இயற்கையே இறையாகும்...நித்தம் – என் சித்தம்
உனை பற்றும் சிவயோனே..

கத்தும் வரை எற்றும்
காப்பாற்றும் எம்பெருமானே..

உடுக்கை உடுக்கையிலெழும் சப்தம் தரும்
டும் டும் டும்…
எனை உலுக்கி உலுக்கி தினம்
முறித்து கழித்து எனை உசுப்புகிறதே..

ஆதி அந்தம் மறந்து
நாளும் தினம் யான் சிவனடியானேன்..

முற்றும் மலை எட்டும்
சருகுற்ற பாதை தட்டும்
கற்றும் படி அற்றாய்
முள்ளும் அடி கல்லும்
எனை தள்ளும் தினம் சொல்லும்
மறவாது- மதியாது
உன்னடி சரண் அடைய
பாதையொன்றேறி பாதம்பற்றடைவேன்…
புலித்தோள் புவிப்பற்றிருக்க
அதன் மேலே நீ வீற்றிருக்க..
உயிரை கொல்லுதல் பாவமென்ற
போதனை யாம் உம்மிடம் பெற்றோம்..

அந்தமழியுமென கோபம் தரிக்க மறித்த யான்
உந்தன் ருத்ரத்தின் விந்தை அறிந்து குழப்பமடைந்தேனே..

உம்மிடம் யாம் அடியானேன்..
உம்மிடம் யாம் கற்றவனானேன்..

உனை பற்றி நினைக்கையிலே
என்ன ஒரு மாற்றம் எனக்குள்ளே..
எல்லாம் மறந்த தூயவனாகிறேன்..!!

காற்றாய் தினம் எனக்குள் நீயாய்
நித்திரையிலும் உன் முகமே
சொக்கி போயி நிற்கின்றேனே…

உனது கோபத்தின் கனலாக
உன் திருமேனி பற்றிட மாட்டேனோ
மாயவனாகி எனை மாய்க்கிறாயே…!!
உன்னிலா என்  ஈர்ப்பு… அற்று உன் இடத்திலா இந்த ஈர்ப்பு!!?

இயற்கை அழகுற்ற அம்மலையில்
இசைந்து நான் இழைந்து நடக்கையிலே
என்னுள்ளே தோன்றும் அமைதி..
நான் சிவனடியில்லை அவன் இடமடியானேன்
உள்ளுக்குள்ளே சொல்லி திரிகிறதே..

குன்றின் மேல் வீற்றிருக்கும்
உன் குடகின் முற்றமெல்லாம்
தினம் சுற்ற வருகிறேன் பரம்பொருளே..
உனக்காக அற்றும்
உன் இருப்பிடத்தின் அமைதி நோக்கி
வருகிறேன் என் இறையே…!

இறையென்றேன்
நீயா அற்று இயற்கையா?
சிரித்துக்கொண்டே உன்னை நினைத்து கண்ணை மூடுகிறேன்
ஆயிரம் மரங்களும்
பூந்தோட்டமும், கிளி கூட்டமும்
சலசலக்கும் ஓடையும்
இயற்கை இசையெழுப்பி கட்டிப்போடுகிறதே..
எம்பெருமான் – இயற்கையாழ்கிறான்..!!!


-தம்பி கூர்மதியன்

Comments

Popular posts from this blog

சிட்லபாக்கத்தில் தொடரும் வாழ்வியல் போராட்டம்!

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..

GST – நான் அறிந்தவை!