மாற்றம் வேண்டும்..... தெளிவாக..!

இந்த நாடே சென்ற வாரம் சுதந்திர தினத்தை கொண்டாடியது. சுதந்திரம் வாங்கிவிட்டோம் வாங்கிவிட்டோம் என்று பல ஆண்டுகளுக்கு முன்னிலிருந்து நாம் பிதற்றிக்கொண்டிருக்கிறோம். வழமையாக அனைவரும் கேட்பது போல எங்கு இருக்கிறது சுதந்திரம்? இரவில் பெண் தனியாக நடந்தால் தான் சுதந்திரம். ஊழல் அழிந்தால் தான் சுதந்திரம் என்று நாம் சாராது மற்றவனை குறை சொல்வதிலே இங்கு  அனைவரின் கவனம் இருந்தது.

சிக்னலில் நிக்காமல் செல்லும் ஒருவனை காவல் துறை அதிகாரி மடக்கி பிடிக்கிறார். அதற்கு அவன் சொல்லும் பதில், ஊரில் பெரிய பெரிய தவறை செய்பவனெல்லாம் கண்டுக்கொள்ளாமல் சிக்னலை மதிக்கவில்லை என்னும் ஒரு சிறிய குற்றத்துக்கு பிடிக்கிறீங்களே என்கிறான். ஊரில் எல்லோரும் பெரிய தப்பு செய்கிறான் நான் சின்ன தப்பு செஞ்சுகுறேனு சொல்லுறது எவ்வளவு பெரிய முட்டாள் தனம். முதலில் நீ நீயாக இரு. ஒரு மனிதனாக இரு. மற்றவனிடம் நீ என்ன எதிர்பார்க்கிறாயோ அதுவாக நீ இரு. அப்பொழுது தான் உலகு மாறும்.

ஊழல் ஒழிய வேண்டும் என்று இங்கு சொல்லும் ஒவ்வொருவரும் ஊழலுக்கான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்துக்கொண்டு தான் இருக்கிறீர்கள். பெட்ரோல் பங்க்கில் நீ பெட்ரோலுக்காக கொடுக்கும் காசில் சேவை வரி இருக்கிறது. அந்த சேவையோடு கூடியது தான் அவன் இணைத்துக்கொடுக்கும் இலவச காற்று சரிபார்க்கும் சேவை. ஆனால் அங்கு காத்து பிடித்துவிட்டு- அங்கு ‘நோ டிப்ஸ்’ போர்டை பார்த்தாலும் நம் தாராள மனதிற்கு ஏற்றார் போல 2 அல்லது 5 ரூபாயை கொடுத்துவிட்டு வருகிறது முதல் தளம். சாப்பிட செல்லும் உணவகத்திலும் சேவை வரி இருக்கிறது. ஆனால் அங்கேயும் சாப்பிட்டு முடித்த பிறகு டிப்ஸ் தருவது.

யாருக்கும் இந்திய மக்கள் தொகையை பற்றி சொல்ல தேவையில்லை. இப்படிபட்ட பறந்துவிரிந்த மக்கள் தொகை கொண்ட நாட்டில் செயல்பாடுகள் சீராக இருக்கவேண்டுமென்றால் அதற்கு சிலவகையான வழிமுறைகளை பின்பற்றி தான் ஆகவேண்டும். அப்படி பின்பற்ற வேண்டிய வழிமுறைகளால் உங்களுக்கு நேரம் விரயம் ஆகும் தான். எனக்கு நேரமே ஆக கூடாது எடுத்த எடுப்பில் முடித்துவிட வேண்டும் என்றால் அபரிவிதமான போலிகள் புழங்கிவிடும். ஆனால் நம்மவர் யாருக்கும் அந்த அளவுக்கு பொறுமை இல்லை. சீக்கிரம் முடியவேண்டும் என்பதற்காக இருக்கப்பட்டவன் எல்லாம் அவன் அவன் தகுதிக்கேற்ப சிறு சிறு லஞ்சம் கொடுத்துக்கொண்டு தான் இருக்கிறான். இப்பொழுது சில அறிவு ஜீவிகள் கேட்க கூடும். எப்படி இருந்தாலும் போலிகள் புழங்கதானே போகிறது. அதற்கு வழிமுறைகளை எளிமையாக்கிவிட்டால் நாங்கள் லஞ்சம் தரவேண்டாமே என்று. இது முட்டாள் தனமாக இல்லை? நான்… எனக்கு.. என்று சுயநலம் மட்டுமே போதுமா? ஒவ்வொன்றிலும் போலிகள் கலப்பது நமக்கு நல்லதா? வழிமுறைகள் எளிமையாக்கப்படமாட்டாது. நாம் அதன்படி நடந்து ஆகவே வேண்டும்.

உள்நாட்டு இளைஞர்களை அரசாங்கம் ஊக்குவிக்க முடியவில்லை. அதனால் நாங்கள் வெளிநாடு போய் எங்கள் அறிவை வெளிகாட்டுகிறோம் என்று சொல்கிறார்கள். வெளிநாடுகளிலும் எல்லோரும் ஜெயிப்பதில்லை. ஒவ்வொரு நாட்டிலும் இந்திய மூளை அதிகமாக விற்பனை ஆகிறது என்றால் அந்த நாட்டின் மூளை ஒடுக்கப்படுகிறது என்பது தான் அர்த்தம். ஒவ்வொரு நாட்டிலும் உள்நாட்டு பூசல்கள் இருக்கிறது. உண்மையில் அயல்நாட்டுக்காரர்கள் இந்தியனை நாடுவது மூளைக்காக மட்டுமல்ல-அவனின் அடிமை தனத்துக்காகவும் கூடதான். கையால் விசிறிக்கொள்ள கஷ்டபட்டவன் காசு கொடுத்து மின்விசிறியை வாங்கினான். வெள்ளைக்காரனின் சோம்பேறி தனத்துக்கு இந்தியனை காசு கொடுத்து வாங்கி கொள்கிறான் அவ்வளவு தான். சார்… அமெரிக்காவிலையும் பிச்சைகாரன் இருக்குறான் சார்.

அமெரிக்கா காரன் அள்ளி அள்ளி கொடுத்துடுறானா? ஏன் எல்லாம் அமெரிக்கா போறாங்க? ஏன் துபாய் போறாங்க? ஏன் இலங்கைக்கு யாரும் போகல? அமெரிக்காவை காட்டிலும் இந்திய மூளை தேவைபடுற எத்தனையோ சின்ன நாடுகள் – அதே சமயம் திறமையை ஆதரிக்கிற சின்ன நாடுகள் இருக்கே அங்க ஏன் போகல? நம்ம ஆளுகளுக்கு சொகுசு வேணும். அவன் திறமைய காட்டணும்னு நினைக்கல. திறமைய விக்கணும்னு நினைக்கிறான். என்னைக்கு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஒன்றுக்கு ஒன்று என்னும் விகிதத்திற்கு வருமோ அன்று நீங்கள் சொல்லும் திறமையை ஆதரிக்க கூடிய தேசத்துக்கு போய் சேர்ந்த அனைத்து இளைஞர்களும் இந்தியா என் தாய் மண் என்று பிதற்றிக்கொண்டு வந்துவிடுவார்கள்.

நீ ஒருவனை குறை சொல்லவேண்டுமானால், முதலில் உன்னிடத்தில் குறை இல்லாமல் இருக்கிறதா என்று பார். உலகம் திருந்தவேண்டும் என்று கேட்கும் முன்பு நீ உலகுக்கு நல்லவனாக இருக்கிறாயா என்று பார். கல்லூரிக்கு பணம் கட்ட முடியாமல் தவிக்கும் ஆட்டோகாரர், இன்சூரன்ஸ் காபி இல்லாமல் போய் ட்ராபிக் போலீஸில் 50 ரூபாய் லஞ்சம் கொடுத்துவிட்டு தானே போகிறான். அவன் அவன் அவனோட தகுதிக்கு ஏத்தாற் போல லஞ்சம் கொடுத்து கொடுத்து பெருக்கிவிட்டு அவனோடு அடுத்த கீழ்மட்டத்துல இருக்கவன கஷ்டபடுத்திட்டு தானே இருக்கீங்க. இப்ப ஆட்டோகாரன் கொடுத்த 50 ரூபாய அடுத்த சைக்கிள் ரிக்ஷாகாரன்கிட்ட கேட்டா எப்படி கிடைக்கும்.? உலகில் தவறு நடக்கிறது என்று சொல்லும்முன்பு அது எப்படி ஆரம்பிக்கப்பட்டது என்பதையும் யோசித்து பார். நீ இன்று செய்யும் ஒரு தவறு அடுத்தவனுக்கு அவனுடையே தேவையே கிடைக்காது செய்துவிடுகிறபொழுது நீ இன்னொருவனை குறை சொல்லி எண்ண பயன்?

தனிமனித ஒழுக்கம் வேண்டும். சமத்துவ அரசியல் தெரிந்துக்கொள்ள வேண்டும். பொதுநல சிந்தனை வேண்டும். இது எதுவும் அல்லாது – தனக்கு வேண்டுவதை செய்துக்கொண்டு கிடைக்காததை குறை சொல்லிக்கொண்டு திரியும் யாருக்கும் மற்றவன் குறையை பற்றி பேச அருகதை இல்லை.

மக்களை பற்றி மட்டுமே குறை சொல்கிறேனா? ஹா… ஒட்டுமொத்தமாய் இருக்கப்பட்டவன் இல்லாதபட்டவன் அனைவரும் ஒன்றுபட்டால் நீங்கள் வெறுப்பது அனைத்தும் மாறிவிடும். நீங்கள் விரும்புவது போல மாறிவிடும். உங்கள் நிலைக்கு நீங்களே பொறுப்பு… சமத்துவ அரசியல் பின்பற்றி வாழ்வோம்...!


-தம்பி கூர்மதியன்

Comments

Popular posts from this blog

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..

அதிகாரி சாமி

பைக் ஓட்டுபவர்கள் கண்டிப்பா பாக்கவும்..!!