என் காதல் - தனிமையின் ஆரம்பம்

நான் காதலை சொன்ன பிறகு பல நாட்கள் எடுத்துக்கொள்ளவில்லை அவள். அடுத்த இரண்டு நாட்களில் அவளின் காதலை என்னிடம் சொல்லிவிட்டாள். அந்த இரண்டு நாட்களும் என்னைவிட்டு அவள் விலகவில்லை. வழமையாக இருப்பது போல் நாங்கள் இருந்தோம். அவள் காதலை சொன்னநொடியில் விண்ணில் பறப்பதாய் உணரவில்லை ஆனால் என்னுள் ஏதோ சிலிர்ப்பு உணர்ந்தேன்.

நாட்கள் கடந்தது. இந்த காதல் எங்களுக்குள் எந்த மாற்றமும் கொண்டுவரவில்லை. முன்பை போலவே தான் இருந்தோம். காதலை சொன்ன சரியான 20ம் நாள் உமா சங்கர் என்னிடம் கேட்டான். என் செயல்களில் மாற்றம் உணர்ந்தானா அல்லது அவளின் செயல்களில் மாற்றம் உணர்ந்தானா தெரியவில்லை. நான் அவளை காதலிக்கிறேனா என்று கேட்டான். நான் மறுப்பேதும் சொல்லவில்லை. ஆமாம் என்று சொன்னேன். எனக்கு வாழ்த்துக்கள் சொன்னான்.

அப்பொழுது எல்லோரும் என்னிடம் இத்தனை நாட்களாய் சொல்லவில்லை என்று கோபித்துக்கொண்டனர். கேட்கும் ஒவ்வொருவரிடமும் முன்பெல்லாம் காதல் இல்லை இப்பொழுது தான் சில நாட்களாக என்று சமாதானம் சொல்லிக்கொண்டு வந்தேன். அவர்களுக்குள் என்னைப்பற்றிய சில அவதூறு பேச்சுகள் இருந்திருக்கலாம். அதுவரை என்னை அண்ணன் என்று அழைத்த அனிதா அதன் பிறகு என்னை அப்படி அழைக்கவில்லை. பார்க்கும் நொடிகளெல்லாம் என்னை ஒரு குற்றவாளி போல ‘பயிற்சி நேரத்துல அப்படி சொல்லுவீங்க… இப்ப லவ்வுனு சொல்லுறீங்க’ என்று கேட்பார்கள். நான் மனதிலிருந்து எந்த வார்த்தையும் சொல்லவில்லை. விளையாட்டாக ‘அக்கா…’ ‘அக்கா…’ என்றழைக்கபோய் அது இத்தகைய விளைவை கொண்டு வரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. தினமும் நடப்பதை நான் என்னவளிடம் சொல்லிவிடுவேன். நான் மற்றவர்களுக்காக வாழவில்லை. அவள் என் வாழ்வில் இருந்தால் மகிழ்வாக இருப்பேன் என்று எண்ணினேன். அதனால் இவர்களின் பேச்சு என்னை துன்புறுத்தவில்லை. ஆனால் என்னவள் வருந்தினாள். தினமும், விளையாட்டாக சொல்லபோன வார்த்தை வாழ்க்கையை பாழாக்கிவிடுமோ என்று வருந்தினாள். மற்றவர்கள் பேச்சை என்னால் குறைக்க முடியவில்லை. விலகிக்கொண்டேன்.

மீண்டும் என்னுடைய இயல்பான தனிமைக்கு சென்றுவிட்டேன். மற்றவர்களோடு அதிகமாக பழகுவதை நிறுத்திக்கொண்டேன். அனு உரிமையாக கேலி செய்யகூடியவள் – அவளிடம் பேசுவது அதிக வருத்தமளிக்கும் என்று எண்ணி பேசுவதை குறைத்துக்கொண்டேன். அனிதா அவளாகவே விலகிக்கொண்டாள். மற்றவர்களிடமிருந்தும் விலகிக்கொண்டேன்.

அதையும் நினைத்து என்னவள் வருந்தினாள். தினமும் பல மணிநேரங்கள் ‘வாழ்க்கையில் ஒரு நியதி இருக்கிறது. நாம் மனதாற எந்த தவறும் செய்யவில்லை. எதேச்சையாக, விளையாட்டாக பேசிய வார்த்தைகள் நம் வாழ்க்கையை மாற்றாது’ என்று என்னவளை அதிகபடியாக சமாதானம் செய்ய வேண்டி இருந்தது.

அதுவரை ப்ராஜெக்ட் இல்லாமல் இருந்த என்னவளுக்கு ஒரு ப்ராஜெக்ட் அமைந்தது. அவள் என்னோடு பேசும் நேரங்கள் குறைந்தன. வேலைகளை விரைவாக முடித்துவிடும் பழக்கமுடையவன் நான். அதனால் எனக்கு அதிக நேரம் வேலையில்லாமல் தான் இருந்தது. தனிமைபடுத்தப்பட்ட உலகில் அவளும் அன்றி தனியாக ஏதேனும் படித்துக்கொண்டிருப்பேன். அதிக நேரம் உலக விடயங்களை அறிவதிலே சென்றுவிடும். தினமும் அவளது ப்ராஜெக்ட்ல் நடக்கும் விடயங்களை என்னோடு பகிர்ந்துக்கொள்வாள்.

சில நாட்களில் அவள் ப்ராஜெக்ட்ல் இருக்கும் ஒருவர் அதிக உரிமை எடுத்துக்கொள்கிறார் தனக்கு பிடிக்கவில்லை என்று என்னிடம் வந்து சொன்னாள். அவரின் பெயரை கேட்டு எனக்கு தெரிந்த பெண்களிடம் அவரை பற்றி விசாரித்தேன். யாரும் அவரை பற்றி நன்மதிப்பை பதிக்கவில்லை. அவளிடம் என்ன நடக்கிறது என்று விலாவரியாக கேட்டேன்.

தனது அலைப்பேசியை எடுத்து பார்ப்பதாகவும், பர்சனல் மெயில்கள், சாட்களை எடுத்து பார்ப்பதாகவும் சொன்னாள். பிறகு ஏதேனும் சந்தேகம் கேட்க நேர்ந்தாள் வந்து நெருக்கமாக உட்கார்ந்துக்கொண்டு, சில சமயங்களில் டேபிளில் படுத்தவாக்கில் சொல்லிக்கொடுப்பது போல செய்கிறார் என்று சொன்னாள். தனக்கு பிடிக்கவில்லை என்பதை நேராக சொல்லிவிடும்படி நான் சொன்னேன். அவள் தயங்கினாள். அவள் ப்ராஜெக்ட்ல் இருக்கும் மற்றவர்களிடம் இதை பற்றி விசாரித்தேன். அவர்களும் அவர் கொஞ்சம் அதிகமாக தான் நடந்துக்கொள்வார் என்று சொன்னார்கள்.

இருவரும் கலந்து ஆலோசித்தோம். மற்றவர்கள் எப்படி அமைதியாக இருக்கிறார்கள் என்று கேட்டேன். அவர்கள் பொறுத்துக்கொள்கிறார்கள் தன்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்று அவள் சொன்னாள். உனக்கு பிடிக்கவில்லை என்றாள் என்ன தோன்றுகிறதோ அதையே செய் என்றேன். என்ன செய்யவேண்டும் என்று என்னை கேட்டாள். நான் எங்களின் தலைமை அதிகாரி சுரேஷிடம் ப்ராஜெக்ட் மாற்றி தரசொல்லி கேட்க சொன்னேன். அவளும் கேட்பதற்காக அங்கு சென்றாள். அரைமணிநேர பேச்சுக்கு பிறகு வெளியே வந்தாள். என்ன ஆனது என்று கேட்டேன். நான் வேலையை விட்டு போகபோகிறேன் என்றாள். அவர்களிடம் நடந்த விவாதங்களை விலக்கினாள். தனக்கு அந்த ப்ராஜெக்ட் பிடிக்கவில்லை, வேலை செய்ய ஏதுவாக இல்லை என்று மட்டும் சொல்லியிருக்கிறாள். அவரை பற்றி சொல்லவில்லை என்று சொன்னாள். அது சரியாக இருக்காது. தன்னால் அதை அங்கு சொல்லமுடியவில்லை என்றாள். அவர் அதிலே தான் இருந்தாக வேண்டும் பிடிக்கவில்லை என்றால் வேலையை விட்டு போ என்றதாக சொன்னாள். உங்கள் விருப்பத்திற்கு என்னால் அடிமையாக இருக்க முடியாக என்று சொல்லிவிட்டு வெளியேறிவிட்டதாக அவள் சொன்னாள்.

அவளின் அத்தகைய தைரியத்தை நான் பார்த்ததில்லை. எனக்கு தெரிந்ததெல்லாம் பயந்து அத்தனைக்கும் என்னை துணைக்கு அழைக்கும் என்னவளை தான். என் மனதில் இருக்கும் சொல்லை ஒரு பெரிய அதிகாரி முன்னுக்கு முன் நின்று என்னவள் சொல்லியிருக்கிறாள் என்பதை நினைக்கையில் எனக்கே ஏதோ பெருமையாக இருந்தது. பிறகென்ன என்று கேட்டேன்.

நாங்கள் அங்கு இணையும்பொழுது எங்களை மேல்படிப்பு அவர்கள் செலவில் படிக்கவைப்பதாய் அவர்கள் வாக்குறுதி அளித்திருந்தார்கள். ஆனால் நாங்கள் இணைத்து ஆறு மாத காலம் தாண்டியும் இன்னும் அதை ஆரம்பிக்காமல் இருந்தார்கள், அதற்கான வாக்குவாதங்கள் வேறு நடந்துக்கொண்டிருந்தது. அதனால் அவள் தனியாக மேல்படிப்பு படிக்கபோவதாய் என்னிடம் சொன்னாள். நான் பலமுறை அதை பற்றி சிந்தித்தேன்.

அடுத்த நாள் அவளிடம் விளக்கி சொன்னேன். படிக்க சென்றுவிட்டாள் இப்படி பார்ப்பது போல தினமும் பார்க்கமுடியாது, அடிக்கடி பேச முடியாது, விலகல் இருக்கும் என்று அதில் இருக்கும் கடினமான விடயங்களை எடுத்து கூறினேன். அவள் அது கடினம் தான் ஆனால் தன்னால் இங்கு இருக்கமுடியவில்லை என்பதை சொன்னாள். அதன் பிறகு அவளை நான் தடுக்கவில்லை. அவளது விருப்பம்போல எதுவாக இருப்பினும் செய்ய சொல்லிவிட்டேன். அந்த நாளுக்கு பிறகு அவள் அலுவலகம் வரவில்லை.

முதல் நாள் அலுவலகத்தில் யாரும் தெரியாமல், அதிக பழக்கமில்லாமல் எப்படி இருந்தேனோ இப்பொழுதும் அதே சூழல். நண்பர்களை விட்டு விலகவிட்டேன், காதலி வேலையை விட்டு சென்றுவிட்டாள். வேலை நிமித்தமான பேச்சுகளை தவிற அலுவலகத்தில் நான் அதிகமாக பேச அப்பொழுது யாருமில்லை. அவள் ஊருக்கு சென்றாள். அவள் அம்மா என்னோடு அலைபேசியில் பேசினார்கள். அவள் வேலையை விட்டுவிட்டு வந்ததை சொல்லி வருந்தினார்கள். அவளுக்கு எது சரியென்று தோன்றுகிறதோ அதை செய்யட்டும் மா என்று அவர்களை சமாதானம் செய்தேன்.

என்னைவிட்டு அவளின் முதல் பிரிவு…! நேரங்களை வருடங்களாக கடக்க முற்பட்ட சமயங்கள். இப்பொழுது நினைக்கையில் உதட்டோரம் ஒரு சிரிப்பு.


(இன்னும் காதலிப்பேன்…)

-இராமநாதன்

Comments

Popular posts from this blog

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..

பைக் ஓட்டுபவர்கள் கண்டிப்பா பாக்கவும்..!!

அதிகாரி சாமி