காலம் கழியும் காதலாகி நின்றான்..!

அவன் அங்கு சாலையோரமாக நடந்து சென்றுக்கொண்டிருந்தான். அவன் கால்கள் அங்கு நடந்துக்கொண்டிருந்தாலும் அவனின் மூளை வேறு எதையோ யோசித்துக்கொண்டிருந்தது. சில சமயம் சிரித்தான், சில சமயம் வருந்தினான் – அவனின் முக பாவனைகள் மாறிக்கொண்டே இருந்தது. சுற்றி இருந்தவர்கள் எல்லாம் அவனை விசித்திரமாக பார்க்க நேரிட்டது, ஆனால் அவன் அவைகளை பற்றி கணக்கு எடுத்துக்கொள்ளவில்லை.

அவனின் அலைப்பேசி அப்பொழுது ஒலித்தது. அவன் கையில் எடுத்து பார்த்தான். அது அவள் தான்,

’ஹே…’ என்றான்.

‘ம்ம்.. நான் வந்துட்டேன்.. நீ?’ என்றாள் அவள்.

‘தோ வந்துட்டே இருக்கேன். டூ மினிட்ஸ்… ஐ வில் பி தேர்…’ என்று அவன் வாய் சொல்லும்பொழுதே கால்கள் ஓட தொடங்கியிருந்தன.

அந்த திறந்தவெளி பார்க்கில் நுழையும் முன் அவன் வழக்கமாக வாங்கும் கடையில் ஒரு ரோஜா பூவும், ஒரு டைரி மில்க் சாக்லேட்டும் வாங்கிக்கொண்டு ஓடிசென்று மூச்சிரைக்க அவள் முன் நின்றான் கைகளை பின்னால் கட்டிக்கொண்டு. அவள் அவனை விசித்திரமாக பார்த்தாள். அவன் அவளை பார்த்து ஒரு சிரிப்பு சிரித்தான், ஆனால் அவள் அதை கண்டுக்கொள்வதாக தெரியவில்லை. மாற்று பக்கம் திரும்பி நடக்க ஆரம்பித்தாள்.

‘ஹே.. ஹே… சாரி டி… கொஞ்சம் லேட் ஆகிடுச்சு டி.. ப்ளீஸ் ப்ளீஸ் டி…’ என்று அவள் பின்னால் அவன் கெஞ்சிக்கொண்டே ஓடி வர அவள் இன்னும் கோபம் தலைக்கேறி நின்றாள்.

‘ஹே.. ஸ்டாப் ஆக்டிங்… இது உன் கேரக்டர் இல்ல. இப்ப எதுக்காக நடிச்சுட்டு இருக்க என்கிட்ட.. எதுக்கு வர சொன்ன அத மொதல்ல சொல்லு?’ என்றாள் சற்று கடினமாக. சிரித்துக்கொண்டிருந்த அவன் முகம் சற்று சுருங்கிபோனது. வேறு பக்கம் திரும்பிக்கொண்டான். இருவரும் சற்று நேரம் அங்கு அமைதியாக நின்றுக்கொண்டிருந்தனர்.

அவன் பேச தொடங்கினான், ‘தப்பு பண்ணிட்டேன்…’ என்றான் மெதுவாக.

‘என்ன..? கேக்கல..’ என்றாள் அவள் கொஞ்சம் ஆர்வத்தோடு.

‘தப்பு பண்ணிட்டேன்னு சொன்னேன்..’ என்று அவள்  பக்கம் திரும்பி கொஞ்சம் குரலை உயர்த்தி சொன்னான். ‘தப்பு பண்ணிட்டேன்… சின்ன சின்ன ஈகோ தான் நம்மல பிரிச்சு வைக்குது. ரெண்டு வருசம்…’ என்று சொல்லிவிட்டு அவளை பார்த்து இரு விரல்களை உயர்த்திக்காட்டி அவளையே பார்த்துக்கொண்டிருக்கிறான்.

‘என்ன இப்ப சொல்ல வர்ற?’ என்றாள் அவள் சற்று கடினமாக.

‘இல்ல… எனக்கு இருக்கணும்… உன்ன பழைய போல லவ் பண்ணனும்.. உன்ன கிண்டல் பண்ணனும், சமாதானம் பண்ணனும், உன் பின்னாடி ஓடி வரணும், உன்ன கெஞ்ச விடணும், நீ தூங்குறப்போ நெத்தியில முத்தம் கொடுக்கணும், நீ சமைக்கிறப்போ ஓடி வந்து முத்தம் கொடுத்துட்டு ஓடிறனும், ஸ்போர்ட்ஸ், அரசியல், புத்தகம்னு நமக்கு புடிச்ச எல்லாத்தை பத்தியும் விவரிக்கணும், தெருக்கடையில ஒண்ணா சாப்பிடணும், லாங் ட்ரைவ் போகணும், எங்க போறோம்னு தெரியாம நடந்து போயிட்டே இருக்கணும், கால் வலிக்குதுடானு நீ என் கைய புடிச்சுக்கணும், நான் யார் பக்கத்துல இருக்கானு பாக்காம உன்ன என் ரெண்டு கையாலயும் தூக்கிட்டு நடக்கணும், என் அம்மா கூட நீ சண்டை போடணும், நான் தலையில கைய வச்சுட்டு உக்காரணும், என் அம்மாவும் நீயும் ஒண்ணா சேர்ந்து என்ன கிண்டல் பண்ணனும், என் அப்பா உன்ன போல ஒரு மருமக இல்லனு சொல்லணும்… என் பையனுக்கும் எனக்கும் சண்டை வரணும் யார் உன் பக்கத்துல படுக்கறதுனு.. அவன் கூட நான் சண்டைபோடுறப்போ நீ தடுக்க வரணும்.. உன்னையும் இழுத்துப்போட்டு நாம மூணு பேரும் சண்டை போட்டுக்கணும்.. இதெல்லாம் எனக்கு திரும்ப வேணும்.. எனக்கு திரும்ப வேணும்டி..’ என்று ஒரு முழு மூச்சாக அவனின் அழிந்து போன நாட்களை எல்லாம் மீட்டெடுக்க அவன் துடித்து தூரத்து வானத்தை பார்த்து பேசிக்கொண்டிருக்கையில் ஆசையின் கண்ணீர் அவன் விழிகளில் இருந்து துளிர் விட்டது.

அவனின் பேச்சுக்களை கேட்கும்பொழுது அவளின் கண்களும் கண்ணீர் வடித்தது. ஆனால் அவன் பார்க்கும்முன் அதை அவள் துடைத்துக்கொண்டாள். அவள் அவனை பார்க்காது தூரமாக பார்க்க தொடங்கினாள். அவன் அவளை பார்த்தான்.

‘என்னடி… எதுவும் சொல்லாம இருக்க?’ என்று அவன் கேட்கையில் அவள் அமைதியாகவே இருந்தாள். ‘பேசுடி… உனக்கு இதெல்லாம் இந்த ரெண்டு வருசத்துல தோணவே இல்லயா?’ என்று அவன் நச்சரித்தான். ‘சொல்லுடி…’ என்று அழுத்தம் தந்தான்.

‘தோணுச்சு… தோணுச்சு… நீ என்ன புடிக்கல… என்னோட வாழ்க்கையில எந்த சுவாரஸ்யமும் இல்ல… உனக்கான வாழ்க்கை வேணும்னு சொல்லிட்டு என்ன விட்டு போனல அப்போ தோணுச்சு. என்கூட வாழ விருப்பம் இல்லனு விவாகரத்து நோட்டீஸ் அனுப்புனல.. அப்போ தோணுச்சு… ஓடி வந்து என்ன ஏன்டா புடிக்கலனு உன்ன கட்டி பிடிச்சு அழணும் போல இருந்துச்சு. என்னவிட்டுட்டு நீ இருந்துருவியாடானு உன் சட்டைய பிடிச்சு கேக்கணும்போல இருந்துச்சு…’ என்று சொல்லிவிட்டு அவள் கண்களில் இருந்து வரும் கண்ணீரை துடைத்துக்கொண்டு தொண்டையை கரகரத்துக்கொண்டு பேச தொடங்கினாள். ‘ஆனா… நீ இருந்த… நான் இங்க புழுங்கி கிடந்த ஒவ்வொரு நிமிஷமும் உன்ன தேடி போறேன், உலகத்த தேடி போறேன்னு சொல்லிட்டு நீ எங்க எங்கயோ திரிஞ்ச… உன்ன நீயே கண்டு பிடிக்க போறேன்னு சொல்லிட்டு எங்க எங்கயோ போன.. நான் புழுங்கி செத்தேன்டா இங்க…’ என்று அவள் சொல்லும்பொழுது அவள் கண்கள் கண்ணீரை கொப்பளித்து துப்பிக்கொண்டிருந்தது. அவள் அழுவதற்கு அவனாள் சமாதானம் சொல்ல முடியவில்லை. அவன் அமைதியாக  உட்கார்ந்திருந்தான். அங்கு ஒரு  சிறு அமைதி நிலவியது.

‘என்னோட வாழ்க்கை எதுன்னு எனக்கு புரியலடி… நான் என்ன தொலைச்சுட்டதா நினச்சேன்… என்னை தேடி போனேன்… நிறைய தனிமைகள்.. நிறைய பயணங்கள்… புது மனிதர்கள்னு என்ன தேடி போனேன். நான் உன்கூட இருந்திருந்தா இதெல்லாம் நீ என்ன பண்ண விட்டிருக்க மாட்ட… ஆனா நான் தேடி போறப்போ தான் தெரிஞ்சுது. நான் வேற நீ வேற இல்ல. நீ தான் நான். நான் பாத்த ஒவ்வொருத்தரும் நீயா தான் தெரிஞ்ச, என்னால என்னோட தனிமைய ரசிக்க முடியலடி. எல்லாத்திலும் நீயே தான் இருந்த… இந்த ஒன்றரை வருசத்துல எங்க பயணிச்சேன் என்ன உணர்ந்தேன்னு எனக்கு சொல்ல தெரியல. ஆனா… நம்ம வாழ்க்கைய உணர்ந்தேன், என்னோட தவற உணர்ந்தேன்.. நம்ம காதல இன்னும் ஆழமா உணர்ந்தேன் டி… ப்ளீஸ்… என்கிட்ட திரும்பி வந்திருடி..’ என்று அவன் கெஞ்சினான்.

‘ஸ்டூபிட்… என்னோடது என்ன மனசா மண்ணா? உன் இஷ்டதுக்கு ஆட… நீயும் வந்துருவ வந்துருவன்னு நான் தவிச்சேன். நான் தவிச்சப்போ நீ வரல… எனக்கு வலிய மட்டும் தான் தர முடிஞ்சுது.. Now the place is not for yours. Its some one else’ என்று அவள் சொல்லியபொழுது அவனுக்கு புரிந்துக்கொள்ள கொஞ்சம் நேரம் எடுக்கதான் செய்தது. அவன் கண்கள் அவனை அறியாமல் கண்ணீரை பிறிட்டுக்கொண்டிருந்தது.

‘யு மீன்… யு…’ என்று அவன் இழுக்கும்பொழுது அவன் வார்த்தைகள் வாயில் சிக்கிகொண்டிருந்தது.

‘எஸ்… ஆபிஸ் மேட்… ராகுல்… என் பையனுக்கும் அவர ரொம்ப பிடிச்சிருக்கு. லாஸ்ட் வீக் தான் ஒரு புது லைஃப் ஆரம்பிக்கலாம்னு பேசினோம். ஹி ஈஸ் ஜெம் ஆஃப் அ கேரக்டர். அவருக்கு அவர பத்தின தேடல் இல்ல, வாழ்க்கைய நிதர்சனமா பாக்க கூடியவர், எந்த இமேஜினரி வேர்ல்ட்லயும் அவர் இல்ல- அவரோட என் மீதி வாழ்க்கைய வாழலாம்னு முடிவெடுத்துட்டேன்’ என்று அவள் சொல்லும்பொழுது உலகமே இருண்டுவிட்டதாக அவன் உணர்ந்தான். கோபம், ஆத்திரம் அவன் கண்களை கொப்பளிக்க செய்தது. ஆனால் இதுவும் அவன் தவறால் நடந்த விளைவு என்று அறியும்பொழுது அவனால் அவன் மீது உண்டான கோபத்தை கட்டுபடுத்த முடியவில்லை. ஆத்திரத்தில் அவன் கண்கள் இன்னும் அதிகமாக கண்ணீரை வெளிவிடுத்தது. அதை மறைத்து அவன் சிரிப்பை கொண்டுவர முயற்சித்தான். அதே முகத்தோடு,

‘ஹேப்… ஹேப்பி… கங்க்ராட்ஸ்… என் மனைவி இன்.. இன்னொ.. இன்னொருத்தர் மனைவி’ அவன் தொண்டையை கரகரத்துக்கொண்டான். கண்ணீரை மாற்று பக்கம் திரும்பி துடைத்துக்கொண்டான் ‘ராக.. ராகுல்… குட் மேன் ஆ? ஆஹ்..ஆஹ்.. ஹா.. குட்.. குட்.. நல்லா பாத்துக்க சொல்லணும்… நீ.. நீ ஒரு குழந்தைனு அவருக்கு தெரியும்தானே.. உனக்கு ஒழுங்கா.. ஒழுங்கா.. சட்டிய கூட புடிக்க தெரியாதுனு சொல்லிட்டல… ஹா..’ அவன் கண்ணீரை மீண்டும் துடைத்துக்கொண்டான். ‘உனக்கு புத்தகம் பிடிக்கும்னு.. லாங் ட்ரைவ்… ட்ராவல்… எல்லாம்..’ தொண்டையை சரிசெய்துக்கொண்டான். ‘பையன்… நம்ம பையன நல்லா…’ சிரித்துக்கொண்டே மாற்று பக்கம் திரும்பி கண்ணீரை துடைத்துக்கொண்டான். அவள் அவனையே உற்று பார்த்துக்கொண்டிருந்தாள். ‘சாப்பிடுற முன்ன.. அவர ஒரு வாய் ஊட்டி விட சொல்லிட்டியா.. ஹா.. பையன் அவரோட சண்டை போடுறானா..? அவர்… அவர்… நான் வெஜ் தானே… உனக்கு நான்வெஜ் பிடிக்கும்னு சொல்லிட்டியா? என்ன.. என்ன.. ஹா… என்னப்போல அவருக்காகவும் நீ விடவேண்டியதா ஆகிடபோகுது… அவர் ஃபேமிலி.. ஃபேமிலி..நல்லா… நல்லா’ என்று அவன் கண்கள் மீண்டும் திணற அவள் முகம் மாறுதல்களை தந்தது. அவன் அவளை பார்த்தான், அவன் முகத்திலும் ஒரு திணறல். உடனே பதறியவனாய்,

‘ஹே… ஹே… பொய்… பொய்… பொய் தானே சொன்ன… அப்படி யாரும் இல்லல.. இல்ல தானே’ என்று அவன் கேட்கும்பொழுது அவள் அவளது அலைப்பேசியை எடுத்தாள். நான்கைந்து நம்பர்களை அடித்து ஒரு அழைப்பை விடுத்தாள். அவள் அலைப்பேசியில் அது ‘ராகுல்’ என்று காட்டியது. அழகாக சிரித்துக்கொண்டிருக்கும் ஒரு புகைப்படமும் இருந்தது . அவன் அழகாக தான் இருந்தான். அலைப்பேசியை இவன் பக்கம் நீட்டினாள், இவன் வாங்கி காதில் வைத்தான். ராகுல் அழைப்பை ஏற்று பேசினான்.

‘ஹலோ…’ என்றான் ராகுல்.

‘ஹ.. ஹே.. ஹெல்.. ஹலோ..’ என்றான் இவன் சற்று தயக்கமாக. அதே சமயம் எல்லாம் உண்மையா என்று அவளை ஒரு முறை ஏக்கமாக பார்த்தான்.

‘யாரு… இது ஆண் வாய்ஸ்’ என்று ராகுல் கேட்டான்.

‘நான்…’ என்று அவன் இழுத்தான்.

‘ஓ… அவளோட ஹப்பியா? சார்… இப்பதான் உங்க பொண்டாட்டி ஞாபகம் வந்துச்சா? நான் அவகூட வேலை செய்ய ஆரம்பிச்சு ஒரு வருசம் ஆக போகுது… டெய்லி உங்க புராணம் தான். என் உயிர எடுத்துட்டா சார்.. அவர் அப்படி… அவர் இப்படினு… ஏன்டா இவகூட ஃப்ரண்ட் ஆனோம்னு ஃபீல் பண்ண வச்சுட்டா சார்… இன்னும் ஒரு மாசம் நீங்க வர்றாம இருந்தீங்க உங்கள  தேடி நான் பயணத்தை ஸ்டார்ட் பண்ணியிருப்பேன் சார்… அவள பத்தி நான் உங்களுக்கு சொல்ல தேவையில்ல சார்… அவ உங்கள பைத்தியமா லவ் பண்ணுறா சார்… நான் லவ் ஃபெயிலியர் கேஸ் தான் சார். எனக்கு பொண்ணுங்க லவ் மேலயே நம்பிக்கை கிடையாது. ஆனா உங்க ஒய்ஃப்ப பாத்ததும் எல்லாம் மாறிடுச்சு சார்… இப்படி ஒரு பொண்ணால ஒருத்தர லவ் பண்ண முடியுமானு இருக்கு சார். ஒண்ணு சொல்லவா சார்… உங்கள பாக்க பொறாமையா இருக்கு சார். ரொம்ப…’ என்று ராகுல் ஒரே பேச்சாக பேசி சிலாகிக்க ஆனந்த கண்ணீர் இவனின் கண்களில்  இருந்து பீறிட்டது. அவனுக்கு பதில் எதுவும் பேசாமல் இவன் அலைப்பேசியை அணைத்துவிட்டான். அவள் இவனையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

‘ஐ லவ் யூ’ என்றான் வேறெதுவும் சொல்லாமல். பட்டென அவன் கன்னத்தில் ஒரு அரை விழுந்தது. மீண்டும் ‘ஐ லவ் யூ…’ என்றான். அவன் கன்னங்கள் மாறி மாறி அரை வாங்கியது. அவன் நெஞ்சகம் சில காதல் குத்துகள் பெற்றன. அவன் மீண்டும் மீண்டும் ‘ஐ லவ் யூ… ஐ லவ் யூ’ என்றான். அவள் கண்களில் இருந்து கண்ணீர் பெய்த்துக்கொண்டு அவன் நெஞ்சகத்தில் சாய்ந்து, ‘லவ் யூ… லவ்யூ டா.. லவ் யூ.. லவ் யூ..’ என்று கண்ணீரை பிய்த்து கதறினாள். அவன் ஆனந்த்ததில் அவளை அணைத்துக்கொண்டு அவள் உச்சந்தலையில் முத்தமிட்டான். இருவரும் அங்கே வாய்விட்டே அழுதுவிட்டனர்.

‘என்ன விட்டு திரும்ப போகமாட்டல?’ என்றாள் அவள் அழுதுக்கொண்டே இன்னும் அவனின் நெஞ்சகத்தில் இருந்து எழாமல்.
‘சாகுறப்போ கூட உன்ன விட்டுட்டு சாகமாட்டேன்…’ என்று அவன் சொல்லும்பொழுது அவள் அவனின் வாயை அடைப்பதாய் அவன் உதட்டில் கையை வைக்க அவன் அந்த கைகளில் அழகாக முத்தமிடுகிறான். அவள் பதிலுக்கு அவனை அங்கேயே இறுக கட்டிக்கொள்கிறாள். அவன்,

‘ஏ… இது பொது இடம்டி…’

‘ஹலோ… இது என் இடம்..’ என்று அவன் நெஞ்சை கை வைத்து காட்டுகிறாள். மீண்டும், ‘சாருக்கு தான் பொது இடம்லாம் தெரியாதே… பொது இடத்துல வழக்கமா ஒண்ணு செய்வீங்களே…’ என்று அவள் சொல்லிவிட்டு அவனை உற்று காதலோடு நோக்க அவன் சிரித்துக்கொண்டே அவளை தன் இரு கைகளாலும் தூக்கிக்கொண்டு நடந்து செல்கிறான். தன் இரு கைகளையும் அவன் கழுத்தோடு கட்டிக்கொண்டு அவனை மீண்டும் காதலோடு அவள் பார்க்கிறாள். ஊர் வழக்கம்போல அவர்களை பார்த்து வாஞ்சை பாடுகிறது,

பொது இடத்துல எப்படி நடந்துகுதுங்க பாரு…’-தம்பி கூர்மதியன்

Comments

Popular posts from this blog

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..

பைக் ஓட்டுபவர்கள் கண்டிப்பா பாக்கவும்..!!

அதிகாரி சாமி