என் காதல் - என்னவளின் வீட்டில்....

அன்று ஒரு வெள்ளிக்கிழமை…

காலையில் எழுந்து வழக்கம்போல அலுவலகம் கிளம்பி வண்டியில் போய்க்கொண்டிருக்கும்போதே என்னவளிடமிருந்து அழைப்பு. அவளுக்கு உடம்பு முடியவில்லை, இன்று அலுவலகம் வரமாட்டேன் என்றாள். சரி என்று சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்துவிட்டேன்.

அவளது விடுதியை கடந்தே என் அலுவலகம் போகும்படி இருந்தது. அன்று அவளது விடுதிக்கு அருகில் சென்றதும் அவளை அழைத்தேன். அவளுக்காக காத்திருக்கிறேன் பார்த்துவிட்டு அலுவலகம் செல்கிறேன் என்று சொல்லி அவளை வெளியே அழைத்தேன். சிறிது நேரத்தில் அவள் வந்தாள். என்ன ஆனது என்று கேட்டேன். உடம்புக்கு முடியவில்லை, ஜூரம் என்றாள். மருத்துவமனைக்கு அழைத்தேன். அவள் வர மறுத்துவிட்டாள். வேறு என்ன பண்ணவேண்டும் என்று கேட்டேன். ஊருக்கு போகலாம் என்று இருப்பதாய் சொன்னாள். முடியுமா என்று கேட்டேன். கஷ்டமா தான் இருக்கு, இருந்தாலும் போனா சரியாகிடும் என்றாள். சிறிது நேரம் யோசித்தேன். என் கையில் இருக்கும் அலைப்பேசியை எடுத்தேன், எங்கள் அலுவலக பயிற்சியாளருக்கு அழைப்பு விடுத்தேன்.

‘நித்யா… எனக்கு உடம்பு முடியலங்க… இன்னைக்கு லீவ் வேணும்…’

‘ஓகே ராம்… டேக் கேர்…’ என்று அவர் சொன்னார். நான் இணைப்பை துண்டித்துவிட்டு என்னவளை பார்த்து சிரித்தேன். அவள் ஆச்சரியம் மற்றும் கேள்வி குறியோடு என்னை பார்த்தாள்.

‘ஊருக்கு போகணும்னு சொன்னல… வா… கூட்டிட்டு போறேன்’ என்றேன். அவள் அதிர்ந்துபோய் என்னை பார்த்தாள்.

‘ஏ… பரவால டா… நான் பாத்துக்குறேன்…’

‘சரி… தனியா போற அளவுக்கு முடியுமா? கஷ்டமா இல்லயா?’ என்று கேட்டேன். அவள் கஷ்டமாக இருக்குமா என்று யோசித்தாளா அல்லது என்னோடு பயணிக்க இஷ்டமாக இருக்குமா என்று யோசித்தாளா தெரியவில்லை- கஷ்டமா தான் இருக்கும் என்று சொல்லி நான் உடன் வருவதற்கு ஒத்துக்கொண்டாள்.

ஒரு மாதம் முன்பு வண்டியில் அழைத்து சென்ற நான் பேருந்தை கூட ஏற்றிவிடாமல் திரும்பி வந்தேன். இன்று அவளோடு அவள் வீட்டிற்கே சென்று விட்டு வரும் வரை மாறிவிட்டேன். வியப்பாக இருந்தது. அவள் மேலே சென்று முகம் கழுவிவிட்டு பையை எடுத்துக்கொண்டு வந்துவிடுகிறேன் என்று சொன்னாள். அன்று முதல் முறையாக ஒரு பெண்ணுக்காக நான் காத்திருந்தேன். என் மனதில் ஒரு எண்ணமும் இல்லை. ஒரு நெருங்கிய தோழிக்கு உறுதுணையாக இருக்கும் எண்ணம் மட்டுமே அன்று என் மனதில் இருந்தது.

அவளோடு கோயம்பேடு பேருந்து நிலையம் சென்றேன். வண்டியை நிறுத்திவிட்டு பேருந்தை பிடித்து இருவரும் ஏறிக்கொண்டோம். அது மூன்று பேர் உட்காரும் இருக்கை. நானும் அவளும் ஒரு மூலையில் உட்கார்ந்துக்கொள்ள எங்கள் இருவருக்கும் இடையில் எங்கள் பைகள் எங்களை பிரித்தது. வண்டியில் கூட்டம் அதிகமானால் நான் வேறு ஏதேனும் இருக்கைக்கு சென்றுவிடலாம் என்று இருந்தேன். ஒரு அக்கரையில் கிளம்பிவந்துவிட்டோம், அவளிடம் வழிகிறோம் என்னும் எண்ணம் அவளுக்கு வந்துவிடகூடாது என்று நான் உறுதியாக இருந்தேன்.

கோயம்பேட்டிலிருந்து காஞ்சிபுரம் வரை எங்கள் குடும்ப விசயங்களை பகிர்ந்துக்கொண்டோம். அவ்வபோது அலுவலக நண்பர்கள் ஏதேனும் எங்களை கிண்டல் கேலி செய்யக்கூடும் என்றும் பேசிக்கொண்டோம். அவள் ஜன்னல் ஓரமாக சாய்ந்துக்கொண்டாள். நான் என்ன நினைத்தேன் என்று தெரியவில்லை, சிறிது நேரம் அவள் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன். காஞ்சிபுரத்தில் நுழைந்தோம், என் கையில் இருந்த புத்தகத்தால் அவளை தட்டி எழுப்பினேன். அவளை நேராக அவள் வழக்கமாக காட்டும் மருத்துவமனைக்கு அழைத்து சென்றேன். அவள் என்னை வெளியே இருக்க சொல்லிவிட்டு அவள் மட்டும் உள்ளே சென்று ஆலோசனை வாங்கிக்கொண்டு வந்தாள்.

‘ஊசி போட்டாங்களா?’ என்று கேட்டேன்.

‘இல்ல… எனக்கு இவங்க ஊசி போட மாட்டாங்க… மாத்திரை மட்டும் தான் தருவாங்க’

‘ஏன்…?’

‘என்ன பத்தி அவங்களுக்கு தெரியும்… ஊசி போடகூடாதுனு கேட்டுப்பேன்… நீ வேற… இந்த மாத்திரைலாம் எனக்கு இறங்குறதுக்குள்ளவே உயிர் போயிடும்’ என்றாள்.

‘ஹா… இதுல என்ன பிரச்சனை உனக்கு?’

‘போடுற எனக்கு தான் தெரியும்… இந்த குட்டி வாய்ல எவ்வளவு பெரிய மாத்திரை போடுறது’ என்று குழந்தை போல முகத்தை வைத்துக்கொண்டாள். நான் அவளை என்னை மறந்து பார்த்துக்கிடந்தேன். அவள் வீடு அங்கிருந்து சில தூரம் தான், அவளாக போய்விடுவாளா என்று கேட்டேன். அவள் என்னை அவள் வீட்டுக்கு அழைத்தாள். அம்மா ஏதேனும் தவறாக நினைத்துக்கொள்வார்கள் நான் வரமாட்டேன் என்றேன். ஆனால் அவள் வற்புறுத்தி அழைத்ததால் நான் அவளோடு சென்றேன்.

அவள் அம்மாவை பற்றி என்னிடம் அதிகமாக சொல்லியிருக்கிறாள். அவள் வீட்டை பற்றி சொல்லியிருக்கிறாள். அவள் அப்பா ஒரு இன்ஜினியர். அவரே திட்டமிட்டு கூடு போல் வீடை கட்டிவிட்டார் என்று குறை சொல்லிக்கொண்டிருப்பாள். அவள் அம்மா வீட்டை கவனித்துக்கொண்டாலும் ஆங்கில நாளிதழ்களை கரைத்து குடிப்பார் என்றும் விளையாட்டு சேனல்களை விரும்பி பார்ப்பார் என்றும் என்னிடம் சொல்லியிருக்கிறாள். அவள் வீட்டினுள் நுழைகையில் என் வீட்டில் நுழைந்தது போல ஒரு உணர்வு. அவள் அம்மா என்னை நன்றாக வரவேற்றார்கள்.

அது மதிய உணவு நேரம். சாப்பிட்டுவிட்டு தான் போகவேண்டும் என்று கேட்டு கொண்டார். என்னால் மறுக்க முடியவில்லை. அவள் வீட்டு இருக்கையில் அமர்ந்திருந்தேன். அவள் வீட்டில் நுழைந்ததும் ஒரு உடம்பு முடியாதவள் போல அவள் இல்லவே இல்லை. துள்ளி குதித்துக்கொண்டு காட்டில் அவிழ்த்துவிடபட்ட ஒரு மான் போல ஓடிக்கொண்டிருந்தாள். அவள் வீட்டு பின்னால் மரங்கள். முன்னே பாதுகாப்பாக மூழு நீள கதவுகள் என்று அழகாக தான் கட்டியிருந்தார். ‘வீடு ரொம்ப அழகா இருக்கு, ஏன் நல்லா இல்லனு சொல்லுற’ என்று அவளை கடிந்துக்கொண்டேன்.

‘நீ என்னைக்கு தான் எனக்கு சப்போர்ட் பண்ணியிருக்க… எப்போ பாத்தாலும் என் அப்பாக்கு தான் சப்போர்ட் பண்ணுவ’ என்று அவளும் அவள் பங்குக்கு கடிந்துக்கொண்டாள். நான் எப்பொழுதுமே அவள் அப்பாவிற்கு தான் சாதகமாக பேசியிருக்கிறேன். உலகம் இருக்கும் சூழலில் அவர் நடந்துக்கொள்வது எனக்கு சரியாக தான் தோன்றும். அவள் அவளது அப்பாவிடம் கோபம் கொள்ளும்பொழுதெல்லாம் அவர் பக்கம் இருக்கும் நியாயத்தை இன்றளவும் நான் அவளுக்கு சொல்லிக்கொண்டிருக்கிறேன்.

‘உன்ன பாத்தா, உடம்பு சரியில்லாதவ மாதிரியா இருக்கு? இப்படி இருப்பனு தெரிஞ்சுருந்தா நான் வந்துருக்கவே மாட்டேன்…’ என்று நான் பொய்யாக கோபித்துக்கொண்டேன்.

‘என் அம்மாவ பாத்தா எனக்கு எல்லாம் சரியாகிடும்’ என்றாள் அவள். அவள் அம்மா மீது அவள் உயிரையே வைத்திருந்தாள். மேலும், ‘நீ இப்போ வந்ததால தான் என் அம்மா கையால டேஸ்ட்டா சாப்பிட போற… அத தெரிஞ்சுக்கோ’ என்றாள். நான் மௌனமாக சிரித்தேன். அவள் அம்மா அவளை அப்பளம் பொறிக்க அழைத்தார்கள்.
அவள் சமையலறை உள்ளே சென்றாள். நானும் ஏதோ என்னுடைய வீடுபோல சமையலறை வாசலில் போய் சாய்ந்து நின்றுக்கொண்டு அந்த இரு பெண்களும் வேலை செய்வதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன். என்னவள் அடுப்பில் சட்டியை வைத்துவிட்டு அப்பளத்தை போட்டு கரண்டியை உள்ளே விட்டு துழாவி வெளியே எடுக்க நினைக்கையில் சட்டென சட்டியும் வெளியே எட்டி குதிக்க பார்த்தது. அவள் அம்மா அவளை திட்டிக்கொண்டே அதை சரி செய்தார்கள். இன்றளவும் ஒரு சட்டையை கூட பிடிக்க தெரியாதவள் என்று அவளை நான் கிண்டல் செய்துக்கொண்டிருக்கிறேன். ஹா… அன்று எப்படி அவள் வீட்டில் என்னை நானாக முன்னிறுத்திக்கொண்டிருந்தேன் என்று எனக்கு தெரியவில்லை. அவள் அம்மா என்னை இன்முகத்தோடு வரவேற்றது இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது. அன்று என் மனதில் கிஞ்சதேனும் காதல் என்னும் எண்ணம் இல்லை. அதனால் தான் என்னால் அன்று சகஜமாக இருக்க முடிந்தது.

என் அம்மா கட்டி கொடுத்த சாப்பாடை கெட்டுபோய் விடகூடாது என்று மூன்று பேரும் அதை பகிர்ந்துண்டு சாப்பிட்டோம். அவள் அம்மா வைத்திருந்தது நன்றாக இருந்தது – ஆனால் கீரையும் ரசமும் எனக்கு பிடிக்காததாய் இருந்தது. அமைதியாக சாப்பிட்டுவிட்டு எழுந்துவிட்டேன். அவ்வபோது அவள் நான் குண்டாக இருப்பதை சொல்லி கேலிப்பாள். அப்பொழுது அவள் அம்மா,

‘உடல் வாகு அப்படி இருக்கு அவனுக்கு… பசங்கனா நல்லா சாப்பிடணும்.. இவன் கம்மியா தான் சாப்புடுறான்… அதுக்கே இப்படி சொல்லுற… பிச்சுருவேன்’ என்று அவள் அம்மா அவளை கடிந்துக்கொண்டார். எனக்கு அது பிடித்திருந்தது. என்னை பற்றி நான் தாழ்வாக நினைத்துக்கொள்ளும் ஒரே விடயம் நான் குண்டாக இருப்பது தான். அதை குறையாக எண்ணாது எனக்கு ஏத்தவாறு பேசிய அவரை எனக்கு பிடித்தது.

பிறகு சாப்பிட்ட பிறகு…

‘நான் கிளம்புறேன் மா..’ என்று அவள் அம்மாவிடம் சொன்னேன்.

‘ஏன் பா… இறேன்… இவ அக்கா வந்துவருவா… பாத்துட்டு போகலாம்’ என்றார்.

‘இல்லமா… இப்ப கிளம்புனா தான் வீட்டுக்கு போக முடியும்… நான் இன்னொரு நாள் வர்றேன்’ என்றேன். அம்மாவும் சரி என்று ஒத்துக்கொண்டார்கள். நான் மீண்டும் வருகிறேன் என்று சொன்ன நாள் இன்னும் வரவே இல்லை. நான் மீண்டும் வரும்பொழுது அவரோடு மருமகனாக வருவேன் என்று நான் அன்று நினைத்தும் பார்க்கவில்லை.

நான் வெளியில் சென்று செருப்பை மாட்டுகையில் அவள் அருகில் இருந்த மாடிபடிக்கட்டில் அமர்ந்துக்கொண்டு என்னையே பார்த்துக்கொண்டிருந்தாள். நான் அவளை ஒரு முறை பார்த்துவிட்டு, அவளது அம்மாவிடம்

‘மூக்கு குத்தி விடுங்க மா அவளுக்கு… பொண்ணா ஒழுங்கா மூக்கு குத்திக்க சொல்லுங்க’ என்றேன்.

‘எங்க பா சொன்னா கேக்குறா? ஒண்ணும் கேக்குறதே இல்ல’ என்றார்.

‘கேக்கலனா நீங்களே குத்துங்க…’ என்று சொல்லி சிரித்தேன். அவள் பொய்யாக கோபித்துக்கொண்டது போல பார்த்தாள். அன்று செல்லமாக கோபித்துக்கொண்டவள் எனக்காக இன்று மூக்கில் மூக்குத்தியோடு நான் விரும்பியவளாக இருக்கிறாள். அன்று மீண்டும் சென்னை வரும்வரை அவள் வீட்டில் நடந்தவைகளை நினைத்துக்கொண்டே அவ்வபோது அவளோடு பேசிக்கொண்டே வந்தேன்.

நெஞ்சில் நிறைந்த நினைவுகளாய்... அடுத்தமுறை அவள் வீடாக இருக்கும் என் வீட்டிற்கு செல்ல காத்திருக்கிறேன்..!!

(இன்னும் காதலிப்பேன்)

-இராமநாதன்

Comments

Popular posts from this blog

சிட்லபாக்கத்தில் தொடரும் வாழ்வியல் போராட்டம்!

ஏழு நாட்கள்...

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..