மெச்சூர்டு காதல்...

ராகுலுக்கு அன்று அங்கு செல்லவே விருப்பமில்லை. அன்று அவனது உயிருக்கு உயிரான நண்பனின் திருமணம். தனது மற்ற நண்பர்களின் வற்புறுத்தலால் அவன் கிளம்பினான். அந்த மண்டபத்திற்கு செல்லும் வழியெல்லாம் அவன் மனம் அலைப்பாய்ந்துக்கொண்டே இருந்தது. அவன் அந்த மண்டபத்திற்குள் நுழைந்து நேராக மணமேடைக்கு சென்றான். அவன் வருவதற்கு தாமதமானதை மனதினுள் முனகிக்கொண்டு அவனை சீக்கிரம் வரச்சொல்லி தன் அருகிலே நிறுத்திக்கொண்டான் மாப்பிள்ளை நண்பன்.

‘என்ன உனக்கு கிழிக்கிற வேல? நீ தான் என் கூடவே நிக்கணும்னு சொல்லிதானே இருந்தேன்’ என்று ராகுலிடம் கடிந்துக்கொண்டே வருபவர்களை பார்த்து புன்னகை செய்துக்கொண்டிருந்தான். ராகுல் பதிலெதுவும் பேசாமல் அமைதியாகவே நின்றுக்கொண்டிருந்தான். 

‘என்ன... அவ வந்தா என்ன? நீ இப்படி பண்ணுவனு தெரிஞ்சுருந்தா அவள நான் கூப்பிட்டிருக்க கூட மாட்டேன்டா... ஏன் இப்படி பண்ணுற?’ நண்பன் பேசிக்கொண்டிருக்கும்பொழுதே ராகுலின் கண்கள் அந்த மண்டபத்தில் இருக்கும் ஆட்களை ஒரு நோட்டம் விட்டுக்கொண்டிருந்தது. அவன் மணமேடையை விட்டு கீழே இறங்க முற்பட்ட சமயம் அவனின் கைகளை இறுக பிடித்து இங்கேயே இருக்கும்படி அழுத்தினான் அவன் நண்பன். வேண்டா வெறுப்பாய் அவன் அங்கேயே நின்றுக்கொண்டிருந்தான். 


சிறிது நேரத்தில் மேள தாளங்கள் சத்தமாக முழங்க கேட்டது. சில்லென்ற காற்று ஜன்னல் வழியாக அவன் முகம் தேடி வந்தது. சுட்டெரிக்கும் சூரியன் மறைந்து இடி மின்னலாய் மழை கொட்ட தொடங்கியது. வெளியில் நின்றுக்கொண்டிருந்தவர்கள் எல்லாம் உள்ளே ஓடிவர - காற்றோடு பறக்கும் நீண்ட கூந்தலுடன் மழை துளிகள் சொட்டு சொட்டாய் முகமெல்லாம் வருடிகிடக்க அவள் நேராக இருந்த வாசலில் வந்து சிரித்த முகத்துடன் நின்றாள். அவளுக்காகவே நெய்யப்பட்ட ஒரு சேலையாக இருக்கவேண்டும் அது. அவளின் நிறத்திற்க்கும் அழகிற்கும் ஒருபோதும் நான் குறைந்தவள் இல்லை என்று அந்த சேலை அவளுக்கு போட்டியாய் அவளை அணைத்துக்கொண்டிருந்தது. அவள் சிரிக்கிறாள் - மழைக்கும் அவளுக்கும் ஒரு போட்டி நடந்திருக்கவேண்டம். மழையோடு போட்டியில் தோற்று அந்த மழை அவளை நனைத்துவிட்டதை நினைத்த தோல்வியில் தோன்றும் மகிழ்ச்சி சிரிப்பு. அவள் அப்படி தான் தன் தோல்வியை எதிர்க்கொள்வாள் - சிரிப்போடு.

அவளை பார்த்த மாத்திரத்தில் ராகுலுக்கு அவளை மீண்டும் முதல் முறை பார்த்ததாய் ஒரு பூரிப்பு. மீண்டும் ஒரு முறை அந்த அழகில் அவன் தொலைந்துவிடுவானோ என்னும் பயம் அவனை தொற்றிக்கொள்கிறது. இல்லை... அவ்வாறு அவன் நினைப்பது சரியல்ல என்று அவன் கன்னங்களில் அவனே அறைந்துக்கொள்கிறான்.

அவள் அங்கு உதட்டில் இருக்கும் அந்த சிரிப்போடு யாருக்கோ கை காட்டுகிறாள் - சீக்கிரம் வரச்சொல்லி அந்த அழகு சிரிப்போடு கை அசைக்கிறாள். விரைவில் அவளோடு வந்து ஒரு ஆள் முட்டுகிறான் - இருவரும் மாறி மாறி சிரித்துக்கொள்கிறார்கள். அவள் கைகள் அவனது கைகளை பிடித்துக்கொண்டு இருக்க அந்த மண்டபத்தினுள் நுழைகிறாள். ,ரஞ்சித் - அவளை வாழ்க்கை முழுக்க கரம் பிடித்த அவளின் கணவன். 

அவர்களை கண்ட ராகுல் உடனே மணமேடையை விட்டு கீழே இறங்கி மாப்பிள்ளை அறைக்குள் தஞ்சம் புகுந்துக்கொள்கிறான். அவனது நண்பன் அவனை தடுக்க முற்படுகையில் அதனை தள்ளிவிட்டு ஓடிவிடுகிறான்.

மணமகன் அறையிலிருந்து ராகுல் வெளியில் எட்டி பார்க்கிறான். ரஞ்சித்தும் அவனது மனைவியும் அங்கு இரு இருக்கையில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கின்றனர். அப்பொழுது ரஞ்சித்திற்கு ஏதோ தொலைப்பேசி அழைப்பு வர, அவன் மண்டபத்தை விட்டு வெளியில் செல்கிறான். அப்பொழுது அவளோடு தன் பேச்சை தொடங்குகிறான் அவர்களின் குழுவில் இருக்கும் இன்னொரு நண்பன். அவள் ஏதோ கேட்க அவன் ஏதோ பதில் தருகிறான் - உடனே அவளது கண்கள் மணமகன் அறைக்கு திரும்புகிறது. அவள் தன்னை பற்றி கேட்டிருக்க வேண்டம் என ராகுல் உணர்கிறான். அவள் அங்கிருந்து எழுந்து மணமகன் அறைக்கு வருகிறாள் - கதவை மெதுவாக தட்டி ‘ராகுல்’ என குரல் கொடுக்கிறாள். அவன் மெதுவாக எழுந்து கதவை திறந்து வெளியில் வருகிறான்.

‘பேசலாமா’ என்கிறாள் அவள். அவன் ‘ம்ம்’ என்கிறான்.

‘எப்படி இருக்க?’ என கேட்கிறாள்.

‘இருக்கேன்’ என்கிறான்.

‘ஏன் உள்ள இருக்க...?’ 

‘சும்மா தான்....’

‘சகஜமா வெளியில வா... நீ ஏன் இப்படி இருக்கனு எனக்கு புரியவே இல்ல’ என்கிறாள் அவள். உடனே அவள் முகத்தை திரும்பி ஒரு முறை பார்த்துவிட்டு அவன் ஏளன சிரிப்பு சிரிக்கிறான். அவள் ஒரு முறை பெருமூச்சு இழுத்துவிட்டு,

‘ராகுல்... இட்ஸ் ஆல் டன்... திரும்ப திரும்ப என்ன பாக்குறப்பலாம் சோக கீதம் வாசிக்காத...’ என அவள் சொல்ல அவன் மீண்டும் சிரிக்கிறான்.

‘அடடா... இப்ப என்ன ப்ராப்ளம் உனக்கு? வாழ்க்கை  ஒரு  முறை தான். நாம ஆசைப்பட்ட பல விசயங்கள் நம்மள கடந்து போய்கிட்டு தான் இருக்கு. அதுக்கெல்லாம் நாம வருத்தப்பட முடியுமா?’ என அவள் கேட்க அவன் தொண்டையை கரகரத்துக்கொள்கிறான்.

‘நான் ஆசைப்பட்ட எதுவும் எனக்காக வருத்தப்படாது...’

‘இப்ப நீ இப்படி இருக்கியேனு நான் வருத்தப்பட்டது தான் தப்பா போச்சா? என் லைஃப் நல்லா அமைஞ்சுடுச்சு... உன் லைஃப்பும் அப்படி அமையணும்னு நினச்சது தப்பா?’

‘உன் லைஃப் நல்லா அமைஞ்சுடுச்சா?’

‘ஹா.... ஆமா.. உனக்கு தெரியலையா? நாங்க எவ்வளவு சந்தோசமா இருக்கோம்னு’

‘தெரியுதே... உனக்கு ஸ்டிக்கர் பொட்டு வைக்க புடிக்காது. ஆனா கலர் கலரா ஸ்டிக்கர் பொட்டு வச்சிருக்கு. மூக்கு குத்தவே மாட்டேனு சொல்லுவ இப்ப மூக்கு குத்தியிருக்க. நைஸ்... உன் முடிய கட் பண்ணவே மாட்ட நீ.. இப்ப பாரேன் ஓரமா கட் பண்ணியிருக்க... ஒரு கொத்து மட்டும் வேற கலர்ல இருக்கு.. அண்ட் தொங்குற தோடு உனக்கு புடிக்கவே புடிக்காது காதுல ஒட்டுன போல தான் போடுவ. ஆனா பாரேன்.. இப்ப உன் காதுல ரெண்டு தோடு தொங்குது... விலை கம்மியா இருந்தாலும் மனசுக்கு பிடிச்சத மட்டுமே செய்வ நீ... இப்ப நீ ரொம்ப க்ராண்டா தெரியிற ஆனா உனக்கு இது ரொம்ப அந்நியமா இருக்கு...’

‘உனக்கு இது அந்நியமா தெரியும் ராகுல் அவ்வளவு தான்...’

‘இல்ல... காலையில நீ கிளம்பிட்டு கண்ணாடிய பாத்திருப்ப. அப்ப என் முகம் உனக்கு ஞாபகம் வந்திருக்கும். உன்னோட சுயத்த நீ இழந்துட்டது உனக்கு புரிஞ்சுருக்கும். உன் மனசுக்கு நீ அந்நியமா தெரிஞ்சுருப்ப... உன் மனசு என்ன யோசிக்கும்னு எனக்கு தெரியும்’ என்று அவன் சொல்ல அன்று காலை கண்ணாடியில் அவளை பார்க்கும் பொழுது தோன்றிய எண்ணங்கள் அவள் முன் வந்து செல்கிறது.

‘ராகுல்... சினிமால பேசுற போல என்ன வேணா பேசலாம். ஆனா இது ரியல் லைஃப் ராகுல்... ஏன் நீ புரிஞ்சுக்க மாட்டேங்குற’

‘உன்ன நீயே இழந்துட்ட... ஆனா எனக்கு புடிக்கும்னு தானே ப்ளூ புடவை கட்டிட்டு வந்த’ 

‘சீ... நான் இன்னொருத்தர் மனைவி. அவருக்கும் நீல கலர் தான் புடிக்கும். என்னைக்கு அவர் எனக்கு தாலி கட்டினாரோ அன்னைக்கே நான் அவருக்காக வாழணும்னு முடிவு எடுத்துட்டேன்’

‘அவனுக்கு இந்த வாழ்க்கை கிடைக்கவே நான் தான் காரணம். நீ உனக்காக வாழுறவ. என்னோட பிரிவு தந்த ஏமாற்றம் நீ மத்தவங்களுக்காக வாழ ஆரம்பிச்சுட்ட...’

‘என் கணவருக்கு நீ கொஞ்சம் மரியாதை கொடுத்தா நல்லா இருக்கும்’

‘நான் யாருடி...?’ என்று அவன் கேட்கையில் அவனையும் அறியாது அவன் கண்கள் குளமாகிக்கொண்டிருந்தது.

‘ஏ ராகுல்... அழுகாத... சே...’ என்று அவள் அவன் செயல் பிடிக்காது அவனை விட்டு விலகி அவள் அமர்ந்திருந்த இருக்கையிலே சென்று அமர்ந்துக்கொண்டாள்.  விரைவிலே அலைப்பேசி அழைப்பை பேசி முடித்துவிட்டு ரஞ்சித் மீண்டும் அவளோடு இணைந்துக்கொண்டாள். அவர்களையே சிறிது நேரம் பார்த்துக்கொண்டிருந்த ராகுல் மண்டபத்தை விட்டு வேகமாக வெளியேறினான். அவனின் நண்பர்களில் ஒருவன் அவனை தடுத்து நிறுத்தி ஏன் செல்கிறான் என்று கேட்டான்.

‘எப்படி... எப்படி டா அங்க இருக்க சொல்லுற? அவ தோளுல கை போட்டு பேசுறான். கைய புடிச்சு பேசுறான். கிண்டல் பண்ணி சிரிக்கிறான். அவள பாத்து கண் அடிக்கிறான்... பத்தி பத்தி பத்திகிட்டு வருதுடா.... சே... சே... சே... அப்படியே இங்க இங்க இங்க... எரியுது மச்சான்...’

‘டே.... அவன் அவளோட புருசன் டா...’

‘மச்சான் அவ என் காதலிடா...’

‘அது முடிஞ்சுபோன கதை மச்சி...’

‘காதல் எப்படிடா முடிஞ்சுபோகும்...?’

‘என்னடா உன் பிரச்சனை.? அவளாச்சும் சந்தோசமா இருக்கட்டுமே டா...’

‘அதனால தான் மச்சான் கிளம்புறேன்.... என்னால இங்க இருக்க முடியலடா’ என சொல்லிவிட்டு அவனின் தோளில் விழுந்து அழுகிறான்.

‘டே மச்சி... எல்லாம் பாப்பாங்கடா... அமைதியா இருடா... மாப்ள வேற நீ இல்லனா கடுப்பாகிடுவான் டா.... நான் அவகிட்ட பேசுறேன் டா... கிளம்ப சொல்லுறேன் டா... ப்ளீஸ் மச்சி... நீ உள்ள வாடா’ என்கிறான்.

‘மச்சான்... என்னால முடியலடா... அவ நடிக்கிறாடா... என்னய அவளால மறக்க முடியாதுடா... அந்த வாய் பொய் சொல்லுது மச்சான்... அவ அவளையே தொலச்சுட்டு நிக்கிறா டா.... அவ கண்டிப்பா சந்தோசமா இல்லடா... நடிக்கிறா மச்சான். என்னோட கண்ணம்மா நடிக்கிறா டா... அத என்னால பாக்க முடியலடா...’

‘மச்சி... இங்க பாருடா... மச்சி... மாப்ள... டே...’ என அழைக்கும்பொழுதே நண்பனின் கண்ணும் கண்ணீரை கசிகிறது.  திடீரென உள்ளே சலசலப்பு சத்தம் கேட்கிறது - உள்ளே இருவரும் ஓடுகிறார்கள். அங்கே ரஞ்சித் நான்கு இருக்கைகளுக்கு நடுவே விழுந்து கிடக்கிறான். அவள் அவன் மீது விழுந்து அவனை எழுப்ப முயற்சிக்கிறாள். மற்றவர்களும் அவளுக்கு உதவி செய்ய பக்கத்தில் அமைதியாய் நின்றுக்கொண்டிருந்த ராகுலையே அவள் கண்கள் பார்த்துக்கொண்டிருந்தது. அவன் மாற்று திசையில் பார்க்க பார்க்க அவனால் அவளின் கண்களின் வீரியத்தை தாங்க முடியவில்லை. உடனே ரஞ்சித்தை தூக்கிக்கொண்டு அழைக்கப்பட்ட ஆம்புலன்ஸ் நோக்கி ஓடினான். அவனை ஏத்திவிட்டு ராகுலும் உள்ளே ஏறிக்கொண்டான். பின்னே அவளும் ஏறிக்கொண்டாள். முதல் உதவியாளர் ரஞ்சித்திற்கான முதல் உதவியை செய்ய அவன் தேறிக்கொள்வான் மருத்துவமனை சென்றால் போதும் என்கிறார். அவளின் அழுத கண்கள் இன்னும் நின்றபாடில்லை.

விரைவில் மருத்துவமனை சென்று அவனுக்கு மருத்துவம் தொடங்கியது. மருத்துவர் வெளியில் வந்து ‘ ஒரு சின்ன மாரடைப்பு தான்... பயப்பட எதுவும் இல்லை. ஸ்ட்ரஸ் அதிகமா இருத்ததால இருக்கும். கொஞ்சம் ரெஸ்ட் இருக்கட்டும்’ என்கிறார். அவளின் அழுத கண்கள் ஆஸ்வாசம் அடைகிறது.

ராகுல் அவளிடம் செல்கிறான்.

‘அந்த கண்ணு... எந்த உரிமையில என்ன மட்டுமே உதவிக்கு பாத்துச்சு?’ என்கிறான். அவள் புரியாமல் விழிக்கிறாள்.

‘உன் புருசன் விழுந்து கிடந்தானே... அப்போ உன் கண்ணு என்கிட்ட மட்டுமே உதவி கேட்டுச்சே ஏன்?’ என்கிறான் அழுத்தமாக கோபமாக.

‘என் கண் பேசுறத நீ மட்டும் தான் புரிஞ்சுப்ப.... அதான்..’ என்கிறாள் அவள். மேலும் தொடர்கிறாள், ‘ நீ என் காதலன். நான் உன் மேல வச்ச காதல் என்னைக்கும் அழியாது. உன்கிட்ட என் எதிர்காலம் பத்தி பேசியிருக்கேன் என்னோட கல்யாண கனவுகள் என் ஆசைகள் எல்லாத்தையும் சொல்லியிருக்கேன். உனக்கு என்ன பத்தி தெரிஞ்ச அளவுல ஒரு 25 சதவீதம் கூட அவருக்கு தெரியாது.’ என அவள் பேசிக்கொண்டிருக்கும்பொழுதே அவன் ஒரு நமட்டு சிரிப்பு சிரிக்கிறான்.

‘நீ என் வாழ்க்கைய வாழ வச்சு. நம்ம வாழ்க்கைகான கனவ ஒண்ணா சேர்ந்து கண்டோம். நான் இன்னொருத்தர் மனைவி ஆகிட்டதால உன் மேல நான் வச்ச காதல் மாறிடாது. இன்னமும் எனக்கு ஒண்ணுன்னா என் கணவனுக்கு அப்பரம் நான் உன்னை தான் தேடுவேன். இது காதல் தான். ஆனா உனக்கு மனைவியா இருக்கணும்னு நினைக்கிற காதல் இல்ல. ஒரு புரிதலில் இரு மனங்களின் ஒற்றுமை அறிந்த ஒரு காதல். நான் சொல்லியிருக்கேன். நீ எனக்கு ஒரு அப்பாவா, அண்ணனா, நண்பனா கிடச்சிருக்கனு. சீக்கிரமே ஒரு நல்ல கணவனா நீ ஆவன்னு சொல்லியிருக்கேன். ஆனா அந்த இடத்தை மட்டும் இன்னொருத்தர் எடுத்திகிட்டார் அவ்வளவு தான். நீ இப்பவும் எனக்கு ஒரு நல்ல அப்பாவா, அண்ணனா, நண்பனா இருக்குற - அதை யாராலும் மாத்த முடியாது. எதிர்காலத்துல உன்ன போலவே அவரும் மாறலாம் ஆனா எனக்காக என்னைக்கும் நீ இருப்பனு எனக்கு நம்பிக்கை இருக்கு. உனக்கு என்னை விட்டு தர மனம் இருக்காது தான். ஏன் இருக்கணும்... வா...அவரும் நல்ல மனுசன் தான். வீட்டுக்கு வா... எங்க கூட பழகு... நாளைக்கு என் புள்ள உன்ன மாமான்னு கூப்பிடுவான். உன் மனைவிய அழைச்சுட்டு வா.. நாம நாளு பேரும் நல்ல நண்பர்களா உயிருக்கு உயிரானவங்களா இருப்போம். எங்களுக்குள்ள சண்டைனா நீ கேளு, உங்களுக்குள்ள சண்டைனா நான் கேட்பேன். நீ இப்ப எத இழந்துட்டேனு குதிக்கிற. செக்ஸ்ஆ? அது மட்டும் லைஃப் இல்லனு நம்ம ரெண்டு பேருக்குமே நல்லா தெரியும். பொசசிவ்நஸ்ஆ  - இருந்துட்டு போயேன். அவர் என்கிட்ட சண்டை போடுறது கோபம் வருதுனா ஏன்யா சண்ட போடுறன்னு வந்து கேளேன்... ஒரு உயிருக்கு உயிரான நண்பனா என்னைக்கும் என்கூட நீ இருக்கணும்’ என அவள் பேசி முடிக்கையில் அவன் அவளையே பார்த்துக்கொண்டிருக்கிறான். மீண்டும் பேச தொடங்குகிறான். ஒரு பெருமூச்சின் பிறகு,

‘எப்பா.... இன்னும் மாறவே இல்ல. ஒரு பேச்சால மனச மாத்த முடியும்னா அதுக்கு உனக்கு ஒரு கோல்ட் மெடல்லே தரலாம். ஜகஜால ஜித்திடி நீ’ என அவன் சொல்லிவிட்டு சிரிக்கையில் அவளும் சிரித்துக்கொண்டு தலையை கீழே குனிந்து பெருமையை வாங்கிக்கொள்கிறாள். அவள் தலையை மெல்லியதாய் கொட்டிவிட்டு,

‘அப்பரம் மேடம். ஒரு அண்ணனா, நண்பனானு லிஸ்ட் போட்டீங்களே... நல்ல காதலனாவும் இருக்குறதா அன்னைக்கு நீங்க சொன்னீங்க. அத விட்டுட்டீங்க. பேசுறதுல நீங்க கில்லாடினு எனக்கு தெரியும். இப்ப எனக்கு வருத்தமில்ல. நீ வாழ்க்கைய வாழ கத்துகிட்ட ... நான் கத்துக்கணும் - கத்துப்பேன். உனக்கு என் உதவி எப்போ தேவைப்பட்டாலும், நீ எந்த இக்கட்டான சூழ்நிலையில இருந்தாலும் இந்த காதலன் அங்க இருப்பான். கடைசி வரை உன்னைய காதலிச்சுக்கிட்டே. நான் கல்யாணம் பண்ணிப்பேன். என் மனைவிய உன்ன காதலிச்ச போலவே காதலிப்பேன். ஆனா நீ... என் முதல் காதலி.மறையாதுடி...’ சொல்லிவிட்டு ஒரு பெருமூச்சின் பின் தொடர்கிறான், ‘ உன்ன போல நாலு பேரும் நல்ல நண்பர்களா இருப்போம் ... ஃபேமிலி ஃப்ரண்ட்ஸ் இந்த ஈன வெங்காயம்லாம் என்னால முடியாது. வாய் வார்த்தைக்கு வேணா நல்லா இருக்கும். எங்க இருந்தாலும் நல்லா இருடி... அது எனக்கு போதும். லவ் யூ... பை... அந்தா உள்ள படுத்துக்கெடக்கானே ஒழுங்கா வேலைய கட்டிகிட்டு அலையாம என் காதலிய பாத்துக்க சொல்லு. இல்ல நானே வந்து அவன் மண்டைய உடைச்சிருவேன்’ என சொல்லிவிட்டு மனதில் இருக்கும் ஏதோ ஒரு பாரம் குறைந்ததாய் அவன் அந்த மருத்துவமனை விட்டு வெளியில் சென்றான். 

இருவர் உதட்டிலும் ஒரு மெச்சூர்ட் சிரிப்பு...

Comments

Popular posts from this blog

சிட்லபாக்கத்தில் தொடரும் வாழ்வியல் போராட்டம்!

ஏழு நாட்கள்...

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..