இணைவின் மகிழ்வு


அவன் அந்த கடையில் நின்றுக்கொண்டிருந்தான்.

‘அண்ணே.. என்ன சீக்கிரம் தருவீங்களா மாட்டீங்களா? எவ்வளவு நேரம்.. காத்து வேற பலமா அடிக்குதுண்ணே.. குளுருது.. மழை வர்றதுக்குள்ள வீட்டுக்கு போயிடணும்.. தர்றீங்களா?’ என்றான். கடைகாரர் அவசர அவசரமாக புளியை பேப்பரில் கட்டிக்கொண்டிருந்தார். எரிச்சலில் அந்த வேறு பக்கம் திரும்பினான். அவன் பின்னால் இரு பெரியவர் பேசிக்கொண்டிருந்தனர். அவர்களின் முகத்தை அவன் பார்க்கவில்லை, ஆனால் குரல் மட்டும் கேட்டது.

‘நல்ல இடம்.. மாப்பிள்ள IT கம்பேனியில பெரிய ஆளா இருக்காரு.. மேனேஜராம்.. அதான் நம்ம பொண்ணுக்கு முடிச்சுடலாம்னு இருக்கேன்..’ என்றார் ஒருவர்.

‘அட நல்ல விசயம் தானே.. பொண்ணு என்ன சொல்லுறா?’

‘அண்ணே.. என் பொண்ணுன்னே.. நீங்க யார சொன்னாலும் எனக்கு ரொம்ப சம்மதம்னு சொல்லிட்டா.. தெரியுமுல்ல..’

‘ரொம்ப சந்தோசம் பா…’ என்றார் மற்றொருவர்.

அவர் அவருடைய பெண்ணை பற்றி பெருமையாக பேசியதை கேட்ட அவன், இளசுகளுக்க உரிய ஏளனத்துடன் அவரை திரும்பி பார்த்தான். அவரின் முகத்தை பார்த்ததும் அவனின் ஏளனம் மறைந்துவிட்டது. சட்டென நடுக்கம் வந்தது. மேலும் அவர்களது பேச்சை கேட்டான்.

‘போன வாரம் வந்து பாத்துட்டு போனாங்கண்ணே.. நேத்து தான் தேதி வச்சிடலாமானு கேட்டாங்க.. அடுத்த செவ்வாய் கிழமை நல்ல நாள், அன்னைக்கு எல்லாரும் ஒண்ணா உட்கார்ந்து பேசலாம்னு முடிவெடுத்துருக்கோம்னே..’ என்று அவர் சொல்ல அவன் கிறுகிறுத்துப்போனான். அதன் பின்னர் அங்கு எழும்பிய எந்த சத்தமும் அவன் காதில் விழவில்லை. குரல் கம்மியது. தலை சுற்ற ஆரம்பித்தது. கைகளில் நடுக்கம் ஏற்பட்டது. அந்த கடைகாரர் பொருளை எடுத்துக்கொள்ள சொல்லி பலமுறை அழைத்தார். அவரின் நான்காவது குரலில் தான் அவனுக்கு சுயநினைவு வந்தவனாய்  பையை எடுத்துக்கொண்டு கடையை விட்டு வெளியில் வந்தான்.

வண்டியை எடுத்துக்கொண்டு சிறிது நேரம் அவனின் சுயநினைவு அற்று வண்டி போகும் பாதையிலே போய்க்கொண்டிருந்தான். திடீரென வண்டியை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு படபடவென ஃபோனை தடவி எடுத்து ஒரு நம்பரை அடித்து அழைப்பு விடுத்தான். மறுபக்கம் இருந்து கணிணி குரலில் தவறான எண் என்ற பதில் வந்தது. அவன் கண்கள் தாரையாக கண்ணீர் வடிக்க தொடங்கியது. அவன் அலைப்பேசியில் இருக்கும் இன்னொரு எண்ணிற்கு அழைத்தான். சிறிது தயக்கத்தின் பிறகு ஒரு பெண்ணின் பெயரை சொல்லி அவளது அலைப்பேசி எண்ணை கேட்டான். பிறகு அவசர அவசரமாக அந்த எண்ணை அழைத்தான். அந்த பக்கம் ஒரு பெண் எடுத்தாள். இவன் பதில் பேசவில்லை. அந்த பெண் மீண்டும் மீண்டும்.. ‘ஹலோ’ என்றாள். அவன் குரலை மிகவும் சிரமத்திற்கு பிறகு வெளிக்கொண்டு வந்தான். தொண்டையை கரகரத்தான். மறுபக்கம் ‘ஹல..’ என்று தொடங்கிய வார்த்தை பாதியிலே நின்றது. சிறிது நேர அமைதிக்கு பிறகு அவன் பேச தொடங்கினான்..

‘ஹலோ…’ என்றான்.

‘ம்ம்…’ என்றாள் அவள்.

‘பேசலாமா? பிஸியா இருக்கியா..?’

‘இல்ல.. வீட்ல கொஞ்சம்.. ஹான்.. இல்ல.. சொல்லுங்க.. என்ன திடீர்னு.. அதுவும் இத்தன மாசத்துக்கு பிறகு?’

‘இல்ல . பேசணும்னு தோணுச்சு.. ‘ மீண்டும் தொண்டையை கரகரத்துக்கொண்டான்.. ‘கொஞ்சம் நேருல பாக்கணும்..’

‘ஏன் திடீர்னு..?’

‘இல்ல.. அது.. அ.. அது.. இல்ல..’

‘ம்ம்.. நிறைய மாற்றம் போல இருக்கே.. சரி பாக்கலாம்.. ஆனா ஒரே ஒரு முறை… ஃப்ரண்டுனு முறையில.. அவ்வளவு தான்.. எங்க பாக்கலாம்?’ என்றாள். அவள் வீட்டை விட்டு வெளியில் வந்திருந்தாள். அவனிடம் பேசும் தோரணையில் சற்று திமிர் தெரிந்தாலும், அவள் கண்கள் அங்கு அழுதுக்கொண்டிருந்தது. மனம் பதறிக்கொண்டிருந்தது. அவன் பாக்கவேண்டும் என்று சொல்லிய மறுநொடி பரவசம் கொண்டாள். ஆனால் எதையும் அவள் பேச்சில் காட்டிக்கொள்ளவில்லை.

‘ம்ம்.. பெசன்ட் நகர் பீச்சுக்கு வர முடியுமா?’

‘வர்றேன்… ஈவனிங் ஆறு மணி.. சரியா இருக்கணும்.. அஞ்சு நிமிஷம் வெயிட் பண்ணுவேன்..அதுக்கு மேல இருக்க மாட்டேன்..’

‘ம்ம்.. தேங்க்ஸ்..’ என்று சொல்லிவிட்டு அவன் இணைப்பை துண்டித்துவிட்டான்.

ஆறு மணிக்கு அவள் வரசொன்னாள். ஆனால் இவன் 5.30 மணிக்கே அங்கு சென்றுவிட்டான். மணி சரியாக 6 ஆகும்போது, அவள் அவளது ஸ்கூட்டியில் அங்கு வந்தாள். அவளை பார்த்ததும் சிறிது சிரமபட்டு தான் அவன் சிரித்தான். அவள் அமைதியாக இறங்கி வந்தாள். அவன் அருகே வந்தாள்..

‘எப்படி இருக்க?’ என்றாள். அவன் அவள் முகத்தை பார்க்கவில்லை. வேறு எங்கோ பார்த்துவிட்டு,

‘நேத்து வரை நல்லா தான் இருந்தேன்’ என்றான்.

‘ம்ம்…’ என்றாள். சிறிது நேரம் அங்கு மணலில் இருவரும் நடந்து சென்றனர் அமைதியாக. அவன் பேசதொடங்கினான்,
‘இதெல்லாம் தற்காலிகமானது தான்னு இருந்தேன்…’

‘எது..?’ என்றாள் அவள்.

‘நாம பிரிஞ்சு இருக்குறது… வீட்டுல உன் கல்யாணத்த பத்தி பேச ஆரம்பிச்சதும் எனக்கு கால் பண்ணுவனு இருந்தேன்..’

‘எதுக்காக நான் உனக்கு கால் பண்ணனும்? உன் நம்பர் கூட என்கிட்ட இல்ல..’

‘ம்ம்… ஆமா நீயும் நம்பர் மாத்திட்ட போல, இன்னைக்கு உன் பழைய நம்பருக்கு கூப்பிட்டு பாத்தேன்… நம்பர் தப்புனு வந்துச்சு…’ என்றான். அவள் உள்ளுக்குள்ளே முனகிக்கொண்டு ‘அதையே இப்பதான் பாத்திருக்கான்..’ என சொல்லிக்கொண்டாள்.
அங்கு மீண்டும் சிறிது நேரம் அமைதி நிலவியது.

‘மார்னிங் அப்பாவ கடையில பாத்தேன்… ஒருத்தர்கிட்ட பேசிகிட்டு இருந்தார்.. அப்போ ஏதோ சொன்னார்..’

‘என்ன சொன்னார்..’

‘உனக்கு ஏதோ மேரேஜ்னுலாம்..’

‘ம்ம் ஆமா… பாத்தோம்.. பேசுணோம்.. புடிச்சுது.. அதான் ஒத்துகிட்டேன்..’

‘ம்ம்.. ஆனா..’

‘என்ன..?’
‘இல்ல.. ஒண்ணுமில்ல..’ என்று அவன் வார்த்தையை உள்ளே முழுங்கினான். அவள் கடல் அலைகளை பார்த்துக்கொண்டிருந்தாள். அவன் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான். சட்டென முகத்தை திருப்பிக்கொண்டான். அவன் மாற்று திசையில் அழுதுக்கொண்டிருக்கிறான் என்று அவள் உணர்ந்தாள்.

‘என்ன ஆச்சு..? மண்ணு எதுனா கண்ணுல பட்டுடுச்சா..?’ என்று அவள் கேட்டாள்.

‘இல்ல.. அது… இல்லல… மேரேஜ்.. அது.. கங்க்ராட்ஸ்…’ என்றான்.

‘தேங்க்ஸ்…’

‘ம்ம்… என பத்தி யோசிச்சியா?’

‘யோசிக்க என்ன இருக்கு?’

‘இல்ல.. நம்ம காதல பத்தி..’

‘ஹா.. காதலா.. அது எங்க இருக்கு?’ என்று அவள் கேட்டுவிட்டு மீண்டும் கடல் அலைகளை நோக்கினாள். அவன் பதில் பேசவில்லை. சிறிது நேரத்திற்கு பிறகு,

‘என்ன விட்டுட்டு போயிடுவியா?’

‘ஏ.. ஆமாம் பா.. ஏழு மணிக்குள்ள கிளம்பிடணும்.. அப்பா சீக்கிரம் வர சொல்லியிருக்கார்..’ என்றாள் அவள். அவன் ‘ஓ…’ என்று முகத்தை திருப்பி வேறு பக்கம் பார்க்கலானான். அங்கு மிகுந்த நேரம் அமைதி இருந்தது. பிறகு அவள்,

‘எதுவும் பேசுறதுக்கு இல்லனா.. நான் கிளம்பவா’ என்றாள். அவன் சரி என்பது போல தலையை ஆட்ட, அவள் எழுந்து நகர எத்தனித்தாள். அப்பொழுது அவளை தடுத்தான்.

‘என்னை மன்னிச்சிடுறியா? ப்ளீஸ்’ என்று முகத்தை பாவமாக வைத்துக்கொண்டிருந்தான். அவன் முகத்தை அவள் ஒரு முறை பார்த்தாள். அடுத்த நொடி அவளால் அங்கு நிற்க முடியவில்லை. நகர்ந்து வேகமாக அவள் வண்டி இருக்கும் இடத்தை நோக்கி நடந்தாள். அவன் எழுந்து அவள் பின்னாலே சென்றான். ‘ஏ.. நில்லு மா..’ … ‘ப்ளீஸ் மா..’ என்று அவன் கெஞ்ச கெஞ்ச அவள் காதில் வாங்காமல் சென்றுக்கொண்டே இருந்தாள். அவள் கண்களை துடைத்துக்கொண்டே செல்வது நன்றாக தெரிந்தது. இவன் ஓடி சென்று அவளின் கையை பிடித்து திருப்பினான். இவன் பக்கம் திரும்பியவள் கையை உதறிவிட்டு அவன் முகத்தை பார்க்காமல் கீழே குனிந்துக்கொண்டிருந்தாள்.

‘எதுவுமே பேசாம.. ஏன் போற..?’ என்றான் அவன். அவள் அமைதியாகவே விம்மிக்கொண்டிருந்தாள்.

‘சொல்லுமா… ஏன்.. மன்னிக்க கூட தகுதி இல்லையா’ என்றான். அவள் மீண்டும் அமைதியாகவே இருந்தாள். ‘பதில் பேசேன் மா..’ என்றான் அவன் அழுத்தமாக.

‘எதுக்கு…? எதுக்குடா நான் பேசணும்..? அன்னைக்கு பெரிய இவன் மாதிரி நான் வேண்டவே வேணாம்னு போன.. இப்ப எந்த முகத்த வச்சுட்டு என்கிட்ட வந்து பேசுற?' என்று அவள் கேட்க அவன் தலையை கீழே தொங்கபோட்டான். அவன் ஏதோ பேச வருகையில் அவனை தடுத்தவள்,

‘அசிங்கமா இல்ல.. பதில் பேச வர்ற? பதில் பேச முடியுமா உன்னால?’ நீ பண்ணினதுக்கு காரணம் சொல்ல முடியுமா? அத ஜஸ்டிஃபை பண்ண முடியுமா உண்மையாவே உன்னால…’ அவள் கேட்க அவன் இன்னும் அமைதியாகவே இருந்தான்.

‘எத்தனை நாள்டா.. எத்தனை நாள் தூக்கம் இல்லாம உன்னையே நினச்சுட்டு இருந்தேன் தெரியுமா? ஒரு நாள் உன்கிட்ட இருந்து ஒரு மெசேஜ், ஒரு கால் வந்திடாதான்னு எப்படி ஏங்குனேன் தெரியுமா? பைத்தியகாரியா ஆகிட்டேன். அதனால தான் நம்பரையே மாத்தினேன். உன் நம்பர் என் ஃபோன்ல இல்ல.. என் மனசுல இருக்கு.. மாசம் ஆகிடுச்சா நாம பிரிஞ்சு.. ராஸ்கல் வருசம் ஆச்சுடா.. வருசம்.. இன்னும் ரெண்டு மாசத்துல ரெண்டு வருசம் முடியுது.. இந்த கேவலமானவ முகம் உனக்கு ஞாபகம் வரவே இல்லல.. சீ.. எந்த மூஞ்ச வச்சுகிட்டுடா என்கிட்ட பேச வர்ற..’ அவள் ஆங்காரத்தில் துடித்தாள். அவள் கையில் நடுக்கம் ஏற்பட்டது. கண்கள் முறைத்துக்கொண்டு இருந்தது. அவளுக்கு சராசரியை தாண்டி அதிகமாக மூச்சு வாங்கிக்கொண்டிருந்தாள். அவளை அமைதிபடுத்த நினைத்த அவன், அவளது முகத்தை பார்க்காமலே,

‘கண்ணம்மா…’ என்றான். சட்டென கோபம் கொண்டிருந்த அவள் கண்கள் அமைதியானது. நடுக்கம் நின்றது. முகத்தில் அமைதி தழுவியது. அடுத்த நொடி அவளது கண்கள் தாரை தாரையாக கண்ணீர் வடித்தது.

‘நான் ஒண்ணு கேக்கவா?’ என்றான் அவன். அவள் இன்னும் அழுதுக்கொண்டே தலையை ஆட்டினாள்.

‘நான் வரல தான்.. தப்பு தான் .. ஒத்துக்குறேன்.. நீ ஏன் மா வரல?’ என்று அவன் கேட்டதும் சட்டென அழுகை நின்று மீண்டும் கோபம் கொண்டவளாய்,

‘ஓ.. இப்ப என் மேல திருப்ப பாக்குறீங்களா? யார் செஞ்சது தப்பு? நானா உன்ன அசிங்கபடுத்துனேன் உன் நண்பர்கள் முன்னாடி… நானா உன் நண்பர்கள அசிங்கமா திட்டி உன்கூட சேர விடாம செஞ்சேன்…’

‘இல்ல இல்ல.. நான் தான்.. ஆனா, நான் செஞ்ச தப்புக்காக நீ என்னய விட்டுட்டு இன்னொருத்தன கட்டிப்பியா? மனசுல இவ்வளவு காதல வச்சுகிட்டு இன்னொருத்தன் கூட சந்தோசமா இருந்துடுவியா?’ என்று அவன் கேட்டதும் அவள் பதில் எதுவுமின்று அமைதியாக இருந்தாள்.

‘இன்னொருத்தன கை புடிச்சதும், என்ன மறந்துட முடியுமா? என்கூட இருந்த நாட்கள்..நாம சுத்துன இடங்கள். நான் தந்த முதம் முத்தம். நான் உனக்காக சொன்ன கவிதைகள்.. கிண்டல் கேலி பேச்சுகள்.. எல்லாம் மறந்துட்டு இன்னொருத்தன் கூட சந்தோசமா வாழ முடியுமா?’ என்று அவன் கேட்க அவள் இன்னும் தேம்பினாள்.

‘என் பக்கம் என்னோட நியாயம் இருக்குடி கண்ணம்மா.. எனக்காக நேரம் ஒதுக்க சொன்னதுக்கெல்லாம் முடியாதுனு சொல்லிட்டு நீ உன் நண்பர்கள் கூட நேரத்தை செலவிடுறது எனக்கு புடிக்கலடி… என்னோட பக்கத்து நியாயத்த நீ உணர்ந்து என்கிட்ட வந்துருவன்னு காத்துட்டு இருந்தேன்டி..’

‘ஏன்டா.. ஏன் நான் வரணும்.. நான் செய்யுறது புடிக்கலனா என்கிட்ட தானே சொல்லணும்.. ஏன் மத்தவங்க்கிட்ட என்ன அசிங்கபடுத்துற’

‘நான் உன்கிட்ட பலமுறை சொல்லியிருக்கேனே..’

‘நான் கேக்கலனா என் கொழுப்பு.. என் திமுறு.. அதுக்கு மத்தவங்க முன்னால உன் காதலிய அசிங்கபடுத்துவியா?’

‘அதுக்கு தானே மன்னிப்பு கேட்டேன்..’

‘எப்போ..? 2 வருசம் கழிச்சா?’

‘இப்ப கூட நான் தானே வந்து பேசினேன்.. அப்ப கூட நீ வரலயே..’ என்றான் அவன். தொடர்ந்து, ‘நான் ஒண்ணு சொல்லட்டுமா? நமக்கு இந்த ஈகோ தான் பெரிய பிரச்சனை. நீ கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டேனு உங்க அப்பா சொன்னத கேட்டு நீ என்னை உண்மையா மறந்துட்டனு இருந்தேன்.. ஆனா அப்பவிட இப்ப ரொம்ப காதலா இருக்குறனு புரியுது.. ஆனா நீ வந்து பேசட்டுமேனு நானும்.. நான் வந்து பேசட்டுமேனு நீயும்.. ரெண்டு அருமையான காதல் வருடங்கள இழந்துட்டோம் பாத்தியா?’ என்றான் அவன்.  அவள் அமைதியாக அழுதுக்கொண்டே இருந்தாள்.

‘என் மேல தான் தப்புனு பேசாத டா..’ என்றாள் இன்னும் கண்ணை துடைத்துக்கொண்டு குழந்தை போன்ற குரலில்.

‘அழகுதான்.. நான் தான் இன்னொருத்திய கட்டிக்க போனேன் பாரேன்..’

‘சும்மா அதையே சொல்லாத.. இன்னும் எதுவும் முடிவு ஆகல.. இன்னைக்கு நீ ஃபோன் பண்ணலனா.. நாளைக்கு நானே பண்ணி இருப்பேன்.. மரியாதையா என்ன வந்து கட்டிக்கோனு’ என்று சொல்லிவிட்டு குழந்தை போன்று கொஞ்சி காட்டினாள்.

‘அய்யோ.. எத்தன நாள் ஆச்சு.. அப்படியே இருக்கியே.. அன்னைக்கு கோச்சுட்டு நீ போகுறப்பவே.. புடிச்சு இழுத்து உதட்டோட உதட்டுல நச்சுனு கிஸ் பண்ணியிருக்கணும்.. மிஸ் பண்ணிட்டேன்.. அப்படி பண்ணியிருந்தா இந்த ரெண்டு வருசம் அனாமத்தா போயிருக்காதே..’ என்றான் அவன்.

‘ஆசை தான்.. டே.. தெரியுமா? இன்னைக்கு காலையில கால் பண்ணினல நீ.. உன் நம்பர பாத்ததும் அடிவயித்துல ஏதோ பண்ணுச்சு டா.. நீ என்னை பாக்கணும்னு சொன்னல.. அழுதுட்டேன் தெரியுமா.. அப்படியே ஓடி வந்து டே பொறுக்கி லவ் யூ டான்னு சொல்லணும்னு தோணுச்சு டா… என்னைய என்னைக்கும் வெறுத்துடாதடா.. எனக்கு வாழ்க்கை முழுக்க நீ வேணும்டா.. என்னைய விலகி போயிடாதடா..’ என்றாள் அவள் இன்னும் குழந்தையாகவே.

‘அதே தான் கண்ணம்மா உனக்கும்.. நான் உன் மேல இருக்குற காதலால தான் எதுனாலும் செய்வேன்.. அது சில சமயம் முரட்டுதனமா இருக்கும்… என புரிஞ்சுட்டு என்கிட்ட வந்து பேசினனா நான் பட்டுனு விழுந்துருவேன்.. சாரி டி..’

‘டே .. போடா.. அரை மணி நேரத்துல முடியவேண்டிய பேச்சுக்கு.. ரெண்டு வருசமா என்னை தவிக்க வச்சுட்டல..’

‘ஆமா.. நீ மட்டும் இல்லயா.. என்னைய தவிக்க வைக்கலயா.. ஆனா ஒண்ணுமட்டும் டி.. உன் மேல தப்பு இருந்தாலும், என் மேல தப்பு இருந்தாலும் சரி.. இனி பட்டுனு சரண்டர் ஆகிட போறேன்… எனக்கு நீ தான்டி முக்கியம்..’

‘ஹா.. நானும் அப்படியே இருக்கேன் மாமா..’

‘ஹா.. அழகுதான்.. லவ் யூ டி பொண்டாட்டி…’

‘லவ் யூ டா மாமா.. கடல் கிட்ட போகலாமா டா?’

‘ஏ.. ஏழு மணி ஆகுது டி.. அப்பா தேட மாட்டாரா? நீ போகவேணாமா?’

‘அவரு கெடக்காரு.. ரெண்டு வருசத்துக்கு பிறகு பாக்குறேன்.. இன்னைக்கு ஆசை தீர உன் கூட டைம் ஸ்பெண்ட் பண்ணிட்டு தான் போறது… ம்ம்…’ என்று சொல்லிவிட்டு அவள் தோளில் சாய்ந்துக்கொண்டாள்

‘ம்ம்.. உன்ன போயி சொன்ன சொல்லு தட்டாத பொண்ணுனு சொல்லி பெருமை அடிச்சுட்டு இருக்கான் பாரு அந்த ஆளு..’ என்று இரண்டு கையையும் மேலே உயர்த்தினான்.

‘யாருடா..?’ என்றாள் அவள்.

‘வேற யாரு..? உன் அப்பன் தான்..’ என்று அவன் சொல்லியதும். செல்லமாய் வந்த கோபம் அந்த கடற்மணிலில் இருவரும் இரண்டு வருடம் முன்பு இருந்த மகிழ்வில் அடித்து விளையாடிக்கொண்டனர்.


-தம்பி கூர்மதியன்

Comments

Popular posts from this blog

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..

பைக் ஓட்டுபவர்கள் கண்டிப்பா பாக்கவும்..!!

அதிகாரி சாமி