என் காதல் - என்னவளோடு பயணங்கள்...!

நாட்கள் சில கடந்தோடின. எங்கள் பேச்சுக்களிடையே அவள் அவ்வபோது என்னை வெளியில் எங்கேனும் அழைத்து செல்லும் படி கேட்பாள். நான் அதை தட்டி கழித்துக்கொண்டே இருந்தேன். பின்பு ஒரு நாள் அவள் ஊருக்கு செல்லும் பொழுது நான் அவளை பேருந்து நிலையம் வரை வண்டியில் அழைத்து செல்லுகிறேன் என்று சொன்னேன். அவள் கேட்காமல் இம்முறை நானாக வந்து சொல்ல, அவள் மனதிற்குள் ஏதோ நினைத்துக்கொண்டு என்னை ஓரக்கண்ணால் பார்த்தாள். உதட்டில் ஒரு கேலி சிரிப்பு இருந்தது.

‘சரி.. மேடம் கேட்டுட்டே இருக்கீங்கனு தான் கூப்பிட்டேன். நீங்க பஸ் புடிச்சு கஷ்டபட்டு போகணும்னா போங்களேன்.. யார் தடுத்தா..’ என்று அவள் பார்வைக்கு நான் பதில் சொன்னேன். அவள் இன்னும் கேலி சிரிப்பு சிரித்தாள்.

‘நீ வரவே வேண்டாம்… நான் ஆபிஸ் முடிஞ்சதும் நேரா வீட்டுக்கு போறேன்.. சரி கேட்டுட்டே இருக்கியே.. சும்மா ரவுண்டு போல கூட்டிட்டு போலாம்னு பாத்தா, ஓவரா பண்ணுற’ வயதான பாட்டி போல நான் புலம்பிக்கொண்டிருந்தேன்.
அவள் என்னையே பார்த்துக்கொண்டிருந்தாள். சிறிது நேரத்தில் அன்று அலுவலக நேரம் முடிந்தது. நேராக என்னை பார்த்து.

‘போலாமா?’ என்றாள்.

‘எங்க? நான்லாம் எந்த பொண்ணையும் வண்டியில ஏத்தமாட்டேன்.. நான் வீட்டுக்கு போறேன் பா…’

‘ஆஹான்… இப்ப கூட்டிட்டு போகலனா, நேரா உங்க வீட்டுக்கு வந்து உங்க அம்மாகிட்ட சொல்லிருவேன்’

‘என்னான்னு சொல்லுவ?’

‘உங்க பையன் என்ன வண்டியில கூப்பிடுறான்… என்ன பாக்குறப்போலாம் வேற ரொமான்டிக்கா சிரிக்கிறான்… பையன ஒழுங்கா வளர்க்க மாட்டீங்களானு கேக்கணும்’ என்றாள்.

‘அம்மா தாயே.. நீ செஞ்சாலும் செய்யுவ… நான் உன்ன கூட்டிட்டே போயிடுறேன் மா…’ என்றேன் சற்று நடிப்பு கெஞ்சலாக. அவள் அப்படி செய்யமாட்டாள் என்பது எனக்கு தெரியும். இருப்பினும் அங்கு அந்த நடிப்பு தேவையானது.

முதல் முறை என்னோடு அவள் என் வண்டியில் பயணிக்கிறாள். என்னுடைய வண்டி என்னுடைய மிகப்பெரிய நண்பன். அவசியமல்லாது என் குடும்பத்தை தவிர்த்த எந்த பெண்ணையும் நான் எனது வண்டியில் ஏற்றியதில்லை. அன்று அவளோடு பயணிக்கையில் இவளும் என் குடும்பத்தில் ஒருத்தியாக ஆவாள் என்று நான் எண்ணி பார்க்க நினைக்கவில்லை.

அவளை அழைத்துக்கொண்டு கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு சென்றேன். வாசலில் அவளை இறக்கிவிட்டு திரும்பி – ‘பாத்து போ.. பை’ என்று சொல்லிவிட்டு நான் வந்துவிட்டேன். வரும்போது ஏதோ இனம் புரியாத மகிழ்வு என்னுள்ளே. வடபழனியை தாண்டி வந்துவிட்டேன். மனதினுள்ளே ஏதோ ஒரு எண்ணம். இறக்கிவிட்டுவிட்டு வந்துவிட்டோமே, பஸ் ஏற்றிவிடவேண்டும் என்று நினைத்திருப்பாளோ என்று எண்ணினேன். அலைப்பேசியை எடுத்து அவளை அழைத்தேன்…

‘பஸ் ஏறிட்டியா?’

‘ஆ… ஏறிட்டேன் டா…’

‘சரி சரி.. பாத்து போ… ஆமா… நான் உள்ள வந்து பஸ் ஏத்திவிடலனு எதனா நெனச்சியா?’

‘சே சே.. இல்லடா… அறிவுகெட்டவன ட்ராப் பண்ண சொல்லிட்டு இதெல்லாம் எதிர்பார்பேனா?’

‘ஏ… என்ன சொல்லுற?’

‘பின்ன என்னவாம்… என்னமோ சரக்கு லாரில இருந்து சரக்க இறக்கிபோட்ட மாதிரி நீ பாட்டுக்கு இறக்கிவிட்டுட்டு போயிட்டே இருக்க… வாயில எதனா வந்துரும்…’

‘வரும்… ஏன் வராது… நீ ட்ராப் பண்ணதானே கேட்ட… பஸ் ஏத்திவிட கேட்டியா? சும்மா குறை சொல்லிகிட்டே… என்ன எதிர்பார்க்குறியோ அத வாய திறந்து சொல்லணும்…’ என்றேன். ஹா. அவள் இன்றும் என்ன எதிர்ப்பார்க்கிறாள் என்று வாயை திறந்து சொல்லியது கிடையாது. கிட்டதட்ட நான்கு வருடங்கள் கடந்துவிட்டது, அவள் எண்ண ஓட்டங்களை பல முறை புரிந்துக்கொள்ள தெரிந்த எனக்கு சில முறை தவறுகளால் தலையை பிய்த்துக்கொண்டு ஓடியிருக்கிறேன். அவள் மனதை படிக்கும் மென்பொருள் ஒன்றை கண்டுபிடித்தே தீரவேண்டும். ஹா… !!

பிறகு அவளை அவ்வபோது எனது வண்டியில் சாப்பிடுவதற்கு, பேருந்து நிலையத்திற்கு என்று அழைத்து செல்வேன். வண்டியை ஓட்டும்பொழுது அவள் முகத்தை பார்த்து பேச முடியவில்லை என்று அப்பொழுது என் வண்டி கண்ணாடியை அவள் முகம் பார்த்தவாறு திருப்பினேன். அது இன்றுவரை தொடர்ந்துக்கொண்டிருக்கிறது. என்னவள் பின்னால் அமர்கையில் என் வண்டி கண்ணாடி தானாக அவள் முகம் காட்டிவிடும்.

அன்று எங்கள் குழுவில் ஒருவருக்கு பிறந்தநாள். கேக் வெட்டி கொண்டாடுவது எங்களுக்கு தொடர்கதையாகவிட்டது. காலையில் கிளம்பிக்கொண்டிருக்கும் போதே அவளிடமிருந்து ஒரு அழைப்பு.

‘ஹலோ… சொல்லுமா..’ என்றேன்.

‘கிளம்பிட்டியா டா?’ என்றாள்.

‘கிளம்பிட்டேன் மா… நீ எங்க இருக்க?’

‘நான் ஊருக்கு போயிட்டு வந்துட்டு இருக்கேன் டா… யாரோ தலைவர் வர்றாங்கனு பஸ்லாம் ராமசந்திரா ஹாஸ்பிடலோட திரும்பி போகுதுடா… எப்படி போறதுனு தெரியல.. கொஞ்சம் வந்து கூட்டிட்டு போறியா?’ என்றாள். ஆம்… அவள் யாரிடனும் அதிகமாக பேசமாட்டாள். அதிகமாக சென்னையில் இருந்திருந்தாலும் இன்னும் அவளுக்கு சென்னை பரிட்சயம் ஆகவில்லை. அன்றும் அவள் அப்படி நின்றுக்கொண்டிருந்தாள்.

‘சரி மா… நான் வர்றேன்… எங்க நிக்குற?’ என்றேன்.

‘அந்த நாலு ரோடு போகுமே சிக்னல்… அங்கடா’ என்றாள். ராமசந்திரா மருத்துவமனை அருகில் நாலு ரோடா என்று யோசித்துக்கொண்டே வர்றேன் என்று சொல்லிவிட்டு வண்டியை எடுத்துக்கொண்டு வேகமாக சென்றேன். கத்திப்பாரா தாண்டிய பிறகு அவ்வபோது அவளோடு பேசிக்கொண்டே வண்டியில் சென்றேன். அவள் போருர் சிக்னலில் நின்றுக்கொண்டிருந்தாள். அந்த ட்ராபிக் சலசலப்பில் முன்னும் பின்னும் நகர்ந்துக்கொண்டு – ஒரு சிறு குழந்தையை ரோட்டில் விட்டது போல அவ்வளவு அழகாக அவள் அலைமோதிக்கொண்டிருந்தாள். எனது வண்டியை நேராக அவள் முன்னால் கொண்டு போய் நிறுத்தினேன்.

‘இதுதான் ராமசந்திராவா?’ என்றேன். அவள் பற்கள் தெரிய என்னை பார்த்து சிரித்தாள். 

எனக்கு சில விசித்திரமான பழக்கங்கள் உண்டு. பேருந்து நிலையத்திற்கு சென்று ஏதோ ஒரு பேருந்தில் ஏறிக்கொண்டு அதன் போகும் தூரம் வரை சென்று- ஒன்றும் தெரியாத இடத்தில் இறங்கி சாப்பிட்டுவிட்டு கால் வலிக்கும் வரை சுற்றி வருவேன். கிராமத்தின் வயல்வெளிகள், கோவில்கள், கோட்டைகள் என்று நான் சுற்றிவருவேன். கால் வலிக்க ஆரம்பித்த பிறகு மீண்டும் பேருந்து ஏறி வீட்டிற்கு வந்துவிடுவேன். 

இந்த பழக்கம் அப்படியே ஒரு சுற்று மாறி போனது எனது வண்டி வந்த பிறகு. வண்டியில் ஏதேனும் தெரியாத ரோட்டில் பயணிப்பேன். சாலைபோகும் வழியில் – முன்னால் இருப்பவர் போகும் வழியில் நான் போயிக்கொண்டே இருப்பேன். அப்படி போகும்பொழுது பல அருமையான சாலைகளை கண்டிருக்கிறேன். பிரபலமான  ரோட்டுகடைகளில் இறங்கி சாப்பிட்டிருக்கிறேன். என்னை தொலைத்து ஏதோ ஒன்றை தேடி செல்வது போல இருக்கும் அது. 

இவைகளை நான் என்றுமே தனியாக இருக்கும்பொழுது தான் செய்வேன். அன்று அவளோடு அதை செய்ய மனதுக்கு தோன்றியது. அப்பொழுது எனக்கு போரூர் பரீட்சயமான சாலை அல்ல. போரூர் – விருகம்பாக்கம் சாலையில் அவளோடு எனது வண்டி போய்க்கொண்டிருந்தது. சட்டென எனக்கு பிடித்த ஒரு வலத்திருப்பத்தில் திரும்பினேன். அவள் என்ன ஏது என்று கேட்காமல் அமைதியாக பின்னால் உட்கார்ந்திருந்தாள்.

‘எங்க டா.. வளஞ்சு வளஞ்சு போய்கிட்டு இருக்கே..?’ என்றாள் அவள்.

‘யாருக்கு தெரியும்… முன்னாடி போறவன கேட்டா தான் தெரியும்’ என்றேன். அவள் அதிர்ந்தாள். அவள் முகத்தை என் வண்டி கண்ணாடி காண்பித்தது. நான் சிரித்தேன்.

‘அப்போ… உனக்கு இந்த ரூட் தெரியாதா?’

‘தெரியாதே’ நான் சொன்னேன்.

‘அப்போ எப்படி போறது..?’

‘இப்ப முன்னாடி ஒருத்தர் போறார்ல… அவர் பின்னாலே போவோம்… ஏதாச்சும் ரோடு கிடைக்கும்… தெரிஞ்ச ரோடா இருந்தா ஆபிஸ் போயிடலாம்… இல்லனா வேற யாரு பின்னாலாச்சும் போவோம்..’

‘நல்லா வருவ டா நீ…’ என்றாள் அவள். நான் எனக்கு முன்னால் சென்றுக்கொண்டிருந்தவர் பின்னாலே சென்றேன். அவள் என் பின்னால் உட்கார்ந்துக்கொண்டு ‘ஏ.. ஏ.. லெப்ட் திரும்பிட்டார் பார்… சீக்கிரம் போ…’ … ‘அந்த டர்னிங் தான் டா…’ என்று என் பழக்கத்தில் அவளும் ஐக்கியம் ஆகிவிட்டாள். அவளோடு அந்த பயணத்தை நான் மிகவும் ரசித்தேன், சட்டென பதறியவனாய்.

‘அய்யோ…’ என்றேன்.

‘என்னடா’ என்றாள்.

‘இன்னைக்கு கேக் கட்டிங் இருக்கே… நாம போறதுக்குள்ள கட் பண்ணிட போறாங்க..’

‘கட் பண்ணினா பண்ணிட்டு போறாங்க டா… அதுக்கு என்ன?’ என்றாள்.

‘அதுக்கு என்னவா? மேடம்… எனக்கு கேக் தான் முக்கியம்..’ என்றேன்.

‘ஓ… என்னவிட கேக் முக்கியமா?’ என்றாள் பொய் கோபத்தோடு.

‘ஏ… ஒண்ணு மட்டும் தெரிஞ்சுக்கோ… ஒரு பெரிய பள்ளத்துல நீ விழ போற… தொங்கிட்டு இருக்க… இன்னொரு மூலையில கேக் இருக்கு.. அப்போ கேக்கா நீயானு என்கிட்ட கேட்டா… நான் மொதல்ல போயி கேக்க எடுத்துட்டு வந்து தான் உன்ன காப்பாத்துவேன்… எனக்கு கேக் தான் முக்கியம்… தெரிஞ்சுக்கோ…’ என்றேன்.

‘கொழுப்புடா உனக்கு’ என்று சொல்லிவிட்டு என் முதுகில் அறைந்தாள். பின்பு ஏதோ ஒரு திருப்பத்தில் ஆர்காட் ரோடை பிடித்து, பில்லர் வழியாக ஆபிஸ் வந்து சேர்ந்தேன்.

அன்று என்னவளுடன் ஒரு இனிய பயணம்… மாலையில் என் வாயில் கேக்கின் பயணம்..! இரண்டுமே கிடைத்தது.

(இன்னும் காதலிப்பேன்)


-இராமநாதன் 

Comments

Popular posts from this blog

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..

பைக் ஓட்டுபவர்கள் கண்டிப்பா பாக்கவும்..!!

அதிகாரி சாமி