என் காதல் - பிள்ளையார் சுழி...!

நான் இந்த ஐடி கம்பேனியில் சேரும் ஒரு நாள் முன்னர் தான் என் அக்காவிற்கு இனியா பிறந்திருந்தாள். நான் எல்லோரோடும் சகஜமாக பழக ஆரம்பித்த பிறகு எனக்கு அங்கு நெருங்கிய நண்பர்களாக இருந்தவர்கள், என்னைப்போன்று எஸ்.ஆர்.எம்., கல்லூரியில் படித்து வந்திருந்தவர்களும். அவர்களை தவிர்த்து இருவர். ஒன்று அனிதா. மற்றொன்று என்னவள்.

அனிதா எதுவாக இருந்தாலும் சகஜமாக பேசி உடனுக்குடனே தன் விருப்பத்தை சொல்லும் பழக்கமுடையவள். அக்காவின் குழந்தையை பார்க்கவேண்டும் என்று அவள் கேட்டாள். அன்று வீட்டிற்கு சென்றதும் அனிதாவுடன் வீடியோ சாட்டில் குழந்தையை காண்பித்தேன். அடுத்த நாள், வழக்கம் போல இந்த கதை ஆபிஸில் ஓடிக்கொண்டிருக்க என்னவள் மட்டும் ஒரு ஓரத்தில் அமைதியாக எந்த பேச்சிலும் ஈடுபடாமல் இருந்தாள்.

சிறிது நேரம் பொறுத்து பார்த்து, அடிக்கடி முருங்கை மரத்தில் ஏறிக்கொள்ளும் அவளை அமைதியாக்க அவளுக்கு அருகில் எனது நாற்காலியை இழுத்து போட்டு அமர்ந்துக்கொண்டேன். என்றும் இல்லாமல் படிப்பதாய் பாவலா காட்டிக்கொண்டிருந்தாள். என் தொண்டையை கரகரத்து காண்பித்தேன். அவள் கண்டுக்கொள்ளவில்லை. அவளது கம்ப்யூட்டரை லாக் செய்தேன். லாக் செய்த கம்ப்யூட்டரை கூட அவள் முறைத்து பார்த்துக்கொண்டே இருந்தாள். அட என்னடா இவள் பிரச்சனை என்று பேச ஆரம்பித்தேன்.

‘என்ன ஆச்சு?’ என்றேன். அவளிடம் இருந்து பதிலில்லை.

‘ஏ.. உன்ன தான் மா கேக்குறேன்.. எதனா பிரச்சனையா?’ என்றேன். மீண்டும் பதிலில்லை.

‘சோடாவுக்கு இருந்தாலும் ரொம்ப தான் திமிர் போல’ என்றேன்.

‘யாரு.. யாருடா சோடா.. மரியாதை கொடுத்து பேசு’

‘சாரி மேடம்… தெரியாம பேசிட்டேன்… விடுங்க’

‘ஏன் பேசணும்.. அப்பரம் தெரியாம பேசிட்டேன்னு சொல்லணும்.’

‘என்னதான் உன் பிரச்சனை?’ நான் கொஞ்சம் சலித்துக்கொண்டேன்.

‘எதுக்கு சார்.. எப்படி இருந்தாலும் எதனா மழுப்ப தான் போறீங்க.. எதுக்கு எனக்கு’ என்றாள்.

‘சொல்லாம தெரிய நான் பெரிய ஞானி இல்ல’

‘ஆமா.. அதுக்கு என்ன’

‘சரிங்க.. நான் போறேன்.. உங்ககிட்ட தொங்க எனக்கு நேரமில்ல’ நான் சொன்னேன்.

‘ஆமா… மத்தவங்களுக்கு பாப்பாவ காட்ட நேரம் இருக்கும். மத்தவங்க கூட பேச நேரம் இருக்கும்.. என்கிட்ட பாப்பாவ காட்ட கூட தோணாது. பேசவும் முடியாதுல’ அவள் கொட்டி தீர்த்தாள்.

‘ஏய்.. எரும.. அவ கேட்டா அதனால பாப்பாவ காமிச்சேன்.. உனக்கும் பாக்கணும்னா கேட்க வேண்டியது தானே’

‘ஓ.. கேட்கணுமா? ம்ம்.. சரிங்க சார்… உங்க அக்கா பாப்பாவ காட்டுங்க சார்…’ என்றாள் பொய்யான கோபத்தோடு. அன்று இரவு அவளை வீடியோ சாட்டில் அழைத்து குழந்தையை காண்பித்தேன். அவள் முகத்தில் ஆயிரம் சந்தோசங்கள். குழந்தையை பார்க்கும்போது அவள் குழந்தையாகவே மாறிவிட்டது போல இருந்தது. அவள் பேசியது எனக்கு கேட்கவில்லை. ஆனால் கணிணி திரை பார்த்து ஏதோ குழந்தையை கொஞ்சிக்கொண்டிருந்தாள். நாள் அவளை கவனித்துக்கொண்டிருந்தேன்.

எங்களுக்குள் தெரியாமல் அளவுக்கு அதிகமாக உரிமை எடுத்துக்கொள்ள தொடங்கினோம். நான் நெருங்கி பழகும் அனைவரிடத்தும் உரிமை எடுத்துக்கொள்ள கூடியவன் நான். பொசசிவ்நஸ்சின் மொத்த உருவமும் நான் தான். எனக்கு பிடித்தமானவர்கள் என்னுடனே அதிகம் பேசவேண்டும் என்னும் கீழ்தரமான எண்ணங்களுக்கு சொந்தகாரனாக நான் இருந்தேன். அம்மா அப்பா தொடங்கி, நண்பர்கள், குழந்தைகள் என என்னுடைய நெருங்கிய வட்டமனைத்திலும் இந்த பொசசிவ்நஸ் எனக்கு உண்டு.

அதுபோல எனக்கு அதிகமாக பொசசிவ்நஸ் இருந்தது அங்கு மூவர் மீது. அனிதா, என்னவள் மற்றும் உமா சங்கர். உமா சங்கர் நல்ல நகைச்சுவையாக பேசகூடியவனாக இருப்பினும் அவன் மீது எனக்கு அன்பு வர காரணமாக இருந்தது, என்னைப்போல அவனும் ஒரு கனவை காற்றிலே மிதக்கவிட்டு இந்த ஐ.டி., கம்பேனியில் கால் எடுத்து வைத்தான் என்னும் நினைப்பு தான். அவன் நல்ல டான்ஸர். அருமையாக ஆடக்கூடியவன். அந்த துறையிலே முன்னேற நினைத்த அவன், ஏனோ இந்த கண்ணாடி கூண்டுக்குள் என்னை போல மாட்டிக்கொண்டான். எனது எண்ணங்களை அவனோடு பகிர்ந்துக்கொள்ளும் போது உற்சாகமூட்டும்படியாக அவன் பேசுவது எனக்கு சில சமயம் உந்துதள் சக்தியை தந்திருக்கிறது. சில சமயம் நான் யோசித்தது உண்டு- நான் ஏன் இப்படி இருக்கிறேன் என்று. ஆனால் பொசசிவ்நஸ்-உம் ஒரு அன்பை வெளிப்படுத்தும் விதம் தான். அவர்கள் அதை வெறுக்காத வரையில் அவர்களாக விலகாத வரையில் நாம் அப்படி இருப்பது தவறில்லை என்று எனக்கு நானே சொல்லிக்கொள்வேன்.

நாட்கள் கடக்கையில் இது தவறென்றும். நாம் அனைவரும் நண்பர்கள். நான் என்னை ஒரு கூண்டுக்குள் நிறுத்திக்கொள்ள கூடாது என்றும் நினைத்தேன். எளிதாக அனைவரிடமும் பழகிவிட்டேன். அந்த பொசசிவ்நஸ் சீக்கிரம் என்னை விட்டு தலைதெறிக்க ஓடியது. ஆனால் என்னவளிடம் மட்டும் என்னால் அதை விலக்கிக்கொள்ள முடியவில்லை. இதை நட்பை தாண்டிய எண்ணமோ என்று நினைத்தேன். 

ஒரு நாள் அனைவரும் அவர்கள் பிறந்த தினங்களை பகிர்ந்துக்கொண்டோம். அப்பொழுது என்னவள் என்னைவிட இரண்டு மாதங்கள் மூத்தவளாக இருந்தாள். ‘அய்யய்யே யக்காவா நீ?’ என்றேன். ‘யக்கா.. யக்கா…’ என்று கலாய்த்தேன். அவள் முகம் சட்டென மாறியது. அவளை நான் ‘அக்கா..’ என்றழைப்பது அவளுக்கு பிடிக்கவில்லை என்று எனக்கு தோன்றியது. அவளை அதன்பிறகு அக்கா என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவள் என்ன நினைத்தாளோ..! அதன் பிறகு முட்டல் மோதல் வரும்போதெல்லாம் ‘தம்பி..’ ‘தம்பி…’ என்று என்னை சீண்டுவாள். இருவருக்குமே அதில் விருப்பமில்லை என்றபோதும் இருவர் வாயை அடைக்கவும் அவ்வபோது இது போன்று சீண்டிக்கொண்டோம். இது தவறு என்று உள்ளுக்குள் ஏதோ சொல்லிக்கொண்டே இருந்தது. சீக்கிரம் இதற்கு ஒரு முடிவு வேண்டும் என்றும் உள்ளுக்குள் ஏதோ உறுத்திக்கொண்டே இருந்தது. விளையாட்டாய் ‘அக்கா..’ என சொல்லபோய் இவள் இதையே பிடித்துக்கொண்டு தொங்குவாள் போலிருக்கிறதே என்று தோன்றியது. இருப்பினும் அவள் சொல்லும் வார்த்தையில் ஏதோ மறைவு இருக்கிறது. அவள் முழு மனதோடு சொல்லவில்லை. அவளும் விளையாட்டாய் சொல்லிக்கொண்டிருக்கிறாள் என்று தெரிந்தது. உள்ளுக்குள் ஏதோ இனம் புரியா மகிழ்வு. இருந்தும் இதற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்.


நாட்கள் அப்படியே சென்றது…

(இன்னும் காதலிப்பேன்)

-இராமநாதன்

Comments

Popular posts from this blog

சிட்லபாக்கத்தில் தொடரும் வாழ்வியல் போராட்டம்!

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..

GST – நான் அறிந்தவை!