தஞ்சை கோவிலும் - எம் மன்னனும் - அனுபவமும்...

மருத்துவம் சம்பந்தமாக தான் முதன்முதலில் தஞ்சைக்கு சென்றேன். பள்ளி முடிந்த சமயம். அங்கே சில மாதங்கள் தங்கி இருந்தேன். வீட்டிலே அடைந்திருக்க விரும்பாத நான் எங்கேனும் வெளியில் கிளம்பலாம் என்று நினைத்து அன்று கிளம்பினேன். தஞ்சை பெரியகோவில் பற்றி அப்பொழுதெல்லாம் நான் அதிகமாக அறிந்திருக்கவில்லை. எல்லா ஊர் பெரிய கோவில் போல இதுவும் இந்த ஊர் கோவில் என்றே நினைத்திருந்தேன். அன்று கோவிலுக்கு செல்லலாம் என்று யாகப்பா நகரிலிருந்து பேருந்தை பிடித்து பழைய பேருந்து நிலையத்தில் இறங்கி சற்று தூரம் வந்த பாதையே நடந்து வந்தால் பிரம்மாண்டமாக நின்றது அந்த சாயம் பூசப்படாத கோவில்.

கோவில்களில் கோபரங்களை மட்டுமே உயரமாக பார்த்த எனக்கு, அந்த கோவில் சற்று வித்தியாசமாக இருந்தது. கோபுரங்கள் எல்லாம் சிரியதாகவும் விமானம் உயரமாகவும் இருந்தது. சரி உள்ளே செல்வோம் என்று உள்ளே சென்றேன். உள்ளே கால்களை எடுத்துவைத்த நிமிடம் என்னுள்ளே ஏதோ ஈர்ப்பு. நெஞ்சம் படபடவென்று வேகமாக துடித்துக்கொண்டது. என்னை யாரோ பின்னாலிருந்து உள்ளே தள்ளுவது போல இருந்தது. மெதுவாக உள்ளே நுழைந்து விமான உயரத்தை மேலிருந்து கீழ்வரை நோட்டமிட்டேன். என் பார்வை முடியும் சமயத்தில் என் கை ரோமங்கள் எழுந்து நின்றுக்கொண்டன. என்னுடைய ஒவ்வொரு காலடி தடமும் என் உள்ளுக்குள்ளே சிலிர்ப்புகள் உண்டாகின. என் அம்மையும் அப்பையும் உள்ளே அமர்ந்திருப்பது போல உணர்ந்தேன். தெய்வ பக்தியா என்று எனக்குள்ளே ஒரு கேள்வி தோன்றியது.

மூலவரை காண செல்லவில்லை. கோவிலை சுற்றி வந்தேன். சுற்றும் கோவில் முழுதும் கல்வெட்டுகள் நிறைந்து கிடந்தன. என் கைகள் அதை தடவிக்கொண்டே சென்றன. ஏதோ என்னை அந்த கல்வெட்டுகளை படிக்க தூண்டிக்கொண்டே இருந்தன. நான் முனைந்தேன் - ஆனால் முடியவில்லை. மதில் சுவர்களை பார்த்தேன். அதிலும் அளவிற்க்கொள்ள முடியா பிரம்மாண்டம். நந்தி சிலைகள் பல உடைந்து கிடந்ததை பார்த்தேன். என் நெஞ்சகத்தில் ரத்தம் கசிவதாய் ஒரு உணர்வு ஏற்பட்டது. எந்தன் உழைப்பு பாழாகிபோகிறதே என்னும் எண்ணம் உண்டானது. சுற்றி முன்னால் வந்து மீண்டும் அந்த விமானத்தை பார்த்தேன். விமானத்தின் நடுவில் இரண்டு யானை துதிக்கையை உயர்த்துவது போல நடுவில் ஏதோ சிலை இருப்பதாய் உணர்ந்தேன். முதன்முதலாய் கலையை கண்டு வியந்தது அன்றாக தான் இருக்க வேண்டும்.

மீண்டும் ஒருமுறை சுற்றி வந்தேன். அங்கே ஓரமாக சென்று ஒரு கருங்கல மண்டபத்தில் அமர்ந்தேன். அங்கே ஒரு நந்தி இருந்தது. சிவனுக்கு நேராக இருக்கும் அந்த பிரம்மாண்ட நந்தியை காட்டிலும் இது என்னை ஈர்த்தது. அப்பொழுது ஏன் இந்த கோவிலில் இரு ந்நதிகள் என்று எனக்கு கேள்விகள் எழுந்தது. பின்னர் இப்பொழுது இருக்கும் பிரம்மாண்ட நந்தி நாயக்கர் காலத்தில் நிறுவப்பட்டது, அங்கு ஓரமாக வைக்கப்பட்டிருக்கும் ந்நதியே எம் மன்னன் இராஜராஜன் காலத்தில் உருவாக்கப்பட்டது என்பதை அறிந்தேன். சற்று நகர்ந்து வருகையில் ஏதோ சிறிய தொட்டி போல வைக்கப்பட்டிருந்த்து. அதில் சிறு தண்ணீரும் தேங்கி நின்றது. இது கண்டிப்பாக ஏதோ உபயோக பொருளாக தான் இருந்திருக்க வேண்டும் என்னும் நினைப்போடு நடந்துவந்தேன்.

ஏன் இக்கோவிலில் எனக்குள்ளே இப்படி ஒரு மனசலசலப்பு. என்ன ஆகிறது எனக்கு? என்னும் கேள்விகள் என்னை துரத்த அங்கு இருக்கும் ஒரு இரும்பு பெஞ்சில் அமர்ந்தேன். என் சிந்தைகள் ஏதோ யோசித்துக்கொண்டிருக்க என் கண்கள் அந்த கோவில்களில் எதையோ தேடிக்கொண்டே இருந்தது. பட்டென என் மனம் என்ன நினைத்தது என்று எனக்கு தெரியவில்லை. அந்த இரும்பு பெஞ்சிலிருந்து இறங்கினேன். கீழே இருந்த புல் தரையில் காலை நீட்டிக்கொண்டு படுத்துக்கொண்டேன். இது என்னுடைய இடம். இது எனக்கான இடம் என்னும் இறுமாப்பு உள்ளே தோன்றியது. அந்த புற்களை கைகளால் தடவிக்கொண்டே அந்த விமானத்தின் பிரம்மாண்டத்தை பார்த்தேன். ஏதோ உள்சிலிர்ப்பு.

மூலவரை பார்க்க உள்ளே சென்றேன். வெளியில் இருக்கும் பிரம்மாண்டம் போல உள்ளே ஒரு பிரம்மாண்டம். லிங்க வடிவன் சிவன் அத்தகைய பெரியதாய் நான் கண்டதில்லை. பிரமித்து கிரங்கி போய் நின்றேன். அசைவற்று நொடிகள் கடப்பதை மறந்து நான் அங்கேயே நின்றுக்கொண்டிருந்தேன். வாசிப்பு வாத்தியங்களோடு அங்கே வந்த சிலர் மேலம் கொட்டத்தொடங்க அந்த வாசிப்பு என்னை இழுத்துக்கொண்டது. என்னை நான் ஒரு மன்னனாக உணர்ந்தேன். அங்கே வாசிப்பு சென்றுக்கொண்டிருக்க நான் இங்கு என்னை உணர்ந்துக்கொண்டேன்.

இது என் கோவில். இது என் இடம். இங்கே என் உயிர் இருக்கிறது என்று எனக்குள்ளே ஏதோ சொல்லிக்கொண்டது.அந்த கல்லை குடைந்தவனாய் நான் இருக்கலாம். அந்த மணலில் என் உடல் உயிரிழந்து கிடந்திருக்கலாம். கல் சுமந்தவனாக, கூத்தாடியாய், உளி பிடித்தவனாய், இரும்படித்தவனாய் இப்படி நான் இருந்திருக்கவேண்டும். எம் மன்னன் இராஜராஜனை தூரத்தில் இருந்து பார்த்து ரசித்திருக்கவேண்டும். கோவிலை பற்றி படித்தேன் – என் இராஜராஜனை பற்றி படித்தேன். அவன் மகன் இராஜேந்திரனை பற்றி படித்தேன். சோழனை பற்றி படித்தேன். சோழத்தை பற்றி படித்தேன். சோழ வம்சத்தை பற்றி படித்தேன். சோழ அழிவை பற்றி படித்தேன். சோழனின் கடைசி வாரிசு மங்கிப்போன காலத்தை அறியும் பொழுது இப்பொழுதே வால்தரித்து என் சோழனை நான் மீண்டும் பெற்றெடுத்திட மாட்டேனா என்று பொங்கி துடிக்கிறது மனது.

பொன்னியின் செல்வனை படித்தேன். பல நாட்களாய் காசுக்காக ஏங்கி சிறுக சிறுக சேர்த்து சமீபத்தில் உடையாரை படித்து முடித்தேன். கங்கை கொண்ட சோழன் காத்திருப்பில் இருக்கிறான். உடையாரில் இறுதியில் பாலகுமாரன் ஐயா சொல்லியிருப்பார். இராஜராஜனும் பஞ்சவன்மாதேவியும் அந்த கோவிலில் குடிக்கொண்டிருக்கிறார்கள். இக்கால சோழ மக்களையும் வாழ்த்துக்கிறார்கள் ஆசிர்வதிக்கிறார்கள் என்று அவர் சொல்லியிருப்பார். அப்படியாயின் என்னை கட்டி ஆண்டவர், அன்று என்னை அங்கே கண்ணீர் வடிக்க வைத்தவர் எம் மன்னனாக தான் இருக்கவேண்டும். அவன் என்னை அவனோடு அணைத்துக்கொண்டிருக்கிறான். வரிகளை எழுதும்பொழுதே அடிவயிற்றிலிருந்து உச்சந்தலை வரை ஒரு நடுக்கம் ஏற்பட்டுவிடுகிறது.


எம் மன்னனே. எம் சோழனே. என் சோழமே… என் தேசமே…! இராஜராஜனை பற்றி பலவேறு மாற்று விமர்சனங்களும் உண்டு என்பதை யான் அறிவேன். ஆனால் என் நாகரீகத்தின் மூத்த குடி எம் மன்னன். அவனல்லாது சோழமில்லை. சிரம் தாழ்ந்த வணக்கங்கள் எம் வீரத்திருமகனே..!!!

-தம்பி கூர்மதியன்

Comments

Popular posts from this blog

சிட்லபாக்கத்தில் தொடரும் வாழ்வியல் போராட்டம்!

ஏழு நாட்கள்...

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..