கல்லூரி காலங்கள் - ராஜா சார்..!

நான் பல சமயங்களில் குழந்தைகளின் கல்வியை பற்றியும் அதை அவர்களுக்கு புகட்ட வேண்டிய வழிமுறைகள் பற்றியும் பேசியிருக்கிறேன். எனக்கு கல்விமேல் விருப்பமதிகம் – ஆனால் அவை செயல்வழி கல்வியாக இருப்பதையே அதிகம் விரும்புவேன்.

ஆறாம் வகுப்பு வரை ஊரில் படித்தேன். என் வகுப்பின் சிறந்த மாணவர்களில் நானும் ஒருவன். ஏழாம் வகுப்பிற்காக சென்னைக்கு வந்துவிட்டேன். அம்மா அப்பா ஊரிலே இருக்க, நான் எனது பாட்டி வீட்டில் இருந்து படித்தேன்.


பள்ளியில் என் முதல் அடி. கெட்ட வார்த்தைகள். நான் அதுவரை கேட்டிறாத கெட்ட வார்த்தைகள் எல்லாம் சரளமாக மாணவர்கள் மத்தியில் இருந்தது. அதையெல்லாம் கேட்கும்பொழுதே நாராம்சமாக இருக்கும். அடுத்து பெண்கள். சகஜமாக பழக கூடிய கிராமத்துவாசி நான். ஆனால் இங்கு ஏழாம் வகுப்பு படிக்கும்பொழுதே ஒரு பெண்ணோடு பேசினால், அவளை காதலிப்பதாய் பேச ஆரம்பித்தார்கள். பட்டனத்து சூழலுக்கு பழகிக்கொள்ளாத நான் ஏன் இந்த வம்பென்று பெண்கள் பக்கமே போகாமல், பெண்களிடமே பேசாமல் இருந்தேன். அடுத்து விளையாட்டு. ஊரில் இருக்கும்பொழுது எனக்கு அதிகம் தெரிந்தது ஓடி பிடித்து விளையாடுவது தான். ஆனால் இங்கு நான் புத்தகத்தில் மட்டும் படித்த ஹாக்கி, பாஸ்கெட் பால் போன்ற விளையாட்டுகளையும் பார்க்க நேர்ந்தது. அடுத்து கல்வி புகட்டும்வழி. ஊரில் ஆங்கில முறை கல்விதான் என்றாலும் யாரும் ஆங்கிலத்தில் சொல்லிக்கொடுக்கவில்லை. நான் அதிகம் புரிந்துக்கொள்வது எல்லாம் தமிழில் தான். ஆனால் இங்கு அனைத்துமே ஆங்கிலத்தில் இருந்தது. சக மாணவர்களிடம் தமிழில் பேசினாலும் ஆசிரியர்களிடம் ஆங்கிலத்தில் தான் பேசவேண்டும் என்பதால் அவர்களிடம் இருந்து ஒதுங்கியே இருக்க ஆரம்பித்தேன்.

படிப்பில் ஒன்றும் புரியவில்லை. பழக்கப்படாத நான் விரும்பாத சூழல். விளையாட்டில் ஆர்வம் என்று என் நாட்கள் திசை மாற ஆரம்பித்தது. முதல் பரிட்சை. இத்தனை ஆண்டுகளில் முதல்முறையாக தேர்ச்சி பெறாமல் நிற்கிறேன். வீட்டில் என்னை கடிந்துக்கொண்டனர். என்ன ஆனது எனக்கு என்று என்னை நானே சிந்திக்கும் நேரத்தில் பள்ளியில் ஒரு அறிவிப்பு. ஒழுங்காக படிக்காத பிள்ளைகளுக்கு சாயங்காலம் கூடுதல் ஒரு மணிநேர வகுப்பு என்று. என் திசைமாறுதலுக்கு காரணங்களை தேடுதலுக்கு பதில் நமக்கு படிப்பு வரவில்லை போலும் என்று மனம் யோசிக்க துவங்கிவிட்டது. கூடுதல் நேரத்தில் உட்கார வைத்து ஒவ்வொரு வரியாக மனப்பாடம் செய்து ஒப்பிக்க மட்டுமே சொல்லிக்கொடுத்தார்களே தவிற அந்த பாடங்களை எங்களுக்கு புரியும் வகையில் சொல்லிக்கொடுக்க யாரும் முன்வரவில்லை.

ஆனால் என்ன ஆனாலும் நான் தமிழில் மட்டும் நல்ல மதிப்பெண் எடுத்துக்கொண்டிருந்தேன். ஏன் தமிழில் மட்டும் நல்ல மதிப்பெண் எடுக்கிறேன் மற்ற பாடங்களில் ஏன் என்னால் சிறப்பாக இருக்க முடியவில்லை என்று எந்த ஆசிரியரும் கண்டுக்கொள்ளவில்லை. என் மனதில் நான் இப்படிதான். இனி என்னால்  படிக்கமுடியாது என்னும் எண்ணம் பதிய ஆரம்பித்தது. கெட்ட வார்த்தைகள் என் வாயிலும் சரளமாகிபோனது. விளையாட்டு பக்கம் புத்தி திரும்ப. அந்த படிப்பு, மதிப்பெண் எல்லாம் தூசியாகி போனது. தேர்ச்சி பெறாமல் இருப்பது சகஜமாகிவிட்டது. போனவருடம் வரை சிறந்த மாணவன் பட்டியிலில் இருந்த நான் அடுத்த ஆண்டே தேர்ச்சி பெற கூட திறன் இல்லாத மாணவன் என்று பச்சைகுத்தப்பட்டேன்.


ட்யூஷன் சென்றால் ஒழுங்காக படிக்கலாம் என்று சொல்லப்பட்டது. நானும் சேர்ந்துக்கொண்டேன். அங்கும் மனப்பாடம் செய்து ஒப்பிக்கவே சொல்லிக்கொடுக்கப்பட்டது. மற்றவர்களையே குறை சொல்கிறாயே!! நீ என்ன முயற்சி செய்தாய் என்று என்னை கேட்கலாம். எனக்கு அப்பொழுது தோன்றவில்லை. மேலும் இவர்கள் செய்தவையில் என்னால் படிக்க முடியாது என்னும் எண்ணம் திண்ணமாக பதிந்து போனது.

ஆண்டுகள் கடந்து ஒன்பதாம் வகுப்பு முடியும் சமயம். என் பள்ளியில் இருந்து எங்கள் வீட்டிற்கு ஒரு கடிதம். ஒழுங்காக படிக்காததால் ஒன்பதாம் வகுப்பிலே இருக்க செய்ய போகிறோம். பத்தாம் வகுப்புக்கு தேர்ச்சிபெறவில்லை என்று கடித்தத்தில் குறிப்பிட்டிருந்தது. என் அம்மா ஊரிலிருந்து கிளம்பி வந்துவிட்டார். பள்ளி மேலாளர்களிடம் வாக்குவாதங்கள், கெஞ்சல்கள் என பல நடந்தது.
‘ஆமா… பாஸ் ஆக வேண்டிய மார்க் உங்க பையன் எடுத்துருக்கான். ஆனா அடுத்த வருசம் ப்பளிக் எக்ஸாம்ல அவன் பாஸ் ஆவானானு தெரியில. எங்க ஸ்கூலோட ரெபுடேஷன் கெட்டுபோகும். அதனால தான் இப்படி செஞ்சோம்.’ என்றார்கள். பிறகு பலமுறை வாக்குவாதங்களுக்கு பிறகு எனக்கு மறுதேர்வு வைத்து தேர்ச்சி பெற்றதாய் போட்டு வேறு பள்ளியில் சேர்த்துக்கொள்ளும்படி சொல்லிவிட்டனர்.

நான் எப்படியேனும் தேர்ச்சிபெற்றுவிடவேண்டும் என்று போராடினேன். என்னுள் மங்கிபோய்கிடந்தவனை என்னால் வெளியில் கொண்டுவரமுடியவில்லை. எண்ணங்கள் சிதறி கிடந்தன. என் அம்மா என்னோடு அமர்ந்து என்னை படிக்க வைத்தார். இம்முறையும் மனப்பாடம் தான். உரக்க கத்தி படித்தேன். என்னுள் வலிகள் அதிகம் இருந்தது. நான் கத்தி படிப்பது அக்கம் பக்கத்தில் கேட்கையில் நாங்கள் இருக்கும் அப்பார்ட்மண்டில் இருக்கும் அனைத்து பெண்களும் என்னை கேலி செய்தனர். அவர்கள் பிள்ளைகள் படித்தால் மட்டும் போதும், படிக்காத பிள்ளைகள் எல்லாம் கேலிக்கு உள்ளாகவேண்டியவர்கள் என்று அவர்களுக்கு எண்ணம். நான் வீட்டை விட்டு வெளியில் வரும்பொழுதே ‘ என்ன டா… செம படிப்பு போல. ஸ்டேட் ஃபெர்ஸ்ட் வந்துட போறடா’ என்று என்னை கேலி செய்தனர். என்னுடைய எண்ணமெல்லாம் தோற்காமல் தேர்ச்சி பெற்றுவிட வேண்டும் என்பது மட்டும் தான்.

நினைத்ததை போல தேர்ச்சி பெற்றுவிட்டேன். அப்படியே கடந்து வந்து பன்னிரெண்டாம் வகுப்பும் தேர்ச்சி பெற்றேன். இதுவரையில் நான் ‘புவர் ஸ்டூடண்ட்’ தான். BCA படிக்க விரும்பினேன். பெரிய கல்லூரிகள் எதுவும் கிடைக்காத நிலையில்., எஸ்.ஆர்.எம்., என்னை அரவணைத்துக்கொண்டது. நான் கல்லூரிக்கு போகும் முதல் நாள் என் வீட்டில் சொந்தங்கள் கூடிவிட்டனர். எப்படியேனும் டிகிரி மட்டும் வாங்கிடு போதும் என்று என் வீட்டில் எனக்கு சொல்லப்பட்டது.

முதல் நாள் கல்லூரி அப்பா என்னை கொண்டுவந்து விடுகிறார். முதல் மாடியில் எனது வகுப்பு. மேலே அப்பாவோடு ஏறிசென்றுக்கொண்டிருந்தேன். அப்பொழுது எங்களோடு உயரமாக, ஒல்லியாக ஒரு  நபர் வந்தார். என் அப்பா அவரிடம் என்னை பற்றி சொன்னார். உடனே அவர் தான் பார்த்துக்கொள்வதாய் அப்பாவிடம் சொல்லிவிட்டு அவரோடு என்னை அழைத்துசென்றார். முதல் நாள் வகுப்பு, நான் அவரோடு கால் எடுத்து வைக்கிறேன். அவர் தான் என் ஆசிரியர் என்று அப்பொழுது தான் எனக்கு புரிந்தது. அவர் பெயர் ராஜா. என்னை போய் அமர சொன்னார். நான் கடைசியாக இருந்த ஒரு இருக்கையில் சென்று அமர்ந்துக்கொண்டேன்.

சுற்றி இருப்பவர்கள் எல்லாம் என்னை ஒரு மாதிரி பார்த்துக்கொண்டிப்பதாய் நானே நினைத்துக்கொண்டேன். அவர் அவரை பற்றி சொல்லிக்கொண்டிருந்தார். எங்களை பற்றி அறிமுகம் செய்ய சொன்னார். ஆங்கிலத்தில் பேசவேண்டும் பேசவேண்டும் என்று பலமுறை என் பெயரை ஆங்கிலத்தில் சொல்லிக்கொண்டு, எங்கிருந்து வருகிறேன் என்று வாக்கியத்தில் அமைத்து சொல்லிக்கொண்டு வந்தேன். நான் எழுந்து நின்றேன். மனதில் பயம். அவர் எப்படி புரிந்துக்கொண்டார் என்று தெரியவில்லை.

‘ஏம் பா… நாம ஏன் தமிழ்லயே அறிமுகம் செஞ்சுக்க கூடாது. யாருக்கு எந்த லாங்குவேஜ்ல இன்ட்ரோ கொடுக்கணுமோ கொடுக்கலாம்’ என்று சொன்னார். அவர் அன்று சொன்னது ஒரு சாதாரண வார்த்தையாக இருக்கலாம் ஆனால் புது சூழலுக்கு பயந்து போய் கிடந்த எனக்கு அது காப்பாற்றும் செயல்.

நாட்கள் ஓடியது. மீண்டும் என்னுடைய பழையவனை கண்டிபிடிக்கிறேனா என்பது எனக்கு தோன்றியது. ஒருநாள் என்னை ராஜா சார் அழைத்தார்.

‘என்ன சார்…’ என்றேன்.
‘டே… நீ நல்லா ப்ராக்ராமிங் பண்ணுற டா’ என்றார்.
‘தேங்க்ஸ் சார்…’
‘நீ நல்லா ப்ரில்லியண்ட் தான்டா’ என்றார்.
‘அடபோங்க சார்… நான் ஒழுங்கா படிக்கலனு என்ன ஃபெயில் ஆக்கியிருக்காங்க சார்’
‘பாத்தேன் பாத்தேன்… உன்னோட பழைய மார்க் ஷீட்லாம்… நீ ஒரு அழகான கல்லு டா… உன்ன செதுக்க தெரியாம செதுக்கியிருக்காங்க.. நான் பாத்துக்குறேன்’ என்று சொல்லிவிட்டு அவர் சென்றுவிட்டார். அது அவருக்கு ஒரு சாதாரண வார்த்தையாக இருக்கலாம். ஆனால், அவர் சொன்ன அந்த வார்த்தை என் மீது எனக்கே நம்பிக்கையை விதைத்தது. அவ்வபோது கெட்ட வார்த்தைகள் பேசிக்கொண்டிருந்த நான், இது என்னுடைய அடையாளம் இல்லை. அதை விட்டுவிட வேண்டும் என்று அந்த பழக்கத்தை அன்றே நிறுத்திவிட்டேன். கெட்ட வார்த்தைகள் தவறி போயும் என் வாயில் வரமறுத்துவிட்டது.

என்னுடைய சுயத்தை மீண்டும் நான் பெற்றெடுத்தேன். ராஜா சார் வரும்பொழுது கையில் குறிப்பெடுத்துக்கொண்டு வருவார். ஒரு நாள், இன்னைக்கு உங்களுக்கு க்ளாஸ் எடுக்க போறது இவன் தான் என்று என்னை கை காட்டினார். அவரின் குறிப்பை என்னிடம் கொடுத்து என்னை பாடம் எடுக்க சொன்னார். அன்று கரும்பலகை பக்கத்தில் நின்றிருந்த நான், முதல் முறையாக தைரியம் கொண்டேன். அன்று முதல் முன்னால் பேச அழைத்தால் தைரியமாக சென்று பேசிவிடுவேன். இதற்கும் விதையிட்டவர் அவர் தான்.

மற்ற வகுப்பு ஆசிரியர்கள் எதற்கேனும் எங்கள் வகுப்பிற்கு வந்தால் என் பெயரை  சொல்லி கேட்பர். ராஜா சார் என்னை பற்றி நிறைய பேசியிருக்கிறார் என்று சொல்லுவார்கள். பிறகு நான் முயற்சி செய்ய ஆரம்பித்தேன். எனக்கு பெரிய இடையூறாய் இருக்கும் ஆங்கிலத்தை கற்க முயன்றேன். முதல் செமஸ்டரில் மற்றவர்கள் நோட்டை வாங்கி எழுதினேன். இரண்டாம் செமஸ்டரில் என் நோட்டை கொடுத்து மற்றவர்களை எழுத சொன்னார் என் ஆங்கில ஆசிரியை. ஒரே செமஸ்டரில் நான் ஆங்கிலத்தில் ஓரளவு தேர்ச்சி பெற்றுவிட்டேன்.

முதல் செமஸ்டர் மார்க் வெளியாக போகிறது. எங்கள் வீட்டில் நான் தேர்ச்சியுற வேண்டும் என்று கனவுகண்டு கொண்டிருக்க நான் எனது வகுப்பிலே முதல் மாணவனாக தேர்ச்சியுற்றேன். மொத்த யுனிவர்சிட்டியில் மூன்றாமிடம். என் வீட்டில் யாராலும் நம்ப முடியவில்லை. என் மதிப்பெண்ணை கண்டவுடன் என் மனதில் வந்து நின்றவர் ராஜா சார் தான். அடுத்த நாள் அவரை காண கல்லூரிக்கு ஓடினேன்.
‘சார்…’ என்று சிரித்துக்கொண்டே நின்றேன்.
‘டே… என்னடா இப்படி ஆகிபோச்சு. சரி விடு. நெக்ஸ்ட் செம்ல நாம தான் ஃபர்ஸ்ட்’ என்று தட்டிக்கொடுத்துவிட்டு சென்றார். நான் வகுப்பிலே முதலாமவனாக வந்ததே எனக்கு ஆச்சர்யம். இதில் அவர் யுனிவர்சிட்டியில் முதலாமவனாக வருவேன் என்று நினைத்திருந்தார் போலும். நானும் என் குடும்பமும் என் மீது வைத்திருந்த நம்பிக்கை தான்டி அவர் என்மீது வைத்திருந்த நம்பிக்கை என்னை இன்னும் சிறப்பாக செயல்படவைத்தது.

நாட்கள் செல்ல செல்ல அவர் மற்றவரிடத்து என்னை அறிமுகபடுத்தும்பொழுது அவருடைய சிஷ்யன் என்று சொல்லி அறிமுகபடுத்துவார். வருடங்கள் சென்றது. எல்லா செமஸ்டரிலும் முதல் மூன்றில் ஒருவனாய் தேர்ச்சி பெற்றுவிடுவேன். கடைசியில் ப்ராஜெக்ட். வித்தியாசமான முயற்சிகள் பலவற்றில் இறங்கினேன். அனைத்திலும் தோல்வி. அவர் எனக்கு ஆதரவாய் இருந்தார். கடைசியில் ஒரு சிம்பிள் ப்ராஜெக்ட் எடுத்துக்கொண்டு போனேன். அவர் சொன்னார், ‘இதெல்லாம் உனக்கு ரெண்டு நாள் வேலைடா… நீ முயற்சி பண்ணுறத பண்ணு. இத கடைசியா பாத்துக்காலம்’ என்றார். பல முயற்சிகள் செய்து எல்லாம் பாதியில் நிற்க செமஸ்டர் வந்துவிட்டது. அவர் சொன்னது போல இரண்டே நாளில் மொத்த ப்ராஜெக்டும் முடித்துவிட்டேன். எந்த குறையும் இல்லாமல் முடிந்து போனது.

( நான், ராஜா சார், கல்லூரி நண்பர்)

பிரியாவிடை கொடுக்கும் நாள். அனைவரும் ஆர்பாட்டமாக கொண்டாடி குதூகலிக்க. நான் அவரை கட்டிபிடித்துக்கொண்டு அழுதேன். அவரும் அணைத்துக்கொண்டார். ஒரு ஆசிரியர் மாணவனை தாண்டி ஒரு பந்தம். என்னை உலகம் மீண்டும் மதிக்க காரணமானவர். நான் என்னை உணர காரணமானவர். என்னை எல்லோரும் சிறந்தவனாக பார்க்க காரணமானவர். என் வீட்டில் நான் படிக்காத காரணத்தால்  என் அம்மாவை தவிற எல்லோரிடமும் அசிங்கப்பட்டிருக்கேன். இந்த படிக்காத காரணத்தால் எல்லா விதமான அசிங்கத்தையும் அனுபவித்திருக்கேன். அதையெல்லாம் நான் துடைத்து எரிய காரணமான என் ஆசான். அவர் பார்த்த படங்களை பற்றி சொல்வார். அவர் வீட்டை பற்றி சொல்வார். அவரின் கனவுகளை பற்றி சொல்வார். என்னை ஒரு நண்பனாய் நடத்தினார். இவர் எனக்கு மட்டும் தான் அப்படியா என்று நான் மற்றவர்களை கேட்டதில்லை. மற்றவர்களுக்கு அவர் பிடிக்காதவராய் கூட இருந்திருக்கலாம். ஆனால் எல்லோருக்கும் இப்படி ஒரு ஆசிரியர் கண்டிப்பாக வாழ்க்கையில் வேண்டும். நான் விகடனில் ரிப்போர்டராக சேர்ந்ததை அவரிடம் சொல்லவில்லை. அவரே தெரிந்துக்கொண்டு வந்து பாராட்டினார். இதை தான் ஒவ்வொரு மாணவனும் விரும்புவான்.

இன்று நான் வாங்கும் பாராட்டுகள் அனைத்தும் எனது ஆசிரியர்க்கே. கீழிருந்தவனை மேற்கூரையில் வைத்தவர் இவராயினும் இவரை தவிர்த்து மற்ற ஆசிரியர்களும் காரணங்கள் தான். அந்த மூன்று வருடமும் நான் கடந்து வந்தவர்களை பற்றி கொஞ்ச கொஞ்சமாய் சொல்கிறேன்- இனி காலங்களில்.

சமீபத்தில் taare zameen par படம் பார்த்தேன். உடனே இவர் ஞாபகம் தான் வந்து தொற்றிக்கொண்டது. நன்றி சார்…!


 -தம்பி கூர்மதியன்

Comments

Popular posts from this blog

சிட்லபாக்கத்தில் தொடரும் வாழ்வியல் போராட்டம்!

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..

GST – நான் அறிந்தவை!