இருப்பினும் செக்ஸ் என்னும் பேயால் சித்திரவதை செய்யும் கொடிய சாத்தான் பிணக்காய்களை அழித்திட வேண்டும் என்று அவர்கள் பேசிக்கொண்டனர். ஏதேனும் மாற்றம் கொண்டு வர போராட வேண்டும் என்று உறுதி பூண்டனர். தவறற்ற சரியான பாதையை தேர்ந்தெடுத்த மகிழ்வில் இருவரும் கைகோர்த்து அந்த பூங்காவில் உலா வந்தனர்.

-தம்பி கூர்மதியன்


Comments

Popular posts from this blog

சிட்லபாக்கத்தில் தொடரும் வாழ்வியல் போராட்டம்!

ஏழு நாட்கள்...

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..