வயதான பைக்கர் அவர்...

அவர் அந்த சுவற்றின் ஓரம் பாவமாக நின்றுக்கொண்டிருந்தார். உள்ளே பாத்திரங்களை மேலும் கீழுமாக தூக்கிப்போட்டு உடைத்துக்கொண்டிருந்தார் அவரது மனைவி. அவர் மனம் பேச துடித்துக்கொண்டிருந்தாலும் ஏதோ கொஞ்சம் அமைதியாகவே நின்றுக்கொண்டிருந்தார். என்ன செய்வது என்று புரியாமல் கொஞ்சம் விழித்தார்.

‘காலம் போன போக்குல… ஆசைய பாரு. காசு என்ன மரத்துலயா காச்சு தொங்குது… இந்த வயசுல முடியுமா?’ என்று உள்ளே அவள் பல்லை கடித்துக்கொண்டிருந்தாள்.

‘அது இல்ல மா…’ என்று அவர் மெதுவாக பேசத்தொடங்கையில் மீண்டும் பாத்திரங்கள் உடையும் சத்தம் கேட்டு அவர் வாயை மூடிக்கொண்டார். இரவு அவர் அமர்ந்திருந்த இருக்கைக்கு முன் சாப்பாடு தட்டை கொண்டு வந்து வைத்தாள். அவளை பார்த்து கொஞ்சம் வருந்தியவர் பசியின் காரணத்தால் மடமடவென்று தின்றுமுடித்தார். அவருக்கு திடீரென்று விக்கல் எடுக்க அடுத்த நொடி அங்கு தண்ணீர் டம்ளரோடு வந்து நின்றாள். இருவரும் பேசிக்கொள்ளவில்லை, அவர் தண்ணீர் வாங்கி குடித்துக்கொண்டார்.

அவர் சென்று கட்டிலில் படுத்துக்கொள்ள பின்னாலே வேலையெல்லாம் முடித்துவிட்டு அவளும் சென்று படுத்துக்கொண்டாள். அவர் மெதுவாக பேச்சுக்கொடுத்தார்,

‘ஏ….’ என்றார். அவளிடமிருந்து பதில் இல்லை.

‘இங்க பாருடி… கோபம்னாலும் பேசாம இருக்காதடி… என்னன்னு பேசிருடி..’ என்றார். அதற்க்கும் பதில் இல்லை.

‘சூ… ஏன் மா… சாரி டி…’ என்றார் இன்னும் கெஞ்சலாக. சட்டென திரும்பியவள்.

‘என்ன…? என்ன சாரி? இப்ப இது ரொம்ப அவசியமா?’ என்றாள்.

‘இல்லடி… எனக்கு ரொம்ப…’ என்று அவர் பேசும்பொழுதே அவரை தடுத்து,
‘என்ன? என்ன ரொம்ப… எரிச்சலா வருது. எதுவும் பேசாதீங்க…’ என்று அவள் சட்டென வார்த்தை விட அவர் கண்கள் பட்டென கலங்கிவிட்டது. வாயை இழுத்துமூடிக்கொண்டு மாற்று பக்கம் திரும்பி படுத்துக்கொண்டார். சிறிது நேரமாக பேச்சே இல்லாததால் அவள் அவர் பக்கம் திரும்பினாள். தன் கைவிரல்களால் அவரை நெண்டினாள். அவர் திரும்பவில்லை.

‘சாரி மாமா…’ என்றாள் சற்று கெஞ்சலாக.

‘பரவாயில மா. தூங்கு.. காலையில பேசலாம்… எனக்கு தூக்கமா வருது’ என்று அவர் சொல்ல அவள் மறுபேச்சு சொல்லாமல் விட்டத்தை பார்த்துக்கொண்டாள். அவளுக்கு அன்றிரவு தூக்கமே இல்லை. அவர் மனதை வருந்தவைத்துவிட்டதை எண்ணி அவள் தூக்கம் இல்லாமல் தவித்தாள். மறுநாள் காலையில் விரைவாகவே எழுந்து குளித்துவிட்டு அவரை வந்து எழுப்பினாள்.

‘அட…. எழுந்துருங்க… எவ்வளவு நேரம் எழுப்புறது…. நான் ரெடி ஆகிட்டேன் பாருங்க’ என்றாள்.

அவர் மெதுவாக எழுந்து கண்ணை துடைத்துக்கொண்டு பட்டுச்சேலையில் அழகாக இருக்கும் அவரது மனைவியை பார்த்து மீண்டும் ஒருமுறை காதலில் விழுந்தார். என்ன என்னும் ஆச்சரிய பார்வையோடு,

‘என்ன சார்… போகவேண்டாமா?’ என்றாள்.
‘எங்கே..?’ என்றார் அவர்.
‘எங்கேயா? சார் பைக் வாங்கிட்டு தாம் மட்டும் ஓட்டலாம்னு இருந்தீரா? நான் இல்லாம வண்டி போயிடுமா?’ என்றாள் சற்று நக்கலான சிரிப்போடு.

பட்டென எழுந்து படுக்கையில் முட்டிக்கால் இட்டுக்கொண்டு அவளது கன்னங்களை இருகைகளாலும் பிடித்துக்கொண்டு,

‘கோபம் இல்லயா என் கண்ணம்மாவுக்கு?’ என்றார்.

‘கோபம்லாம் இருந்துச்சு…. இப்ப ஆசையும் இருக்கு…’ என்று சொல்லிவிட்டு சிரித்தாள் அவள்.

‘டூ மினிட்ஸ்… தோ வர்றேன்…’ என்று சொல்லிவிட்டு போனவர் அடுத்த பதினைந்து நிமிடத்தில் அவள் முன்பு வந்து ரெடியாகி நின்றார். நன்கு அழகாக உடுத்தப்பட்ட வேட்டி சட்டையில். அவர், அவரின் மனைவியை அழைத்துக்கொண்டு வண்டியை நோக்கி போகையில் ஏதோ சாதித்துவிட்டதாய் ஒரு உணர்வு அவர் மனதில். அந்த ஊரின் ராஜாவாக தன்னை எண்ணிக்கொண்டார்.

வண்டிக்கு முன் சென்றதும் அவர் ஒரு குழந்தையாகவே மாறிவிட்டார் போலும்.
‘ஏ… இத பாரேன்… இது பழைய க்ளாசிக் மாடல்… மிராசுதாரு போவாரே அவர போல இருக்கும்ல… இந்த கண்ணாடி இருக்குல அத ரோடு பாக்க வைக்கமாட்டேன், உன் முகத்த பாக்க திருப்பிப்பேன்’ என்று கண்ணாடியை காட்டி சொன்னவர் அப்படியே குழந்தை போல பின்னால் ஓடி, ‘ இந்த சைலன்ஸர் இருக்குல… எப்படி சத்தம் வரும் தெரியுமா? டுபு டுபு டுபுன்னு… ஊரே நம்மல தான் பாக்க போகுது பாரேன். தோ… இங்க பாரேன். இது கால் வச்சுக்க. நம்ம பேர புள்ள வந்துச்சுனா முன்னாடி உக்கார வச்சு கால் வச்சுக்கும்… அதுக்குதான்..’ என்று சொல்லிவிட்டு பல்லை காண்பித்தார்.

‘ஆமா ஆமா.. ஐயாவுக்கு ரொம்ப சந்தோசம் தான். வண்டிய எடுங்க போவோம்’ என்றாள் அவள். அவள் மனதில் ஆயிரம் மகிழ்வு மற்றும் கேள்விகள். அவரை கண்டு வியந்தவளாய் அவர் வண்டியை ஸ்டார்ட் செய்ததும் பின்னால் ஏறி உட்கார்ந்துக்கொண்டாள். இருவரும் முருகன் கோவிலுக்கு செல்லலாம் என்று முடிவு செய்து கிளம்பினர். கொஞ்சம் நகரும்பொழுதே சொன்னார்.

‘கண்ணம்மா… பாத்தியா.. இதுல ஐந்து கியர்… இதுவரை ஐந்து கியர் வண்டிய நான் ஓட்டினதே இல்லயே… செமயா போகுது பாரேன்’ என்று சொல்லும்பொழுதே அவர் ஒரு சிறிய பள்ளத்தில் ஏற்றி இறக்கினார் ‘ஏ..ஏ.. பாத்தியா பள்ளத்துல இறங்குன போலவே தெரியல… சஸ்பென்ஷன் டி… சஸ்பென்ஷன்… செமயா இருக்குல’ என்றார்.
அவரின் குழந்தைதன பேச்சுகள் அவளுக்கு வியப்பாகவும் ரசிக்கும்படியாகவும் இருந்தது. ஆனால் அவரிடம் அவள் காட்டிக்கொள்ளவில்லை. ‘வண்டிய பள்ளத்துல ஏத்தாம பாத்து போங்க… அப்பரம் சுவைங்குனு போகுதுனு பீத்திக்கலாம்’ என்றாள் வேடிக்கையாக. கோவிலுக்கு வந்தனர். இறங்கி அவர் ஒரு முறை வண்டியை பார்த்தார். அவர் மனைவியை பார்த்தார். உதட்டிலும் மனதிலும் அவ்வளவு சிரிப்பு, ‘சே… செமயா இருந்துச்சுல… ரோடே நம்மல தான் பாத்துச்சுல’ என்றார் பூரிப்பாக.

‘ஆமா… ஆமா… ரொம்ப தான்…’ என்றாள் அவளும் சிரித்துக்கொண்டே.

‘ஏ… ஏ… புடிச்சுருக்காடி…?’ என்றார் ஆசையாக.

‘என் மாமாவுக்கு புடிச்சது எல்லாமே எனக்கும் புடிக்கும்…’ என்றாள்.

‘அப்பரம் நேத்து திட்டின..?’ என்றார் முகத்தை பாவமாக வைத்துக்கொண்டே.

‘ஐயா… அது வேற டிப்பார்ட்மண்ட்… திரும்ப வாங்கணுமா?’ என்றாள் சற்று சிரிப்போடு. அவர் ஐயோ என்று பதறியவராய் முன்னே கோவிலுக்குள் ஓடிபோனார். அவரை பார்த்து சிரித்துக்கொண்டிருந்த அவளின் தொலைபேசி மணி ஒலித்தது. அந்த பக்கம் அவளது மகள்.

‘ஹலோ…’ என்றாள் இவள்.

‘அம்மா… எப்படிமா இருக்கே..?’ என்றாள் மகள்.

‘நல்லா இருக்கேன்டி… அங்க மாப்பிள்ளை பசங்கலாம் நல்லாயிருக்காங்களா?’

‘எல்லாம் சூப்பர் மா… அப்பா என்ன பண்றார்..? காமிச்சாரா?’ என்றாள் மகள்.
‘காமிச்சாராவா? அப்போ உனக்கு தெரியுமா அவர் புல்லட் பைக் வாங்க போறார்னு’

‘அட தெரியும்மா…’

‘ஆஹான்… எனக்கு தெரியாம நீங்க ப்ளான் பண்றீங்களா?’

‘அப்பாவ திட்டாத மா…’

‘ஏங்க மேடம்…?’

‘அப்பா ஒரு நாள் சொல்லிகிட்டு இருந்தார். அப்பா ஊருல அப்போ புல்லட் மாமானு ஒருத்தர் இருப்பாராம். அவர பாக்கும்போதெல்லாம் அப்பாவுக்கும் புல்லட் ஓட்டணும்னு ஆசையா இருக்குமாம்… அத பாத்து பாத்து ஏங்கிபோவேன்னு சொல்லுவார்… இத்தனை வருசத்துக்கு அப்பரம் பேசுறார் என்கிட்ட அப்பவே அவருக்கு எவ்வளவு ஆசைன்னு அவர் பேச்சுல தெரியுதுமா… அத பத்தி பேசுறப்போ அவர் கண்ணை பாக்கணுமே… அப்பவே முடிவு பண்ணிட்டேன் அவருக்கு இத எப்படினா வாங்கி தந்துறணும்னு. அவர் சொன்னார் மா… சம்பாதிக்க ஆரம்பிச்சப்போ கல்யாணம். அப்பரம் பொண்ணு… அப்பரம் படிப்பு .. இப்படியே என் கனவு போச்சுனு… அதான் எனக்கு கல்யாணம் ஆகிட்டுதுல.. அப்போல இருந்து சேத்து வச்சு இப்போ தான் வாங்கிருக்காரு… இனிமேலாச்சும் உங்களுக்காக வாழுங்க மா… இதான் என்னோட ஒரே ஆசை’ என்றாள் அவர் ஒரே மூச்சாக.

அம்மா கண்களின் ஓரம் லேசாக கண்ணீர் துளி கசிந்தது. தூரமாக நின்று அப்பா அவளை வா வா என்று அழைத்துக்கொண்டிருந்ததை பார்த்தாள். தங்களுக்காக வாழவேண்டிய காரணத்தை உணர்ந்தாள். மகளிடம் சரி என்று சொல்லிவிட்டு அணைப்பை துண்டித்துவிட்டாள். நேராக அப்பா முன்னாள் சென்று அவரை அழைத்துக்கொண்டு சன்னதி சென்று சாமியை வழிபட்டுவிட்டு அவரை பார்த்தாள். அவர் அவளை பார்த்துக்கொண்டிருந்தாள்.


‘ஒரு லாங் ரைடு போலமா?’ என்றாள் கொஞ்சம் ஆசையோடு சிரித்துக்கொண்டு. கேள்விக்குறியில் இருந்து மகிழ்ச்சிக்குறிக்கு மாறி குதித்து மகிழ்ந்தார் அப்பா.

-தம்பி கூர்மதியன்

Comments

Popular posts from this blog

சிட்லபாக்கத்தில் தொடரும் வாழ்வியல் போராட்டம்!

ஏழு நாட்கள்...

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..