தீபாவளி - அன்றும் இன்றும்...

முதல் நாள் இரவு அக்கம் பக்கத்து வீட்டு பெண்கள் எல்லாம் எங்கள் வீட்டில் குழுமி இருப்பார்கள். நெருங்கிய உற்றார் உறவினர்கள் எல்லாம் எங்கள் வீட்டில் இருப்பார்கள். குழந்தைகள் ஓட்டமும் கூட்டமுமாக இருப்பார்கள். ஆண்கள் எல்லாம் வெளி திண்ணையில் அரசியல் பேசிக்கொண்டிருப்பார்கள். பெண்கள் வீட்டின் மத்தியிலிருந்து தோட்டம் வரை குழுமி பலகாரங்கள் செய்துக்கொண்டிருப்பார்கள். உருண்டை, சுழியம், தேய் முறுக்கு, குச்சி முறுக்கு, கை முறுக்கு, நீட்டு முறுக்கு இன்னும் பலவகை முறுக்குகள் தயாரிப்புகள் நடக்கும். தேங்காய் கேக் போன்ற கேக் வகைகளும் கலைகட்டும்.

குழந்தையோடு குழந்தையாக ஆட்டம் போட்டுவிட்டு தூங்க இரவு 1 மணிநேரமாகி போகும். அப்பொழுதும் விழித்துக்கொண்டிருக்கும் பெண்களில் என் அம்மாவும் ஒருவர். காலை 4 மணிக்கு வந்து என்னை எழுப்புவார். அப்பொழுது முக்கால்வாசி பெண்கள் குளித்திருப்பர். இவர்களெல்லாம் இரவுகள் தூங்கியிருப்பார்களா என்னும் சந்தேகம் எழும் எனக்கு. எங்களோடு வீட்டு ஆண்களும் சோம்பல் முறித்துக்கொண்டு எழுவர்.

கையில் பல்பொடியை கொட்டிக்கொண்டு தீபாவளி மழைசாரலில் நனைந்துக்கொண்டே தோட்டத்திற்கு போவோம் பல்லை விளக்கிக்கொண்டே. தோட்டத்தில் இருக்கும் தூரத்து மரங்களுக்கு எங்கள் எச்சில்களை உரமாகயிட்டு பின்னால் இருக்கும் கால்வாயில் வாயை கழுவிக்கொண்டு வருவோம்.

நாங்கள் வரும்பொழுது ஆண்கள் எல்லோரும் ஒரு துண்டை கட்டிக்கொண்டு தோட்டத்து பாதியில் இடப்பட்டிருக்கும் சிமண்ட் தரையில் அமர்ந்திருப்பர். அவரவரின் மனைவியர்கள் கையில் கொதிக்கவைத்த நல்லெண்ணையை கொண்டு வந்து தலையில் கொட்டி தேய்ப்பர். எங்கள் வீட்டில் பயந்து போய் நாங்கள் பார்த்த ஆண்கள் எல்லாம் எண்ணெய் முகத்தில் நழுவிஓடும் போது குழந்தை போல பாவலா செய்துக்கொண்டிருப்பார்கள். நாங்கள் பின்னால் இருந்து சிரிப்போம்.

பின்னால் விறகுஅடுப்பில் பெரிய அண்டா ஒன்று வைக்கப்பட்டிருக்கும். எங்கள் வீட்டில் வேலை செய்யும் சின்னையன் தாத்தா அடிபம்பில் இருந்து தண்ணீர் இரைத்து அந்த அண்டாவில் ஊற்றி சூடேற்றிக்கொண்டிருப்பார்கள். அந்த அண்டாவில் எட்டி பார்க்கவேண்டும் என்னும் ஆர்வம் எங்களை தூண்டும். ஆனால் எங்களை விட்டதில்லை.

இரவெல்லாம் சுடபட்ட பலகார பாத்திரங்களை எங்கள் வீட்டில் வேலை செய்யும் அஞ்சல ஆயா விளக்கிக்கொண்டிருப்பார்கள். அவ்வபோது பெண்கள் வந்து அவரிடம், 'அப்படியே போடு அப்பரம் கழுவிக்கலாம். சாமி படைக்கணும்ல... போய் கிளம்பு ஆத்தா' என்பார்கள். ஆனால் ஆயா அதற்கெல்லாம் தலையாட்டிவிட்டு இன்னும் விளக்கிக்கொண்டே இருப்பார்கள்.

சின்னையன் தாத்தாவிடம் சென்று நான் அடிபம்பில் தண்ணீர் அடிக்கிறேன் என்று கெஞ்சுவேன். அவரும் அனுமதிப்பார். அடிபம்பின் படியை பிடித்துக்கொண்டு தொங்குவேன், உனக்கெல்லாம் வரமுடியாது சின்னையாவுக்கு மட்டும் தான் வருவேன் என்று தண்ணீர் விடாபிடியாக அங்கேயே நிற்கும். தாத்தாவின் மகன் ராசு மாமா கிணற்றில் ஒரு பக்கம் தண்ணீர் இரைத்துக்கொண்டிருப்பார்கள். அண்டா தண்ணீர் கொதிக்க கொதிக்க ஆண்களுக்கு தண்ணீர் பரிமாறப்படும். இன்னும் தண்ணீர் அண்டாவில் நிறம்பிக்கொண்டே வரும்.

ஆண்கள் குளித்துக்கொண்டிருக்கும் சமயம் பெண்களுக்கு ஒரு பெரிய யுத்தம் ஒன்று தொடங்கும். அது குழந்தைகளுக்கு எண்ணெய் தடவுவது. உச்சந்தலையில் தொடங்கி உள்ளங்கால் வரை எண்ணெய் தடவிவிடுவார்கள், அதற்கு நாங்கள் தெறித்து ஓடுவோம். அம்மாவிற்கு அதிக வேலையிருப்பதால் சில சமயம் எண்ணெய் கிண்ணி அத்தை கையிற்கு மாறிவிடும். அவமானம் தாங்காது போய்விடும். ‘ஏன்டா மருமவனே உயிர எடுக்குற இப்படி’ என்று அத்தை கேட்கும் சமயம் தூரத்தில் அத்தை மகள் நின்றிருக்ககூடாது என்று மனம் துடிக்கும். ஆனால் ஆசைகளுக்கு நேர்மாறாய் அத்தை மகள் அங்கு நின்று சிரித்துக்கொண்டிருப்பாள்.

ஒருவழியாக எல்லாம் குளித்துமுடித்து சாமி அறையின் முன்னால் குழுமி நிற்போம். எங்கள் புத்தாடைகளுக்கு எல்லாம் நுனிகளில் மஞ்சள் பூசப்பட்டு அங்கு மலை போல குவித்துவைக்கப்பட்டிருக்கும். நேற்றிரவு வரை செய்யப்பட்ட அனைத்து பலகாரங்களும் அங்கே ஒரு பெரிய படையளாய் விரிக்கப்பட்டிருக்கும். காலையில் செய்யப்பட்ட உணவுகள் ஒரு பெரிய இலையில் வைக்கப்பட்டிருக்கும். வெடிப்பதற்கு வாங்கிய பட்டாசுகள் குவிக்கப்பட்டிருக்கும். குளித்த ஈரத்தோடு அங்கு பலர் நின்றுக்கொண்டிருப்பாரகள். எல்லோரும் ஒரு பழைய உடுப்பை உடுத்திக்கொண்டிருப்பார்கள்.

சாமி படங்கள் எல்லாம் அலங்காரம் ஆகி கிடக்கும். வீடுகள் சுத்தமாக்கப்பட்டிருக்கும். வீட்டில் பெரியவரான தாத்தா சூடத்தை கொலுத்தி சாமி படத்தின் முன்னர் மூன்று சுத்து சுத்துவார். பின்பு பலகாரங்கள், புதுதுணிகள், பட்டாசுகள் என்று சுத்திவரும் சூடம். வீட்டின் வாசலுக்கு சென்று வாசற்படியில் காட்டிவிட்டு, சூரியனுக்கும் சூடத்தை காட்டிவைப்பார். பொங்கலுக்கு மட்டுமல்ல, அனைத்து பண்டிகைகளிலும் சூரியனை வேண்டிக்கொள்வார்கள் எங்கள் வீட்டில். ஒருவழியாக சூடத்தை அனைவரும் தொட்டு கும்பிட்டு திருநீறு பூசிக்கொள்வோம். பின்னர் தாத்தாவிடம் ஒவ்வொரு குடும்பமும் சென்று ஆசிப்பெற்று தாத்தா பாட்டி இருவரிடம் இருந்தும் அவரவரின் புதுதுணிகளை பெற்று செல்வர். அடுத்த அரைமணி நேரத்தில் எல்லாம் புதுதுணிகளில் அங்கு பளிச்சென்று நிற்பர்.

அடுத்த போட்டி. யார் முதலில் பட்டாசு கொலுத்துகிறார்கள் என்று. ஒவ்வொரு குடும்பத்தின் ஆணும் தங்கள் குழந்தைகளை தூக்கிக்கொண்டு வெளியில் ஓடுவார்கள். கையில் மெழுகை எடுத்துக்கொண்டு. 100 வாலா பட்டாசை எடுத்துக்கொண்டு ஓடுவார்கள். எல்லோரும் போட்டிபோட்டுக்கொண்டு தெருவில் வைத்துவிட்டு வீட்டினுள் ஓடிவருவார்கள். வீட்டு பெண்கள் அவர்களின் சேஷ்டாங்களை பார்த்து ரசித்துக்கொண்டிருப்பார்கள். பெரும்பாலும் பெண்கள் பட்டுகளிலும், ஆண்கள் வேஷ்டிகளிலும், பெண்குழந்தைகள் பட்டு பாவாடைகளிலும் நிற்பர்.

அந்த ஊரின் பெரிய புள்ள வீடுதான் இருப்பதிலே பெரிய வீடு. ஆனால் அந்த வீடே நிறம்பி கிடக்கும். பின்னர் பந்தி போடுவர். ஆண்களும் குழந்தைகளும் முதல் பந்தியில் உட்கார்ந்துவிடுவர். பெண்கள் பரிமாறுவர். அடுத்து பெண்கள் பந்தி, இந்த முறை ஆண்கள் பரிமாறுவர். அவரவர் கணவன்களை அந்த பெண்கள் சீண்டிக்கொண்டு கிண்டலடித்து சிரிப்பார்கள். தப்புதப்பாக ஆண்கள் பாசத்தோடு பரிமாறுவார்கள். தேங்காய் சட்டினுக்கு எண்ணெய் ஊற்றுவார்கள், இட்லிக்கு ஊறுகாய் தொட்டுக்கொள்ள வைப்பார்கள் என வேடிக்கைகள் நடக்கும்.

அனைத்தும் முடிந்து வீட்டினுள் வந்து அமர்ந்து எல்லாம் பேசிக்கொண்டிருப்போம். சிரித்து விளையாடுவோம். மதிய நேரம் வந்து மீண்டும் சாப்பிட்டுவிட்டு அவரவர் கிடைத்த இடத்தில் படுத்து உறங்கிவிடுவோம். சாயங்காலம் மீண்டும் வேட்டு. எழுந்து முகம் கழுவிக்கொண்டு பட்டாசுகளை மீண்டும் எடுத்துக்கொண்டு வெளியில் ஓடுவோம். பெண்கள் நிறைய விளக்குகளை ஏற்றி வீடுமுழுதும் தீபத்தால் அலங்கரித்துவிடுவார்கள். வீடே விளக்கொளியில் ப்ரமிக்கும். சில ஆண்கள் ஆற்றுக்கும், குளத்துக்கும் சென்று நேரங்களை செலவிட்டுவிட்டு வீடு திரும்புவர். அடுத்த இரண்டு நாட்களில் சொந்தங்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறி அந்த வீட்டில் மீண்டும் ஒரு 8 பேரில் வந்து நின்றுவிடும். அந்த நினைவு ஒன்றே போதுமாக காலங்களை கழிப்போம்.

வருடங்கள் ஓடிவிட்டது….

இன்று திபாவளி. காலையில் மெதுவாக எழுந்தேன். எண்ணெய் தலைக்கு மட்டும் வைத்து ஹீட்டரில் தண்ணீர் போட்டு குளித்துவிட்டு. அப்பா, அம்மா, நான் மூவரும் சாமி கும்பிட்ட பின்னர் நான் சினிமா தியேட்டருக்கு போய்விட்டேன். அப்பா டிவி பாத்தார். அம்மா சமையல் செய்தார். மதியம் மூவரும் தூங்கிபோனோம். மீண்டும் சாயங்காலம் மூவரும் எழுந்து முகம் கழுவிவிட்டு செய்துவைத்திருந்த சிறு பலகாரங்களை சாப்பிட்டுவிட்டு டிவி பார்த்தோம். இரவு வந்துவிட்டது. இனி தூங்கிபோவோம். தீபாவளி மாறிடுச்சு. நாங்களும் மாறிட்டோம். நினச்சு பாக்க இங்க எந்த சந்தோசமும் எங்களுக்கு இல்ல. சுத்தி வெடிவெடிக்கிற சத்தம் கேட்குது. ஏதோ சத்தம் போல ஜன்னல மூடிகிட்டோம். இதுதான் சிலவருசமா எங்க தீபாவளி. மீண்டும் எங்கள் தீபாவளி கொண்டாட ஆசையா இருக்கு. ஆனா நான் மட்டும் நினச்சா போதுமா? சொந்தமெல்லாம் திசை மாறி போச்சு. Advancement, Improvement, City life, Matured, Adaptation. ஹா… வார்த்தைகள் எல்லாம் வித்தியாசம் தான். மனசு ஒண்ணு கேட்குது பாருங்க. சொர்க்கம் அந்த வாழ்க்கை.

-தம்பி கூர்மதியன்

Comments

Popular posts from this blog

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..

பைக் ஓட்டுபவர்கள் கண்டிப்பா பாக்கவும்..!!

அதிகாரி சாமி