எதிர்பார்ப்பும்... ஏக்கமும்...

காலையிலிருந்து அவள் அதிகமான வேலை செய்துக்கொண்டிருந்தாள். அவள் முகத்தில் சிறு சிரிப்பும் இல்லை. ஏன் அவ்வாறு இருக்கிறாள் என்று அவளை கேட்க அங்கு யாரும் இல்லை. வேலை செய்து முடித்துவிட்டு அவள் அந்த படுக்கை அறையில் சென்று படுத்தாள். சமையலறையில் சமைத்துவிட்டு அம்மா வந்து எதிரில் நாற்காலியில் அமர்ந்தார். அவரை பார்த்ததும் அவள் எழுந்து அமர்ந்துக்கொண்டாள். அம்மா இவளோடு பேசவில்லை. இவள் அம்மாவையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

‘அம்மா…’ என்றாள். பதில் இல்லை. மீண்டும் அழுத்தமாக ‘அம்மாஆ…’ என்றாள்.

அம்மா சிடுசிடுவெனும் முகத்தோடு அவளை திரும்பி ‘என்ன’ என்றார்.

‘வீட்டை பெறுக்கிட்டேன்… சாமான விளக்கிட்டேன்… துணியெல்லாம் மடிச்சு வச்சுட்டேன்…’ என்று இழுத்தாள்.

‘என்ன சொல்ல வர்ற’ என்றார் அம்மா கடினமாக.

‘இல்லமா… பசிக்குது சாப்பிடவா?’ என்றாள் பாவமாக. அம்மா அடுத்த வார்த்தை பேசவில்லை. அவரின் முகத்தில் இருந்து கடுகடுப்பு மறைந்தது. அம்மா பட்டென பதறியவறாய் போய் சாப்பாடு போட்டு தட்டில் பிசைந்து எடுத்துக்கொண்டு வந்தார். அவர் கண்கள் சற்று கலங்கிபோயிருந்தது. அம்மாக்கொண்டு வந்த தட்டை அவள் கையில் வாங்கினாள். அம்மா தாமாகவே ஊட்டி விடுவதாய் சொன்னார். இருப்பினும் மறுத்து அவளே வாங்கிக்கொண்டாள்.

முதல் இரண்டு வாய் கொஞ்சம் வேகமாக சாப்பிட்டாள். பிறகு சாப்பாடை கையூடே பிசைந்துக்கொண்டே தட்டையே உற்று பார்த்துக்கொண்டிருந்தாள். அம்மாவை பார்க்காமல், ‘அம்மா… நான் இப்ப சாப்பிடுற சாப்பாடு தண்ட சோறு இல்லல மா’ என்றாள். அவள் கண்கள் கண்ணீரை கொட்ட தயாராய் இருந்தது. அவள் கேட்ட மாத்திரத்தில் பதறியவராய் அம்மா,

‘சீ… என்னமா… நான் அந்த அர்த்ததுல சொல்லலமா…’ என்றார். எழுந்து அருகில் வந்து அம்மா அவளின் தலையில் கை வைத்தாள். சட்டென எங்கென்று சொல்லிக்கொள்ளாத அழுகை அவளின் கண்ணிலிருந்து ஊற்றாக பெருகியது. தட்டை கீழே வைத்துவிட்டு உட்கார்ந்துக்கொண்டே அம்மாவை அணைத்துக்கொண்டாள். அம்மா அவளின் தலையை தடவிக்கொடுத்துக்கொண்டே அழுதார். அவ்வபோது ‘மன்னிச்சிடு மா’ என்று சிலமுறை சொன்னார்.

சிறுது நேரத்தில் அவள் அமைதியானாள்.

‘இன்னைக்கு ரொம்ப முடியலமா என்னால…அதனால தான் காலையில அப்படி சொன்னேன்… இனிமே சொல்லமாட்டேன் மா’ என்றாள் அவள்.

‘இல்லமா… என்னாலயும் முடியலடா… அதான் அப்படி சொல்லிட்டேன் டா’ என்றார் அம்மா.

‘புரியுது மா…’ என்று சொல்லிவிட்டு அமைதியாக இருந்தனர் இருவரும். சிறிது நேரத்துக்கு பிறகு அவள் ஜன்னல் வழியே வெளியே பார்த்துக்கொண்டே பேசினாள்.

‘ஒரு நாள்… நான் வெளியே விளையாடிகிட்டு இருந்தேன். அப்பலாம் அதிகமா நான் வெளியவே போகமாட்டேன். நீங்கலாம் வெளிய போயி விளையாடேன் விளையாடேன்னு சொல்லுவீங்க. அப்படி ஒரு நாள் நான் விளையாட போனப்போ ‘’திருடன் போலீஸ்’’ கேம்னு நினைக்கிறேன். நான் திருடன், போலீஸ் பக்கத்துவீட்டு பொண்ணு. என்ன துரத்திட்டு ஓடி வர்றா… திருடன்னா தப்பிச்சு தானே ஆகணும். நான் ரொம்ப சீரியஸான திருடன் போல ரொம்ப ஓடி வழுக்கி தொப்புனு விழுந்தேன். என்னுடைய வலது கை தூக்கவே முடியல. ரொம்ப கதறிட்டேன். என்னனடா பொம்பள புள்ளைக்கு இப்படி ஆயிடுச்சேனு ஊரே ஒப்பாரி வச்சாங்க. டாக்டர் ஒரு மாசத்துக்கு அப்பரம் சொன்னாங்க தேறிட்டா ஆனா இந்த கை எப்பவும் வீக்-ஆ தான் இருக்கும்னு. ஹா….’ என்று அவள் சொன்னாள்.

சம்பந்தமே இல்லாது எப்பொழுதோ நடந்த ஒரு விடயத்தை இப்பொழுது ஏன் சொல்கிறாள் என்னும் கேள்வி பார்வையோடு அம்மா அவளையே பார்த்துக்கொண்டிருந்தார்.

‘ஓ… எதுக்காக சொல்லுறேன்னு பாக்குறியா? அது ஒண்ணுமில்ல மா… டாக்டர் வீக்னு சொன்ன கைய தான் காலையில வலிக்குதுனு நான் சொன்னேன். காலையில படுக்கையில இருந்து எழுந்துருக்கும் போது கை மடக்கிடுச்சு. சுருக்குனுச்சு… ஏன்னே தெரியல, அதான் மா அப்படி சொல்லிட்டேன்’ என்றாள் அவள்.

‘ஏ… காலையில வேற ஏதோ டென்ஷன்ல பேசிட்டேன் மா… ரொம்ப ஃபீல் பண்ணாத சரியா’ அம்மா சமாதானம் செய்ய முற்பட்டார்.

‘சீ சீ… என்னம்மா.. நீ சொன்னதுல என்ன தப்பு. உனக்கும் தான் கைவலி இருக்கும். அதுக்காக செய்யாமலா இருக்கனு கேட்ட. இதுல தப்பெல்லாம் எதுவும் இல்லமா. பொறுத்துக்க தெரியல எனக்கு. வலிக்குதுல’ என்றாள் ஒரு நமட்டு சிரிப்போடு.

‘இப்ப தான் என்னால முடியலனு கோப படுறேன்… முன்னலாம் உன்ன என்னைக்காவது பேசியிருக்கேனா?’

‘அது தான் மா எனக்கே கஷ்டமா இருக்கு. முன்னையிருந்து பேசியிருந்தா ஒண்ணும் தெரிஞ்சுருக்காதோ என்னமோ? படிப்பு முடிஞ்சும் வேலைக்கு போகாம இருக்குற இந்த சமையத்துல தான் உனக்கு வேற முடியாம போகணுமா.’

‘இப்ப எதுக்கும் எதுக்கும் முடிச்சு போடுற நீ?’

‘இல்லமா… ஒரு ஊர்ல ஒரு ஆட்டுக்காரன் இருந்தானாம். அவனுக்கு அவனோட ஆடுங்கனா ரொம்ப உயிராம். ஒரு நாள் நல்ல அந்த ஆட்டுக்கூட்டத்துல கொழுத்த ஒரு ஆடு இருந்துச்சாம். அதுகிட்ட மத்த மிருகமெல்லாம் போயி, நீ இப்படி கொழுத்து இருக்க கண்டிப்பா உன் எஜமான் உன்ன கறிகடைக்கு வித்துடுவாருன்னு சொல்லுச்சுங்களாம். அந்த ஆடு அப்படியெல்லாம் எதுவும் இல்லனு மனசுல சொல்லிகிச்சாம். அப்பரம் கொஞ்சம் கொஞ்சமா அதோட எஜமான் எது செஞ்சாலும் நம்மல வித்துடுவாங்களோனு, கொன்னுடுவாங்களோனு பயந்துச்சாம். ஒரு நாள் பாசமா வந்து அதோட எஜமான் இறுக கட்டிபிடுச்சப்போ எங்க நம்மல நசுக்கி கொன்னுடுவாங்களோனு பயந்து போயி எஜமான தள்ளிவிட்டுடு ஓடிடுச்சாம். ஹா… ஆனா அது எஜமான விட்டு ஓடி போன நேரம் எங்கேயோ மாட்டிகிட்டு கசாப்பு கடையில கறியாகிடுச்சாம்.ஹா’ என்றாள்.

‘இப்ப என்ன சொல்ல வர்ற’ என கேட்டார் அம்மா.

‘அம்மா… இந்த எஜமான விட்டுட்டு ஊர்ங்குற மத்த மிருகம் பேச்ச கேட்டு இந்த ஆட்டுக்குட்டி எந்த கசாப்பு கடையிலயும் மாட்ட விரும்பல. என் மனசுக்கு புடிச்ச நான் எதிர்பாக்குற வேலை கிடைக்குற வரை நான் அந்த வேலைக்காக போராடிட்டு இருக்க போறேன் மா’

‘கண்டிப்பா டா கண்ணா… நம்ம வீட்ட பொறுத்த வரை நீ சம்பாதிச்சு ஆகணும்னு கட்டாயம் இல்ல. நீ தாராளமா முயற்சி பண்ணு… ஊரு பேசினா பேசிட்டு போகுது’

‘ஊரா… அத பத்தி நான் கவலை படவே இல்லமா… நீ பேசினது தான்’

‘அதான் சாரி சொல்லுறேன்ல… திரும்ப திரும்ப அதையே பேசாத…’

‘ஆட்டுக்குட்டிக்கு தான் எஜமான் எத செஞ்சாலும் சொன்னாலும் பயமாவே இருக்கே… ஊர் போட்ட ஊசி உள்ளுக்குள்ள சுருக்கு சுருக்குனு ஏறுதே’

‘அடியே…. நீ ஆட்டுக்குட்டியும் இல்ல… நான் எஜமானும் இல்ல… புரியுதா?’

‘ஹா… புரியுது மா… அன்னைக்கு மாமா சொன்னார்ல… விடாமுயற்சிக்கு பிறகும் ஒருத்தனும் ஒண்ணு கிடைக்கலனா அதுக்கு ரெண்டே காரணம் தான். ஒண்ணு அது கிடைக்க வேண்டிய நேரம் இன்னும் வரல…. இன்னொன்னு இது அவனுக்கு கிடைக்க வேண்டியதே இல்லனு… என் மனசுக்கு எனக்கான நேரம் இன்னும் வரலனு தோணுது மா.. உண்மைதானே மா’

‘உண்மை தான்டா செல்லம்… அத பத்தி பேசவேணாமே!!’ அம்மா கெஞ்சலாக சொன்னார்.

‘அய்யோ… உன்னைய கஷ்டபடுத்த சொல்லல மா. நான் வேலை தேடி முயற்சி பண்ணிட்டு தான் மா இருக்கேன். கண்டிப்பா ஒரு நாள் வேலைய வாங்கிடுவேன். வாங்கி பெரிய ஆளா வருவேன். ஆனா சில சமயம் தோணுது மா…. நான் முட்டாளா? எனக்கு வேலை கிடைக்காதா? நான் எதுக்குமே லாயக்கு இல்லயா? ஒரு வேல அதனால தான் இப்பலாம் நீ என்னைய திட்டுறியா? எங்க வெளிய போனாலும், எந்த சொந்த காரன பாத்தாலும் எல்லாரும் என்னைய கிண்டல் பண்ணுற போலவே இருக்குமா…. யாருமே என்ன விரும்பல போல, வாழ்க்கையில ஜெயிச்சா தான் எல்லாருக்குமே பிடிக்கும் போலலமா’

‘அப்படி இல்லடி… எனக்கு உன்னய ரொம்ப பிடிக்கும்…’ அம்மா சொன்னார்.

‘அப்பரம் ஏன் மா காலையில வலிக்குதுனு சொல்லியும் அப்படி சொன்ன… நான் என்ன என்னைக்குமா அப்படி சொல்லுறேன்…’

‘கண்ணா… என்னால முடியலடி… அதான் டி… ஏதோ டென்ஷன்ல பேசிட்டேன்’

‘ஹா… அம்மா கேக்குறேன்னு தப்பா நினைக்காத. நேத்தும் நீ முடியலனு தான் சொல்லிட்டு இருந்த… நானா வந்து செஞ்சேனே… ஏன் மா உன் பெரிய பொண்ண கூப்பிட்டு வேலை செய்ய சொல்லல.. அவ நாள் முழுக்க வேலை செஞ்சுட்டு வர்றா… நான் வீட்டுல சும்மா தானே இருக்கேன்ல’ என்று அவள் கேட்டாள்.

‘இங்க பாருமா… இப்போ யாரையும் நான் ஏத்தியோ இறக்கியோ நினைக்கல…. நாள் முழுக்க வேலை செஞ்சு வலியோடு வீடு வருவா அவ… அவள நாமும் கஷ்டபடுத்த கூடாதுனு தான் நான் அவள எதுவும் சொல்லுறது இல்ல.’

‘வேலைக்கு போனா மட்டும் தான் வலியெல்லாம் வருமா மா?’

‘அப்படியில்லடி… ஆனா வீட்டு வேலை செய்யிறதுல என்ன வந்திட போகுது… நானும் வலியெல்லாம் பொறுத்துக்கிட்டு தானே செய்யுறேன். உனக்கும் அந்த பக்குவம் வரணும்ல’

‘அந்த பக்குவம் பெரிய பொண்ணுக்கு வேணாமா?’

‘அவ தான் வேலைக்கு போயிட்டு வர்றால…’

‘அப்போ நான் எப்பவுமே வேலைக்கு போகமாட்டேன்னு சொல்லுறியா?’

‘சும்மா இப்படி விதண்டாவாதம் பேசிட்டு இருக்காத. நான் உன்னைய குறை சொல்லணும்னு சொல்லல… நானும் பொறுத்துட்டு செய்யுறேன் நீயும் பொறுத்துட்டு கொஞ்சம் உதவி செய்யுனு சொன்னேன்… அது தப்பா…’

‘அடிப்பட்ட இடத்துக்கு மயிலிறகாலும் மருந்து போடலாம்… செங்கல்லாலும் போடலாம்… வலிக்குதுனு சொன்ன என்கிட்ட கொஞ்சம் பாசமா பேசிட்டு, உன்னோட வலிகள சொல்லி கொஞ்சம்-கொஞ்சூண்டு அமைதியா இத செஞ்சு தாயேன் மான்னு என்கிட்ட கேட்டிருந்தா எனக்கு எவ்வளவு சந்தோசமா இருந்துருக்கும் தெரியுமா?’

‘காலையில எல்லாம் கிளம்புற டென்ஷன்ல உன்கிட்ட வந்து கொஞ்ச முடியுமா?’

‘அம்மா… திரும்ப திரும்ப மத்தவங்க கிளம்புறாங்க நான் மட்டும் தான் வீட்டுல இருக்கேனு போல பேசாத மா… எனக்கு ஏதோ சுருக் சுருக்குனு குத்துது’

‘அடியே… இப்ப என்னடி பண்ணுறது… நான் மௌன விரதம் இருந்தா தான் உண்டு. ஊமையா ஆகிடவா’

‘எனக்கும் தெரியலமா… ஏன் இப்படி யோசிக்கிறேன்னே தெரியலமா… எனக்கு எல்லாமே தப்பா படுது மா.. எனக்கு என்மேலயே நம்பிக்கை குறையுது மா.. நான் தோத்துட மாட்டேன்ல மா’

‘கண்டிப்பா மாட்ட டா கண்ணா… எனக்கு உன் பிரச்சனை என்னனு புரியுது… நீ நல்லா ஹார்டு வொர்க் பண்ணிட்டு தான் இருக்க.. அதுக்கான அங்கீகாரம் சீக்கிரம் உனக்கு கிடைக்கும். கவலை படாத.. இனி முடிஞ்ச அளவு மயிலிறகாலயே மருந்து போடுறேன். ஒருவேலை என்னைக்காவது கல்லால மருந்து போட்டுட்டேனா, அம்மாவுக்கு மருந்து போட யாரும் இல்லனு புரிஞ்சுக்க டி…’

‘அம்மா….’ என்றாள் அவள். அம்மா சொன்ன அர்த்தம் புரிந்தவளாய். அம்மாவின் வலியை வெளியில் சொல்ல முடியாமல் கடமையென தினமும் காலையில் எழுந்து வேலைசெய்துக்கொண்டிருக்கும் அம்மாவின் வலிக்கு மருந்து போட யாரும் இல்லை. அந்த ஏக்கமே காலையில் அவளை அப்படி பேசியதன் காரணம் என்று அவள் உணர்ந்தாள்.

‘லவ் யூ மா… நான் கண்டிப்பா ஜெயிப்பேன் மா’ என்றாள் அவள்.

‘கண்டிப்பா டா கண்ணா…’ என்று அம்மா சொல்லிவிட்டு நெற்றியில் முத்தமிட்டார்.

பிறகு, ‘இரண்டு வெவ்வேறு மனிதர்களால் ஒரே அளவு சாப்பாடு சாப்பிட முடியாது, அவரவரால் முடிந்த அளவே சாப்பிட முடியும். அதுபோல உடம்பு முடியலனாலும் உன்ன போலவே என்னால வேலை செய்ய முடியாது. ஏதோ என்னால முடிஞ்சத செய்யுறேன் மா. நீ ஸ்ட்ராங்க் மம்மி.. என் உடம்பு ஃபுல்லா டம்மி… புரிஞ்சுக்கோ’ என்று சொல்லிவிட்டு அவள் கண்சிமிட்டினாள். இருவரும் சிரித்துக்கொண்டனர்.

-தம்பி கூர்மதியன்

Comments

Popular posts from this blog

சிட்லபாக்கத்தில் தொடரும் வாழ்வியல் போராட்டம்!

ஏழு நாட்கள்...

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..