ஆசையின் விரக்திநிலை...


அவர் மெதுவாக அந்த அறையின் கதவை திறந்து பார்த்தார். கதவை திறக்கும் சப்தம் கேட்ட அடுத்த மாத்திரத்தில் அவள் படுக்கையில் இருந்து சட்டென எழுந்து நின்றாள். முகத்தை மறைத்து கண்களை துடைத்துக்கொண்டாள். அவர் உள்ளே நடந்து வந்தார் சற்றே தயக்கத்தோடு.

‘அப்பா.. சொல்லுங்க..’ என்றாள் அவள் தான் உள்ளுக்குள் அழுவதை மறைக்கும் வண்ணம். அப்பா நேராக வந்து கட்டிலில் அமர்ந்துக்கொண்டார். அருகில் அவளையும் அமர்த்திக்கொண்டார். அவள் அறையின் ஜன்னல் வழியாக வெளியில் பார்த்துக்கொண்டிருந்தாள். அப்பா தனக்கு நேராக இருக்கும் சுவற்றையே வைத்த கண் வாங்காது பார்த்துக்கொண்டிருந்தார். அங்கு சிறிது நேரம் அமைதி நிலவியது. அப்பா பேச தொடங்கினார்,

‘அம்மா.. நான் தப்பு பண்ணிட்டேன்னு நினைக்கிறியா மா?’ என்று அவர் கேட்டார். இன்னும் சுவற்றில் இருந்து கண்ணை விலக்காமல். அவள் அவரின் முகத்தை ஒரு முறை திரும்பி பார்த்தாள். எதுவும் பதில் பேசாமல் மீண்டும் அவள் ஜன்னல் வழியாக வெளியில் பார்க்க தொடங்கிவிட்டாள். அங்கே மீண்டும் ஒரு அமைதி.

‘நான் அவன் அப்படி சொல்லுவான்னு எதிர்பார்க்கல மா.. ‘ என்றார் அவர் வருத்தமான குரலில். அவர் சொன்ன மாத்திரத்தில் அவள் எழுந்து,

‘அட என்னப்பா? அவன் அப்படி சொன்னா, நீங்க என்ன பண்ணுவீங்க? Don’t worry.. எழுந்துருங்க வாங்க சாப்பிட போகலாம்.. என்ன இன்னைக்கு ஆபிஸ்க்கு லீவ் போட்டது தான் வேஸ்ட்..’ என்று சாதாரணமாக பேசுவதாக அவள் நடித்துக்கொண்டு பேசினாள். நகர எத்தனித்த அவளின் கையை பிடித்து,

‘உண்மையா உனக்கு வருத்தம் இல்லையா செல்லம்மா?’ என்றார் அப்பா.

‘அட… இல்லப்பா.. இதுல என்ன இருக்கு?’ என்று அவள் சொல்லிக்கொண்டே வேற்று பக்கம் முகத்தை திருப்பிக்கொண்டாள்.

‘அம்மா.. செல்லம்மா..’ என்றார் குரிலில் நடுக்கத்தோடு.

சட்டென மாலை மாலையாய் அவள் கண்ணீர் வடித்தாள். அவரின் கையிலிருந்து தன் கைபிடியை விலக்கிக்கொண்டு முகத்தில் இரு கைகளையும் பொத்தி சத்தமிட்டு ‘ஓ’ என்று அழுதாள். நடுநடுங்கிப்போன அப்பா, உடனே எழுந்து அவளின் பொத்திய கைகளை விலக்க பார்த்தார். ஆனால் அவள் விலக்கவில்லை.

‘அய்யோ… செல்லம்மா.. அய்யோ.. மன்னிச்சுடு மா.. அம்மா.. உன்னோட மனச இப்படி காயபடுத்திட்டேனே..’ என்று அவளின் கைகளை இன்னமும் விலக்க பார்த்து முடியாமல் சென்று சுவற்றில் இடித்துக்கொண்டார். அப்பாவின் செயலை பார்த்த அவள் சட்டென சென்று அப்பாவை தடுத்து, அவரின் நெஞ்சில் சாய்ந்துக்கொண்டாள். அவர் அவளை சமாதானபடுத்திக்கொண்டே தலையை தடவிக்கொடுத்தார். அவள் பேசத்தொடங்கினாள்,

‘அழகா இல்ல.. அழகா இல்லனு சொல்லுறாங்களே.. அது என் தப்பா பா.. நான் தேவதை போல இருக்கேன்னு சொல்லுவீங்களே பா.. அது எல்லாம் பொய் தானே பா.. ஏன் பா எந்த பையனுக்கும் என்ன புடிக்கவே மாட்டேங்குது? எத்தனை பேர் முன்னாடி பா காட்சி பொருள் போல போயி நின்னுருக்கேன்.. சந்தையில மாட்ட விலை பேசுற போல, மூக்கு இப்படி இருக்கு வாய் அப்படி இருக்குனு வந்தவங்கலாம் குசு குசுனு பேசிக்கிறாங்களே… நானும் மனுசி தான்.. எனக்கும் மனசு இருக்குணு யாருக்கும் தெரியலயா? அப்பா … அப்பா…’ என்று சொல்லிக்கொண்டே அவள் அவரின் முகத்தை பார்த்து கேட்டாள்
‘நான் பையன் அப்படி இருக்கணும் இப்படி இருக்கணும்னு எதுவுமே சொல்ல மாட்டேங்குறேன்ல பா.. அப்படி பசங்கள்ல யாருமே இருக்க மாட்டாங்களா? அப்பா எனக்கு கல்யாணம் வேணாம் பா.. கல்யாணம் வேணாம்.. ஆனா சுத்தி இருக்கிறவங்க வாய் என்னலாம் பேசும் தெரியுமா பா.. அடுத்த மாசம் வந்தா 30 வயசு வேற ஆகிடும்.. இப்பவே எல்லாம் ஒரு மாதிரி பேசுறாங்க பா… அப்பா உண்மையா ஒண்ணு சொல்லவா.. எனக்கு இந்த கல்யாணம்.. புருசன் பொண்டாட்டி வாழ்க்கைலாம் ரொம்ப புடிக்கும் பா.. நான் அப்படி ஒரு வாழ்க்கைய நெருக்கத்துல பாத்ததே இல்லயே பா.. நான் பொறந்ததும் அழகா இல்லனு தான் அம்மா இறந்துட்டாங்க போலல பா..’ என்று அவள் சொல்லும்போதே அப்பா தடுத்தார்.

‘சீ … என்னமா பேசுற… உங்க அம்மாவுக்கு நீ னா உசுரு.. உனக்கு திருஷ்டி பட்டுற போகுதுனு முகம் முழுக்க பொட்டா வச்சு தள்ளுவா தெரியுமா?’

‘ஹா.. யாருக்கும் புடிக்காத முகத்துக்கு பொட்டு வச்சா என்ன வைக்காட்டி என்னபா…’ என்றாள் அவள். பேசிக்கொண்டே அப்பா கட்டிலில் அமர்ந்திருந்தார், அவள் அவரின் காலடியில் அமர்ந்திருந்தாள்.

‘உன்ன யாருக்கும் புடிக்காதா.. எல்லாம் உனையே தான் தூக்கி வச்சிருப்பாங்க.. தெரியுமா.. உங்க அம்மாவுக்கு முக்கியமா உன்ன வயித்துல இருக்கும்போதே இருந்தே புடிக்கும்.. தினமும் உன்கிட்ட பேசிட்டே இருப்பா நீ வயித்துல இருக்குறப்பவே..’

‘அப்படியா பா… கேட்குமா வயித்துல இருக்குறப்போ?’

‘உணரமுடியும்.. கேட்கவும் முடியும் டி செல்லமா? அதுவும் இல்லாம எதுனா நான் குறும்பு தனமா பேசினா நீ உன்ன இருந்துட்டே உங்க அம்மா வயித்த எட்டி உதைப்ப தெரியமா? நாங்கலாம் பாத்து சிரிச்சுட்டு இருப்போம்.’

‘அப்படியா பா?’ அவளின் அகல விரிந்த கண்கள் மூலம் ஆச்சரியத்தை வெளிப்படுத்தி  அப்பாவின் முகத்தை பார்த்தாள். மீண்டும் கீழே குனிந்துக்கொண்டு,’அப்பா.. ஒண்ணு சொல்லவா?’ என்றாள்.

‘சொல்லுடா செல்லம்மா?..’
‘எனக்கு பாப்பாவ வயித்துல சுமக்கணும்னு ஆசையா இருக்குபா.. அந்த உணர்வு எப்படி இருக்குணு தெரியணும்பா.. அப்பா.. நான் கல்யாணம் பண்ணிட்டு குழந்தை பெத்துக்கணும்பா.. ஆனா இதெல்லாம் நடக்காதுல பா..’ என்று அவள் கேட்டுவிட்டு அப்பாவின் முகத்தை மீண்டும் பார்த்தாள். அப்பா கண்ணிலிருந்து தாரை தாரையாக கண்ணீர் வழிந்தது.

‘தப்புமா.. தப்பு பண்ணிட்டேன் மா.. வாழற வாழ்க்கைக்கு தான் காசு தேவை.. கல்யாணம் பண்ண கொஞ்சம் போதும்னு இருந்துட்டேன்மா.. இப்போ காசு இருந்தா நல்லா உனக்கு போட்டு கொடுக்குறேன்னு சொன்னா நிறைய பேரு கட்டியிருப்பாங்க மா.. தப்பு பண்ணிட்டேன் மா.. தப்பு பண்ணிட்டேன்..’ என்று அவர் சொன்னார். அவரின் பேச்சை கேட்டு சிரித்தாள் அவள்.

‘அப்பா… என்னப்பா.. உங்கள எவ்வளவு உயர்வா நினச்சேன்.. இப்படி சொல்லுறீங்க… காச போட்டுட்டா மட்டும் கட்டிப்பான் னா.. அவன் காச கட்டிக்கிறானா இல்ல என்னைய கட்டிக்கிறானா பா?’

‘இல்லமா.. இப்ப யாருமே, ஒத்துக்கமாட்டேங்குறாங்களே…’

‘அதுக்கு காரணம் காசு மட்டுமில்ல பா.. உங்களுக்கு புரியலையா? நான் அசிங்கமா இருக்கேன் பா.. நான் நல்லா இல்ல..’

‘சீ.. நீ தேவதை மா…’

‘அப்பரம் ஏன் பா யாருக்கும் என்ன புடிக்கல?’ என்றாள் அவள். அவர் அமைதியாக இருந்தார்.

‘அப்பா .. நான் உங்கள ஒண்ணு கேட்குறேன்.. ஊர்ல இருக்குறவங்களுக்கு தான் எனக்கு மனசு இருக்குனு புரியமாட்டேங்குது.. உங்களுக்குமா பா புரியல?’ என்ற அவளின் கேள்வியை கேட்டு அதிர்ந்த அப்பா

‘என்னம்மா இப்படி கேக்குற?’ என்றார்.

‘ஒவ்வொருத்தன் பாக்க வர்றப்பவும் காட்சி பொருள் போல முன்னாடி போயி நிக்குறேனே.. திரும்ப ஏன் பா கூட்டிட்டு வர்றீங்க?’

‘அய்யோ.. அம்மா.. என்னைய தப்பா நினைக்காத மா.. உன்னோட போட்டோவ, இமெயில் ஒருமுறை, தனியா போட்டாவா ஒரு முறை, நான் நேரா போயி உன்னய பத்தி எல்லாத்தையும் பொதுவான ஒரு இடத்துல வச்சி பேசிடுவேன் மா.. எல்லாமும் ஓகேனா தான் வீட்டுக்கே கூப்பிடுவேன் மா.. போட்டோல புடிச்சுதுனு சொல்லுறவன் நேருல ஏன் இப்படி நடந்துகுறாங்கனே எனக்கு புரியலமா..’

‘ஹா.. புரியலயா.. இன்னைக்கு வந்தவங்க சொன்னாங்களே.. ரொம்ப பெரிய பொண்ணு மாதிரி தெரியிறேன்னு… ஹா.. வர்றப்பவே 30 வயசு கெழவிய தான் பாக்க வர்றோம்னு தெரியாதாமாம்… இப்ப வந்து சொல்லுறத பாரேன்.. ஹா..’ என்றாள் அவள். அப்பா அவளின் தலையை தடவி கொடுத்தார். அவள் மீண்டும் பேச தொடங்கினாள்,

‘இன்னைக்கு வந்தவங்க பரவால பா.. போன முறை ஒரு குரூப் வந்துச்சே.. அவங்க பேசுறத கேட்டேன்.. சொல்லுறாங்க.. பொண்ணு ஓகே தான்.. இருந்தாலும் நாம இன்னும் அந்த மூணு இடத்தையும் பாத்துட்டு சொல்லுவோம்னு சொன்னாங்க.. அட பாவிகளா? ஏதோ சட்டைய எடுக்குறபோல நாலு கடை ஏறி இறங்குவோம்னு சொல்லுறாங்க பாருங்களேன்… அவனுங்க திரும்ப வந்தா நானே ஓட சொல்லிறலாம்னு பாத்தேன்.. நல்ல வேல அவனுங்க வரவே இல்ல.. ஹா..’ என்றாள்.

அவள் விரக்தியில் பேசுவதை உணர்ந்தவராய் அப்பா அவளை ஆசுவாசபடுத்தினார். மீண்டும் தொடர்ந்தாள் அவள்,

‘யாருப்பா இந்த பொண்ணு பாக்குற சடங்கெல்லாம் கண்டுபுடிச்சது… கடுப்பா வருது பா.. பொண்ணுங்கனா அவ்வளவு கேவலமா..? ஆனா இப்பலாம் பொண்ணுங்களும் இப்படி இருக்காங்க பா… பசங்கள பாத்துட்டு அது நொட்ட இது நொட்டனு.. அவங்களுக்கும் என்னைய போல கஷ்டமா தான் இருக்கும்ல… என்னமோ போங்க பா… வாழ்கையே புரிய மாட்டேங்குது..’ என்றாள், இன்னும் சலிப்போடு.

‘செல்லம்மா… உன் போட்டோவ கொடுத்து இனிமே பேசிடுறேன் மா.. வீட்டுக்கு வர்றனா.. கல்யாணத்துக்கு தேதி குறிக்க தான் வரணும்.. அப்போ தான் என் பொண்ண நேருல பாக்கலாம்னு சொல்லிடுறேன் மா.. என்ன சொல்லுற..’ என்று முகத்தில் இல்லாத சிரிப்பை வரவைத்துக்கொண்டே பேசினார்.

‘சூப்பர் பா..’ சொல்லிக்கொண்டே அவள் எழுந்தாள். ‘இனி எவனும் வீட்டுக்கு ஜென்மத்துக்கும் வர்ற தொந்தரவே இருக்காது.. ‘ என்று சொல்லிவிட்டு நமட்டு சிரிப்பு சிரித்துவிட்டு விரிந்த கூந்தலில் கொண்டை போட தொடங்கினாள். அப்பா அமைதியாக தலையை குனிந்துக்கொண்டார். கொண்டை போட்டுவிட்டு அப்பாவின் அருகில் வந்தவள்,

‘அப்பா.. ஒண்ணு சொல்லுவீங்களே.. நான் அம்மா போல இருக்கேன்.. அம்மா போல இருக்கேன்னு.. அது உண்மையா பா?’

‘ஆமாம் டா செல்லம்மா..’ அப்பா தழுதழுத்த குரலில் சொன்னார்.

‘அப்போ.. உங்களுக்கு அம்மாவ புடிச்சது போல என்னையும் எவனாச்சும் ஒருத்தனுக்கு புடிக்கும்ல பா..’

‘கண்டிப்பா டா செல்லம்மா… எவனாச்சும் என்ன எவனாச்சும் ராஜா வருவான்மா.. உனக்கு ராஜா போல ஒருத்தன் வருவான் பாரேன்.. என் இளவரசிய அப்படியே குதிரையில வச்சு தூக்கிட்டு போயிடுவான் பாரு..’

‘அப்பரம் என்ன .. அந்த ராஜாவுக்காக காத்திருப்போம்.. இப்ப வயிறு காத்திருக்காது போல.. வாங்க பா பசிக்குது..’ சொல்லிக்கொண்டே அவரின் கையை பிடித்து இழுத்தாள் அவள். இருவரும் வராத சிரிப்பை வரவைத்துக்கொண்டே இருவருக்காகவும் நடித்துக்கொண்டே அந்த சாதாரண நாளின் அடுத்த வேலைகளில் மூழ்கினர்.


 -தம்பி கூர்மதியன்

Comments

Popular posts from this blog

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..

பைக் ஓட்டுபவர்கள் கண்டிப்பா பாக்கவும்..!!

அதிகாரி சாமி