என் காதல் - காதலாகி நின்றேன்....

நாட்கள் கடந்தோடின…!

நாங்கள் இருவரும் பேசாத நாட்கள் என்று ஒன்று இல்லாமல் போனது. பயிற்சி சமயத்தில் ஆரம்பத்தில் நான் கொஞ்சம் மந்தமாக தான் இருந்தேன். விருப்பமில்லாத இடம் என்னும் காரணத்தால். ஆனால் நாட்கள் செல்ல செல்ல செயல்முறை பயிற்சிகள் தொடங்கப்பட்டது. கம்ப்யூட்டரில் கோடிங் அடிக்க வேண்டும் என்று சொன்னவுடன்- உள்ளுக்குள் உறங்கிக்கொண்டிருந்த அந்த பழைய கோடிங் பைத்தியக்காரன் விழித்துக்கொண்டான்.

கம்ப்யூட்டரில் C, C++, Java, Cobol, VB Script, Java Script என சிலவகைகளில் எனக்கு பயிற்சி அதிகம். நான் விரும்பி படித்தவைகள் இவை. கல்லூரியில் சொல்லிக்கொடுத்ததை தாண்டி நானாக தேடி தேடி சிலவற்றை கற்றேன். இங்கு பயிற்சியில் கோடிங் செய்யவேண்டும் என்று கேட்க, நானும் ரொம்ப விருப்பமாக உட்கார்ந்தேன். அதன் பிறகு எல்லாமே ஒரு பிடிப்போடு செய்தேன். அவ்வபோது என்னவள் வந்து சொல்லுவாள், ‘ஒரு கம்பேனி உன்ன தூக்கிப்போட்டதா இருக்க கூடாது. நீ ஒரு கம்பேனிய தூக்கி போட்டதா தான் இருக்கணும்… உனக்குள்ள திறமை இருக்கு… உன்ன மத்தவங்க கேவலமா பாக்க நீ வழிகொடுக்காத’ என்று அவள் சொல்லுவாள்.

ஒரு பெண் வந்து சொல்லிவிட்டாள். உள்ளுக்குள் உத்வேகம் பிறந்துவிடும் என்று நான் நினைக்கவில்லை. ஆனால் அவள் சொன்ன ஒன்று மிகப்பெரிய உண்மை. என்னை எவனும் வெளியேற்ற கூடாது… நான் தான் மற்றவர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருக்க வேண்டும் என்று எண்ணினேன். அன்று தொடங்கினேன். வருடங்கள் நான்காகிவிட்டன. இன்றும் என்னை நானாக நிலை நிறுத்திக்கொண்டிருக்கிறேன். அவள் தெரிந்து அதை சொன்னாளா அல்லது அறியாத ஏதோ பேச்சாய் சொல்லவிட்டாளா தெரியவில்லை. இன்றும் ஏதேனும் சோர்வு ஏற்பட்டால், அல்லது அலுவலகம் மீது கோபம் எழுந்தாலோ நான் தான் பெரியவன் என்னும் மமதையை என்னுள் இருக்கிறது. அதுக்கு காரணம் என்னவள்.

இவன் திறமைசாலி, இவன் முட்டாள் என்னும் பேதங்களெல்லாம் பள்ளியோடு முடிந்துபோனது. இங்கு நான் படிக்காத போது யாரும் என்னை ஒதுக்கவில்லை, படிக்கும்பொழுது யாரும் எனக்கு நெருங்கவில்லை. எல்லோரும் எப்பொழுதும் ஒருவராய் என் நண்பர்களாய் இருந்தார்கள்.

சுரேஷ்..! எங்கள் அலுவலகத்தின் தலைமை அதிகாரி. அவர் தான் எங்களை இந்த அலுவலகத்தில் அமர்த்தியது. அப்பொழுது மொபைல் செயலிகள் வளர்ந்து வந்துக்கொண்டிருந்த சமயம். அவர் நன்கு கோடிங் எழுத தெரிந்தவர்கள் மொபைல் துறைக்கு வரலாம் என்று சொல்லவே எல்லோரும் என்னை கை காண்பித்தனர். என்னோடு கணேஷ்.. என்ற நண்பரும் சேர்ந்திருக்க. நாங்கள் இருவரும் மொபைல் செக்ஷனுக்கு சென்றோம். அன்று என்னவளோடு ஒரு பிரிவின் ஆரம்பம் உண்டாகும் என்று நான் நினைக்கவில்லை.

அன்றே எங்களது பயிற்சியும் முடிவடைந்தது. அதற்கு பிறகு எங்கள் அலுவலகத்தின் இன்னொரு பிரிவான போரூர் அருகில் இருக்கும் அலுவலகத்திற்கு அவர்கள் அனுப்பபட்டார்கள். நானும் கணேஷ், இருவர் மட்டும் இங்கே இருந்தோம். என்னவளோடு தினமும் பேசிக்கொண்டே இருந்தேன். என்னையே அறியாமல் அவளோடு மிகவும் நெருங்கிவிட்டேன்.

எனக்கு ஒரு பழக்கம் உண்டு. நான் அதிகமாக சினிமா பார்க்கும் பழக்கமுடையவன். அதிகபட்சமாக ஒரு நாளுக்கு 4 படங்கள் தியேட்டரில் பார்த்திருக்கிறேன். நான் படங்கள் பார்ப்பது கதைகளுக்காக. கதை எவ்வடிவில் இருந்தாலும் நான் அதை தேடி போய்விடுவேன். அப்படி ஒரு நாள் படத்திற்கு பதிவு செய்துக்கொண்டிருக்கையில் அவளும் வருவதாய் சொன்னாள். அது நண்பன் திரைப்படம். அவளோடு சென்று தனியாக பார்த்த முதல் படம். பிறகு அவ்வபோது உணவகத்திற்கும், புத்தக கடைகளுக்கும் நாங்கள் சென்று வந்தோம். அவள் போரூரில் இருப்பதால் இரவு நேரத்தில் மட்டுமே பார்க்க முடிந்தது என்னால். தினமும் இரவு அவளை சந்தித்து ஒரு மணிநேரம் பேசிவிட்டு தான் நகர்ந்தேன். சில நண்பர்கள் நாங்கள் காதலில் இருக்கிறோமா என்று கேட்டார்கள், நான் இல்லை என்று மறுத்தேன்.

அன்று பிப்., 2..! நண்பன் ஸ்டீவ் நான் என்னவளை காதலிக்கிறேனா என்று கேட்டான். நான் பதில் சொல்லும்பொழுதே ‘இதுவரை இல்லை’ என்பது போல சொன்னேன். நான் ஏன் அப்படி சொன்னேன் என்று யோசித்துக்கொண்டிருந்தேன். மறு நாள் என்னவள் எனக்கு சிறு கலங்களாக அழைப்பு விடுத்திருந்தாள். என்ன என்று விசாரித்த பொழுது அனு தன்னை கேலி செய்ததாகவும், என்னோடு அவளை காதலர்கள் என்று ஒப்பிட்டு பேசுவதாகவும் சொல்லி வருந்தினாள். நான் அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தேன். அவள் என்ன பதில் சொன்னாள் என்று கேட்க என் மனம் ஆவலாய் இருந்தது. என்ன சொன்னாய் என்றேன். ‘அவன் என் ப்ரதர் போல… அவன போயி இப்படி பேசாதனு சொல்லிட்டேன்’ என்றாள். எனக்கு ஏதோ உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை சுளீரென்று பரவியது.

‘உன்ன யாரு அப்படி சொல்ல சொன்னா’

‘ஏன்? என்ன ஆச்சு?’ என்றாள் அவள்.

‘ஒரு மண்ணும் ஆகல சாமி… வச்சுடு’ என்று சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்துவிட்டேன். அன்று இரவு முழுவதும் எதற்காக நான் கோபித்துக்கொண்டேன் என்று யோசித்தேன். அடுத்த நாள் அழைத்து 5ம் தேதி எங்கேனும் வெளியில் செல்லலாமா என்று கேட்டேன் அவளை. அவளும் ஒத்துக்கொண்டாள். காலையில் விகடனில் சிறு வேலைகளை செய்துவிட்டு சாயும் காலத்தில் அவளை பார்க்க சென்றேன். இருவரும் வெளியில் சென்று சாப்பிட்டுவிட்டு இரவு சாயும் நேரத்தில் அவளை விடுதியில் விட வந்தேன். அவள் உள்ளே செல்லாமல் என்னிடம் பேசிக்கொண்டிருந்தாள். திடீரென,


‘ஏன் அன்னைக்கு கோப பட்ட?’ என்றாள்.

‘எப்போ?’

‘அனுகிட்ட நான் அப்படி சொன்னேன்னு சொன்னதுக்கு…’

‘அதெல்லாம் ஒண்ணுமில்ல..’ என்றேன். அவள் என்னையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள். அங்கு கொஞ்ச நேரம் அமைதி நிலவியது. பிறகு நானே பேச தொடங்கினேன்.

‘ஸ்டீவ்… நாம லவ் பண்றோமானு கேட்டான்’ என்றேன்.

‘ம்ம்… அதுக்கு நீ என்ன சொன்ன?’ என்று கேட்டாள்.

‘இல்ல… அப்படிலாம் தோணலனு சொன்னேன்’ என்று சொல்லிவிட்டு அவளை பார்த்தேன். அவள் முகத்தில் எந்தவித வித்தியாசமும் தோன்றவில்லை. அவள் அமைதியாக என்னை பார்த்துக்கொண்டிருந்தாள்.

‘என்ன பாக்குற?’ என்றேன் அவளை.

‘இல்ல… ஏதோ வித்தியாசமா தெரியிறயே இன்னைக்கு…’ என்றாள். நான் அதெல்லாம் இல்லை என்பது போல மறுத்தேன். அவள் என்னையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

‘ஏ… என்ன… வச்ச கண் வாங்காம பாக்குற? என்ன லவ் பண்றியா?’ என்றேன்.

‘ம்க்கும்… அதான் குறைச்சல்’ என்றாள் அவள்.

‘ஆனா… நான் உன்ன லவ் பண்ணுறேன்’ என்றேன். அவள் முகத்தில் வெட்கம். அதை தான் எதிர்பார்த்திருந்தவள் போல நெளிந்தாள்.

‘டே… என்ன பேசுற’ என்றாள் சற்று விலகி.

‘இல்ல… உண்மையா தான் சொல்லுறேன். பாக்குற எல்லாருக்கும் நாம லவ்வர்ஸா தெரியுறோம்… நான் எந்த பொண்ணுகிட்டயும் நெருங்கி பழகாத அளவு உன்கிட்ட பழகுறேன். முக்கியமா… ஒரு விசயம் சொல்லுறேன்.ரெண்டு நாளுக்கு முன்னாடி யோசிச்சேன். நாளைக்கே உனக்கு கல்யாணம்னு எனக்கு பத்திரிக்கை வைக்கிற. நான் வர்றேன் உன்ன பாக்க. மணமேடையில இன்னொரு பையன் கைய கோத்துகிட்டு நீ நிக்கிற. இத நினச்சு பாத்தேன். சுள்ளுனு கோபம் வருது…. அப்பவே தெரிஞ்சுருச்சு. இது லவ் தான்னு.’ என்றேன். அவள் என்ன பேசுவது என்று தெரியாமல் விழித்தாள்.

‘உனக்கு ஏதோ ஆகிடுச்சு. வீட்டுக்கு கிளம்பு…’ என்றாள். சற்று பொய் கோபத்தோடு. அவள் விலகி நடந்தாள்.

‘மேடம்… என்ன ஆனாலும் பரவால… நீங்க என்ன விட ரெண்டு மாசம் தான் பெரியவங்க… நான் மனசார என்னைக்குமே உன்ன அக்கானு சொன்னது இல்ல. உங்க அப்பாவோட கோபத்த சமாளிக்க கூடிய ஒரே ஆள் நான் தான்.’ என்று நான் சொல்லிக்கொண்டிருக்கும்போதே அவள் விடுதிக்கு அருகில் வேகமாக நடந்து சென்றாள்.

‘அடியே… உனக்கு ஏத்தவன் நான் தான்டி. என்ன தவிற வேற யாரும் உன்ன நல்லா பாத்துக்க முடியாது. உனக்கு யோசிக்கலாம் டைம் இல்ல… நான் முடிவு பண்ணிட்டேன். நீ லவ்வுனா லவ்வு இல்லாட்டி போ… பட்… ஐ லவ் யூ’ என்றேன். அவள் என்னை திரும்பி ஒரு முறை பார்த்தாள். திரும்பி என் முகம் பார்க்காமல் ஒடி விடுதிக்குள் நுழைந்துக்கொண்டாள்.

சினிமாவில் காட்டும் ஹீரோ போல வண்டியை வளைத்து நெளித்து ஓட்டிக்கொண்டு. கத்திக்கொண்டு சென்றேன் வீட்டிற்கு. அந்த ஒரு நாள் இரவு. அவள் எனக்கு எப்படிபட்டவள், என் குடும்பத்திற்கு எப்படிபட்டவள், என் கனவுகளுக்கு எப்படிபட்டவள் என எல்லாவற்றையும் யோசித்தேன். காதல் வேண்டாம் என்னும் காரணத்திற்காக கண்ணுக்கெதிராக இருக்கும் பொக்கிஷத்தை இழக்க நான் தயாராக இல்லை. இரண்டு மாத பெரியவள், அக்கா என்று வாய் வார்த்தைக்காக சொல்லிவிட்டோம், சுற்றி இருக்கும் நண்பர்கள் எல்லாம் என்ன பேசுவார்கள் என்று எனக்கு யோசிக்க தோன்றவில்லை. ஏதோ ஒரு மூன்றாம் நபருக்காக நான் என்னை , எனக்கான இன்பமிகு வாழ்வை இழக்க விரும்பவில்லை. நான் நானாக என்னவளை ஏற்க நினைத்தேன். என்றும் போல அன்றும் என் மனதிற்கு சரி என்று தோன்றியதை சொன்னேன். அவள் பதில் என்னவாக இருக்கும். அவள் அதிக நாள் என்னை காத்திருக்க வைக்கவில்லை. அவள்….

(இன்னும் காதலிப்பேன்)

-இராமநாதன்


Comments

Popular posts from this blog

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..

அதிகாரி சாமி

பைக் ஓட்டுபவர்கள் கண்டிப்பா பாக்கவும்..!!