மகிழ்வின் கதை....

அந்த கடற்கரையில் கால் வைத்து பல மாதங்கள் ஆகிபோனது. அவனும் அவளும் தங்களுடைய காலணிகளை காரிலேயே கழட்டி வைத்துவிட்டு லேசாக சுடும் அந்த கடற்கரை மணலில் நடந்து போகின்றனர். அவன் தூரத்தில் இருந்து அந்த கடலையே பார்த்துக்கொண்டு வந்தான்.

‘என்னடா… முதல் முறை வர்ற போல இப்படி பாக்குற?’ என்றாள் அவள்.

‘இன்னைக்கு புதுசா வர்ற போல இருக்குடி… ஏன்னு தெரியல’

‘ஆமா… இருக்கும் இருக்கும் சாருக்கு…’ என்றாள் லேசாக புன்னகையித்தபடி. அவனும் பதிலுக்கு சிரித்துக்கொண்டான். அந்த கடலலை காற்றின் அருகில் அவனும் அவளும் லேசா உயர்த்தப்பட்ட ஒரு மணல் திட்டில் அமர்ந்தார்கள். அவன் அந்த கடலலையிலிருந்து கண்களை எடுக்கவே இல்லை.

‘ஏன் டா… அப்படி என்னதான் இருக்கு இந்த கடல்ல… ஏன் எப்ப வந்தாலும் வச்ச கண்ணு வாங்காம அப்படியே பாத்துட்டு இருக்க?’ என்றாள் அவள். அவன் கடலிலிருந்து கண்களை அகற்றாமல்,

‘ஏதோ இருக்கு… அதுல… எனக்கு அத பாக்குறப்போலாம் மனசு ரொம்ப அமைதியா ஆகுற போல இருக்கு… அந்த கடல் அலை எழுந்து வர ஆக்ரோஷத்த பாரேன்.. ஆனா அது கரைக்கு வர்றதுக்கு முன்ன அதோட வேகம் குறைஞ்சு போயிடுதுல… அப்படி தானே எல்லா மனுசங்களும்..?’ என்றான்.

‘டே… ஆரம்பிச்சுட்டியா? பக்கத்துல என்ன போல நச்சுனு ஒரு ஃபிகர வச்சுகிட்டு… கடல பாத்து பிலாசபி பேசுற?’ என்றாள் சற்று பொய் கோபத்தோடு. அவன் சட்டென அவள் முகத்தை திரும்பி பார்த்தான். அவன் கண்களில் காதல்… அவளுக்கு வெட்கம் வரத்தொடங்கியது. முன்னால் விழும் முடிகளை சற்று விலக்கிவிட்டுக்கொண்டே அவன் பார்வையின் காந்த சக்தியில் இருந்து தப்பித்துக்கொள்ளலாமா என்று விழிகளை உருட்டிக்கொண்டிருந்தாள்.

கடினமான அவன் குரலில் ஒருவித கலப்பு ஏற்பட்டுவிட்டது. அவள் முகத்தை பார்த்தவாறே அவளோடு பேசத்தொடங்கினான்.

‘நான் ஒண்ணு சொல்லவா?’ என்றான் அவள் கண்களை பார்த்தபடி. அவள் கண்கள் அலைபாய்ந்துக்கொண்டிருந்தது. பலமுறை கேட்ட பிறகும் முதல்முறை அந்த காதல் வார்த்தைகளை கேட்பது போல அவள் கண்களில் வெட்கம் கொப்பளித்துக்கொண்டிருந்தது. அவள் பதில் சொல்லவில்லை. அவள் கண்கள் பதில் சொன்னது – ‘சொல்லடா.. அதற்காக தானே காத்துக்கொண்டிருக்கிறேன்’ என அவள் கண்கள் பதில் சொன்னது. அவன் அவளது கண்களை பார்த்தபடியே சொன்னான்…

‘அதிகமா சினிமா பாத்துட்டு இனிமே நச்சுனு, ஃபிகருனு ஏதாவது கேவலமா பேசிட்டு திரிஞ்ச… அடுத்த முறை இந்த கடல்லயே தூக்கி போட்டுட்டு போயிருவேன்.’ என்றான் லேசாக அந்த காதல் பார்வை கோப பார்வையாக மாறியபடி. எதிர்பார்ப்பின் ஏமாற்றத்தை தாங்கிக்கொண்டு அவள் அவனை திரும்பி பார்த்தாள்.

‘டே… உன்கிட்ட தானே பேசுறேன்… மத்தவங்ககிட்டலாமா பேசுறேன்? பொண்ணுங்கலாம் எப்படி பேசிப்பாலுங்க தெரியுமா? நான் அப்படி என் பொண்ணுங்க ஃப்ரண்ட்ஸ்கிட்ட கூட பேசினது இல்ல… உன்கிட்ட தானே டா எனக்கு பிடிச்ச போலலாம் பேச முடியும்? பேசுறவங்கலாம் கெட்டவங்க கிடையாது தெரிஞ்சுக்கோ…’ என்று அவள் சொல்லி முடிக்கையில் அவள் கண்களில் லேசாக கண்ணீர் துளிவிட்டது. அவள் கடல் பக்கம் பார்த்தாள். அவனும் கடல் பக்கம் பார்த்தான். அவள் கொஞ்ச நேரம் சினுங்கிவிட்டு மீண்டும் அவனை பார்த்தாள். அவன் கடலையே பார்த்துக்கொண்டிருந்தான்.

‘ஏன்டா… நான் இங்க ஒருத்தி அழுகுறேன். நீ என்னடானா விட்டுச்சு சனியன்னு திரும்ப கடலையேவா பாத்துகிட்டு இருக்க?’

‘எனக்கு புடிக்கல… அத சொன்னேன். அத சொன்னா சினுங்குற? அதுக்கெல்லாம் சமாதானம் பண்ண முடியாது’ என்று அவன் சொல்லவிட்டு கடலையே பார்த்துக்கொண்டிருந்தான். சிறிது நேரம் அங்கு அமைதி நிலவியது. அவள் மீண்டும் பேசினாள்,

‘டே…’ என்றாள் அவள்.

‘ம்…’ என்றான் கடலையே பார்த்துக்கொண்டு.

‘டே பேரிக்கா மண்டையா…’ என்றாள் அவள் ஆக்ரோஷமாக. அவன் சட்டென அவளை திரும்பி பார்த்தான். பக்கத்தில் இருந்த ஒரு கல்லை தூக்கிக்கொண்டு அவனை பார்த்தவாறு ஆக்ரோஷமாய் தூக்கி எறியும் வாக்கில் நின்றுக்கொண்டிருந்தாள்.

‘அடியே…. என்ன பண்ணுற’ என்றான் சற்று பதறியவாறு கொஞ்சம் விலகி இழுத்துக்கொண்டே.

‘பின்ன என்னடா? பொண்டாட்டி அழுகுறா… சமாதானம் பண்ண முடியல… அப்பரம் என்ன ம….த்துக்குடா உனக்கெல்லாம் பொண்டாட்டி…’

‘ஏ… என்னடி அசிங்கமா பேசுற?’ என்றான் குரலில் நடுக்கத்தோடு.

‘பின்ன என்னவாம்… லவ் பண்ணுற வரை தான் ஏதோ வேண்டா வெறுப்பா பேசுனான்னு பாத்தா… கட்டிக்கிட்ட பிறகும் கடலையே பாத்துக்கிட்டே இருக்கான்… கேட்டா பெரிய இவன் மாதிரி பேசுறான்.. இன்னைக்கு நான் விதவையானாலும் பரவாலடா… உன்ன கொன்னுட்டு தான் மறு வேலை’ என்றாள் இன்னும் கோபமாக. 

அவன் எழுந்து விளையாட்டாக ஓடினான்… அவள் பின்னாலையே துரத்திக்கொண்டு சென்றாள். கடல் அலை அருகில் அவன் ஓடியபோது அவள் அவன் பின்சட்டையை இழுத்து கீழே தள்ளினாள். அவன் நிலைதடுமாறி கீழே விழுந்தான்.

மூச்சு இறைத்துக்கொண்டே அவன், ‘ஏ… நான் உன் புருசன்டி… விட்டிறுடி…’ என்றான் உதட்டில் சிரிப்போடு.

‘டே… உன்ன பாத்தா எனக்கு புருசன் போல தெரியல… அந்த கடலுக்கு தான் புருசன் போல… போ… அதுக்கிட்டயே போ…’ என்று சொல்லிவிட்டு அவன் காலை பிடித்து இழுத்து கடல் அலையோடு அலையாக தள்ளினாள். விழுந்த வேகத்தில் அவளையும் பிடித்து அவன் இழுத்து தள்ளி இருவரும் முழுதும் அந்த தண்ணீரில் மூழ்கி எழுந்து வெளியில் வந்தனர். எழுந்து நடந்து வருகையிலே இருவரும் சிரித்துக்கொண்டு வந்தனர்.

‘ஏ… இங்க பாருடி… என் கேரக்டரே இப்படி தான். உனக்கு தெரியாதா? ஏன்டி இப்படி பண்ணுற’ என்றான் சிரித்துக்கொண்டே. அவன் காதருகில் அவள் வந்து,

‘இவன் தான் கல்யாணம் ஆன அன்னைக்கு என் உதட்ட புண்ணாக்கி வச்சவன்… ஞாபகம் இருக்கோ இல்லயோ’ என்றாள் சற்று நக்கலாக. அவன் பல்லை இளித்துக்கொண்டே, அவள் முகத்தை கையை சுற்றி காற்றில் முத்தம் கொடுத்துவிட்டு ‘லவ் யு டி செல்லம்…’ என்றான். சட்டென பூத்த மலராய் அவள் முகத்தில் மலர்ச்சியோடு கூடிய வெட்கம். அவர்கள் அந்த கடற்மணலில் நடக்கும்பொழுதே ஒரு 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் இவர்களை பார்த்து,

‘இதெல்லாம் வீட்டுல கேட்க யாருமே இருக்கமாட்டாங்களா? இப்படி அவுத்தவிட்ட மாடு போல திரியுதுங்க…’ என்றார் சற்று கோபமாக சொல்லிவிட்டு இவர்களை கடந்து சென்றார். தூரமாக சென்றவரை இவன் அழைத்தான்.

‘ஹலோ சார்… நாங்க விளையாட தான் செஞ்சோம். தப்பா எதுவும் நடந்துக்கல… பாக்குற உங்க கண்ணுல தான் ஏதோ பிரச்சனை இருக்குபோல… எதுக்கும் நல்ல மனசோட வாங்க…  வீட்டுல கேக்கமாட்டாங்க. சொன்னாலும் நான் கேக்கமாட்டேன்… ஏனோ வீ ஆர் மேரிட்… இவ என் பொண்டாட்டி சார்’ என்றான் சற்று சத்தமாக அவள் கையை இறுக பிடித்துக்கொண்டு. அவர் ஏதோ மொனகிக்கொண்டே போனார்.

‘டே… அவர்கிட்ட போயி ஏன்டா இப்படி பேசுற…’

‘இல்லடி… அவனும் உன் அப்பன போல லூசா இருப்பான் போலடி…’ என்று சொல்லிக்கொண்டே அவன் அவளைவிட்டு சற்று விலகி நடந்தான்.

‘யாரு அப்பாவ லூசுங்குற…? கொன்னுருவன் டா…’ என்று சொல்லிவிட்டு அவள் அவனை துரத்தி ஓட. அவன் பாதியிலே நின்றுவிட்டான்.

‘ஏ… நில்லு நில்லுடி… எவனாச்சும் இதையும் பாத்துட்டு நீ என்ன ரேப் பண்ண வர்ற உலகம் கெட்டுபோச்சுனு டயலாக் பேச போறான் டி…’ என்றான். அவளும் சட்டென நின்றுவிட்டாள். சுற்றி முற்றும் பார்த்துவிட்டு கண்ணாலயே போயிருவோம் போயிருவோம் என்று இருவரும் சொல்லிக்கொண்டனர்.

நடந்துசென்றுக்கொண்டிருக்கும் போதே… அவள்…

‘டே… அவர் பேசுனதுலயும் தப்பில்லடா… இங்க லவ்வுனு பெயர்ல கண்ட கருமம் தானே நடக்குது. எல்லாரையும் காதலிக்கும் பொழுதோ அல்ல பொது இடத்துலயோ உன்ன போலவே நடந்துப்பாங்கனு சொல்லமுடியுமா? கெட்டுபோன உலகத்துல வாழுறோம்டா… இப்படி அவங்க பேசுறது அவங்க மேல மட்டும் தப்பிலடா… புரியுதா? இங்க பீச்சுக்கு நைட்ல வரமுடியுமானு யோசிச்சு பாரேன். நாம லவ் பண்ணுன காலத்துல இந்த பீச்சுக்குள்ள மதியமோ நைட்டோ கால் வைக்க முடியுமா? எவ்வளவு கேவலமா நடந்துகிட்டு இருக்காங்க எல்லாம். இதெல்லாம் பாத்த பெரியவங்களுக்கு கல்யாணம் ஆனவங்க விளையாடுறது கூட தப்பா தான் தெரியும். ஏன் நாளைக்கு ஒரு அண்ணனும் தங்கையும் விளையாடினா கூட இவங்களுக்கு தப்பா தான் தெரியும். சூழல் அப்படி மாறிபோயி இருக்குடா… எதுவும் பண்ண முடியாது. கண்டுக்காம கடந்து போயிறணும்டா.’ என்றாள் மிகவும் முதிர்ச்சியோடு. அவள் பேசிமுடிக்கும் வரை அவன் அவளை தவிற வேறு எங்கும் பார்க்கவில்லை. அவள் அவனை ஒரு முறைகூட பார்க்கவில்லை. அவள் பேசி முடித்த பிறகு, அவள் முகத்தை கையை சுற்றி காற்றில் முத்தம் கொடுத்துவிட்டு


‘லவ் யூ டி…. இந்த மாதிரி யோசிக்கிறது தான் உன்கிட்ட எனக்கு ரொம்ப பிடிக்கும். ஐ ஆம் ஸோ லக்கி டி பொண்டாட்டி…’ என்றான். இருவரும் அந்த முதிர்ச்சி சிரிப்போடு அந்த கடற்கரையிலிருந்து சென்றார்கள்.

-தம்பி கூர்மதியன்

Comments

Popular posts from this blog

முதல் நாள் பள்ளி - தகப்பனாகிய நான் எழுதும் *2

இவருக்கு நான் இதை சொல்லியே ஆகணும்!!

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..